ஆதார சுதி 46(1)

சஹானாவுக்கு விமானத்தில் இருப்பே கொள்ளவில்லை. மணித்தியாலங்களை நெட்டித் தள்ளி, தரையிறங்கி, செக்கிங் எல்லாம் முடித்து வெளிவாசலை நோக்கி நடக்கையில் அன்னை, தந்தை, நித்திலன் எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடிவந்தாள்.

சஞ்சயனைக் கண்டுவிடப்போகும் அந்த நொடிக்காக பல மணித்துளிகளைக் கடந்துவந்தவளுக்கு அதற்குமேல் பொறுமையற்றுப் போயிற்று! சிந்தை எங்கிலும் அவன் அவன் அவன் மட்டுமே. இப்படி பெரும் ஏக்கமும் ஆசையாக ஓடிவந்தவளை நின்ற இடத்திலிருந்து அசையாமல் பார்வையால் மட்டுமே வருடினான் அவன்.

அப்படியே நின்றுவிட்டாள் அவள். முகம் விழுந்துபோயிற்று. எல்லோரும் இருக்கிறார்களாம். தொரை நல்ல பிள்ளையாம். அவனை நன்றாகவே முறைத்தாள். அவளிடம் கண்ணால் சிரித்துவிட்டு அவளின் பெற்றோரைக் கவனித்தான் அவன்.

‘காட்டான்! ஆக்கள் நிண்டா பக்கத்திலேயே வரமாட்டான். ஃபோன்ல மட்டும் குடும்பமே நடத்துவான்!’

அவனுக்கும் தன்னை நோக்கி ஓடி வந்தவளை அப்படியே அள்ளிக்கொள்ள வேண்டும் போல்தான் இருந்தது. அப்படி ஆரம்பிக்கிற ஒன்றை அதோடு நிறுத்திவிட அவனால் முடியாது. எல்லையில் நின்று காவல் காத்தது போதும் ஆக்கிரமித்துவிடு என்று சஹானா பித்தன் உள்ளே உறுமிக்கொண்டு இருக்கிறான். அவனை வைத்துக்கொண்டு மெல்லிய அணைப்பெல்லாம் அவனுக்குப் பத்தவே பத்தாது. அவளை விடவும் மோசமாக அவளுக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறான்.

நித்திலனை இறுக்கி அணைத்து, “நன்றி மச்சான்!” என்றான் மனதிலிருந்து.

அந்த மச்சான் என்ற நட்பழைப்பில் நெஞ்சினில் என்னவோ மலரக் கேள்வியாகப் பார்த்தான் நித்திலன். “இவ்வளவு வேகமா மாமா வாறதுக்கு நீதான் பெரும் காரணம் எண்டு தெரியும். அப்பிடியே இவ்வளவு நாளும் அவள கவனமா பாத்துக் கொண்டதுக்கும்!” புன்சிரிப்புடன் சொன்னான் அவன்.

“நீ நல்லவனா இல்ல கெட்டவனா?” வேண்டுமென்றே வம்பிழுத்தவனின் கேள்வியில் சத்தமின்றி நகைத்தான் சஞ்சயன்.

“அடிப்படையில நான் ஒரு நல்லவன். விதிவசத்தில உனக்கு முன்னால கெட்டவனா நிண்டுட்டன்!”

‘என்னோட கதைக்கேல்ல. எப்பிடியிருக்கிறாய் எண்டு கேக்கேல்ல. அந்த தடிமாட்டோட மட்டும் கதை!’ சஹானாவுக்கு காதெல்லாம் புகை வந்தது.

“அங்கால ஒருத்தி உன்னில பெரும் கோவத்துல இருக்கிறாள். கவனிச்சியா?” நக்கலாகக் கேட்டான் நித்திலன்.

சஞ்சயனின் முகத்தில் முறுவல் விரிந்தது. பார்வை தானாக அவள்மீது பாடிய, “அவளை கவனிக்காம இருப்பனாடா? சுத்தி இவ்வளவு பேரையும் வச்சுக்கொண்டு எப்படியடா கிட்ட போறது? அவளுக்கு அந்தக் கோவம்.” என்றான் பிடறிக் கேசத்தைக் கலைத்துவிட்டபடி.

அப்படிச் சொன்னவனையே பார்த்தான் நித்திலன். அவளுக்காக பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கிறான் என்று அவனுக்கே தெரியும். ஆனபோதிலும் நெருங்காமல் மற்றவர்களை மதிக்கிறவன் அவர்களை அடைத்து வைக்கிற அளவுக்குச் சென்றிருக்கிறான் என்றால் அவனுடைய காயமும் ஆழமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. ஆணைக்கும் அடி சறுக்கும் தானே!

“நான் என்ன உன்ர காதலியா? இந்தப் பார்வை பாக்கிறாய்?” உதட்டில் மலர்ந்திருந்த சிரிப்புடன் கேட்டான் சஞ்சயன்.

“காதலியை கண்ணால மட்டுமே பாக்கிறதுக்கு என்னை என்ன உன்ன மாதிரி லூசன் எண்டு நினைச்சியா?” அசராமல் திருப்பி அடித்தான் நித்திலன்.

“டேய்..!” என்ற சஞ்சயனுக்குச் சிரிப்பை அடக்குவது பெரும் சிரமமாயிற்று! “இந்த இடத்தில வச்சு வேற என்னதான்டா செய்யச் சொல்லுறாய்?”

“உனக்குத் தெரியேல்ல எண்டு சொல்லு!”

அந்தப் பேச்சு அவளைக்குறித்தான ரகசிய எண்ணவலைகளைத் திறந்துவிட சஞ்சயனின் விழிகள் கட்டுப்பாட்டை மீறி அவளிடம் ஓடியது. வாகனத்தில் வீடு நோக்கிப் பயணப்பட்டபோதும் ட்ரைவர் அருகில் இருந்தவன் கண்ணாடி வழியே அவளை நோக்கியபோதும் பார்வையால் வெட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். இடையில் உணவுண்ணும்போதும் அப்படித்தான். காரமில்லாத உணவாக அவளுக்கென்று அவன் பிரத்தியேகமாகத் தருவித்ததைத் தொட்டும் பார்க்கவில்லை. கோபம் என்பதைவிட ஏமாற்றம். யார் பார்த்தால் என்னவாம்? ஒரு அணைப்பு, மெல்லியதாகக் கரம் பற்றுதல் குறைந்தபட்சமாய் ஒரு பார்வையாவது கூடாதா? அவர்கள் இருவரும் கணவனும் மனைவியும் என்று எல்லோருக்கும் தெரியும் தானே?

ஒருவழியாக வீடு வந்து, களையாறி, பயண நலன்கள் விசாரித்து என்று பெரியவர்கள் உரையாடிக்கொண்டு இருந்தனர். ரகுவரமூர்த்தி மிகவுமே உணர்ச்சி வசப்பட்டிருந்தார். நடுங்கும் கரத்தினால் மகனைப் பற்றியபடியே இருந்தார். பேச்சுகள் அற்ற பாசப் பரிமாற்றம் அங்கே கண்ணீரில் நடந்தது.

முதல்முறை போன்று வீட்டுக்குளேயே இருக்காமல், தான் பின்னே நின்றுகொண்டு மகளை ஏவி வந்தவர்களைக் கவனித்துக்கொண்டார் பிரபாவதி. பிறகும் யாரோடும் பெரிதாகக் கதைக்கவில்லையே தவிர அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். அதைக் கவனித்த பிரதாபனுக்கும் யாதவிக்கும் மிகுந்த ஆறுதலாயிற்று. கூடவே சிவானந்தனுக்கான தேவைகளையும் அவர் பார்த்துக்கொண்டது மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது.

சஹானா, அகிலன், சஞ்சனா, நித்திலன் என்று தன் வட்டத்தை அமைத்துக்கொண்டாளே தவிர சஞ்சயனைப் பொருட்டே செய்யவில்லை. சஞ்சயனுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வந்தது. தன்னைப் பார்த்தால் அறைக்கு வா என்று அழைக்கலாம் என்றால் எங்கே. கூப்பிடுவான் என்று தெரிந்தே பார்க்காமல் இருந்தாள்.

சிவானந்தனுக்குமே அவளிடம்தான் கவனம் சென்றது. முதல் முறை வந்தபோது, அவரோடு பேசுவதற்கு முயல்கிறாள் என்று தெரிந்தும் பலமுறை தவிர்த்துவிட்டுப் போயிருக்கிறார். அதையெல்லாம் மனதில் வைக்காமல் மகனை மணமுடித்து இன்று அவனோடு வாழ்வதற்கு என்று தான் பிறந்து வளர்ந்த தேசத்தைவிட்டு வந்து நிற்கிறவளை ஆரம்பம் முதலே தான் சரியாகக் கையாளவில்லை என்கிற எண்ணம் இறுக்கிப்பிடித்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock