அன்று ரகுவரமூர்த்தியின் செக்கப் நாள். ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கூடவே சென்று காட்டி, அவர்கள் சொல்கிற அத்தனை செக்கப்புகளையும் செய்து கூட்டிக்கொண்டு வருவதற்கு அந்த நாளே ஓடிவிடும். சஞ்சயனே களைத்துப்போவான். இந்தமுறை சிவானந்தனிடம்தான் அந்தப் பொறுப்பைக் கொடுத்திருந்தான். வழமையாகப் பிடிக்கும் வேன்காரனை ஏற்பாடு செய்து, சமரனைக் கூடப் போகச் சொல்லியிருந்தான். என்றாலும் எல்லாம் நன்றாக நடந்ததா? அப்பாவால் சமாளிக்க முடிந்ததா என்று மனம் முழுவதும் அங்கேயேதான் சுற்றிக்கொண்டு இருந்தது.
விடிந்ததும், “தாத்தாவை செக்கப்புக்குக் கூட்டிக்கொண்டு போனதா?” என்று, சஞ்சனாவுக்கு அழைத்து வினவினான்.
“அப்பா கூட்டிக்கொண்டு போய்ட்டார் அண்ணா. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க எங்களைப் பற்றி யோசிக்காதீங்கோ. அங்க எப்பிடிப் போகுது?” என்று கேட்டுப் பேச்சை மாற்றினாள் அவனின் தங்கை.
அவர்களின் நினைவாகவே அவன் இருக்கையில் அவள் மாற்றிவிடுகிற பேச்சு எதைச் சாதித்துவிடும்? அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று நல்லமாதிரிக் கதைத்துவிட்டு வைத்தான். சிவானந்தன் வந்ததும் அவரிடமும் தாத்தாவின் உடல் நலத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டான். அவரின் முகத்தில் தெரிந்த அதீதக் களைப்பு அவனை இன்னும் வருத்தியது. அவரும் தானே வருத்தக்காரன். அவன் இல்லாததில் தோட்ட வேலையே அவருக்குப் போதும் போதும் என்கிற அளவில் இருக்கும். இதில் இதுவும் என்றால்
நாளைக்கே போய்விடலாமா என்று ஓடியது. என்னவோ மனதே சரியில்லை. வயதானவர்களை விட்டுவிட்டு கூடப்பிறந்த இளம் சகோதரியை விட்டுவிட்டு இங்கே வந்து என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று மனம் தடுமாறியது.
இங்கும், காலையில் அவளோடு அலுவலகம் புறப்படுவதும் எப்போதும் போனில் பேசுவதும் மாலையில் வீடு திரும்புவதும் என்று வேலையற்ற வேலை மூச்சு முட்ட வைத்தது.
அன்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மிக லாவகமாகக் காரினைக் கையாளும் அவளின் நேர்த்தி அவனை ஈர்க்க அவளையே பார்த்திருந்தான்.
விரிந்த சிரிப்புடன், “என்ன பார்வை?” என்றாள் சற்றே அவனைத் திரும்பிப் பார்த்தபடி.
“அங்கயும் உனக்குக் கார் வேணுமா?”
அவளின் சிரிப்புச் சற்றே மங்கிப் போயிற்று. “நீங்க இங்கயே இருக்க மாட்டீங்களா?”
“மாமாவே அங்க வாறதுக்குத்தான் ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறார்.” பிறகு எதற்கு நான் இங்கே இருக்க என்கிற கேள்வி அதில் மறைந்திருந்தது.
“அதுக்கு இன்னும் ரெண்டு மூண்டு வருசமாவது ஆகும்.”
என்ன சொல்கிறாள் இவள்? அதுவரை நீயும் இங்கேயே இரு என்றா? கோபம் வருவது போலிருக்கப் பதில் சொல்லாமல் வீதியின் தன் மருங்கில் ஓடும் வீடுகளில் பார்வையைக் குவித்தான்.
அங்கே வா என்று அவனும் இங்கேயே இருந்துவிடுங்களேன் என்று இவளும் கேளாமல் கேட்டுக்கொண்டனர். மௌனமாக இருந்து மற்றவரின் எதிர்பார்ப்பில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதையும் காட்டிக்கொண்டனர்.
வீட்டுக்கு வந்த இருவரின் முகமும் சரியில்லை என்று பார்த்ததுமே பிடித்துவிட்டனர் பெரியவர்கள். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகக் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு உணவையும் கொடுத்து அறைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தப் பனிப்போர் வார்த்தைகள் அற்று இரவும் தொடர்ந்தது. மூன்று மாதங்களுக்கு என்று மட்டுமே வந்தவன் அவளின் எதிர்பார்ப்பு வேறு என்றதும் சமாதானத்துக்குப் போகவில்லை. அதுவே அவளைக் காயப்படுத்தியதில் தன் நிலையில் இருந்து அவளும் இறங்கவில்லை.
அவன் இங்கே இருந்தாலும் அவனது நினைவுகளும் சிந்தனைகளும் இங்கே இல்லை என்பதை நித்திலனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். எனவே, “வாறியா பார்ட்டிக்கு போவம்.” என்று அந்த வார இறுதியில் அழைத்தான். வீட்டிலேயே இருந்தால் எப்போதும் ஊர் நினைவுதான் என்பதில் சஞ்சயனும் புறப்பட்டான்.
“என்ன கூப்பிடாத! நான் வரமாட்டன்!” என்று எச்சரித்து அனுப்பிவைத்தாள் சஹானா.
“வராத போடி!”
சஞ்சயனுக்கு விளங்கவில்லை. ஏன் அவள் வரவேண்டும்? அதை அவன் நித்திலனிடம் கேட்கவில்லை. இன்னுமே அவர்கள் இருவருக்குள்ளும் மெல்லிய இளையிலான இடைவெளி இருந்துகொண்டே இருந்தது.
அங்கோ, இதுவரை காதால் மட்டும் கேள்விப்பட்டுப் படங்களில் பார்த்திருந்த பப்பை முதன் முறையாக நேரில் பார்த்தான் சஞ்சயன். “லைட்டா எடு. இதெல்லாம் சஹிக்குச் சொல்லமாட்டன்.” கிளாசில் வந்த பியரைக் கண்ணால் காட்டிச் சிரித்தான் நித்திலன்.
“பழக்கமில்லை!”
“பொய் சொல்லாத. எடு சஞ்சயன். இந்தக்காலத்தில இது இல்லாம யார் இருக்கினம். நானும் லைட்டாத்தான் எடுப்பன்.” நுரைத்து வழிந்த அந்தத் தங்கநிறத் திரவத்தைச் சொட்டுச் சொட்டாக ரசித்துப் பருகினான் நித்திலன்.
இலேசாகச் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்தான் சஞ்சயன்.
“உண்மையாவே பழக்கமில்லையா?” நம்பமாட்டாமல் வியப்புடன் கேட்டான் நித்திலன். அவன் மறுத்துத் தலையசைக்க, “அப்ப இது?” என்றான் புகைப்பதுபோல் காட்டி.
அதற்கும் அவன் இல்லை என்று தலையசைக்க, “நீ இவ்வளவு காலமும் வாழ்ந்ததே வேஸ்ட்!” என்றான் நித்திலன்.
ஒன்றும் சொல்லாமல் அந்த இளைய சமுதாயத்தின் இன்னொரு பக்கத்தை வேடிக்கை பார்த்தான் சஞ்சயன். முகங்களை மட்டுமே இனம் காணுகிற அளவுக்கான இருட்டு. சுற்றிவர பலவர்ண விளக்குகள் எரிய, அறையை நிறைத்திருந்த இசையே அவர்களைத் தாளம் போட்டு ஆடவைத்தது. அடிப்படை வசதியில் இருந்து அத்தியாவசியம் இல்லாத வசதிகளைக் கூடப் பிறப்பிலிருந்தே அனுபவித்து வளரும் சமுதாயம். அவர்களின் இடத்தில் இருந்து பார்க்கையில் அவர்களின் உலகம் இப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டான்.
நித்திலனும் கவனிக்காததுபோல் இவனைத்தான் எடை போட்டுக்கொண்டிருந்தான். மேலோட்டமாக ரசித்தானே தவிர, தனியாக என்று பெண்களை அவன் கவனிக்கவில்லை என்பது புரிந்து தனக்குள் சிரித்துக்கொண்டான்.
“பாட்னர் தேடித் தாறன். நீயும் ஆடு!” என்றான் நித்திலன்.
எதற்குப் பாட்னர் என்று சற்று யோசித்துவிட்டு, “எனக்கு ஒண்டும் வேண்டாம். உனக்கு இன்னும் அரைமணி நேரம் தான் டைம். பிறகு நாங்க வெளிக்கிடுறோம்!” என்றான் சஞ்சயன் முடிவாக.
‘அச்சு அவளை மாதிரியே இருக்கிறான்!’ என்று முறைத்துவிட்டு தன்னையும் அந்த உலகத்துக்குள் நுழைத்துக்கொண்டான் நித்திலன். சரியாக அரைமணிநேரம் கழித்து வெளியே வந்து, சஹிக்கு அழைத்தான்.
“வையடா வாறன்!” வேறு பேசாமல் அந்த இரண்டு வார்த்தைகளையும் அவனின் காதுக்குள் கடித்துத் துப்பிவிட்டு வைத்தாள் அவள்.
“உன்ர மனுசிக்கு வரவர கோபம் நிறைய வருது. சொல்லி வை, நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேனாம் எண்டு!” இவர்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயனுக்குச் சிரிப்பாக இருந்தது.
சற்று நேரத்திலேயே வந்தாள் சஹானா. வந்தவளின் விழிகள் வேகமாக அவனை ஆராய்ந்து ஆறுதல் கொள்வதைக் கவனித்துத் தனக்குள் சிரித்துக்கொண்டான் சஞ்சயன்.
நித்திலனைப் பின்னால் தள்ளிவிட்டு அவள் காரை எடுத்தபோது, “அவன்ர கார் அங்க நிக்குது.” முதல்நாளின் சண்டை அவர்கள் இருவருக்குள்ளும் முழுவதுமாக முடிந்திருக்கவில்லை என்பதில் பட்டும் படாமல் இருந்தது சஞ்சயனின் பேச்சு.