உடலின் தெம்பு முழுவதையும் இழந்து, சைக்கிளை மிதிக்கவே பலமற்றுக் கலங்கிய கண்களைச் சிமிட்டியபடி வந்தவளைப் பார்க்க அகிலனுக்குக் கவலையாகப் போயிற்று.
எவ்வளவு உற்சாகமாகத் துள்ளிக்கொண்டு வந்தாள். கூச்சத்தோடு ஒதுங்கிப்போன அவனைக்கூட இழுத்துவைத்துப் பேசியவள்.
“கண்டதையும் மனதில போட்டுக் குழப்பாத சஹி. அவேக்கு மாமா அத்தைய கட்டினதுல கோபம். அந்தக் கோபத்தை யாரிட்ட காட்டுறது எண்டு தெரியாம இவ்வளவு காலமா அடக்கி வச்சிருந்தது. இண்டைக்கு உன்னைக் கண்டதும் வெளில வந்திருக்கு.” என்றான்.
முப்பது வருடங்களுக்குப் பிறகுமா கோபமிருக்கும்? மனதுக்குப் பிடித்த பெண்ணை மணந்ததற்கா இவ்வளவு கோபமும் ஆத்திரமும்? அதைவிட என்னமாதிரியான வார்த்தைகள்? ஓடிப்போனவன், நாயல், மானம் கெட்டதுகள் சூடான கண்ணீர் மளுக்கென்று கன்னத்தில் இறங்க, வேகமாகத் துடைத்துக்கொண்டாள். அது துடைக்கத் துடைக்கப் பெருகியது.
அதுவும், அத்தையைக் காட்டிலும் பாசமே உருவான அப்பாவின் சாயலில் இருந்தவன் கக்கிய வார்த்தைகள் நெஞ்சைச் சுட்டுக்கொண்டே இருந்தது. ‘என்ர பெரிய மச்சான் ஹெல்ப் பண்ணுவார்’ என்று அவனைத்தானே பெருமளவில் நம்பி வந்தாள்.
அகிலன் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவள் உள்ளம் ஆறவில்லை. காயமே பட்டுப் பழகியிராத இதயத்தை அவர்களின் வார்த்தைகள் வெகு ஆழமாகத் தாக்கியிருந்தது.
அங்கே கோயிலைக் கண்டதும், “அகில் மச்சான், வாங்கோ கோயிலுக்கு ஒருக்கா போயிட்டு போவோம்.” என்று கேட்டவள் அவனின் அனுமதிக்காகக் காத்திராமல் கோயில் வாசலில் சைக்கிளை நிறுத்தினாள்.
கடவுள் சந்நிதியில் கலங்கிய கண்களோடு கைகூப்பித் தொழுதாள். ‘என்ர அப்பாக்கு எதுவும் நடந்திடக் கூடாது. அவர் அவரின்ர சொந்த பந்தத்தோட சேரவேணும். சேர்க்க வேணும். தெய்வமே எங்களைச் சேர்த்துவை.’ மனமுருகி வேண்டியவள், முதல் நாளே இத்தனை பெரிய தோல்வி கிட்டும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
அப்பப்பா அப்பம்மாவைக் கண்டால் நல்லது என்று தோன்றியது. அவர்களுக்கு அவர் மகன் என்றால் அவள் பேத்தி அல்லவா! இவர்களைக் காட்டிலும் அவர்களுக்குப் பாசம் அதிகமாக இருக்குமே. ஆனால் எப்படிச் சந்திப்பது? சிந்தனை அதுபாட்டுக்கு ஓட கண் மூடி நின்றிருந்தாள்.
அவளின் உலகம் பாசத்தால் மட்டுமே நிரம்பியது. அங்கே கவலைகள் இல்லை, கண்ணீர் இல்லை, இனி என்ன என்று திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போன்ற நிர்கதியான நிலை இல்லை. அப்பாவுக்கு மாரடைப்பு என்றபோதுதான் முதன் முதலாகக் கலங்கினாள். அப்போதும் காப்பாற்றி விடலாம், ஆபத்தில்லை என்று வைத்தியர் சொன்னதும், தேறிக்கொண்டாள். கூடவே, அவளுடைய பாசமான அப்பாவுக்கு எதுவுமே நடக்காது என்கிற திடமான நம்பிக்கை!
அதைவிட, அப்பாவின் ஆசையை நிறைவேற்றப்போகிறாள், அவர் கேட்காமலேயே செய்யப்போகிறாள் என்பதில் துள்ளல் கூட அவளிடம் வந்துவிட்டிருந்தது. அப்பா சுகமாகி எழுந்து வந்ததும் அவளை எண்ணிப் பூரித்துப் போய்விட மாட்டாரா? அந்த வீட்டு மனிதர்களைக் காணும்வரை அவளின் எண்ணம் இதுவாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது?
என்ன செய்வது என்றே தெரியாத நிலை. தெய்வத்தின் சந்நிதானத்தில் வழிக்காட்டச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அப்போது அவளை மெல்லச் சுரண்டினான் அகிலன்.
“அப்போத மாதிரி அவசரப்பட்டு ஓடாத. அங்கபார் ஒரு அம்மம்மா நிக்கிறா. அவதான் மாமாட அம்மா.” என்று கிசுகிசுத்தான் அகிலன்.
“எங்க எங்க?” உள்ளம் பரபரக்க ஆவலாகத் திரும்பினாள். இப்போதுதானே மனமுருகிப் பிரார்த்தித்தாள். அதற்குள் கண் திறந்துவிட்டாரா கடவுள்?
அங்கே வயதான மூதாட்டி ஒருவர் முகத்தில் சாந்தம் தவழ, குங்குமமும் சந்தனமும் நிறைந்திருக்கக் கம்பீரமாய் சுவாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்படியே அவளின் அப்பாவின் சாயல்.
நடந்த நிகழ்வுகள் அழுகையைத் தூண்டிவிட, தகப்பனின் சிறகைத் தேடும் குஞ்சாய், “அப்பம்மா…!” என்று, கதறலாய்க் கூவியவள் அடுத்தகணமே அவரைத் தஞ்சமடைந்திருந்தாள்.
“அப்பம்மா.. அப்பம்மா..!” அதற்குமேல் வார்த்தைகள் வராமல் கேவல் வெடித்தது.
‘ஐயோ.. இந்தமுறையும் அவசரப்பட்டுட்டாளே! இவளின்ர குணம் தெரிஞ்சும் சொன்ன என்னை என்ன செய்யலாம்.’ என்று தடுமாறிக்கொண்டு நின்றான் அகிலன்.
தன்னை அவ்வளவு பாசமாக இறுக்கி அணைத்துக்கொண்ட அந்தச் சின்னப்பெண்ணை ஆதரவாக வருடிக்கொடுத்தார் அவர். ‘ஷோ கேசில்’ இருக்கும் அழகான மெழுகு பொம்மை போலவே இருந்தவள், தேம்பித் தேம்பி அழவும், “அழாதையம்மா! அழாமல் என்ன எண்டு சொல்லு?” என்று, வாஞ்சையோடு விசாரித்தார்.
“அப்பம்மா.. இண்டைக்கு.. இண்டைக்கு அங்க வீட்டை..” அவரின் பாசத்தில் இன்னுமே உடைந்தவளுக்குத் தேம்பல் நிற்பதாயில்லை.
“ஆக்கள் எல்லாரும் பாக்கினம்(பார்க்கிறார்கள்) பார். முதல் கண்ணைத் துடை. இப்ப சொல்லு, நீ ஆரு? ஏன் அழுறாய்?” அவள் தலையைத் தடவிக்கொடுத்துக் கனிவு ததும்பக் கேட்டார்.
‘அப்பாவைப்போலவே அப்பம்மாவும் தடவுறா..’ பாசத்தில் கண்ணீர் கசிந்தது அவளுக்கு.
“என்னைத் தெரியேல்லையா அப்பம்மா? நல்லா பாருங்கோ. உங்கட மகன்ர மகளைப்போய் யார் எண்டு கேக்கிறீங்களே அப்பம்மா?” சட்டென்று தொற்றிக்கொண்ட சந்தோசத்தோடு இறுக்கி அணைத்து மூச்சு முட்டும் அளவுக்கு அவரின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள் சஹானா.
ஒரு நொடிதான் திகைத்து நின்றார். மறுகணமே, “என்னது? நீ அவன் பெத்த மகளா? முப்பது வருசத்துக்கு முதல் ஓடிப்போனவன் மகளை அனுப்பிச் சமாதானம் செய்யப் பாக்கிறானா? தள்ளு! என்னைத் தொடக்கூடாது நீ! தள்ளு!” என்றவர் அவளைத் தன்னிடமிருந்து விலக்கித் தள்ளிவிட்டார்.
வயோதிக மனுசி என்பதில் அவள் தரையில் விழவில்லை. அவ்வளவுதான். மற்றும்படி அதே வெறுப்பு, அதே ஆத்திரம், அதே சீறல், அதே கோபம்.
சற்றுமுன் அவளை அணைத்து ஆறுதல் தந்த அந்தக் கனிந்த முகம் அப்படியே மாறிப்போய், கோபத்தில் சிவந்து கொதித்தது.
பாசமே உருவான அப்பாவின் அம்மா இப்படிக் கடுமையான வார்த்தைகளை உதிர்ப்பார் என்று கிஞ்சித்தும் சிந்தித்துப்பாராதவள் திகைத்துப்போனாள். மளுக்கென்று கண்களை நிறைத்தது கண்ணீர். அதைவிட அப்பாவை ஓடிப்போனவன் என்று அழைத்தது சுட்டுவிட்டது.
“நீங்களும் அப்பிடிச் சொல்லாதீங்கோ அப்பம்மா.”
“சி! மூடு வாய! எனக்கு ஒரு மகள், அவளுக்குப் பிறந்த ரெண்டே ரெண்டு பிள்ளைகள் தான் என்ர பேரப்பிள்ளைகள். அவ்வளவுதான் என்ர குடும்பம்!” என்று சீறிவிட்டுப் போனவரின் நடையில், வயோதிபம் காரணமாகத் தளர்ச்சி தெரிந்ததே தவிரச் சினம் அப்பட்டமாகத் தெரிந்தது.
———————
சஞ்சயனுக்கு ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைக்கவேண்டும் போலிருந்தது. ஆறாமல் கிடந்த நெருப்பை இன்னுமே விசிறிவிட்டது போலாயிற்று அவளின் வருகை!
அவனுடைய அன்னைக்கு ஐம்பத்தியாறு வயதாகிறது. அவருக்குக் கணவரானவரோ ஒரு காட்டுமிராண்டி. மனைவியைப் புரிந்துகொள்ளாத கல்லு! இன்னுமே இளமைக்காலத்து காதலைச் சொல்லிச் சொல்லி அவரைப்போட்டு குத்திக் குதறிச் சித்திரவதை செய்துகொண்டு இருக்கிறார் அந்த மனிதர்! முப்பது வருடங்களாக நரக வாழ்க்கை வாழ்கிறார் அவனுடைய அன்னை. அதையெல்லாம் பார்த்துப் பார்த்து அவன் நெஞ்சில் இரத்தம் வடிந்துகொண்டு இருக்கிறது. ஆண்பிள்ளை! முப்பது வயதாகிறது! ஊருக்குள் அவன் பெரிய இவனாம். ஆனால், பெற்ற அன்னைக்கு மட்டும் அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவரின் துன்பத்தையும் கண்ணீரையும் கையைக் கட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. ச்சேய்! பெத்த தகப்பன், குடும்ப மானம், தங்கையின் வாழ்க்கை என்று அம்மம்மா அவனின் கையைக் கட்டிவைத்திருக்கிறார். இல்லையோ…!