இணைபிரியா நிலை பெறவே 10 – 2

ஓடிப்போய்த் தன்னால் முடிந்த முதலுதவியை அவனுக்குச் செய்ய விரும்பினாள். ஆனால், தான் அவசரப்பட்டு எதையாவது செய்து, அதுவே அவனுக்கு ஆபத்தில் முடிந்துவிடுமோ என்று காத்திருந்தாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் காவல்துறையுடன் வந்து நின்றார் நவரத்தினம். தன் மகளிடம் சேட்டை விட முயன்றவனை அடையாளமே இல்லாமல் அழிக்கும் ஆத்திரம் அவருக்கு. அரசியலில் இருக்கும் மனிதர். பொதுவெளியில் மக்கள் கூடி நிற்கிற இடத்தில் வெளிப்படையாக எதையும் செய்ய முடியவில்லை. அவர்களைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றிய காவல்துறை அதிகாரிகளில் ஒருவரைத் தனியாக அழைத்துப்போய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசினார்.

இதற்குள் கடையில் ஒரு தண்ணீர்ப் போத்தலை வாங்கிக்கொண்டு ஓடி வந்து, சகாயன் உடலில் உண்டாகியிருந்த காயங்களைத் தண்ணீர் கொண்டு துடைக்க முயன்றாள் ஆரபி.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. “ஏய் என்ன செய்றாய்?” என்று அதட்டிக் கையை இழுத்துக்கொண்டே, “நீங்க இன்னும் போகேல்லையா?” என்றான் கோபத்துடன்.

“வினோ போய்ட்டாள்.”

“உன்னை ஆர் இஞ்ச நிக்கச் சொன்னது? எப்ப பாத்தாலும் தேவை இல்லாத உத்தியோகம்தான் பாப்பியா?”

“எல்லாத்துக்கும் என்னட்டயே கோவப்படுங்க. ஆனா நீங்க ஒண்டுலயும் கவனமா இருந்திடாதீங்க!” என்று அவனுக்கு மேலால் சீறினாள் அவள்.

“அவே நாலு பேர். எதையாவது கதச்சுச் சமாளிப்பீங்க எண்டு கூப்பிட்டா, இப்பிடிப் போட்டு அடிக்கிறீங்க. இப்ப உங்களுக்கும்தானே காயம்.”

“நடந்தா நடந்திட்டுப் போகட்டும். உனக்குச் சந்தோசமா இருக்குமே!” என்றவனைக் கண்ணீருடன் பார்த்தாள் ஆரபி.

“இதெல்லாம் ஒரு வலியே இல்ல. அது தெரியுமா உனக்கு?” என்றவனின் கேள்வியில் திகைத்து நின்றாள்.

இதற்குள் கிரி வந்திருந்தான். “அவனோட போ நீ!” என்றான் உடனே.

அவனோடு அவள் எப்படி?

“இல்ல, நான் பஸ்ல போறன்.”

“மெண்டல் மாதிரி கதைக்கா…” என்றவனை, “ப்ளீஸ்!” என்கிற சத்தமில்லாத அவள் கெஞ்சல் அடக்கிற்று.

“நான் பஸ்ல போறன். இல்லையா நீங்க கூட்டிக்கொண்டு போங்க.” என்றதும் சட்டென்று திரும்பி அவளையே கூர்ந்து பார்த்தான் சகாயன்.

அந்த நேரத்திலும் அவள் மனம் தடுமாற்றிற்று. இதற்குள் கிரி அவர்களிடம் வந்திருந்தான். அவனும் அவன் பங்குக்கு ஏன் கவனமில்லாமல் இருந்தான் என்று இவனைத் திட்டினான்.

அதைக் காதிலேயே வாங்காமல், அவர்களுக்குத் தெரிந்த ஓட்டோ ஒன்றை அழைத்து, அதில் அவளை ஏற்றினான். அப்போதும் போக அவளுக்கு மனமேயில்லை. ஆனால், இனியும் நிற்பது சரியாக வராது என்பதில், “ஆஸ்பத்திரிக்கு போங்க ப்ளீஸ்!” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

போகும் வழி முழுக்க மனம் முழுவதிலும் நிறைந்திருந்தவன் அவனே. அதுவும் ‘இதெல்லாம் ஒரு வலியே இல்ல தெரியுமா’ என்ற அவன் வார்த்தைகளே நின்று அவளை வதைத்துக்கொண்டிருந்தன. இதைவிட அதிகமான வலியை அவள் கொடுத்தாளா?

அவன் கேட்டதற்கு அவள் பதில் சொல்லாமல் தவிர்த்தது உண்மைதான். அவன் சொன்ன நாள்களில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. அதைவிடவும் ஒரு பயம்தான் அவனைக் குறித்து அவளிடம் இருந்தது. நாளாக நாளாகத்தான் அவளிடமும் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன.

அந்த மாற்றங்கள் எதன் அறிகுறி என்று அவள் தெளிவதற்கும், இது சரியாக வருமா என்கிற கேள்விக்குப் பதில் கிடைப்பதற்கும் அவளுக்கு ஒரு காலம் தேவைப்பட்டது. அதோடு அவன் இயல்பும் அவள் இயல்பும் முற்றிலும் மாறானவை. சாதாரணமாகவும் அவர்களுக்குள் எதுவுமே பொருந்திப் போனதில்லை.

அப்படியிருக்க இது வாழ்க்கை. நடுவில் கிரியும் இருக்கிறான். அவர்களுக்குள் எல்லாம் சரியாக வருமா என்கிற தயக்கமும்.

ஆனால், இந்தக் கொஞ்ச நாள்களில் அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோலாகி, அவன் வேண்டுமே வேண்டும் என்று அவள் உள்ளமும் அடம் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அதுவும் அகிராவின் திருமணத்திற்குப் பிறகு இன்னொருவனைத் தன் மணாளனாக அவளால் யோசிக்கவே முடியவில்லை.

அந்தத் தெளிவு அவளுக்கே இப்போதுதான் வருகிறது. இதில் எப்படி அவள் தன் மனத்தைச் சொல்லுவாள்? ஆனால் அது அவனைக் காயப்படுத்தியிருக்கிறது என்று இப்போதுதான் புரிந்துகொண்டாள்.

வீடு வந்தவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. கைகள் நடுங்கினாலும், “ஆஸ்பத்திரிக்கு போனனீங்களா?” என்று கேட்டு அனுப்பினாள்.

அவனிடமிருந்து பதில் இல்லை. காத்திருந்து பார்த்தாள். அவள் தவிப்பு நொடிக்கு நொடி கூடிப்போயிற்று.

“எங்க நிக்கிறீங்க? பிரச்சினை ஒண்டும் இல்லையே?” என்று திரும்ப அனுப்பினாள். முதல் இரண்டு முறை அனுப்புவதற்குத்தான் தயக்கம் அவளைப் பிடித்துத் தடுத்துக்கொண்டிருந்தது. பிறகு பிறகு அனுப்பிக்கொண்டே இருந்தாள்.

“ஹல்லோ!”

“ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்.”

“டொக்டர் என்னவாம்?”

“கைக்காயம் பெருசா இருந்தது. சிராய் ஏதும் இருக்கப்போகுது. காட்டாம இருந்திடாதீங்க.” என்று பல குறுந்தகவல்கள். ஒன்றுக்கும் பதில் இல்லை என்றதும் வினோதினிக்கு அழைத்து விசாரித்தாள்.

வைத்தியசாலைக்கும் காவல்நிலையத்துக்கும் போய்விட்டுத் தகப்பனும் தமையனும் வீட்டுக்கு வந்துவிட்ட தகவலைச் சொன்னாள் அவள். ஓரளவுக்கு மனம் அமைதியானது. ஆனபோதிலும் இத்தனை வருடங்களாகத் தன்னிடமிருந்து ஒரு பதில் வராதா என்று காத்திருந்தவன், தான் இத்தனை குறுந்தகவல்கள் அனுப்பியும் பதில் போடவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.

அவனுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கும், படுத்திருப்பான் என்று என்ன சமாதானம் செய்தாலும் அந்த ஏமாற்றம் அவளை விட்டு அகல்வதாக இல்லை.

அடுத்த நாள் விடிந்தும் பதில் இல்லை என்கையிலேயே அவன் வேண்டுமென்றுதான் செய்கிறான் என்று புரிந்துபோயிற்று. கைப்பேசி என்பது அத்தனைக்குமானதாக மாறிப்போய்விட்ட இன்றைய காலத்தில் இவ்வளவு நேரத்தில் அதை அவன் ஒருமுறை கூடப் பயன்படுத்தாமல் இருந்திருக்கப்போவதில்லையே.

‘போடா! நீ பதிலே போடாத!’ என்று கைப்பேசியைத் தூக்கிப் போட்டுவிட்டு இருந்துவிட்டாள். அது சில மணி நேரங்களுக்கு மட்டுமே முடிந்தது. அவன் எப்படி இருக்கிறான் என்று அறிந்தேயாக வேண்டும் போல் ஒரு துடிப்பு. எந்த வேலைகளையும் பார்க்க முடியவில்லை.

அவனுக்கு அழைப்போமா என்று பலமுறை கைப்பேசியை எடுத்துவிட்டு முடியாமல் வைத்துவிட்டாள். ஒரு கட்டத்துக்கு மேல் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவன் வீட்டுக்கே புறப்பட்டுவிட்டாள்.

நடந்தவற்றால் வினோவும் பயந்துபோய் இருந்தாள். அவளோடு பேசிக்கொண்டு இருந்தாலும் இவள் பார்வை சுற்றிச் சுழன்று அவன் எங்காவது தென்பட்டுவிடமாட்டானா என்று தேடிற்று. வீட்டில் இல்லை என்று நினைக்க முடியாமல் அவன் பைக் வாசலில் நின்றிருந்தது.

கடைசிவரை அவனைப் பார்க்கக் கிடைக்கவே இல்லை. பெரும் ஏமாற்றம். அதற்கு மேலும் தாமதிக்க முடியாது புறப்பட்டாள். இப்போது அவன் பைக்கை காணவில்லை. இப்படி தன் கண்ணில் படாமல் விளையாட்டுக் காட்டுகிறவன் மீது கோபமும் ஆற்றாமையும் பெருகிற்று.

வினோ வீட்டுத் தெரு முடிந்து திரும்பியதும் நின்றான் அவன். பைக்கில் அமர்ந்திருந்தவன் இருபுறமும் கால்களை ஊன்றி, கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்.

சட்டென்று ஸ்கூட்டியை நிறுத்தினாள். நேற்றும் இன்றும் அவனுக்காகத் தவித்த தவிப்பெல்லாம் அவனைக் கண்ட நொடியில் அப்படியே வடிய, கண்கள் முகமெல்லாம் கலங்கிச் சிவந்து போயிற்று. நெற்றி வீக்கம் நன்றாகவே சிவந்து பெருத்திருந்தது. கண்கள் சிவந்து, முகம் காய்ந்து அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று முகமே சொல்லிற்று. வலக்கையின் மேல் பக்கத்தில் பெரிய கட்டு வேறு.

பார்த்தவளுக்கு கரகரவென்று கண்ணீர் கொட்டிட்டு. “எப்படி இருக்கிறீங்க?” அவளுக்குக் குரல் எழும்பவேயில்லை.

“இந்தக் கண்ணீருக்கு என்ன அர்த்தம்?” பைக்கில் அமர்ந்திருந்த நிலை மாறாமல் வினவினான் அவன்.

“கைக்காயம் பெருசா?”

“புதுசா மெசேஜ் எல்லாம் அனுப்பி இருக்கிறாய். வீட்டுக்கே தேடி வந்திருக்கிறாய்.”

ஒரு நொடி மௌனம் சாதித்தவள், “காய்ச்சல் மாதிரி இருக்கு. வெளில திரியாதீங்க.” என்றுவிட்டு ஸ்கூட்டியை எடுத்தாள்.

அவளைத் தடுப்பதுபோல் தன் பைக்கை கொண்டுவந்து, அப்படியே நகர்த்தி அவளருகில் வந்து நின்றான். எதிர்ரெதிரில் இருவரும் நின்றிருந்தாலும் வெகு பக்கத்தில். யாராவது பார்த்தால்?

திகைப்புடன் அவள் பார்க்க, “என்னோட எண்டா வருவன் எண்டு நேற்றுச் சொன்னியே. அத நான் எப்பிடி எடுக்கிறது ஆரு?” என்று கேட்டான் அவன்.

சட்டென்று அவள் முகத்தில் சூடேறியது. பார்வையைத் தழைத்தாள். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.

“எனக்குப் பதில் வேணும் ஆரபி!” அழுத்திச் சொன்னான்.

அதுவே தன் அமைதி அவனைக் கோபத்துக்கு உள்ளாக்குகிறது என்று சொல்ல, “இதுவரைக்கும் அப்பாவோடயும் ஆனந்தனோடயும்தான் பைக்ல போயிருக்கிறன். அடுத்ததா நான் போக ஆசைப்படுறது உங்களோட மட்டும்தான்.” என்று ஒரு வேகத்தில் அவன் முகம் பார்த்துச் சொன்னவள், அடுத்த நொடியே ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!