“அதுதான் அவரின்ர மகளையே வாங்கிட்டனே. இன்னும் என்ன வேணுமாம்?” என்றுவிட்டு வெளியே அழைத்துச் சென்றான். அறையின் வாசலைத் தாண்டியதும் அவளை விட்டு விலகி நடந்தவனைக் கண்டு சஹானா முறைத்தாள். சிறு சிரிப்புடன் கண்ணடித்துவிட்டுச் சென்று நித்திலனின் அருகில் அமர்ந்துகொண்டான் சஞ்சயன்.

“என்ன மச்சான் கவனிச்சிட்ட போல இருக்கு.” என்றான் நித்திலன் நக்கலாக.

முகம் சிவந்துவிட அதை மறைக்கச் சிரிப்பைச் சிந்தியபடி, “அடிவாங்காம பேசாம இரடா!” என்று பொய்யாக அதட்டினான் சஞ்சயன். மனமெங்கும் உல்லாசம் கொட்டிக்கிடந்தது. பூவை நாடும் வண்டென அவன் விழிகள் தன்னுடையவளையே மொய்த்துக்கொண்டிருந்தது.

தள்ளி நின்றிருந்தாலும் அவளின் பார்வையும் இவர்கள் மீதுதான். என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியாதபோதும் சஞ்சயனின் முகத்திலிதுந்த சிரிப்பைக் கண்டு அவள் இதழ்களும் தன்னாலே மலர்ந்துபோயிற்று.

நித்திலன் சஞ்சயனை விடவேயில்லை. “இந்தக் கருத்த முகம் ஏன் மச்சி இப்பிடிச் சிவந்து கிடக்கு? பார்வை வேற அங்கயே போகுது.”

முறுவலை அடக்கமாட்டாமல் அவன் முதுகில் ஒன்று போட்டுவிட்டு கிட்டத்தட்ட எழுந்து ஓடினான் சஞ்சயன்.

எல்லோருக்கும் மாலைத்தேனீர் கொண்டுவந்தாள் சஞ்சனா. நித்திலனுக்கும் நீட்டியபோது, “உங்களுக்கு எப்ப கல்யாணம்?” என்றான் கப்பை வாங்கியபடி. திகைப்புடன் பார்த்தாள் சஞ்சனா. வந்ததில் இருந்து இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. முன்னர் பழக்கமுமில்லை. அப்படியானவன் தன்னிடம் பேசுவான் என்பதே எதிர்பாராதது. இதில் கல்யாணம் எப்போது என்று கேட்பது? பதில் சொல்லத் தோன்றாமல் அவள் பார்க்க, “வேக்கன்ஸி ஃபிரீயா இருந்தா அப்லை பண்ணலாம் எண்டு பாத்தன்!” என்றுவிட்டு இலகுவாகத் தேநீரை ரசித்துப் பருகினான் அவன்.

சஞ்சனா திகைத்துப்போய் நின்றுவிட்டு, விறுவிறு என்று வீட்டுக்குள் ஓடினாள்.

உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான் நித்திலன். வந்ததில் இருந்து சஹானாவுக்குச் சமனாக சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தவளை சற்றே பிடிக்கத் தொடங்கிற்று. என்னதான் விளையாடினாலும் பொறுப்புடன் வேலைகளைக் கவனித்ததும் அவனைக் கவர்ந்தது. தான் கேட்டதும் அவள் அரண்டுபோய் பார்த்த பார்வையில் மொத்தமாக விழுந்துவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.

சஹானா குடும்பம் வந்துசேர்ந்துவிட்டார்களா என்று கேட்ட சமரனோடு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த சஞ்சயனின் முன்னால் வந்து நின்றான் நித்திலன்.

“என்னை நீதான் இங்கயே வா எண்டு கூப்பிட்டாய். நானும் வந்திட்டன். இப்ப என்னை பாத்துக்கொள்ள ஆள் இல்ல. அதால உன்ர தங்கச்சிய எனக்கு கட்டிவை!” என்றான் வெகு சாதாரணமாக.

சற்றே திகைத்தாலும் கேட்ட விடயத்தைக் காட்டிலும் அவன் கேட்டவிதம் சிரிப்பை வரவழைத்தது. “குடிகாரனுக்கு எல்லாம் என்ர தங்கச்சிய குடுக்கேலாது!” என்றான் சஞ்சயன்.

“கடத்தல் காரனுக்கே எங்கட சஹிய குடுத்திருக்கிறோமாம். குடிகாரனுக்கு உன்ர தங்கச்சிய நீ தாராளமா தரலாம்.” என்றான் அவன் சர்வ சாதாரணமாக.

பெற்றவர்கள் அரவிந்தனின் வீட்டுக்குப் புறப்பட தான் போகவா நிற்கவா என்று கேட்க வந்த சஹானாவைப் பார்த்துவிட்டு, “அவளை நீ என்னட்ட தாறவரைக்கும் இவள் எங்களோட இருக்கட்டும்!” என்று அழைத்துக்கொண்டு போனான் நித்திலன்.

பதறிப்போனான் சஞ்சயன்.

“டேய்! அவளை விடடா!”

“உன்ர தங்கச்சிய என்னட்ட தந்திட்டு இவளை நீ கூட்டிக்கொண்டு போ”

தங்கச்சியா என்று நித்திலனைப் பார்த்தாலும், தன்னை நடுவில் வைத்து இருவரும் விளையாடுகிறார்கள் என்று புரிபட்டுவிட, நித்திலனோடு இழுபட்டாள் சஹானா

“டேய்! நான் முதல் வீட்டுல கதைக்கோணும். சஞ்சுவ கேக்கோணும். உன்ர அவசரத்துக்கு பதில் சொல்லேலாது!” அவசரமாகப் பதில் சொன்னான் சஞ்சயன்.

“அதெல்லாம் பேச்சில்லை மச்சி! உன்ர தங்கச்சிய நான்தான் கட்டுவன். அதுக்கு ஏற்பாட்டை செய்திட்டு இவளை கூப்பிட வா!”

சஹானாவுக்கும் அவன் தன்னைக் கண்டதும் அருகில் வராத கோபம் இருந்ததே. அவன் முறைக்க முறைக்க நித்திலனோடு புறப்பட்டாள்.

அதுவரை, நித்திலனின் கேள்வி உருவாக்கிவிட்ட அதிர்வலைகள் இன்னுமே அடங்கியிராததில் சஞ்சனா வெளியே வரவேயில்லை. ஆனாலும், அவளின் விழிகள் அவளை அறியாமல் அவனையே கவனித்தன. அவனது சிரிப்பு, சேட்டை எல்லாம் தூரப் பார்வையிலேயே அவளின் உதட்டிலும் மெல்லிய சிரிப்பை மலரவைத்தது. அதைவிட, தமையனோடான அவனின் பிணைப்பு. இருவரும் பிடுங்குப்பட்டுச் சண்டையிடுவதுபோல் தெரிந்தாலும் அவர்களுக்குள் மிக ஆழமான நட்பொன்று வேர்விடுவது கண்டு மிகுந்த சந்தோசம் கொண்டாள். தைரியசாலிதான்! இல்லாவிட்டால் அத்தனை பேரும் இருக்கையில் தேநீர் கொடுத்தவளிடம் துணிந்து மணக்கக் கேட்பானா?

அரவிந்தன் வீட்டுக்கு அவர்கள் வந்த சற்று நேரத்திலேயே தேடிக்கொண்டு வந்த சஞ்சயனைக் கண்டு சஹானாவுக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் போயிற்று.

“சிரிக்காதயடி!” என்றான் முறைப்புடன்.

“உங்களை ஆரு இங்க வரச்சொன்னது?” வேண்டுமென்றே கேட்டாள்.

“நீ முதல் ஆரை கேட்டு இங்க வந்தனி?” என்று சீறினான் அவன்.

இதற்குள், “சஹி! நீ அறைக்க போ!” என்று, நித்திலனின் அசரீரி எங்கிருந்தோ ஒலித்தது.

‘இவன் வேற!’ உள்ளிருந்து வந்தவனிடம், “அடி வாங்கப்போறாய் நித்திலன்!” என்றான் அதட்டலாக.

“நீ சஹிக்காக நெதர்லாந்து வரைக்கும் வரேக்க நான் உன்ர தங்கச்சிக்காக அடிவாங்க மாட்டனா?” என்று கேட்டான் அவன்.

“நீ இப்பதானே வந்திருக்கிறாய். ரெண்டு நாள் போகட்டும், பொறு. வீட்டுல கதைக்கோணும். உன்ர அம்மா அப்பாவோட கதைக்கோணும். சஞ்சுவ கேக்கோணும்..” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “அவளை நான் கேட்டுட்டன்!” என்று முடித்துவைத்தான் அவன்.

அயர்ந்துபோனான் சஞ்சயன். “கொஞ்சம் மெதுவாடா. என்ர தங்கச்சி உன்ர வேகத்தை தாங்கமாட்டாள். அவளை பயப்படுத்தாத. அவள் வேண்டாம் எண்டு சொன்னா என்னால ஒண்டுமே செய்யேலாது நித்தி.” என்று எச்சரித்தான்.

அது கொஞ்சம் நித்திலனிடம் வேலை செய்தது. அதன் பிறகுதான் சற்றே அடக்கி வாசித்தான்.

ஒருவழியாக அங்கேயே இரவுணவை முடித்துக்கொண்டு சஹானாவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான் சஞ்சயன். புறப்படுவதற்கு முதல், சற்றே வாடி சிந்தனையில் இருந்த நித்திலனைத் தனியே பிடித்து, “சஞ்சு வேண்டாம் எண்டு சொல்லமாட்டாள். நீ யோசிக்காத!” என்றான்.

“அவள் எனக்கு வேணும் மச்சான். இண்டைக்குத்தான் முதன் முதலா பாத்தனான். ஆனா, இனி அவள் இல்லாம கஷ்டமடா!”

அன்றைக்குச் சஞ்சயன் சொன்ன அதே வார்த்தைகள்! அவனின் மனத்தைச் சொல்ல அதுவே போதுமாயிருந்தது. மிகுதியைச் சொல்லத் தெரியாமல் திணறியவனை மிகுந்த பாசத்தோடு அணைத்துக்கொண்டான் சஞ்சயன். “நீதான்டா எனக்கு மச்சான்!” என்றுவிட்டுப் போனான் அவன்.

சஞ்சயனுக்கு சஹானாவோடு வீட்டுக்கு போக ஒருமாதிரி இருந்தது. இன்றுதான் வந்திருக்கிறாள். அவர்கள் சற்றே பழைய தம்பதிகள் என்றாலும் பரவாயில்லை. புதுத் தம்பதியர். சஞ்சனா வேறு இருக்கிறாள் என்பதில் வண்டியை நேராக தோட்ட வீட்டுக்கு விட்டான்.

மனதில் சஞ்சலத்தோடு அவள் பார்க்க, “அத நினைக்காத!” என்று அதட்டினான் அவன். “அதெல்லாம் முடிஞ்ச கதை. இனி நீ இந்த வீட்டை பாக்கிற நேரமெல்லாம் நினைக்கிறதுக்கு நான் வேற வச்சிருக்கிறன்!” என்றான் கண்ணைச் சிமிட்டி.

அந்த வீட்டின் கதவைத் திறந்தான். கதவு நிலை அருகிலேயே கிடந்த சுவிட்சை தட்டிவிட, ஒளிர்ந்த குமிழ் விளக்கில் அந்தக் கொட்டில் வீட்டைப் பார்த்தவள் விழிகளை விரித்தாள். அன்று பார்த்ததற்கு மாறாக ஒரு முழுமையான அறையைப்போலவே மாற்றியிருந்தான் அவன். நடுநாயகமாக வீற்றிருந்த கட்டிலைக் கண்டவள் சிரித்தாள். பக்கத்திலேயே காற்றாடி, தண்ணீர் போத்தல், கொறிப்பதற்கு பிஸ்கட், மிக்ஸர் வகையறாக்கள் எல்லாம் இருந்தன.

“பாத்ரூம்?”

“நீ அதிலையே இரு!” பொய்யாக அதட்டிவிட்டு அழைத்துக்கொண்டுபோய்க் காட்டினான். பழையதின் அருகே புதியது ஒன்றும் இருந்தது. ஆக, இதெல்லாம் முதலே திட்டமிட்டிருக்கிறான்.

“பின்ன? ஒருவருசமா என்ன செய்தனான் எண்டு நினைக்கிறாய்?” என்றான் அவளின் எண்ணம் புரிந்தவனாக.

தன் ஷேர்ட்டைக் கழற்றி அங்கிருந்த கொடியில் போட்டுவிட்டுக் கட்டிலில் அமர்ந்தான். “பிடிச்சிருக்கா? இல்ல வீட்டுக்கு போவமா? அங்க சஞ்சனா இருக்கிறாள்.. அதுதான்.” என்றான்.

“இல்ல வேண்டாம். இங்கயே இருப்பம்.” மெய்யாகவே அவளுக்கு இந்தச் சூழல் பிடித்துத்தான் இருந்தது. யன்னல் வழியாக வந்த குளிர் காற்றும், அவர்கள் இருவரும் மட்டுமே தனித்திருக்கிறார்கள் என்கிற நினைவும், இனி நடக்கப்போவதை எண்ணி உண்டான எதிர்பார்ப்பும் என்று அவளுக்கு அந்த இடம் மிகவுமே பிடித்துப் போயிற்று. கூடவே, ஆளரவமற்ற சூழலும் இருளும் மெலிதாக மிரட்டவும் செய்தது. அவனருகில் தானும் அமர்ந்தாள். “பாம்பு, பூச்சி வராதா?” என்றாள் சுற்றிப் பார்வையை அலைய விட்டபடி.

“வந்தா வரட்டும். அதுக்கேன் நீ பயப்பிடுறாய். நான் இருக்கிறன் தானே.”

“அதைவிட நீங்க மோசமான ஆள் எண்டு சொல்லுறீங்களா?” என்றாள் சிரித்துக்கொண்டு.

“இன்னும் கொஞ்ச நேரத்தில தெரிய வரத்தானே போகுது.” காதோரம் அவன் கிசுகிசுத்தபோது அவளின் இயல்பு தொலைந்து போனது. அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். விரல்கள் மரக்கட்டிலைச் சுரண்டின. அவன் கட்டிலில் சரிந்தபின்னும் சரியாமல் இருந்தவளின் நிலை அவனுக்கும் புரிந்தது. சன்னமாகச் சிரித்தான். “என்ன?” என்றான்.

“இல்ல.. இப்பிடி படுத்து பழக்கமில்லை..”

“நீ ஏனடியாப்பா கட்டில்ல படுகிறாய்?” கள்ளச் சிரிப்புடன் அவளை இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டான் அவன். அப்பவும் அவள் நெளிய, “இப்ப என்ன?” என்றான் அவன்.

“இதுவும் பழக்கமில்ல!” என்றவளை நன்றாகவே முறைத்தான் அவன்.

“நானும்தான் பழக்கமில்ல. அதுக்காக பழகாமயே இருப்பியா? படு!” என்றவன் அதன்பிறகு அவளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏன் சிந்திக்கவே விடவில்லை. இந்த உலகை மறக்க வைத்தான். அவளை மயங்க வைத்தான். தன்னிடம் கிறங்க வைத்தான். தன்னை அவளுக்கு நன்றாகவே பழக்கினான். அன்று மட்டுமல்ல அவர்களோடு பழக என்று மூன்றாவது நபர் வருகிற வரைக்கும் பழக்கிக்கொண்டே இருந்தான்.

முற்றும்!