அடுத்தநாள் காலை திரும்பவும் தான் நாட்டுக்குப் போகப்போவதைத் தெளிவாகச் சொன்னான் சஞ்சயன். “நீ என்னம்மா செய்யப்போறாய்?” என்று தன் பெண்ணிடம் வினவினார் பிரதாபன்.
“நான் அங்க போகேல்ல அப்பா.” அங்கு நடந்த கசப்பான நினைவுகளைக் காட்டிலும் நேற்றைய அவனின் கோபம் அதிகமாக அவளைப் பாதித்து இருந்ததில் முடிவாக அறிவித்தாள்.
இப்போது பதில் சொல்லவேண்டிய முறை அவனது. ஒரு பெருமூச்சுடன், “என்ர வாழ்க்கை எண்டுறதுக்குள்ள நான் மட்டும் இருந்தா இங்கயே இருந்திடுவன் மாமா. ஆனா என்ர வாழ்க்கை என்ர குடும்பத்தைச் சுத்தி இருக்கு. நீங்க செய்த அதே பிழைய நானும் செய்ய விரும்பேல்ல. தப்பித்தவறி நான் அங்க இல்லாத நேரம் அங்க இருக்கிற யாருக்காவது ஏதாவது நடந்திட்டா என்னால என்னையே மன்னிக்க ஏலாது மாமா. அதால என்ர முடிவில மாற்றமில்லை.” என்றவன் பேச்சை நிறுத்திவிட்டு சஹானாவைப் பார்த்தான்.
கலங்கிய விழிகளோடு அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.
மீண்டும் பிரதாபனிடம் திரும்பி, “உங்கட மகள் அங்க இலங்கையில வச்சு என்னட்ட ஒண்டு கேட்டவள். இப்பவும் அவளுக்கு அது வேணும் எண்டா நான் குடுக்கத் தயார்.” என்றான். அதிர்ந்த விழிகளில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிய அப்படியே நின்றாள் சஹானா.
“கிடைக்கிற அடுத்த ஃபிளைட்ல எனக்கு டிக்கட் போடச்சொல்லி நித்திலனுக்குச் சொல்லுங்கோ மாமா!” என்றுவிட்டுப் போனான் அவன்.
அன்று இரவுக்கே புறப்பட்டான் சஞ்சயன். நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் சஹானா. அவளை விட்டுப் போகிறோம் என்பது அவனையும் வதைத்ததுதான். ஆனால் வேறு வழியும் இல்லை. இங்கே வழிக்கு வரவேண்டியவள் அவள்தான். பெட்டி எல்லாம் தயார். அவனும் தயார். அதுவரை அவள் அறைக்குள் வரவேயில்லை.
அதற்குமேல் காத்திருக்க முடியாமல், “சஹி இங்க வா!” என்று குரல் கொடுத்தான். அவள் போகாமல் இருக்க, “நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்ல சஹி. போ போய் என்ன எண்டு கேளு!” என்று அதட்டி அனுப்பிவைத்தார் யாதவி.
கண்களில் கண்ணீரை அடக்கிக்கொண்டு வாசலில் வந்து நின்றவளின் கையைப் பற்றி உள்ளே இழுத்தான் அவன். கதவைச் சாற்றிவிட்டு, “எவ்வளவு நேரமா உனக்காகக் காத்திருக்கிறது?” என்றான் கோபத்தோடு. கண்ணீர் கன்னங்களில் இறங்க கையை உருவ முயன்றவளை விடாமல் தன் கை வளைவுக்குள் கொண்டுவந்து, “கோபமா?” என்றான் நேசத்தோடு.
அழுகையில் நடுங்கிய உதடுகளை இறுக்கி மூடியபடி அவனைப் பாராமல் அப்போதும் அவனிடமிருந்து விடுபடுவதிலேயே நின்றாள் அவள். “கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டியா?” என்றான் அதட்டலாக. அது வேலை செய்ய, “பின் வீட்டுல அம்மா அப்பாவை இருத்தப்போறன். தாத்தா கட்டின முன் வீட்டை கொஞ்சம் புதுப்பிச்சு உனக்கு ஏற்றமாதிரி மாத்தப்போறன். ஒரு கார் வாங்கி விடுறன். ஏசி பூட்டுவம்.” என்று சொல்லிக்கொண்டு போனவனிடம், “முதல் ஒரு பாத்ரூம் வீட்டோட கட்டுங்கோ!” என்றாள் தன்னை மீறி.
அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவளின் நெற்றியில் ஆசையோடு முட்டினான். “சரி. உனக்குப் பிடிச்ச எல்லாத்தையும் உனக்காகச் செய்றன். எங்கட ரூமோடையும் சேர்த்து ஒண்டு கட்டுறன். நீ மட்டும் எனக்காக அங்க வா!” என்றான் கெஞ்சலாக.
‘காலையில் என்னவோ சொல்லிவிட்டு இப்ப மட்டும் கொஞ்சுறான்!’ என்கிற மனச்சிணுக்கத்தோடு அவள் நிற்க, அங்கே நித்திலன் வந்துவிட்ட அறிகுறி கேட்டது.
இனி நேரமில்லை. புறப்படவேண்டும். மனம் பரிதவித்துப் போயிற்று! வருவாள்! அவன் மனம் ஆழமாக நம்பியது. ஆனால் அதுவரை எப்படி வாழ்வான்? வேகமாக அவளைத் தழுவினான். அவளில்லாமல் வாழமுடியாது என்று சொல்லும் இறுக்கமான அணைப்பு. இதழ்கள் இணைந்தன. உயிர்கள் ஒன்றுக்குள் ஒன்று கரைந்தது. சின்ன விம்மலோடு அவன் மார்பில் சாய்ந்தாள் சஹானா. அவனுக்கும் விழியோரம் கசிந்துபோயிற்று. மார்போடு அணைத்து முதுகை வருடிக்கொடுத்தான். “அழாத சஹி. என்னைச் சிரிச்ச முகமா அனுப்பிவை.” என்றான். “கவனமா இரு. கார் வேகமா ஓடுறேல்ல. கெதியா அங்க வந்திடு!” என்றான்.
“நான் வரமாட்டன்!”
“நீ வரோணும்!”
“இல்ல.. வர..” சொல்லவிடாமல் அவளின் இதழ்களை மீண்டும் சிறை செய்தான். இருவருமே தங்களை மறந்தனர். இதழ்களின் வழியே மற்றவரின் மீதான தம் பிரியத்தைக் கடத்தினர். நேரமாவதை உணர்ந்து விருப்பமே இல்லாமல் விலகினான் அவன். அவளின் கலைந்திருந்த கேசத்தை காதோரமாக ஒதுக்கிவிட்டான். கண்ணீரைத் துடைத்துவிட்டான். நேற்றிலிருந்தே அழுதழுது கண் மூக்கு முகமெல்லாம் சிவந்து போயிருந்தவளைப் பார்க்க மனது பிசைந்தது. வேறு வழியே இல்லை. இந்தப் பிரிவு நிச்சயிக்கப்பட்டது. நெஞ்சு கனக்க அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்து அவளிடம் விடைபெற்றுக்கொண்டான்.
விமான நிலையத்துக்கு இரு குடும்பமும் வந்திருந்தனர். புறப்படுகிற நேரம் கண்ணில் நீருடன் நின்றவளை, ‘அழுறேல்ல!’ என்று விழிகளாலேயே தேற்றினான் சஞ்சயன். நித்திலனைத் தனியாக இழுத்துக்கொண்டுபோனான். “என்னை இங்க வரவச்சமாதிரி அவளையும் அங்க அனுப்பி வை!” என்றான் வற்புறுத்தலாக.
“நான் மாட்டன்!” என்றான் நித்திலன் முகத்தைத் திருப்பிக்கொண்டு. அவள் இவனுக்காக இவ்வளவு கலங்குகிறாள். அதைப்பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல் போகிறானே என்று மிகுந்த சினம் கொண்டிருந்தான் அவன்.
சஞ்சயனோ, “என்னைப் பார் நித்திலன்!” என்றான் அதட்டலாக.
இவன் என்ன அவளுக்கு மாதிரியே அதட்டுறான் என்று ஓடினாலும் அவன் பார்வை இவனைச் சந்தித்தது.
“அண்டைக்கு நான் ஃபோன் செய்து உன்ர மாமாவைத்தான் வரச்சொல்லி சொன்னனான். ஆனா நீ ஏன் விழுந்தடிச்சுக்கொண்டு இலங்கைக்கு வந்தனி?” என்று கேட்டான்.
இந்த நேரத்தில் அதை எதற்குக் கேட்கிறான் என்று பார்த்தான் நித்திலன்.
“உன்ர அம்மா அப்பாக்கு ஏதோ ஆபத்து எண்டு தெரிஞ்சதும் முன்ன பின்ன வந்தே இராத நாட்டுக்கு ஓடி வந்தாய் தானே. அப்பிடி வரவச்சது எது? அம்மா அப்பா பாசம். அதேதான் என்ர நிலையும். எனக்கு அம்மா அப்பா மட்டும் இல்ல அம்மாவ பெத்தவையும் அங்கதான் இருக்கினம். ஒரு தங்கச்சி இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கிறாள். அவே எல்லாரையும் விட்டுட்டு என்னை எப்பிடி இங்க இருக்கச் சொல்லிச் சொல்லுறாய்? நான் போறதால சஹியில பாசம் இல்லை எண்டு நினைக்காத. அவளின்ர கடமையையும் சேர்த்துத்தான் நான் செய்யப்போறன். அதால அவளை அங்க கெதியா அனுப்பி வை!” என்றவன் அவனை ஆரத்தழுவிக் கொண்டான்.
இந்தத் தழுவலை நித்திலன் எதிர்பார்க்கவில்லை. மெல்லிய அதிர்வுடன் பேச்சற்று நிற்க, “அவள் இல்லாம.. இனி கஷ்டமடா. எப்பிடியாவது அனுப்பிவை!” என்றான் சிரிப்புடன்.
நித்திலனின் முகத்திலும் தானாய் முறுவல் அரும்பிற்று. ஒற்றைக் கண்ணடித்து, “என்ன லவ்வா?” என்றான் அடக்கிய சிரிப்புடன்.
அந்தக் கேள்வி அதுநாள் வரையில் இல்லாத ஒரு நட்புணர்வைத் தூண்ட, “நீயும் அங்கேயே வாடா!” என்றுவிட்டு, அவனை மீண்டுமொருமுறை ஆரத்தழுவி, “உனக்கும் உன்ர அம்மா அப்பாக்கும் நான் செய்த பிழைக்கு என்னை மன்னிச்சுக்கொள்!” என்றான் மனதிலிருந்து.
ஒருவிதத் திகைப்புடன் பார்த்தான் நித்திலன். அவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. அதை உணர்ந்தாற்போல், “உனக்கும் அவள் முக்கியம். எனக்கும் அவள் முக்கியம். பிறகு வேற வழி?” என்றான் சிரித்துக்கொண்டு.
நேரமாகிவிடவே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான் சஞ்சயன். “நித்திலன், பாத்துக்கொள்!” என்று அவளின் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டு மனதில் பாரத்தோடு விமானமேறினான்.
சஹானாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. அவளின் உயிர்ப்பை, சந்தோசத்தை, துள்ளலை எல்லாம் எடுத்துக்கொண்டு அவளை மட்டும் வெறும் கூடாக விட்டுவிட்டு அவன் போய்விட்டான்.
இத்தனை வருடங்களாக அவள் வாழ்ந்த அவளின் அறையோ அவனின் நினைவுகளை மட்டுமே தாங்கி நிற்க, அதற்குமேல் முடியாமல் கட்டிலில் விழுந்து விசித்தாள்.