மாலை வேலை முடிந்து வைத்தியசாலைக்குப் புறப்பட எண்ணியதுமே, அவனது அத்தனை உற்சாகமும் வடிந்துபோயிற்று! திருமணம் முடியும்வரை அவளைச் சமாளிக்க வேண்டும். பிறகு வேறு வழியில்லை என்று மறந்துவிடுவாள்.
கடினம் தான். ஆனால், அதுதானே அவளுக்கும் நல்லது. பாரமேறிய மனதுடன், தங்கையை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்று எண்ணிக்கொண்டு போனான்.
அங்கே போனதும் அவளும், “அண்ணாவோட கொஞ்சம் தனியா கதைக்கோணும் அம்மா!” என்று அங்கிருந்தவர்களை வெளியேற்றினாள்.
அவளின் இந்தத் தீவிரம் கண்டு கலங்கிப்போனான் பிரதாபன். “கதச்சனியா அண்ணா?” அவனையும் வேறு கதைக்க விடாமல் கேட்டாள்.
“ம்ம்.. ஆள் கொஞ்சம் பயந்துதான் போய்ட்டான். எண்டாலும், நீ என்னவோ சவால் விட்டியாம் எண்டு ஆள் கொஞ்சம் முறுக்குது. அதால நீ முதல் கெதியா சுகமாகி வா! எல்லாம் நல்லதா நடக்கும்!” என்றான் பிடி கொடுக்காமல்.
அவள் விட்ட சவாலை அவன் அறிந்திருக்கிறான் என்பதில் கதைத்துத்தான் இருக்கிறான் என்று நம்பினாள் பிரபாவதி. என்றாலும், “நீ கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே?” என்று சினத்தோடு கேட்டாள்.
“என்னெண்டு வருவான்? நீ ரோட்டில கண்டு சண்டை பிடிச்சிருக்கிறாய். அவன்ர தங்கச்சிய கோயில்ல வச்சு எல்லாருக்கும் முன்னுக்கும் கேவலப்படுத்தி இருக்கிறாய். வகுப்பிலையும் சண்டை. அவன் விரும்புற அந்தப் பெட்டையும் ‘சும்மா ஒருத்தி வந்து சண்டை பிடிப்பாளா’ எண்டு என்னவோ கத்திப்போட்டுப் போய்ட்டாளாம். அந்தக் கோபத்தில இருக்கிறான் அவன். உன்ர அவசரத்துக்கு ஒண்டும் நடக்காது பிரதி. இனியாவது கொஞ்சம் பொறுமையா இரு!” ஒவ்வொரு பொய்யையும் சொல்ல சொல்ல, குறுகிப்போனான் பிரதாபன்.
“அதுக்காகத்தான் அவளோட நிக்கேக்க சண்டை பிடிச்சனான்.” சிரித்துக்கொண்டு சொன்னவளிடம் வெறுப்பைக் காட்டிவிடாமலிருக்கப் பெரும் பாடுபட்டான் பிரதாபன்.
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அவர்களின் திருமணம் முடியும்வரை இந்த வேலையை அவன் பார்க்கத்தான் வேண்டும்! என்னென்னவோ சொல்லிச் சமாளித்தான். ஒருவாரம் வைத்தியசாலையில் இருக்க வைத்தான். பிறகும், “வெளில எங்கயும் விடாதீங்க அம்மா. நஞ்சு குடிச்சதில ஊர் ஒருமாதிரி கதைக்குது. பிறகு அதையும் கேட்டு இன்னுமே மனமுடைஞ்சு போவாள். கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே இருக்கட்டும். உடம்பையும் தேற்றி விடுங்கோ!” என்று தாயிடமும் ஒரு பொய்யைச் சொல்லி அவர்களின் திருமண நாள்வரை அவளைப் பிடித்துவைத்தான் பிரதாபன்.
அரவிந்தனை வழிக்குக் கொண்டுவர என்று அருந்திய நஞ்சு வேறு பிரபாவதியின் உடலின் முழுச் சக்தியையும் உறிஞ்சியிருந்ததில் அவளால் எழுந்து நடமாட முடியாமல் போனதும் பிரதாபனுக்குச் சாதகமாயிற்று!
இத்தனையும் நடந்துகொண்டிருந்த போதிலும் அவனது ஆழ்மனது யாதவியைக் காண ஏங்கிக்கொண்டே இருந்தது. இது வேண்டாம். நல்லதற்கல்ல. மனதை அலைபாய விடக்கூடாது என்று எத்தனை கட்டுப்பாடுகளை விதித்தாலும் போகுமிடமெங்கும் விழிகள் அவளைத் தேடாமல் இருப்பதே இல்லை.
பிரத்தியேகமாக அவனாக முயலாதபோதும், விதியின் விளையாட்டில் இருவரும் எதேர்ச்சையாகப் பலமுறை சந்தித்துக்கொண்டார்கள். ஒருமுறை டவுனில், இன்னோர் முறை லைப்ரரியில், இன்னோர் முறை பஸ் நிறுத்தத்தில் என்று அவள் நிற்பதைக் கண்டுவிட்டுக் கதைத்தான். ஒவ்வொரு முறையும் அவளோடு கதைக்கும்போதெல்லாம் தான் தன்வசமாயில்லை என்பதை உணரத் தொடங்கியிருந்தான் பிரதாபன்.
திருமண நாளும் வந்தது!
கோவிலில் எளிமையாகத்தான் திருமணம் நடந்துகொண்டிருந்தது. மணப்பெண்ணுக்குத் தோழியாக மேடையில் நின்றிருந்தவளின் விழிகள் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி வாசலை நொடிக்கொருதரம் வலம் வந்துகொண்டிருந்தன.
தன் உள்ளம் போகும் போக்குப் புரியாமலில்லை. வேண்டாம் வேண்டாம் என்று அறிவு எடுத்துரைத்த போதிலும், அவனது அலுவலகம் அமைந்திருந்த வீதியால் போனவள் திருமணத்தை அவனிடம் தெரிவிக்க இது நல்ல வழி என்கிற சாட்டுடன், ஏதோ ஒரு தைரியத்தில் அங்கே சென்று அவனைப் பார்த்து அழைப்பிதழையும் கொடுத்து விட்டிருந்தாள்.
அவனுக்கும் அவள்மீது ஈர்ப்பு உண்டு என்பதை ரசனையோடு படியும் அவன் பார்வைகள் உணர்த்தியிருக்கிறது. அதை அவனாக அடுத்தகட்டத்துக்கு நகர்த்தாத போது அவளாக நகர்த்த மனமில்லை. அதோடு, இதெல்லாம் வேண்டாம் என்றும் புத்தி எடுத்துரைத்துக்கொண்டிருந்தது.
இத்தனை வாத பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருந்த போதிலும், அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
சற்று நேரத்தில் அவனும் வந்தான். கோயில் மண்டபத்துக்குள் நுழைந்ததுமே தேடிச் சுழன்ற விழிகள் அவளில் மையம் கொண்டுவிட, மலரப் புன்னகைத்தான். முகம் மலர, அழகாய்ப் புன்னகைத்து, “வாங்கோ!” என்று தலையசைப்பால் வரவேற்றாள் யாதவி.
அதை உள்வாங்கியபடி அவளையே பார்த்தவண்ணம் அமர்ந்துகொண்டான் பிரதாபன். தன் தோழி ஒருத்தியை அழைத்து அவனைக்காட்டி என்னவோ சொல்ல, இறங்கிவந்த அந்தப்பெண் சற்று நேரத்தில் அவனிடம் பலகாரத் தட்டைக் கொண்டுவந்து நீட்டினாள். சற்றே தலையைச் சரித்து, குறும்புடன் யாதவிக்கு நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டான் அவன்.
அழகான மெல்லிய பட்டில் தங்க நகைகள் இல்லாமல் கவரிங் அணிந்து பெண்ணின் தோழியாக நின்றிருந்த யாதவி, காதோரமாய்ச் சூடியிருந்த ஒற்றை ரோஜா அவளைப்போலவே அவன் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருந்தது.
அங்கே தோழியுடன் சடங்கில் கவனமாக இருந்தாலும், அவன் பார்வை தன்னையே தொடர்வதை அவளால் உணர முடிந்தது. ‘இப்பிடி கண்ணெடுக்காம என்னையே பாத்தா எப்பிடி?’ அவனது பார்வையைத் தான் உணர்கிறோம் என்று காட்டிவிடக்கூடாது என்று பலத்த கவனமாக இருந்தபோதிலும் ஒரு கட்டத்தில் அவளின் விழிகள் உயர்ந்து அவனிடம் கேள்வி கேட்டுவிட்டது.
இதற்காகத்தானே காத்திருந்தான்!
வெற்றிச் சிரிப்பு ஒன்றைச் சிந்தி அவன் சீண்ட, பிடிபட்ட உணர்வில் முகம் சூடாகிப் போயிற்று! ‘அங்காள பாருங்கோ!’ கண்களால் அதட்டியவளின் பொய் முறைப்பில் மொத்தமாகக் கவிழ்ந்தான் பிரதாபன்.


