அன்றைக்குச் சிவானந்தன் மகனிடம் பேசினார்.
“அவன் ராசன்.. உன்ர பெரிய தாத்தான்ர பேரன் அவன் வேலைக்கு வரப்போறானாம். நான் உன்னோட கதைச்சிப்போட்டுச் சொல்லுறன் எண்டானான்.” என்றார்.
இப்போதெல்லாம் இப்படித் தகப்பன் தன்னிடம் ஆலோசனை கேட்டு வருகிறார் என்பது மனதுக்கு இதம் சேர்த்தது. கூடவே தான் எடுத்துவைத்த முதல் காலடிதான் அவரையும் தன்னை நோக்கி நகர்த்தியிருக்கிறது என்று உணர்ந்து மகிழ்ந்தான். அதைக் காட்டிக்கொள்ளாமல், “என்ன செய்வம் அப்பா?” என்றான் அவரிடமே. அவன் எதிர்பார்த்தது போலவே தன்னுடைய அப்பா என்கிற அழைப்பில் அவர் தடுமாறுவது புரிந்தது.
அவனைப் பாராமல், “இப்ப குடி விட்டுட்டான் போல. அவன்ர மனுசியும் வந்து சொன்னவள். திருந்தி வாறவன நாங்க திரும்பவும் கெடுக்கக் கூடாது.” என்றார் அவர்.
குடி கூடிப்போய்ச் சொந்த நிலத்தை அடமானம் வைத்துக் குடித்துச் சீரழிந்து போயிருந்தான் அவன். சஞ்சயனைப் பார்க்கப் பயந்து மனைவியின் ஊருக்கு ஓடி மறைந்து வாழ்ந்தவன், இவன் அங்கே ஊரில் இல்லை என்று தெரிந்து வந்திருக்கிறான் என்று புரிந்தது. இரண்டு குழந்தைகள் வேறு. அவனைத் தண்டித்தால் மனைவி பிள்ளைகளும் துன்பப்படுவார்கள் என்பதில், “வடக்குப்பக்கமா இருக்கிற கத்தரி தோட்டத்தைப் பாக்கச் சொல்லி குடுங்கோ அப்பா. என்ன செய்றான் எண்டு பாத்து பிறகு என்ன செய்யலாம் எண்டு யோசிக்கலாம். காசு கேட்டா குடுக்காதீங்க. அவன்ர வீட்டுக்குக் கொஞ்சம் அரிசி, பயறு, பருப்பு எல்லாம் அனுப்பி விடுங்கோ.” என்று சொல்லிவிட்டு வைத்தவனை யோசனையாகப் பார்த்தாள் சஹானா.
என்ன என்று புருவம் உயர்த்திக் கேட்டான் அவன். ஒன்றுமில்லை என்று வேகமாகத் தலையை அசைத்துவிட்டுத் தன் வேலையில் கவனமானவளை அன்று இரவு அவர்களின் அறையில் வைத்துப் பிடித்தான் அவன்.
“மத்தியானம் அது என்ன குழப்பமான பார்வை?”
சஹானாவுக்கு அதை எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. குடிகாரனுக்கே நல்லது செய்கிறான். அவளுக்கு மட்டும் ஏன் இரக்கமே இல்லாதவனாக நடந்துகொண்டான். அந்த அதி நல்லவனுக்கும் இந்த மிகப்பொல்லாதவனுக்கும் இடைவெளி மிக அதிகமாக இருப்பதைத் திக்கித் திணறிக் கேட்டுமுடித்தாள்.
தன் கைகளுக்குள் இருந்தவளின் விரல்களை வருடிக்கொண்டிருந்தானே தவிரச் சட்டெனப் பதிலிறுக்கவில்லை அவன்.
இவனுடைய இளம் பிராயத்திலேயே தாத்தாவிடமோ அப்பாவிடமோ எதாவது உதவி வேண்டுபவர்கள் எங்காவது இவனைக் காண்கையில், “தம்பி அப்பாட்ட இதையொருக்கா சொல்லிவிடு.” என்றோ, “இதைக் கேட்டனாம் எண்டு சொல்லி விடுறியாப்பு” என்றோ, “தொலைச்சுப்போடாமல் இந்தக் காசை ஒருக்கா தாத்தாட்ட குடுத்துவிடுறியா தம்பி? எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.” என்றோ இயல்பாக அவனிடம் அலுவல்களைக் கொடுத்திருந்தனர். ரகுவரமூர்த்தி கூட அப்படித்தான். “தம்பி இதை ஒருக்கா பார்.” என்றோ, “எங்களை நம்பி ஒரு காரியம் செய்ய சொல்லி இருக்கினம். அதை வடிவா செய்ய வேணும் அப்பு.” என்றோ, “பாவம் அப்பு. ஏழைகள். வாழ வழி இல்லாம நிக்குதுகள். இதை செய்தா நாம குறைஞ்சு போயிடம் மாட்டோம்.” என்றோ சொல்லிச் சொல்லியே, மற்றவருக்கு உதவுவது என்பது அவனுக்குள் வருவதே தெரியாமல் வந்திருந்தது.
கூடவே, சிறுவயதில் தாத்தாவுக்கு வால் பிடித்ததும், அவருக்குக் கிடைக்கிற மதிப்பு மரியாதையும், அவரால் பயனடைகிறவர்களிடம் இருந்து கிடைக்கிற மனமார்ந்த வாழ்த்துக்களும் சேர்ந்தே அவனை அந்தத் திசையில் இழுத்துப்போட்டிருந்தது.
அப்படி எப்படி அவனுக்குள் அந்த நல்லகுணம் அவனறியாமல் ஊறியதோ அதேபோல்தான் அன்னையின் கண்ணீரும், தந்தையின் மீதான வெறுப்பும், தாத்தாவின் படுத்த படுக்கையும், அம்மம்மாவின் புலம்பல்களும் அவளின் குடும்பத்தின் மீதான வெறுப்பாக ஊறிப்போயிருந்தது. தன் விளக்கம் எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது என்று தெரிந்தாலும் தன்னை இன்னும் கொஞ்சம் அவள் விளங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றெண்ணி அனைத்தையும் சொன்னான்.
சஹானாவும் எதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டாள். ஊருக்கே நல்லது செய்தாலும் உள்ளுக்குள் புரையோடிப்போயிருந்த காயங்களின் கோரமாக அவன் இருந்திருக்கிறான். அவனை விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் அந்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதைச்சொல்லி அவனை வேதனைப்படுத்த விரும்பாமல் அவன் கைகளுக்குள் சத்தமில்லாமல் அடங்கிப்போனாள்.
இப்படி இருக்கையில் தான் ஒருநாள் பதறிப்போய் அழைத்தாள் சஞ்சனா.
“அண்ணா! அம்மம்மாவை ஆஸ்பத்திரில சேர்த்து இருக்கு. பிரசர் கூடி மயங்கிட்டா.”
கேட்ட சஞ்சயன் கலங்கிப்போனான். ஓடிப்போகிற தூரத்திலா இருக்கிறான். “அவாவை கவனிக்காம நீ என்ன செய்தனி? பாத்துக்கொள் எண்டு சொல்லிப்போட்டுத்தானே வந்தனான்.” தன் இயலாமையைத் தங்கையிடம் கோபமாகக் கொட்டினான் அண்ணன்.
“எவ்வளவு சொன்னாலும் நீங்க போனதில இருந்து ஒழுங்கா சாப்பிடுறேல்ல அண்ணா. இரவிரவா முழிச்சு இருப்பா. நெடுக(எப்போதும்) என்னத்தையோ யோசிச்சுக்கொண்டு இருப்பா. என்னோடையும் பெருசா கதைக்க மாட்டா. இண்டைக்கு விடிய தேத்தண்ணி குடிச்சிட்டு கோழிக்கூடு திறந்துவிடப் போனவா அங்கேயே விழுந்திட்டா. என்னடா திடீர் எண்டு கோழி எல்லாம் கொக்கரிக்குது எண்டு ஓடினா… அம்மம்மா.” என்றவளுக்கு மேலே சொல்லமுடியாமல் கேவல்தான் வந்தது.
நன்றாகவே பயந்துபோயிருக்கிறாள் என்று தெரிய சஞ்சயனின் கையறு நிலை அவனைக் கொன்றது. உடனேயே அகிலனுக்கு அழைத்து, என்ன என்று கூடவே இருந்து பார்க்கச் சொன்னான். கார்மேகன், சமரன் என்று யாரையும் விடவில்லை. யார் பார்த்தாலும் அவன் நிற்பதுபோல் ஆகுமா? என்ன வேதனை இது? அவரும் அவனைத்தான் தேடுவார் என்று தெரியும்.
பிரதாபன், யாதவி, ரட்ணம், நிவேதா என்று எல்லோருமே பயந்து பதறிப்போயினர். தெய்வானையோடு ஆறுதலாகக் கதைத்தனர். எல்லாம் அது பாட்டுக்கு நடந்துகொண்டிருக்கத் தன்னம் தனியாக அமர்ந்து இருந்தான் சஞ்சயன். அவனுக்கு யார் மீதும் கோபமில்லை. அவன் மீது மட்டும்தான் அத்தனை கோபமும்! தன் சந்தோசத்தை மட்டுமே பார்த்தவனாயிற்றே! மனைவி வேண்டும் என்று மொத்தக் குடும்பத்தையும் விட்டுவிட்டு ஓடி வந்தவனாயிற்றே!
அவனிடம் ஃபோனைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, “ஒண்டும் நடக்காது. கவலைப்படாத!” என்று தேற்றினார் பிரதாபன். அவனோ அம்மம்மாவையே பார்த்தான். அவனைப் பார்த்ததுமே தெய்வானை ஆச்சிக்குக் கண்ணீராக ஓடியது. இனி இப்படித்தானா? கையிலிருக்கும் இந்தப் பொருளில் தான் பேரனைப் பார்க்க முடியுமோ? அவனோடு பேச முடியுமோ? தொட்டுத் தடவ வேண்டுமானால் என்ன செய்வார்? பலகீனப்பட்டிருந்த உடல் எதிர்மறையான எண்ணங்களையே தோற்றுவித்தது.