பிரதாபன் எதைச் சொல்லியும் பிரபாவதி கேட்பதாயில்லை. “அவர் என்ன சொன்னவர்? அப்படியே சொல்லு!” என்று நின்றாள்.
“அவருக்கு விருப்பம் இல்லையாம்.”
“நினைச்சனான்! அவன்ர தங்கச்சிதான் எதையாவது சொல்லி மனதை மாத்தியிருப்பாள்.”
தங்கையின் அநியாயக் குற்றச்சாட்டில் சினம் பொங்கினாலும் அதை அடக்கி, “அதுதான். நீ சொன்ன மாதிரியே அந்தப் பெட்டை(பெண்) அவ்வளவு நல்லவள் மாதிரி தெரியேல்ல பிரதி. எங்களுக்கு இது சரியா வராது.” என்று சொல்லியும் பார்த்தான்.
அவளோ, எப்படியாவது அவனைக் கட்டிவை என்பதிலேயே நின்றாள். குடும்பம் இல்லை, வசதி இல்லை என்று அவன் என்ன சொல்லியும் கேட்க மறுத்தாள்.
பிரதாபனுக்குக் கோபம் கூட வந்துவிட்டது.
“இவ்வளவு பிடிவாதம் ஆகாது பிரதி! அவன்தான் வேணும் எண்டு என்னத்துக்கு இந்தப்பாடு படுறாய்? அவனைவிட நல்ல இடமா பாத்து நாங்க கட்டிவைக்கிறம். பேசாம படிச்சு முடிக்கிற வேலைய மட்டும் பார்!”
அவனுடைய அதட்டலில் அதிர்ந்து நின்றாலும், “உன்னால முடியாட்டி சொல்லு அண்ணா, அப்பாட்ட நானே கதைக்கிறன்.” என்றாள் அவள். அதைக்கேட்டு அதிர்ந்துபோனான் பிரதாபன்.
ஒரு பெண்பிள்ளை, அவரளவில் இன்னுமே குழந்தை என்று நினைக்கும் அவள் அவரிடமும் இப்படிப்போய்க் கேட்டால், நிச்சயம் மனம் உடைந்துபோவார். இருந்தாலும், அவனைப்போலவே அவர்களை விசாரிப்பார். அவள் நடந்துகொண்ட முறைகள் எல்லாம் அவர் காதிலும் விழும். ‘என் பெண்ணா இப்படி’ என்று முற்றிலுமாக நொந்துபோவார். ஊருக்குள் பெரிய மனிதனாக வாழ்பவர். எளியவர்களுக்கு மனமுவந்து உதவிகள் புரிபவர். நாலு நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு நியாயம் பேசுகிறவர். அப்படியானவர் மகளின் சுயரூபம் தெரிந்தால் துடித்துவிடுவார். அந்த வலியைத் தந்தைக்குக் கொடுக்க அவன் தயாராயில்லை.
அவனுக்கே தங்கையைப் பற்றிக் கேட்டவரையில் மனது விட்டே போய்விட்டதே.
ஓடிவந்து அவளைத் தடுத்து, திரும்பவும் பேசிப்பார்க்கிறேன் என்று சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப் போயிற்று பிரதாபனுக்கு!
நண்பன் சிவானந்தனிடம் வந்த பிரதாபன், நடந்தவற்றைச் சொல்லிவிட்டு என்ன செய்வது என்றே தெரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சிவானந்தனுக்கோ ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
“இவளுக்கு என்ன இல்லை எண்டு அவனுக்குப் பின்னால அலையிறாள் விசரி! அவளின்ர வடிவுக்கு, தகுதிக்கு எவ்வளவு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும், சொல்லு?” கோபத்தில் படபடத்த நண்பனை அவன் விழிகள் கூர்ந்தது.
“விசரி! சரியான விசரி! கண்ண திறந்து தன்னைச் சுற்றி என்ன நடக்குது எண்டே தெரியாம… ப்ச்!” சலித்தவனையே யோசனையோடு பார்த்தான் பிரதாபன். அவனுடைய ஊகம் சரிதான்! அப்பாவின் விருப்பமும் இதுதான் என்பதையும் அறிவான்.
வீட்டுக்கு வந்து, “சிவாவை உனக்குப் பேசாட்டா பிரதி. அந்த அரவிந்தனை விட அருமையான மாப்பிள்ளை இவன். எங்களுக்குச் சொந்தமும் தானே. அம்மா அப்பாக்கும் இதுதான் விருப்பம்.” என்று நிலமையை எடுத்துரைத்தான்.
அவளோ இவனை ஆக்ரோசத்தோடு முறைத்தாள்.
“என்ன மனுசன் நீ? எனக்கு அவனைக் கட்டிவை எண்டு கேட்டா இன்னொருத்தனை மாப்பிள்ளை பேசுறாய்? அப்பாட்டையே நான் கேக்கிறன். சும்மா இல்ல, என்னட்ட பிழையா நடந்தவன் எண்டு சொல்லிக் கேக்கிறன். பிறகு எப்பிடி என்ர கழுத்தில தாலி கட்டாம இருக்கிறான் எண்டு நானும் பாக்கிறன்!” என்றவளை ஓங்கி அறையவேண்டும் போலிருந்தது பிரதாபனுக்கு. அவர்கள் வீட்டு ஆண்களுக்கு அந்தப் பழக்கமே இல்லை. எனவே அடக்கினான்.
“பொய்யான பழி போடக்கூடாது பிரதி. நீ அவசரப்படாத! நான் அவனோட கதைச்சு மனதை மாத்தப் பாக்கிறன். ஆனா, நீ கொஞ்சம் பொறுமையா இருக்கவேணும். அவசரமா செய்ற காரியமில்லை இது.” என்று என்னென்னவோ சொல்லி இந்தமுறையும் அவளைத் தடுத்துவைத்தான்.
அவளிடம் சொல்லிவிட்டாலும் இன்னொரு பெண்ணை விரும்பும் ஆணிடம்போய் என்ன பேசமுடியும்? இப்படியே கொஞ்ச நாட்கள் போனால், மாறிவிடமாட்டாளா என்று அவன் காத்திருக்க, அவளோ அவன் எதையுமே செய்யவில்லை என்றதும், ஆங்காரம் மிக ஒருநாள் ரோஜாவுக்கு அடிக்கும் பூச்சிமருந்தை அருந்திவிட்டிருந்தாள்.
மொத்தக் குடும்பமும் ஆடிப்போனது! தெய்வானை அம்மா அழுது புரண்டார். பெற்ற மகள் நஞ்சு அருந்தும் அளவுக்கு என்ன நடந்தது என்று தெரியாது திகைத்து நின்றுவிட்டார் ரகுவரமூர்த்தி. ஊர் உலகத்தில் பல கதைகள் பரவ, அவர் உள்ளே உடைந்துபோனார். எவ்வளவு கௌரவமாக வாழ்ந்த குடும்பம். தலைமகனாகப் பெற்றவர்களையும் சமாளித்து அவளையும் பார்த்தது பிரதாபன் தான்.
வைத்தியசாலையில் இனி உயிருக்கு ஆபத்தில்லை என்றதும் தான் மூச்சு விட்டான். ஆனால், அவனை நிம்மதியாக இருக்கவிடும் எண்ணம் பிரபாவதிக்கு இல்லை. கண்ணை முழித்ததுமே, அவனை அருகே அழைத்து, அவள் கேட்ட முதல் கேள்வி, “அவரிட்ட போனியா(போனாயா) அண்ணா?” என்பதுதான்.
இங்கே உயிருக்காக இவள் போராட நான் ஏன் அவனிடம் போக என்று அவன் குழம்ப, “பிறகு என்னத்துக்கு என்னைக் காப்பாத்தினாய் அண்ணா? போ! போய் நான் நஞ்சு குடிச்சிட்டன் எண்டு சொல்லி அவர கூட்டிக்கொண்டு வா!” என்று ஆத்திரமாகக் கத்தியவளை அடக்கமுடியாமல், மருந்து ஏற்றித்தான் உறங்க வைத்தார்கள்.
நல்லகாலம், வீட்டினர் இல்லாத நேரம்பார்த்துக் கண்விழித்தாள்! ஆனால்.. குடும்பத்தினர் எல்லோரும் சூழ இருந்தபோது கண்ணே திறக்காதவள், ‘போயிட்டு வாறம்’ என்று அவர்கள் புறப்பட்டுவிட்ட அடுத்த நிமிடம் எப்படி விழித்துக்கொண்டாள்? சந்தேக விதை மனதில் விழுந்துவிட, அப்போதுதான் ‘நிறையக் குடிக்கேல்ல. அதால பெரிசா ஆபத்தில்லை.’ என்று வைத்தியர் சொன்னதும் நினைவு வந்தது.
அடுத்தகணம் தன்னையே மனதால் குட்டிக்கொண்டான். யாராவது உயிரோடு விளையாடுவார்களா என்ன? அதுவும் அவன் தங்கை? கொஞ்சம் கோபக்காரிதான், பிடிவாத குணம்தான் என்றாலும் அந்தளவுக்கு இறங்கமாட்டாள். அரவிந்தன் மீதான ஆசைதான் சற்றே அவளைப் பிழையாக நடக்க வைப்பதும். சின்னப்பெண் தானே. பக்குவம் வர வர தானே விளங்கிக்கொள்வாள் என்று எண்ணிக்கொண்டான்.