இப்படி, குமுறும் எரிமலையைப் போன்று கோபத்தையும் வஞ்சத்தையும் மனதில் வைத்துக்கொண்டு அலைந்தவனிடம் தான் வந்து மாட்டியிருந்தாள் சஹானா.
வஞ்சம் தீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
‘குடும்பத்துக்கே படிப்பிக்கிறன்டி பாடம்!’ மனம் கருவிக்கொண்டது.
தமிழ் வானொலி ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்ததில் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். நேரம் பிந்திப் போவது அவனுக்குப் பிடிக்காது. அதனால்தான் இன்று அவள் தப்பித்திருந்தாள். இல்லையோ இன்றே நல்ல பாடம் புகட்டியிருப்பான்.
நிகழ்வும் ஆரம்பித்தது. பேசும் மனநிலை இல்லாதபோதும் மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றா கொடுக்க வேண்டும்? வெகு அழகாகத் தமிழைக் கோர்த்துப் பேசிவிட்டு உரிமையாளருக்கு வாழ்த்திவிட்டு வந்தான்.
எப்போதுமே நேரத்துக்கே வருகிறவன் அன்று சரியாக நிகழ்வு தொடங்கியபோது வந்ததும், அவன் முகத்தில் தெரிந்த இறுக்கமும் என்னவோ சரியில்லை என்று உணர்த்தியபோதும், நிகழ்வு முடியும்வரை அமைதியாக இருந்துவிட்டு அவனருகில் வந்தான் சமரன்.
“என்ன மச்சான்? ஏன் சோர்வா இருக்கிறாய்.”
“புதுசா என்னடா? எப்பவும் இருக்கிறதுதான்.” என்றவன் நடந்ததைச் சொன்னான்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “என்ன இருந்தாலும் ஒரு பொம்பிளைப் பிள்ளையிட்ட அப்பிடி நீ நடந்திருக்கக் கூடாது. தமிழ் தமிழ் எண்டு சாகிறாய். தமிழ் பண்பாடு இதையாடா எங்களுக்குச் சொல்லித் தந்தது.” என்று நிதானமாக எடுத்துரைத்தான் சமரன்.
“அந்தப் பண்பாடு அந்த மனுசனுக்கு இல்லாம போய்ட்டேடா. இருந்திருந்தா அம்மா சந்தோசமா வாழ்ந்திருப்பா. நான் நிம்மதியா வளந்திருப்பன். சஞ்சு கல்யாணம் கட்டி குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருப்பாள். அம்மம்மா தாத்தா வயசான காலத்தில கவலையே இல்லாம இருந்திருப்பினம். யோசிச்சுப்பாரு! அந்த ஆளின்ர சுயநலத்தில பாதிக்கப்பட்டது மூண்டு தலைமுறை. எப்ப பாரு வீட்டில சண்டை, அழுகை, புறுபுறுப்பு எண்டு நரகம்! அந்தாள விடமாட்டன்!” என்றான் சஞ்சயன் சினமடங்காமல்.
“அதுக்கு நீயும் தவறா நடக்கவேணும் எண்டு இல்லை. இதெல்லாம் எப்பவோ நடந்த விசயங்கள். இவ்வளவு காலத்தில உன்ர அம்மாவும் அப்பாவும் அதை மாத்தியிருக்கலாம். வாழ்க்கையை சந்தோசமா கொண்டு போயிருக்கலாம். அப்பிடிச் செய்யாம இன்னும் சண்டையும் சச்சரவுமா இருக்கிறதுக்கு உன்ர மாமா காரணமில்லை.” என்று அவன் சொல்லும்போதே, “அந்த ஆளை என்ர மாமா எண்டு சொல்லாத!” என்று எரிந்துவிழுந்தான் சஞ்சயன்.
“அம்மான்ர அண்ணா மாமாதான்!” அமைதியாகச் சொன்னான் சமரன்.
அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று காட்டுகிறவனாக முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் சஞ்சயன்.
“நீ முகத்தைத் திருப்புறதால எதுவும் மாறாது! சரி, அவர்ல கோபம் எண்டா அதை நீ அவரிட்ட தான் காட்டியிருக்கோணும். அத விட்டுட்டு அந்தப் பிள்ளையிட்ட காட்டியிருக்கிறாய்.” என்று கண்டித்தான் சமரன்.
“காட்டாம கூப்பிட்டு வச்சு கொஞ்சச் சொல்லுறியா? இண்டைக்கு என்னட்ட நல்லா வாங்கிக் கட்டி இருப்பாள். தப்பிட்டாள்!” என்று சிடுசிடுத்தான் அவன்.
“கொஞ்சினாலும் பரவாயில்ல மச்சான். அவள் உனக்கு முறைதான்.” என்றான் அவன் கொடுப்புக்குள் சிரித்தபடி.
நண்பனை பார்வையாலேயே எரித்தான் சஞ்சயன்.
விளையாட்டை விட்டுவிட்டு, “இந்த விசயத்தில நீ உன்ர அம்மா சொல்லுறதை மட்டும் கேக்கிறதை விட்டுட்டு மற்ற ஆக்கள் சொல்லுறதையும் கொஞ்சம் காது குடுத்துக் கேளடா. அப்பத்தான் நிறைய விசயம் உனக்கு விளங்கும்.” என்றான் சமரன்.
பிரபாவதியின் குணமும், நடந்தவற்றுக்கு இன்னொரு பக்கம் இருப்பதையும் சமரன் ஓரளவுக்கு அறிவான். இருந்தாலும் பெற்ற அன்னையைப் பற்றி உயிர் நண்பனே ஆனாலும் உடைத்துப்பேசத் தயங்கினான். சஞ்சயனும் அதை ஏற்கிறவன் அல்ல. அன்னையிடம் அவ்வளவு பாசம். அதைவிட சமரனின் காதில் விழுந்தவை சஞ்சயனின் காதில் விழாமலும் இல்லை. நம்பமாட்டேன் என்று நின்று அன்னையை மட்டுமே நம்புகிறவனை என்ன செய்ய?
அதை மெய்ப்பிக்கிறவன் போல, “ஏன் கேக்க வேணும்? சொல்லு, ஏன் நான் கேக்க வேணும்? அம்மா பொல்லாதவா எண்டு தானே நீ சொல்ல வாறாய். எல்லாத்தையும் கூட்டி குறைச்சு சொல்லுறா எண்டு நினைக்கிறாய். அப்பிடித்தானே? சரி அதுதான் உண்மை எண்டே இருக்கட்டும். அந்த ந..ல்ல்ல்ல மனுசன் ஏன் தாத்தாவோட இதைப்பற்றி கதைக்க இல்ல? அம்மம்மாவோட ஏன் கதைக்க இல்ல? இங்கயே இருந்து ஒரு முடிவை பாத்து இருக்கலாமே. செய்ற காரியத்தில தவறு இல்லாட்டி பிரச்சினைய நேரடியா எதிர்கொண்டு இருக்க வேணும்!”
இந்தக் கேள்விகள் சமரனுக்குமே உண்டுதான். ஆனாலும், அவன் கேள்விப்பட்ட பிரதாபன் மாமாவைத் தவறாக நினைக்கவே முடியவில்லை. முறையான விளக்கங்களை அவர்தான் தரவேண்டும்.
“சரி மச்சான் விடுடா! கோவப்படாத. முதல் நீ ஒரு கலியாணத்தைக் கட்டு. அப்பத்தான் இந்தக் கோவம் எல்லாம் குறைஞ்சு அடங்கி வருவாய்.” என்றான் அனுபவமுள்ளவனாக.
“படுகுழி எண்டு தெரிஞ்சும் விழ சொல்லுறியா? ஆளை விடுடா சாமி!” சினத்துடன் மொழிந்துவிட்டு வண்டியை உதைத்துக் கிளப்பிக்கொண்டு பறந்திருந்தான் அவன்.
சமரனுக்குக் கவலையாயிற்று. அவனுக்கு ஒரு குழந்தையே உண்டு. இவனோ இன்னுமே கல்யாணம் வேண்டாம் என்கிறான். இதற்கெல்லாம் காரணம், கல்யாண வாழ்க்கையின் பிழையான பாகத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவனின் மனதில் உருவாகிப்போன வெறுப்பும் கோபமும்! எதையும் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாள்கிற சஞ்சயன், இந்த விடயத்தில் மட்டும் இப்படித்தான்.
வீட்டில், அறை விழுந்த அடையாளத்துடன் அழுதழுது வீங்கிச் சிவந்த முகத்துடன் இருந்த அன்னையைக் கண்ட சஞ்சயனுக்குப் பெற்றவர் மீது பற்றிக்கொண்டு வந்தது.
அருகில் அமர்ந்திருந்த அம்மம்மாவை முறைத்தான். “என்ன மனுசன் உங்கட மருமகன்? இந்த வயசிலையும் மனுசிக்குக் கை நீட்டி இருக்கிறார்! வெக்கமாயில்ல!” உறுமியவனைக் கண்டு தெய்வானைக்குப் பயமாகப் போயிற்று!
“தம்பி! அப்பா வீட்டிலதான் இருக்கிறார். சத்தமா கதைக்காத!” என்றார் அவசரமாக. அவருக்கும் மருமகனைப் பிடிக்காதுதான். ஆனால், பிரச்சனையாக வெடிக்கிற அளவுக்கு அதைக் காட்டமாட்டார்.
“இருந்தா என்ன? கேட்கட்டும்! எப்ப பாத்தாலும் அடிபாடு. வளர்ந்த பிள்ளைகள் இருக்கிற வீட்டில கேவலம் இதெல்லாம். இப்பிடியானவர் என்னத்துக்கு அம்மாவை கட்டினவராம். காலம் முழுக்கக் கொடுமைப் படுத்தவோ! இருந்தா ஒழுங்கா இருக்கச் சொல்லுங்கோ இல்ல வெளில போகச் சொல்லுங்கோ. என்ர அம்மா தங்கச்சிய நான் பாப்பன்!” இன்று அவளும் வந்துவிட்டுப் போனதாலோ என்னவோ அவனுடைய ஆத்திரம் எல்லையைக் கடந்திருந்தது.
“அங்க என்ன சத்தம்!” என்றபடி வந்தார் சிவானந்தன்.
“இந்த வயசிலையும் அம்மாக்கு கைய நீட்டிப்போட்டு என்னட்ட என்ன கேள்வி!” என்றான் அவனும் குறையாத கோபத்துடன்.
“இப்ப அதுக்கு என்னடா செய்யப்போறாய்?”
“ஏன், ஒண்டும் செய்யேலாது எண்டு நினைப்போ. போலீஸ்ல கேஸ் குடுக்கவா. குடுத்தா கம்பி எண்ணிப்போட்டு வருவீங்க!” என்றதும் ஆனானப்பட்ட பிரபாவதியே நடுங்கிப்போனார்.
“தம்பி! என்ன கதைக்கிறாய். பேசாம இரு!” என்றார் பதறிப்போய்.
மனைவியைத் தீ விழி விழித்தார் சிவானந்தன். “உன்ர வளப்ப பாத்தியா? உன்ன மாதிரியே அடங்காதவனா வளந்து நிக்குது. அப்பன சொல்லிக்குடுப்பானாம் பொலிசில. செய்யச் சொல்லு. அங்கயாவது நான் நிம்மதியா இருக்கிறன்!”
“உங்கட அம்மா உங்களை வளர்த்ததை விட என்ர அம்மா என்ன நல்லாத்தான் வளத்திருக்கிறா. அவவின்ர வளப்பைப் பற்றி நீங்க கதைக்காதீங்க!” சஞ்சயனும் பட்டென்று திருப்பிக்கொடுத்தான்.
“ஆரை ஆரோட ஒப்பிடுறாய். கதைக்கிறத ஒழுங்கா கதை இல்லையோ!” என்று உறுமிக்கொண்டு அவர் அவனை நெருங்கவும் பெண்கள் இருவருமே நடுங்கிப் போயினர்.
சஞ்சயனுக்குச் சற்றும் குறையாத திடகாத்திரம் மிகுந்த மனிதர் சிவானந்தன். அவரின் மகன் தானே அவன். இதில் கைகலப்பானால் என்ன கதி? முதல் அப்பாவும் மகனும் முட்டிக்கொள்வது எவ்வளவு கேவலம்? வேகமாகப் பிரபாவதி கணவரைத் தடுக்க, தெய்வானை பேரனைத் தடுக்க என்று எதுவும் நடந்துவிடாமல் தடுத்துவிட்டிருந்தனர் பெண்கள்.


