நிச்சயம் அவன் அதை அவரின் கையில் சேர்ப்பித்துவிடுவான். ஆனால், இங்கு அவனால் எத்தனை சிக்கல்கள்.
“சரி, அந்தக் காச அவனுக்கு நான் குடுக்கிறன். நீ யோசிக்காத.” என்றான் சமாதானமாக.
“நீங்க ஏன் குடுக்கோணும்?” புருவம் சுருக்கிக் கேள்வி கேட்டாள் அவள்.
அவன் அப்படிச் சொன்னது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். சிறு சிரிப்புடன், “நீயே எனக்குத்தான் சொந்தம். அப்ப உன்ர கடனும் எனக்குத்தானே சொந்தம்.” என்றான் விளையாட்டாக.
“ஏன், என்னை என்ன என்ர அம்மா அப்பா உங்களிட்ட வித்தவையா? நான் உங்களுக்குச் சொந்தம் எண்டு சொல்றீங்க?” அவள் கெஞ்சியபோதெல்லாம் சொந்தம் கொண்டாட மறுத்தவன் இன்று உரிமை பாராட்டுகிறானா என்று கோபம் வந்தது அவளுக்கு.
அயர்ந்துபோனான் அவன். ஒரு சாதாரண விளையாட்டுப் பேச்சு. அதற்கு இப்படி ஒரு பதிலா? “என்ன ஆளடியப்பா நீ? உன்ன மாமாவும் மாமியும் பெத்தவையா இல்ல ஓடர் குடுத்து செய்தவையா!”
“உங்களுக்குப் பதில் சொல்ல தெரியேல்ல எண்டதும் என்ர அம்மா அப்பாவ குறை சொல்வீங்களா? அவே என்னை நல்லாத்தான் பெத்து வளத்தவே. உங்களைத்தான்..” என்றதும் அவசரமாக அவளின் வாயைப் பொத்தினான். அவள் விடுபட முயல ஒரு கையால் அவளைச் சுற்றி வளைத்துத் தன்னோடு பிடித்தபடி, “என்னை என்ன வேணுமெண்டாலும் சொல்லு. ப்ளீஸ்.. மற்றவைய ஒண்டும் சொல்லாத. ஏற்கனவே நொந்துபோய் இருக்கினம்.” என்றான் கெஞ்சலாக.
அப்படி அவன் தடுத்தது அவளது கோபத்தை இன்னுமே சீண்டியது. “ஏன், உங்களுக்கு மட்டும்தான் அம்மா அப்பாவ பற்றிக் கதைச்சா வலிக்குமோ? எங்களுக்கு வலிக்காதோ? அதென்ன ஏற்கனவே நொந்துபோய் இருக்கினம்? எவ்வளவு காலமா? மாசக்கணக்கில தானே? ஆனா என்ர அம்மா அப்பா கல்யாணம் கட்டின நாள்ல இருந்து உள்ளுக்க நொந்துகொண்டே தான் இருக்கினம். அதுவும் அப்பா சீரியஸா இருக்கேக்க என்னவெல்லாம் கதச்சீங்க? அதையெல்லாம் உங்கட அம்மா, அம்மம்மா கேட்டுக்கொண்டு தானே இருந்தவே. எல்லாத்துக்கும் காரணம் உங்கட அம்மா. அவா அண்டைக்கே மாறி இருந்தா..” என்றவளை மேலே பேச விடவில்லை அவன்.
“போதும் சஹி நிப்பாட்டு! எப்ப பாரு பழசையே பிடிச்சுத் தொங்கிக்கொண்டு!” என்று கோபத்துடன் அதட்டினான்.
பழைய சஞ்சயனைப் பார்ப்பது போலிருக்கக் கண்கள் கலங்கிப் போயிற்று அவளுக்கு. விருட்டென்று அறையை விட்டு வெளியேறினாள். அப்படியே நின்றுவிட்டான் சஞ்சயன். அவசரப்பட்டுக் கோபப்பட்டுவிட்டோம் என்று புரிந்தது. காற்றை ஊதித் தள்ளிவிட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தான். படியில் அமர்ந்திருந்தாள் சஹானா.
அது ஒரு மாதிரி ஆகிப்போயிற்று.
கீழே ஹாலுக்குச் சென்றால் அவளின் நடமாட்டத்தைக் கண்டு பெற்றவர்கள் எழுந்து வந்துவிடுவார்கள் என்பதில் அங்கே அமர்ந்து இருந்தாள் சஹானா. பாசம், நேசம், அன்பு, அணைப்பு, முத்தம், நெருக்கம் என்று இந்த ஒரு வாரமும் அவளை அப்படிப் பார்த்துக்கொண்டான் அவன். ஆனால், அவனது வீட்டினரைப் பற்றி ஒரு சொல்லுச் சொன்னதும் எவ்வளவு கோபம் வருகிறது. இந்தப் பாசமும் கோபமும் அன்று ஏன் அவளின் மீதும் அவளின் அம்மா அப்பாவின் மீதும் வரவில்லை? அவர்களும் அவனுக்கு உறவுதானே. அவளின் மனம் குமுறிக்கொண்டிருந்தது.
பக்கத்தில் வந்து அமர்ந்தான் சஞ்சயன். அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். “இனி கோவப்பட மாட்டன். வந்து படு சஹி!” என்றான் மெல்லிய குரலில். அவள் அசையாமல் இருக்கக் கரத்தைப் பற்றினான். வெடுக்கென்று பறித்துக்கொண்டாள். “மாமா மாமி பாத்தா சரியில்ல. அறைக்க வா!” என்றான் தன்மையாக. அதன்பிறகே எழுந்து வந்தாள் சஹானா.
இத்தனை நாட்களும் அவனின் கை வளைவும் மார்பும் தான் அவளின் தலையணையாக இருந்திருக்கிறது. இன்றைக்குப் புதிதாகத் தலையணை முளைத்திருந்தது. இருவர் இடையேயும் பெரிய இடைவெளி. அவனால் உறங்கவே முடியவில்லை. அவனைப்போலவே தனியாக அவளால் உறங்க முடியவில்லை என்று, அவள் திரும்பித் திரும்பிப் படுத்ததிலேயே தெரிந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு முடியாமல் இழுத்துத் தன் கைவளைவுக்குள் வைத்துக்கொண்டான். முதலில் திமிறினாலும், “பேசாம படடி!” என்ற அவனின் கொஞ்சலில் அமைதியானாள் அவள். அதன்பிறகுதான் இருவருமே உறங்கினர்.
காலையிலும் முகத்தைத் தூக்கிக்கொண்டு நின்றவளைப் பின்னிருந்து அணைத்தான் சஞ்சயன். அவள் விலக முயல விடாமல் பற்றி அவளைத் தன் முகம் பார்க்க வைத்தான். “உன்ர கோபத்திலையோ நீ கதைச்சதில்லையோ பிழையே இல்ல. நானும் கோபப்பட்டு இருக்கக் கூடாது. ஆனா, அங்க இருக்கிற எல்லாரும் வயசான மனுசர். வருத்தக்காரரும் (வருத்தம்- நோய்- நோயாளிகள்). அவேய எதுவும் சொல்ல வேண்டாமே சஹி. வேணும் எண்டா என்னை திட்டு, அடி, கடி என்ன எண்டாலும் செய்!” என்றான் அவன்.
அவளுக்கும் புரிந்தது. என்னவோ மனதின் அடியாழத்தில் மறையாமல் இருந்த கோபம் அப்படிப் பேச வைத்திருந்தது. “சொறி!” என்றாள் உள்ளே போன குரலில்.
அவன் முகம் அப்படியே மலர்ந்து போயிற்று. “இதுக்கெல்லாம் சொறி சொல்லுவியா? அப்ப நான் என்னத்த சொல்லுறது?” என்று அவளை அணைத்துக்கொண்டான்.


