அவனுக்குச் சம்மதிக்கிற எண்ணமே இல்லை. சம்மதிக்கவும் முடியாது. அவளுக்கான மாப்பிள்ளை கையிலேயே இருக்கிறானும் கூட! ஆனால், போய்ப்பார்த்துப் பேசினால் தானே எதனால் மறுக்கிறேன் என்று காரண காரியத்துடன் விளக்க முடியும். சும்மா சொல்கிற மறுப்பைக் காதில் வாங்குகிற ஆளும் இல்லை அவள்.
“அங்க அவரின்ர தங்கச்சி எண்டு ஒருத்தி இருக்கிறாள். பொல்லாதவள் அண்ணா. அவளுக்குத்தான் இவர் என்னைக் கட்டுறதுல விருப்பமே இல்ல. சரியான நஞ்சு. தன்னைப் பாக்க ஆக்கள் இல்லை எண்டுற பயத்தில தடுக்கிறாள். அவள் என்ன சொன்னாலும் நம்பாத, அவரோட மட்டும் கதை!” என்று திருப்பித் திரும்பிச் சொல்லி அனுப்பிவைத்தாள் பிரபாவதி.
அவர்களின் வீட்டைக் கண்டுபிடித்துப் போனவனுக்கு அதிருப்திதான் உண்டாயிற்று. அது அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றக் குடியிருப்பு. கிட்டத்தட்ட நூறு வீடுகள் ஒரேமாதிரி அமைப்பில் கட்டப்பட்டு, காணியற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்படியான வீட்டில் வசிக்கிறவர்களின் பொருளாதாரம் என்ன என்று அவனுக்குத் தெரியும். பெரிதாகக் காணியே இல்லை. வீட்டின் முன்னுக்கு மட்டும் நான்கைந்து வகை ரோஜாக்களும் செம்பரத்தைகளும் நின்று நறுமணம் வீசி வரவேற்றுக்கொண்டிருந்தது.
வெளிவாசலில் பைக்கை நிறுத்திவிட்டு படலையைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் சென்றான். “நான் பிரபாவதின்ர அண்ணா பிரதாபன்.” அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, அங்கே இருந்தவனின் முகம் பிடித்தமின்மையால் சுருங்கிப்போயிற்று.
“உங்கட தங்கச்சியைப் பற்றிக் கதைக்கிறது எண்டால் எனக்குக் கதைக்க விருப்பமில்லை.” எந்த நாசூக்கும் இல்லாமல் நேரடியாகச் சொன்னான் அவன், அரவிந்தன்.
பிரதாபனின் பார்வையில் கூர்மை ஏறிற்று! “அவளை நீங்க மறுக்கிறீங்களா?”
அப்படி, மறுக்கும் இடத்தில் நீ இல்லை என்று உணர்த்திய கேள்வியில் அரவிந்தனுக்குச் சினம் உண்டாயிற்று!
“அதுசரி! திமிர் பிடித்த பிரபாவதியின்ர அண்ணாட்ட இதை நான் எதிர்பார்த்திருக்க வேணும்.” வெகு நக்கலாய் இயம்பிவிட்டு, “உயரத்தில இருக்கிற உங்கட தங்கச்சிக்கு அதேமாதிரி எல்லாம் இருக்கிற நல்ல மாப்பிள்ளையா பாத்து வெகு விமரிசையா கட்டி வைங்கோ. இப்ப எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு!” என்று எழுந்தான் அரவிந்தன்.
“வீடு தேடி வந்ததாலேயே இந்த இளக்காரம் தேவையில்லை அரவிந்தன். நானும் உங்களை மாப்பிள்ளையாக்கிற எண்ணத்தோட வரேல்ல. நீங்க சொன்னமாதிரி உங்களை விடப் பலமடங்கு உயர்ந்த மாப்பிள்ளை எங்களிட்ட இருக்கிறானும் கூட. ஆனா என்ன அவள் நீங்கதான் வேணும் எண்டு நிக்கிறாள். அதால ஏன் வேண்டாம் எண்டு சொல்லுறீங்க? காரணத்தச் சொல்லுங்கோ!” தன் நிதானத்தை இழக்காமல் கேட்டான் பிரதாபன்.
“உங்கட தங்கச்சிக்கு நானேதான் வேணுமாமா?” என்று ஏளனமாகச் சிரித்தான் அரவிந்தன்.
புருவங்களைச் சுளித்தபடி அவனைக் கூர்ந்தான் பிரதாபன். “இந்த நக்கல் நையாண்டி எல்லாம் எனக்கும் நல்லா வரும். நான் ஆரம்பிச்சா நீங்க தாங்கமாட்டீங்க. அதால விசயத்தை மட்டும் சொல்லுங்கோ! அவளிட்டச் சொல்லுறதுக்கு எனக்குக் காரணம் வேணும்!” தனக்கும் இதில் உடன்பாடு இல்லை என்பதை உணர்த்தினான் பிரதாபன்.
“காரணமா? நல்லா கேளுங்க! உங்கட தங்கச்சிக்கு என்னில காதலும் இல்ல. கத்தரிக்காயும் இல்ல. நான் மறுத்ததாலேயே என்னைக் கட்டியே காட்டவேணும் எண்டுற பிடிவாதம். என்னை அவவுக்குப் பின்னால சுத்தவச்சுக் காட்டுறன் எண்டு தன்ர நண்பிகளிட்ட சாலஞ் செய்து இருக்கிறாவாம். ஒரு ஆம்பிளைய அடக்கிக் காட்டுற அடங்காத குணம்.” வெறுப்புடன் சொன்னான் அரவிந்தன்.
சட்டென்று பிரதாபனின் முகம் கோபத்தில் சிவந்தது!
“விடுற வார்த்தைகள்ல கவனம் வேணும் அரவிந்தன்! அடுத்தவீட்டுப் பொம்பிளைப் பிள்ளைகளைப்பற்றிக் கதைக்கேக்க கவனமா இருக்கோணும்! தேவையில்லாம வார்த்தைகளை விடாதீங்க!” குரல் உயராதபோதும் கோபமாய் இரைந்தான் பிரதாபன்.
யாரைப்பார்த்து என்ன சொல்கிறான்? அதுவும் அவனிடமே! ஆத்திரத்தில் கண்கள் சிவந்துவிடத் தன்னை அடக்கப் படாத பாடுபட்டான் பிரதாபன். இறுக்கிக் கண்களை முடித் திறந்தபோது உள் அறையிலிருந்து வெளிப்பட்டாள் ஒரு பெண். இவள்தான் பிரதி சொன்ன பெண்ணா? இரு ஆண்களுக்கு மத்தியில் இவளுக்கு என்ன அலுவல்? புருவங்களைச் சுளித்துப் பிடிக்காத பார்வை பார்த்தான்.
“வணக்கம், நான் அவரின்ர தங்கச்சி. நான் கொஞ்சம் கதைக்கலாமா?” மெல்லிய குரலில் தெளிவாக வினவினாள் அவள்.
ஒன்றும் பறையவில்லை(பேசவில்லை) பிரதாபன். ஆனால் சுளித்திருந்த புருவங்களோடு என்ன சொல்லப்போகிறாய் என்று பார்த்தான்.
“ஒருத்தரை மனதார நேசிச்சால், காதலை மென்மையாக எடுத்துச் சொல்லுறது சரியா இல்லை என்னைத்தவிர வேற யாரையும் கட்ட விடமாட்டன் எண்டு சவால் விடுறது சரியா?” என்று அவனிடமே கேட்டாள் அந்தப்பெண்.
அவளின் கேள்வி அவனை நிதானிக்க வைத்தது. அதற்காகத் தங்கையை விட்டுக் கொடுக்க முடியுமா?
“தன்ர மனதை சொல்லத் தெரியாததாலேயே அவள் அப்பிடிச் சொல்லி இருக்கலாம். சொன்ன விதம் பிழை என்றதாலேயே சொன்ன விசயம் பிழையாகாது!” என்றான் அவனும் அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்து.
சின்னதாகப் புன்னகைத்து மறுத்துத் தலையசைத்தாள் அவள்.
பிரமித்துப்போய்ப் பார்த்தான் பிரதாபன்.
“அது வேற விசயங்களுக்குப் பொருத்தமா இருக்கலாம். ஆனா, மனம் சம்மந்தப்பட்ட விசயங்கள்ல இதயத்தைக் கவரவேணும். மனதுக்குப் பிடிக்கவேணும். மனதுக்குப் பிடிச்சாத்தானே காதல் வரும்? காதலும் கல்யாணமும் மற்ற எதையும் விட, மனம் சம்மந்தப்பட்ட விசயம் எண்டுதான் நான் நினைக்கிறன்.” நிதானமாய் எடுத்துரைத்தாள் அவள்.
அவனாலும் மறுக்க முடியவில்லை. மேலே சொல் என்பதாகப் பார்த்தான்.
“மனதை வலுக்கட்டாயத்தில பறிக்க முடியாது தானே. இது எல்லாத்தையும் விட, என்ர அண்ணா இன்னொரு பெண்ணை விரும்புறார் எண்டு தெரிஞ்ச பிறகு, அதுவும் அவள் செஞ்சோலையில வளந்தவள், வகுப்பில இவளை விடக் கெட்டிக்காரி எண்டுறதுக்காக, படிப்பில முந்த முடியாமல் மனத்துக்குப் பிடிச்சவரை பறிக்க நினைக்கிறது சரியோ? அதுவும், அவள்… உங்கட அப்பா செய்ற உதவித் தொகையில படிக்கிறாள் எண்டுறதுக்காக அவளின்ர நேசத்தைக் கேவலப்படுத்தலாமோ? அழகிலும் தன்னை விடக் குறைவாம். பார்க்கிற ஆக்களின்ர பார்வையில தானே இருக்கு யார் யாருக்கு அழகு எண்டு? காதலுக்கு இதெல்லாம் சரியான காரணமா?” இப்போதும் அவனிடம் தான் கேள்வியைத் தள்ளிவிட்டாள் அவள்.
வாயடைத்துப்போனான் பிரதாபன். தன் தங்கை இந்தளவு தூரத்துக்கா இறங்கி இருக்கிறாள்? அதுவும் செஞ்சோலையில் வளர்ந்த பிள்ளையோடா அவளுக்குப் போட்டி? மனதில் குன்றினான். அதைவிட, அப்பா உதவி செய்கிறார் என்றால் அவள் நிச்சயம் படிப்பில் மிகுந்த கெட்டிக்காரியாகத்தான் இருக்கவேண்டும். நம் உதவியில் ஒருத்தி படிக்கிறாள் என்பதாலேயே அவளின் நேசத்துக்குரியவனைத் தட்டிப்பறிக்க நினைப்பது என்பது எவ்வளவு கீழிறக்கமான செயல்? அவனால் இன்னுமே இதையெல்லாம் தங்கை செய்திருப்பாள் என்று நம்ப முடியவில்லை.
தன் முன்னே நிற்பவள் பொய் பேசவில்லை என்று அவனது உள்மனது எடுத்துரைத்தது. ஆனாலும், “இதெல்லாம் உண்மை எண்டு எப்பிடி நான் நம்புறது?” என்று நேராக அவளைப்பார்த்துக் கேட்டான் அவன்.
“தாராளமா கம்பஸ்ல விசாரிச்சு தெரிஞ்சு கொள்ளலாம். உங்கட தங்கச்சிய கூட நீங்க விசாரிக்கலாம். அவவின்ர பிரண்ட்ஸ்..” அவளிடம் எல்லாவற்றுக்கும் நேர்மையான பதில்கள் இருந்தன.


