“என்ன அம்மம்மா இதெல்லாம்? ஏன் இங்க வந்து படுத்து இருக்கிறீங்க?” ஆதங்கமும் கவலையுமாகக் கேட்டான்.
அவரோ உயிர்ப்பில்லாது சிரித்தார். “இனி இப்பிடித்தான். காடு வாவா எண்டும் வீடு போ போ எண்டும். அதையெல்லாம் நீ பெருசா எடுக்காத. என்ர பேத்தியோட சந்தோசமா இரு..” என்று சொல்லிக்கொண்டு வந்தவர் குரல் உடைய, “ஆனாப்பு எனக்கு ஒண்டு நடந்தா வந்து இந்தக் கிழவிக்கு ஒரு கொள்ளிய வச்சுவிடு. நீ வச்சாத்தான் இந்தக்கட்ட வேகும்! என்ன அனாதையா விட்டுப்போடாத!” என்றவர் அதற்குமேல் முடியாமல் அகிலனிடம் ஃபோனைக் கொடுத்துவிட்டு அழுகையில் குலுங்கினார்.
“அம்மா என்ன கதைக்கிறீங்க?”
“மாமி! உங்களுக்கு ஒண்டுமில்ல பேசாம இருங்கோ!” என்ற யாரின் குரலும் சஞ்சயனின் காதில் விழவே இல்லை. இருந்த இடத்திலேயே உறைந்து போயிருந்தான். அவருக்கு வயதுதான். ஆனால் இதுவரை இப்படிப் பேசியதே இல்லை. என்ர கொள்ளுப் பெயரனை பாக்காம போகமாட்டனடி! என்று அயலவரோடு மல்லுக்கு நிற்பவரை இப்படிச் சொல்ல வைத்துவிட்டானே.
அவன் முகத்தில் ஒரு தீவிரம். “அம்மம்மாட்ட ஃபோனை குடு!” என்றான் அகிலனிடம்.
அவன் அவரிடம் நீட்ட, “கெதியா உடம்பத் தேத்திக்கொண்டு வீட்டுக்கு வாங்க. நானும் கெதியா அங்க வருவன்!” என்று எல்லோருக்கும் சேர்த்து அறிவித்துவிட்டு எழுந்துபோனான்.
பெரியவர்கள் இதை எதிர்பார்த்தார்கள் என்பதில் பெரிய அதிர்ச்சி இல்லை. ஆனால், சஹானா திகைத்துப்போய்த் தகப்பனைப் பார்த்தாள்.
யாதவிதான், “என்ன எண்டு பொறுமையா அவனோட கதை!” என்று அவளை அனுப்பிவைத்தார்.
அங்கே கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தவனின் தலை தலைமாட்டில் சாய்ந்திருக்கக் கண்கள் மூடி இருந்தது. அவனருகில் சென்று அமர்ந்தாள் சஹானா.
அவளை அவன் உணராமல் இல்லை. ஆனாலும் கண்ணைத் திறக்காமல் அப்படியே இருந்தான். எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியுமே. இருவருமாகத் தள்ளிப்போட்ட சண்டையின் மிச்சம் ஆரம்பிக்கப் போகிறது!
“போகப்போறீங்களா?” அவன் சொன்னதை நம்ப முடியாமல் அடைத்துவிட்ட குரலில் மெல்லக் கேட்டாள்.
கண்களைத் திறந்தவனின் பார்வை அவள் மீதிருக்க, “நீயும் வா என்னோட.” என்றான்.
“இங்கயே இருக்க மாட்டீங்களா?” அவனுடைய கையைத் தானாகப் பற்றியபடி கேட்டாள் அவள்.
அம்மம்மாவின் நிலை அறிந்தும் இப்படிக் கேட்கிறவளுக்கு என்ன பதில் சொல்வது? “வேலை, தொழில், ஊர், குடும்பம் எண்டு எனக்குத் தெரிஞ்ச எல்லாமே அங்கதான் இருக்கு சஹி.”
“ஆனா நான் இங்கதான் இருக்கிறன்.”
“அதாலதான் அங்கவா எண்டு சொல்லுறன்!”
அவள் பதில் சொல்லாமல் இருக்க, “சொந்தபந்தம் உனக்கு வேண்டாமா?” என்றான்.
“என்னை வேண்டாம் எண்டு சொன்னவே எனக்கும் வேண்டாம்.” அவள் தெளிவாக இருக்கிறாள் என்பது அந்தப் பதிலைச் சொன்ன விதத்திலேயே புரிந்தது.
“நானும் தான் உன்னை வேண்டாம் எண்டு சொன்னனான்.”
அவனை வேண்டாம் என்று சொல்ல அவளால் முடியுமா என்ன? மனதில் சிணுக்கத்துடன் அமர்ந்திருந்தாள் அவள்.
“என்னிலையும் தான் உனக்குக் கோபம் இருக்கு. அதையும் தாண்டின அன்பு இருக்கப்போய்த்தான் பதில் சொல்லாம நிக்கிறாய். அதேமாதிரி அவே செய்த பிழையை ஒதுக்கி பாசம் காட்ட மாட்டியா? நீயும் வந்தா எல்லாரும் இன்னும் சந்தோசப் படுவினம்.” என்று எடுத்துச் சொன்னான் அவன்.
இலேசாக அவனிடமிருந்து விலகியபடி, “இதையே நானும் கேக்கலாம். அப்பாவில கோபம் இருந்திருக்கலாம். அதையும் தாண்டி ஏன் பாசம் காட்டேலாம போனது? அதுவும் பெத்த தாய்க்கு மகனில வராத பாசம், கூடப்பிறந்த தங்கச்சிக்கு அண்ணாவில வராத பாசம் எனக்கு மட்டும் உங்க எல்லாரிலையும் வரவேணும் எண்டு எப்பிடி எதிர் பாக்கிறீங்க?” என்று, நியாயம் பேசினாள் அவள்.
“பிழைதான் சஹி. ஆனா அதெல்லாம் நடந்து முடிஞ்ச விசயம். நீ அதையே பிடிச்சுத் தொங்கினா நான் என்னதான் செய்றது?” என்றைக்குமே அவனால் பதில் கொடுக்க இயலாத கேள்வி அவனுக்குக் கோபமூட்டியது.
“உங்களுக்கு உங்கட வீட்டுக்காரரைப் பற்றிக் கதைச்சா பிடிக்காதே!” என்றாள் முகத்தைத் திரும்பியபடி.
“அப்ப நீ யார் எனக்கு?” என்றபடி அவளின் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான் அவன். “இந்தப் பிரச்சினைக்குக் காரணமான அம்மாவும் மகனுமே சேர்ந்தாச்சு சஹி. அவேயே ஒருத்தரை ஒருத்தர் மன்னிச்சாச்சு. தேவையில்லாம நீதான் இதையெல்லாம் பிடிச்சுத் தொங்குகிறாய்.” என்றான் அலுத்த குரலில்.
“பிறகு ஏன் நீங்க என்னை இழுத்துக்கொண்டுபோய் ரோட்டுல தள்ளி விட்டீங்க? உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை இருந்தது? அப்ப தெரியாதா எனக்கும் உங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை எண்டு?”
மீண்டும் மீண்டும் பழசையே பிடித்துத் தொங்குகிறவளை முறைத்தான் சஞ்சயன். அவன்தான் மூடனாக நடந்தான் என்றால் பதிலுக்குப் பதில் என்று மூடத்தனமாகப் பேசுகிறவளை என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“உன்ர கடைசி முடிவு என்ன?” என்றான் கடைசியாக.
“நான் அங்க வரமாட்டன்.”
சுள் என்று ஏறியது அவனுக்கு. “வராத! இங்கேயே இரு! என்னாலையும் இங்க வரேலாது! கட்டினவளா குடும்பமா எண்டுற கேள்வி வரேக்க உன்ர அப்பா கட்டினவளை தேர்ந்து எடுத்தார். நான் என்ர குடும்பத்தை எடுத்து இருக்கிறன். ஆனா உன்னை வேண்டாம் எண்டு சொல்லேல்ல. நீ எப்ப வந்தாலும் சந்தோசமா வரவேற்க என்னோட சேர்ந்து என்ர குடும்பமும் தயாரா இருக்கும்.” என்றான் முடிவாக.
அவளோ வெற்றுச் சிரிப்பைச் சிந்தினாள். “இதே தயார் நிலையில அண்டைக்கு உங்கட குடும்பம் இருந்திருந்தா அப்பா மனுசி பக்கம் நிண்டிருக்க மாட்டார். இதெல்லாம் நடந்தும் இருக்காது!” என்றாள் அவள்.
‘கடவுளே..’ திரும்பத் திரும்ப அதையே பிடித்துத் தொங்குகிறாளே! இனி பேசிப் பிரயோசனமில்லை என்று அவன் பேசாமல் இருக்க, அது வலித்தது அவளுக்கு.