ஆனால், இனி என்ன செய்வது? அவனிடமும் போய்க் கதைக்க முடியாது. உயிர் விடும் அளவுக்குத் துணிந்தவளிடம் மனதை மாற்றிக்கொள் என்று சொல்லவும் முடியும் போலில்லை.

இதற்கு என்னதான் தீர்வு? தீர்வோடு வந்தாள் பெயர் கூடத் தெரியாத அந்தப் பெண்!

கல்வித் திணைக்களத்தில் வேலை எதுவும் ஓடாமல் சுழல் நாற்காலியில் சுழன்றபடி இருந்தவனின் அறைக் கதவைத் தட்டிவிட்டு மெல்லத் திறந்தாள். அழகான அளவான புன்னகையை அவனுக்குப் பரிசளித்தபடி வந்தவளைப் பார்த்தபோது, தன் திணறலுக்கான அத்தனை பதில்களும் அவளிடம் இருப்பதுபோல அவன் மனம் துள்ளியது.

வரவேற்று உபசரித்தான். முன்னிருக்கையைக் காட்ட, அங்கே தன்னை அலங்கரித்துக்கொண்டாள் அவள்.

என்னவோ அவளை எதிர்பார்த்து இருந்ததுபோல நடந்துகொள்கிறானே. சின்னக் குறுகுறுப்போடு நோக்கினாள்.

ஒற்றைப் புருவத்தை மட்டுமே உயர்த்தி என்ன என்று கேட்டான் அவன்.

வேகமாகப் பார்வையைத் தழைத்தவள் சிரிப்பை அடக்கப்பார்க்க, “சிரிப்பு வந்தா சிரிக்கவேணும்!” என்றான் அவன்.

அதற்குமேல் அடக்கமாட்டாமல் அவள் சிரித்துவிட அவனுக்குள் உற்சாகம் பீறிட்டது. அந்தச் சிரிப்பை வரவழைத்துவிடதான் அவ்வளவு நேரமாகப் பெரும் பிரயத்தனம் செய்தோம் என்று உணராமலில்லை பிரதாபன்.

டீ கொடுத்து உபசரித்தான். பொதுவாகப் பேசிக்கொண்டிருக்க நேரம் போய்க்கொண்டிருந்தது. முக்கியமாகப் பெயரைக் கேட்டுக்கொண்டான். யாதவி என்று அவள் சொல்ல, “ஆளுக்கேற்ற அழகான பெயர்!” என்றான் ரசனையோடு.

அதென்ன ஆளுக்கேற்ற அழகான பெயர்? அவளை அழகி என்கிறானா? அவனிடம் கேட்கவா முடியும்?

அவள் நிமிர, கேள் என்று சீண்டிக்கொண்டிருந்தது அவனது சிரிக்கும் விழிகள்.

“இங்க எவ்வளவு காலமா வேலை செய்றீங்க?” என்று பேச்சை மாற்றினாள் அவள்.

சுருக்கமாகத் தன்னைப்பற்றிச் சொன்னவன் சுற்றிச் சுழன்று அவளிடமே வந்து நின்றான். சின்ன வயதிலிருந்து என்ன படித்தாள்? என்ன பிடிக்கும், அவளது பொழுதுபோக்கு என்ன? அவளின் எதிர்காலத் திட்டங்கள் என்ன? என்று கேட்டு அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் எதற்காக வந்தாள் என்று கேட்கும் எண்ணமேயில்லை.

அவளுக்குள்ளும் நேரம் செல்லச் செல்ல மெல்லிய குறுகுறுப்பொன்று குறுகுறுக்கத் துவங்கியது. அதோடு, அவன் விழிகள் ரசனையோடு அவளின் அசைவுகளை ரசிக்கிறது என்று உணர்ந்தபோது இயல்பாய் இருக்கமுடியாமல் நெளிந்தாள்.

“ஏன் வந்தனான் எண்டு கேக்க மாட்டிங்களா?”

“என்ன அவசரம்? ஆறுதலா சொல்லுங்கோ.” கண்ணால் சிரித்தபடி சொன்னான் அவன்.

வந்து ஒரு மணிநேரமாயிற்று. இன்னும் என்ன அவசரமாம்? இதில் ஆறுதலாகச் சொல்லட்டாம். அவனுடைய குறும்பை அவளின் மனது விரும்பி ரசித்தது. இவன் வேலை ஏதும் பார்க்க மாட்டானா என்ன? அப்படி இல்லை என்பதுபோல் அவ்வப்போது பியூன் வந்து கோப்புகளை நீட்டினார். இவனும் அவளிடம் ஒரு நிமிடம் என்றுவிட்டு வாசித்துக் கையொப்பம் இட்டுக் கொடுத்தான்.

பிரதாபனுக்கும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இல்லை. ஆனாலும், வெகு சந்தோசமாக அவளைச் சீண்டிக்கொண்டிருந்தான். இந்தளவு உற்சாகம் எங்கிருந்து பிறக்கிறது என்றே தெரியவில்லை. ஏனோ, அவளைத் தன்னருகிலேயே தன் பாதுகாப்பிலேயே வைத்திருக்க மனம் பரபரத்தது.

“அண்ணாக்குக் கல்யாணம்..”

அவன் மிதந்துகொண்டிருந்த கனவுலகம் சட்டென்று உடைந்துபோயிற்று. சிரிப்புத் துணி கொண்டு துடைத்தாற்போல் மறைய அவளைப் பார்த்தான்.

அவளுக்கும் விளங்கியது.

“உங்கட தங்கச்சி அண்டைக்குக் கோயில்ல வச்சு என்னோட பெரிய சண்டை. எல்லாச் சனமும் பாத்தது. அசிங்கமா போயிற்று! கிளாஸ்லையும் ராகவியோட ஒரே பிரச்சனை. அண்ணா அண்ணியோட கதைச்சுக்கொண்டு இருந்ததைக் கண்டுட்டு, எண்ணி ரெண்டு நாளைக்குள்ள உன்ன என்ர கழுத்தில தாலி கட்ட வைக்கிறன் பார் எண்டு சவால் விட்டிருக்கிறாள். வெளில எங்க போகவும் பயமா இருக்கு. உங்கட தங்கச்சி எங்க நிண்டு என்ன செய்வா எண்டே தெரியேல்ல. அதுதான், இனியும் பொறுக்கிறது அவவுக்கும் நல்லமில்லை எங்களுக்கும் நல்லமில்லை எண்டு கல்யாணத்த உடனயே வச்சிட்டோம். நீங்கள் வரவேணும். அழைப்பு வைக்க வந்தனான்.” என்றவள் ஒரு அழைப்பிதழை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

பிரதாபனுக்கு அவளின் முகம் பார்க்கவே சங்கடமாயிற்று! வேலைக்குப்போய்க் காசு சேர்த்துத் திருமணம் செய்யப்போகிறோம் என்று அதுவும் முதலில் அவளுக்குச் செய்துவிட்டுப் பிறகுதான் அண்ணாவுக்கு என்று இருந்தவர்களை இந்த நிலைக்கு அவன் தங்கை தள்ளிவிட்டுவிட்டாளே!

அதைவிட அவன் சந்தேகப்பட்டது சரிதான். அரவிந்தனிடம் சவால் விட்டுவிட்டு, எல்லோரையும் தன் வழிக்கு வரவைப்பதற்காகவே கொஞ்சமாய் விசத்தை அருந்தியிருக்கிறாள். எல்லாமே திட்டமிட்டுச் செய்த செயல்! உள்ளுக்குள்ளேயே தங்கையை எண்ணிக் குன்றினான் பிரதாபன். ஆனாலும், அவனுக்குள் ஒரு கேள்வி.

“பிரதி இப்ப எங்க எண்டு தெரியுமா?” அழைப்பிதழை வாங்கமுதல் கேட்டான்.

அவளிடம் குழப்பம். “ஏன் எங்க போய்ட்டா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

அவளிடம் பொய்யில்லை. அவனால் அவளின் விழிகளில் தெரிந்த குழப்பத்தைப் படிக்க முடிந்தது. இந்தக் கல்யாணம் நடப்பதும் நல்லதற்குத்தான். அதைவிட இங்கே மாற வேண்டியவள் அவனது தங்கை மட்டுமே! மாற்றியே ஆகவேண்டும்! எனவே முகத்தை மலர்ச்சியாக மாற்றிக்கொண்டான். கைநீட்டி அழைப்பை வாங்கினான்.

“கட்டாயம் வாங்கோ!” என்று அழைத்தவளின் விழிகளில் கேள்வி.

அவன் முகத்தில் ஓடிய சிந்தனை எதற்காக என்று கேட்கிறாள். மனம் கனிந்துபோயிற்று! “ஒண்டுமில்லை. வேறொரு விசயம் நினைவுக்கு வந்தது!” மென்மையாய் கனிவுடன் அவன் சொன்னதில் அவள் கன்னங்கள் சூடாகிற்று. அதைக் கண்டுகொள்வானோ என்று வெட்கி, “போயிட்டு வாறன்!” என்றவள் அங்கிருந்து ஓடியே போனாள்.

எவ்வளவு பக்குவமாக நடக்கிறாள். இதில் அவனுடைய தங்கையைக் காட்டிலும் ஒரு வயது சின்னவள்.

அவளின் முகச் சிவப்பைக் கண்டு முகம் கொள்ளா புன்னகை அவனிடத்தில். வேகமாக ஜன்னலோரம் வந்துநின்று கீழே பார்த்தான். சைக்கிளின் முன் பாஸ்கெட்டில் தன் பர்ஸையும் கொண்டுவந்த அழைப்பிதழ் அடங்கிய பையையும் போட்டுவிட்டு நளினமாக அதிலே ஏறிச் சென்றவளின் பின்னாலேயே அவன் மனமும் சென்றது.