“ஆகமொத்தம் நீங்க எல்லாரும் ஒற்றுமை. இனி நீங்க உங்கட மகன் மருமகளோட சேர்ந்திடுவீங்க. நான் மட்டும் பொல்லாதவள். என்னை மட்டும் என்ர மகனிட்ட பிரிச்சு வச்சாச்சு!” அரவிந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த தெய்வானையிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார் பிரபாவதி. மகனின் வார்த்தைகள் அவ்வளவில் அவரைக் காயப்படுத்தி இருந்தது.
“காலம் பூரா உங்களோடையே இருந்து உங்களையும் அப்பாவையும் வச்சுப் பாக்கிற நான் முக்கியமில்லை. என்னைப்பற்றி யோசிக்கேல்ல. வெளிக்கிட்டு அங்க போறீங்க? வெளிநாட்டு மருமகள் எண்டதும் எல்லாம் மறந்து போச்சோ? அவளா உங்கள வச்சுப் பாத்தவள்? நான்தானே! நாளைக்கு உங்களுக்கோ அப்பாக்கோ ஒண்டு எண்டா அவளா வந்து நிக்கப்போறாள்?” என்ற தன் பெண்ணை அதிர்ந்துபோய்ப் பார்த்தார் தெய்வானை.
சஞ்சனாவுக்குப் பொறுக்கவே முடியவில்லை. “அம்மா! கடைசிவந்தாலும் திருந்தவே மாட்டீங்களா நீங்க? உங்கட இந்த வாயும் குணமும் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்! பேசாம எழும்பி வாங்க அம்மம்மா. உங்கட மகளுக்குப் பேய் பிடிச்சிருக்கு. அதுதான் கண்டதையும் கதைக்கிறா!” என்று தெய்வானை ஆச்சியை அங்கிருந்து அகற்ற முயன்றாள்.
“ஓமடியப்பா! இப்ப அப்பிடித்தான் தெரியும். ஒட்டுற மாதிரி ஒட்டிப்போட்டு ஒருநாளைக்கு இருக்கிற சொத்தையெல்லாம் பிடுங்கிப்போட்டு நடுத்தெருவில விடுவாளாவே. அப்ப அழுதுகொண்டு என்னட்டத்தான் வரவேணும். அந்த நேரம் கேக்கிறன்!”
சலிப்புடன் அன்னையைப் பார்த்தாள் சஞ்சனா. மனம் மாறிக்கொண்டு வருகிற அம்மம்மாவைக்கூட மீண்டும் மாற்றிவிடுவார் போலிருந்தது. அதற்கு விடக்கூடாது என்று எண்ணினாள்.
“அம்மம்மா! நீங்க மாமாவை சேர்ப்பீங்களா இல்லையா தெரியாது. ஆனா, மாமா தன்ர குடும்பத்தோட வந்து நிண்டு நடத்தினா மட்டும் தான் எனக்குக் கல்யாணம் நடக்கும்! இல்லையோ கடவுள் சத்தியமா சொல்லுறன், நான் கல்யாணம் கட்டவே மாட்டன்! சஹிக்கும் இதைச் சொல்லித்தான் அனுப்பி வச்சனான்!” என்றுவிட்டுத் திரும்பியவள் அங்கு நின்ற தமையனைக் கண்டு ஒருநொடி அதிர்ந்தாலும், ‘இது உங்களுக்கும் தான் அண்ணா’ என்பதாகப் பார்த்துவிட்டு போனாள்.
———————-
அம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கிய சற்று நேரத்திலேயே தன் ட்ரோலியைத் தள்ளிக்கொண்டு வந்த சஹானா அன்னையைக் கண்டதும், “அம்மா!” என்று ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
“செல்லம்மா! ஒரு பிரச்சனையும் இல்லாம வந்தியா செல்லம்?” சிரிப்பும் கண்ணீருமாகத் தன் பிரிவாற்றாமையை ஆழ்ந்த அணைப்பில் காட்டினார் அன்னை. “என்ர பிள்ளை கெட்டிக்காரி! பயமில்லாம இலங்கைக்குத் தனியா போயிட்டு வந்திட்டாள்!” என்று சந்தோசமும் பெருமையாக வாரியணைத்து உச்சி முகர்ந்தார்.
“போய்வந்ததில என்னம்மா பிரயோசனம்?” என்றாள் தழுதழுத்த குரலில்.
“யார் சொன்னது பிரயோசனம் இல்லை எண்டு? நீ வெளிக்கிட்டு வந்த கையோட உன்ர அப்பம்மா என்னோட கதைச்சவா தெரியுமோ?” என்றதுமே, “என்னம்மா சொல்லுறீங்க?” என்று கேட்டு முழுவதையும் தெரிந்துகொண்டாள். அவ்வளவுதான். அதைப்பற்றி மேலே எதுவுமே பேசவில்லை அவள்.
வீடு நோக்கிச் செல்கையில் காருக்குள் நிலவிய அமைதி யாதவிக்கு வித்தியாசமாக இருந்தது. அவளிடம் பழைய துள்ளல் இல்லை. ஆர்ப்பாட்டம் இல்லை. படபடப்பு இல்லை. அமைதியாக இருந்தாள்.
இந்தப் பத்து நாட்களில் மகள் வளர்ந்துவிட்டாள் போலிருந்தது.
அப்போது, சஹானா வந்துவிட்டாளா என்று கேட்டு அழைத்தார் அரவிந்தன். அவர்களோடு பேசிவிட்டு வைத்த அடுத்த இரண்டாவது நிமிடம் யாதவியின் கைபேசி சஞ்சயன் என்கிற பெயரைத் தாங்கி ஒலி எழுப்பியது. அதுவும் வீடியோ கோல். தான் பறந்துவந்த இந்தப் பதினான்கு மணிநேரங்களுக்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது புரிந்தது.
“எடம்மா. எடுத்து நல்லபடியா வந்திட்டன் எண்டு சொல்லு. அதுக்குத்தான் எடுக்கிறார்.” என்றார் யாதவி.
“நீங்களே கதைங்கம்மா.” அழைப்பை ஏற்று ஃபோனை அவரின் பக்கம் பிடித்தபடி சொன்னாள் சஹானா.
“என்ர பேத்தி வந்திட்டாளே பிள்ளை?” என்றது தெய்வாணையின் குரல்.
பேத்தியா? எப்ப இருந்து? எரிச்சல் கிளம்ப அன்னை கவனிக்காதபடிக்கு முகத்தை வெளிப்புறம் திருப்பிக்கொண்டாள்.
“ஓம் மாமி. இப்பதான் வந்தவள். வீட்டை போய்க்கொண்டு இருக்கிறோம்.” வீதியில் கண்கள் கவனமாக இருக்கப் பதில் சொன்னார் யாதவி.
“எங்க? அவளைக் காணேல்ல? ஒருக்கா காட்டன?” கெஞ்சியது அவர் குரல்.
அருகில் இருப்பவளுக்கு அது கேட்காமல் இருக்காது. ஆனாலும் முகத்தைத் திருப்பாமல் இருந்தவளை வற்புறுத்த மனமில்லாமல் மாமியாரிடம் என்ன சொல்வது என்றும் தெரியாமல் யாதவி தடுமாற, “என்னோட கதைக்க மாட்டாளாமோ? அதுசரி.. கண்ணுக்கு முன்னால இருந்தவளை துரத்திப்போட்டு இப்ப கதை எண்டா கதைப்பாளே? விடு!” என்றார் ஏமாற்றம் நிறைந்த குரலில்.
அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு விலகி நின்றாலும் அவர்களின் திரை தெரிகிற இடத்தில் தான் நின்றிருந்தான் சஞ்சயன். என்னவோ அவனுக்கும் அவளைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. ராகவி வேறு அழுதுகொண்டு போனாள் என்று சொன்னாரே. அவளோ தன்னைக் காட்ட மறுத்துத் தன் கோபத்தைக் காட்டினாள்.
“நாளைக்கும் திரும்ப வரவேணுமோ?” ரட்ணம் குடும்பத்தினருக்கு டிக்கெட் ஒருநாள் பிந்தித்தான் கிடைத்திருந்தது. அதைக் கருத்தில் கொண்டு கேட்டார் தெய்வானை.
“இல்ல மாமி. நாளைக்கு வர சாத்தியப்படாது. ட்ரெயின்ல வரச்சொல்லி அண்ணாக்குச் சொன்னனான்.”
அவர் வீதியிலும் கவனம் வைத்துக்கொண்டு அம்மம்மாவிடமும் பேசுவது அவ்வளவாக நல்லமில்லை என்று விளங்க, ‘பிறகு கதைங்க அம்மம்மா’ என்றான் சஞ்சயன் சைகையில். “சரி பிள்ளை. கவனமா போங்கோ. நான் பிறகு எடுக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் தெய்வானை.