இணைபிரியா நிலை பெறவே 3 – 1

அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றது அவள் மனது. செய்கிற வேலைகளில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை.

“என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று அவள் தந்தை செந்தில்குமரன் கவனித்துக் கேட்கும் அளவில் இருந்தது அவளின் கவனச் சிதறல்.

கடைசியில், “அம்மாச்சி, சாப்பாட்டுக்குக் கூப்பிட்டா கொஞ்சம் நேரத்துக்கா போகோணும். என்னவோ சாப்பிட மட்டும்தான் வந்தனான் எண்டு சொல்லுற மாதிரி, சரியா அந்த நேரத்துக்குப் போறது சரியில்ல. வெளிக்கிட்டுப் போயிற்று வாங்கோ!” என்று மங்கையற்கரசி சொன்ன பிறகே புறப்படவே ஆயத்தமானாள்.

அவள் இருந்த மனநிலையில் வினோதினியின் குழந்தைகளுக்கு ஒன்றும் வாங்கி வைக்கவும் இல்லை. நேராகப் புறப்பட்டுப் புதுக்குடியிருப்புச் சந்திக்குச் சென்று, அவள் மகனுக்கு விளையாடப் பஸில் வாங்கினாள்.

அடுத்துப் பிறந்த பெண் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. அவளை இவள் இன்னும் பார்க்கவே இல்லை. அந்தக் குழந்தைக்கு இரண்டு குட்டிச் சட்டைகளும், விளையாட பொம்மையும், கொஞ்சம் பழங்களும் வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு ஸ்கூட்டியை விட்டாள்.

அவர்களது அரசியல் குடும்பம் என்பதில் முன்னரும் வாசலில் காவலாளி நிற்பார்தான். பழைய காவலாளிக்கு இவளைத் தெரியும். இப்போது நின்றவர் புதியவர். அவள் தன்னை வினோதினியின் நண்பி என்று சொல்லியும் உள்ளே விட மறுத்தார். முக்கியமாக அவள் கையில் இருக்கும் பைகளைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே முழு மனமாக வராததாலோ என்னவோ அது அவளை ஏதோ ஒரு வகையில் கோபம் கொள்ள வைத்தது.

அப்போதும் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறேன், வினோதினியின் நண்பி, வேண்டுமானால் அவளையே கேளுங்கள் என்று இவள் எத்தனை முறை பொறுமையாகச் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை.

வினோதினியை அழைத்து அங்கு வரச் செய்து, அந்த மனிதரின் முகத்தைக் கறுக்க வைக்க அவளால் முடியும். ஏனோ அது அவளுக்குப் பிடிக்கவில்லை. அந்தளவில் தன்னை சோதனைக்கு உட்படுத்தித்தியோ, அல்லது தான் அவள் நண்பிதான் என்று நிரூபித்தோ அவன் வீட்டுக்குள் போக வேண்டுமானால் அவளுக்குப் போகவே தேவையில்லை.

பேசாமல் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து அவள் புறப்பட ஆயத்தமாகையில் அங்கே வந்தான் சகாயன். அவள் வீட்டுக்குள் போகாமல் புறப்படுவது தெரிந்தது. சட்டென்று அவளை மறிப்பது போன்று தன் பைக்கை நகர்த்தி நிறுத்தி, “என்ன?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“செக் பண்ணித்தான் உள்ளுக்கு விடுவன் எண்டு சொன்னனான் சேர். அதுக்கு மாட்டன் எண்டு சொல்லிப்போட்டுத் திரும்பிப் போறா.” மெல்லிய பயத்துடன் சொன்ன காவலாளியை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கையைக் காட்டினான்.

ஓடிப்போய் கேட்டைத் திறந்துவிட்டார் அவர்.

அவன் சொல்லி அவள் போவதா? இன்னுமே முகம் கடுத்துவிட ஸ்கூட்டியை வெட்டித் திருப்பினாள்.

“அவருக்கு உன்னைத் தெரியாதெல்லா.” என்றான் அவன் சமாதானமாக.

அவன் ஒருவன் நிற்கிறான் என்றே நிமிர்ந்தும் பாராதவள் அவன் சொன்னதையா கேட்கப்போகிறாள். திரும்பவும் அவள் ஸ்கூட்டியை நகர்த்திக்கொண்டு போவதிலேயே கவனமாக இருக்க, “உள்ளுக்குப் போ ஆரு!” என்றான் திரும்பவும்.

ஆருவாம்! என்ன உரிமையில் அவள் பெயரைச் சுருக்கி அழைக்கிறான்? அவள் முகத்தில் சினமும் சீற்றமும். இன்னும் வேகமாக அவனைச் சுற்றிக்கொண்டு போக முயன்றாள்.

அவனும் முன்னாலும் பின்னாலும் பைக்கை நகர்த்தி அவளைப் போகவிடாமல் செய்ய, பேசாமல் அங்கேயே ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கி விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள் ஆரபி.

ஒரு கணம் கண்களை இறுக்கி மூடித் திறந்துவிட்டு வினோதினிக்கு அழைத்து நடந்ததைச் சொன்னான் சகாயன். உடனேயே வினோதினி ஆரபிக்கு அழைத்தாள். இவள் ஏற்கவேயில்லை என்றதும் இருந்த வீட்டுடையிலேயே தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வந்து இவளைப் பிடித்து, “அவர் விடாட்டி எனக்குச் சொல்ல மாட்டியா லூசு! பெரிய இவள் மாதிரி கோவிச்சுக்கொண்டு வருவியாடி!” என்று அதட்டினாள்.

“அப்பிடி உனக்குச் சொல்லி என்னை நிரூபிச்சு வரோணும் மாதிரி இருக்கேல்ல வினு.” என்றவள் பேச்சில் வினோதினிக்கு முகம் இலேசாக மாறிப்போயிற்று.

“என்னடி இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்? அந்தளவுக்கு நான் முக்கியம் இல்லையா உனக்கு?” என்றாள் மனத்தாங்கலாக.

“சொறி வினு. உன்னைக் காயப்படுத்த நினைக்கேல்ல. ஆனா…” என்றவளுக்குச் சரியில்லாமல் போய்விட்ட தன் மனநிலையை அவளிடம் விளக்கவும் முடியவில்லை.

வினோதினி சட்டென்று சமாளித்துக்கொண்டாள். அவள் மனத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால்தான் இத்தனை வருடங்களாக விலகி இருந்திருக்கிறாள். அதுதான் அவளை இப்போதும் இப்படிக் கதைக்க வைக்கிறது என்று விளங்கிற்று. கூடவே தன் தமையனுக்கும் அவளுக்குத்தான் ஏதோ ஒன்று என்றும் புரிந்தது. இல்லாமல் அவன் சொல்லியும் கேளாமல் இப்படி வரமாட்டாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock