அவரின் பார்வை அடிக்கடி தன்மீது படிவதை உணர்ந்த சஹானாவுக்கு மெல்லிய தடுமாற்றம். அவளின் விழிகள் தானாக சஞ்சயனைத் தேடிப் பிடித்து அவனில் தங்கியது. வா என்று அழைக்கப்போனவன் என்னவோ சரியில்லை என்று கணித்து என்ன என்றான். ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு வேகமாக முகத்தைச் சரி செய்துகொண்டு, “பிறகு மாமா? எப்பிடி இருக்கிறீங்க?” என்றாள் நேரடியாக.
இதை எதிர்பாராத சிவானந்தன் தான் தடுமாறிப்போனார். தான் பார்த்ததைக் கவனித்து, நடந்ததைப் பிடித்துத் தொங்காமல் சின்னப்பெண் எவ்வளவு பக்குவமாக தன்னைக் கையாண்டாள் என்று வியந்தார். அதுவரை அவருக்கும் அவளுக்கும் இடையில் இருந்த விலகலை அவள் கடந்துவந்த விதம் வெகுவாகக் கவர்ந்தது. தன்னைச் சமாளித்துக்கொண்டு, “எனக்கென்னம்மா? நல்லா இருக்கிறன். நீ வந்தது சந்தோசம்.” என்றார் மனதிலிருந்து.
இதைப்பார்த்த தெய்வானை ஆச்சிக்கு மனது தாங்கவே இல்லை. “எல்லாரோடயும் கதைக்கிறாய் ஆச்சி. என்னோட மட்டும் கோவமா? நான் செய்தது பிழைதான். அதுக்காக நாளைக்கு நான் செத்துப்போனாலும் இப்பிடித்தான் அழாம கோவமா இருப்பியா?” என்றதும், விலுக்கென்று நிமிர்ந்து அவரை முறைத்தாள் சஹானா. கைகால்களில் எல்லாம் ஒரு பதட்டம். விருட்டென்று எழுந்து, “அப்பா! உங்கட அம்மாவை கண்டதையும் கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ! ஆ ஊ எண்டா இதையே சொல்லி வெருட்டுறது!” என்று சீறிவிட்டு விறுவிறு என்று வீட்டுக்குள் புகுந்துகொண்டாள்.
பாத்திருந்த எல்லோர் முகத்திலும் முறுவல். தெய்வானை ஆச்சிக்கு மிகுந்த சந்தோசம். இத்தனை நாட்களாக முகமே பார்க்க மறுத்தவள் முறைத்துவிட்டுப் போகிறாளே. “அப்பிடியே என்னை மாதிரியே பெத்து வளத்திருக்கிறாய் தம்பி!” என்று முகமெல்லாம் சிரிப்புடன் சீராட்டிக்கொண்டார்.
சஹானாவுக்கு நடுக்கம் இன்னும் நிற்கவே இல்லை. கோபமும் அழுகையும் வரப்பார்த்தது. இப்போதெல்லாம் அவளுக்கு அவர்கள் மீது கோபம் என்று எதுவுமில்லை. இத்தனை நாட்களாகக் கதைக்காமல் இருந்துவிட்டதில் இயல்பான உரையாடல் வரவில்லை. அதற்குப்போய்..
அவளின் பின்னால் வந்த சஞ்சனா, “அந்த ஓல்ட் லேடின்ர கதையை விடு. நீ வா, அண்ணா புதுசா என்ன எல்லாம் மாத்தி இருக்கிறார் எண்டு காட்டுறன்.” என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டினாள்.
சமையலறை, புதிதாக கட்டப்பட்டிருந்த பாத்ரூம்கள், தரமான சோபா என்று பார்க்கையில் அவளுக்காக நிறையத்தான் மெனக்கெட்டிருக்கிறான் என்று புரிந்து மனதுக்கு இதமாயிருந்தது. நிச்சயமாகப் பெரும்தொகைப் பணமும் செலவாகியிருக்கும். அப்படியே நகர்ந்து சஞ்சயனின் அறையருகே செல்ல, “அப்பிடியே எங்கட அறையையும் பாக்கலாம் வா!” என்று, மறுக்கவே சந்தர்ப்பம் கொடாமல் தங்கையை அனுப்பிவிட்டு அவளை அறைக்குள் கொணர்ந்திருந்தான் அவன்.
சஹானாவுக்கு அவனின் கெட்டித்தனத்தில் சிரிப்பை அடக்குவது சிரமமாயிற்று! மகா கள்ளன்! இவ்வளவு நேரமும் நல்லபிள்ளைக்கு நடித்துவிட்டு இப்போது மட்டும் அவள் வேண்டுமாமா? மனம் ஊடல் கொள்ள என்னவோ அதற்குமுதல் பார்த்ததே இல்லைபோல் அந்த அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினாள்.
“பாத்ரூம் நல்லாருக்கு!” என்றுவிட்டுத் திரும்பியவளை அவனுடைய கரங்கள் பின்னிருந்து வளைத்தன. அந்தளவுதான் அவளின் கோபமெல்லாம். அவனின் அணைப்புக் கிட்டியதும் உடலும் உள்ளமும் பாகாக உருகத் தொடங்கிற்று. சுகமாக விழிகளை மூடிக்கொண்டாள்.
தனக்காக எவ்வளவுக்கு ஏங்கி இருக்கிறான் என்று அந்த அணைப்புச் சொல்ல, தானாக எம்பி அவன் உதட்டினில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள் சஹானா. அவன் புருவங்களை உயர்த்தினான்.
“மச்சான்..”
பெரும் வியப்புடன் அவளைப் பார்த்தான் அவன். என்றோ ஒரு நாள் கேட்ட மன்னிப்பை இன்றைக்கு தந்திருக்கிறாள் என்று உணர்ந்தான்.
“டேய் மச்சான்!” அதற்கும் பதில் இல்லை என்றதும், “என்ன சத்தமே இல்ல?” என்றாள் அவன் முகம் பார்த்து.
அவனிடத்தில் மெல்லிய முறுவல் மலர்ந்தது. அவளின் கன்னம் வருடினான். “ஏதும் கதைக்கோணுமா என்ன?” என்றான், அது தேவையே இல்லையே என்கிற தொனியில்.
“அப்ப இவ்வளவு நாளும் கதைச்சது?”
“அது நீ பக்கத்தில இல்ல. அதுதான் கதைச்சு ஏக்கத்தை தீத்தன்!”
“இனி?”
அதற்குப் பதில் போன்று அவனுடைய கரங்களும் உதடுகளும் அவளின் பருவமேனியில் விளையாடத் தொடங்கியதில் நிலைகுலைந்துபோனாள் சஹானா.
“மச்சான்!” என்ற அதட்டல், துள்ளல், துடிப்பு எதுவுமே செல்லுபடியாகாமல் போய், அவனின் ஆசைக்கு ஏற்ப நெகிழத்தொடங்கிற்று அவள் மேனி. தடைகள் இல்லை. இடைவெளியும் இனித் தேவையில்லை. இதயங்கள் இணைந்துபோயிற்று. பிறகும் எதற்கு அவன் காத்திருக்க? பிரிந்திருந்த காலம் வேறு தூண்டிவிட அவளைத் தூக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான். பிடறிக் கேசம் கோதி, “மச்சான்!” என்று மெல்ல அழைத்தாள். “வெளில எல்லாரும் இருக்கினம். நிறைய நேரம் நாங்க இங்க நிக்கிறது சரியில்ல.” என்றாள் மென்மையாக.
அவளைக் கட்டிலில் கிடத்தித் தானும் சரியப்போனவன் நிதானித்தான். இது அவனுக்கான நேரமல்ல என்று புரிந்தது. கலைந்திருந்த அவளின் கேசத்தைக் கோதிவிட்டான். கன்னம் வருடினான். தன்னை மன்னித்து, தன் மீது நேசம் கொண்டு, தன்னை நம்பி வாழ வந்தவளின் மீது பாசம் பெருக்கெடுக்க, ஆசையோடு நெற்றியில் உதடுகளைப் பதித்துவிட்டு, “இந்த உடுப்பில நல்ல வடிவா இருக்கிறாய்.” என்றான்.
அன்றைக்கு அவன் வாங்கிக்கொடுத்த மயில்கள் நடனமாடும் பாவாடை சட்டை. திரும்பிப் படுத்தபடி அவனை முறைத்தாள் அவள். “பாத்த நிமிசம் திரும்பியும் பாக்காம நிண்டுபோட்டு.. இப்ப சொல்லுறீங்க!”
குறும்புடன் கண்ணைச் சிமிட்டிவிட்டு, “அதுக்கும் சேத்துத்தானே இப்ப கவனிச்சிருக்கிறன்!” என்றவன், குனிந்து செய்த சேட்டைகள் அவளை சொர்க்கத்திலேயே மிதக்க வைத்தது.
மீண்டும் அணைக்கும் ஆசை வந்தது. ஆனாலும் வெளியே எல்லோரும் இருப்பதை உணர்ந்து, “வா வெளில போவம்!” என்று அவளுக்குக் கைகொடுத்து எழுப்பிவிட்டான்.
எழுந்து உடையைச் சரி செய்தபடி, “வீடு நல்ல வடிவா இருக்கு. ஆனா நிறையச் செலவாகியிருக்கும் என்ன?” என்றாள் சஹானா.
“அதுக்கு என்ன? உழைக்கிறது செலவு செய்யத்தானே!” என்றான் அவன் இலகுவாக
“எண்டாலும்.. ஹொலண்ட் வந்துபோன காசும் நீங்கதானே போட்டனீங்க.” அவனைக்குறித்தான அவளின் அக்கறை முறுவலைத் தோற்றுவிக்க இடையை வளைத்தபடி, “அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்?” என்று கேட்டான் அவன்.
“உங்கட மாமாட்ட சீதனம் கேளுங்கோ. நிறைய வச்சிருக்கிறார்.” அவளின் பதிலில் வாய்விட்டுச் சிரித்தான் அவன்.


