இணைபிரியா நிலை பெறவே 11 – 2

“என்னத்துக்கு?”

“எந்தப் பிரச்சினையும் இல்லாம நாங்க சேருவமா?” மெலிந்து கலக்கம் சுமந்து ஒலித்த அவள் குரலில் அவன் தவித்துப்போனான். அதுவரை இருந்த இலகு மனநிலை அப்படியே மாறிவிட, “ஏய் ஆரும்மா, என்னடி?” என்றான் தன் தவிப்பையும் காட்டி.

“யோசிச்சுப் பாத்தா வேண்டாம் எண்டு சொல்ல ரெண்டு வீட்டிலயும் பெரிய காரணங்கள் ஒண்டும் இல்ல. நீங்க அரசியல்ல இருக்கிறீங்க எண்டு என்ர வீட்டில ஏதும் சொல்லிட்டா?” எனும்போதே அவள் குரல் உடைய ஆரம்பித்தது.

“உனக்கு என்ன விசரா? அப்பிடி எல்லாம் சொல்லாயினம்.” உடனேயே மறுத்தான் அவன்.

“சொல்லிட்டா?”

“சொல்லாயினம் ஆரு. அப்பிடியே சொன்னாலும் அப்பாவை விட்டுக் கதைக்க வைப்பன்.”

அப்போதும் மறுத்தால்? “நாங்க சேருவோம்தானே?” கலங்கி ஒலித்த குரலில் அவன் உள்ளம் கசிந்துபோயிற்று.

“கட்டாயம் நாங்க சேருவோம். அப்பிடி எல்லாம் உன்னை விட்டுற மாட்டன். நீ ஒண்டுக்கும் யோசிக்காத. என்னை மட்டுமே நினைச்சுக்கொண்டு இரு.” முதலில் இதமாகச் சொல்லிக்கொண்டு வந்தவன் கடைசி வரியை மட்டும் வம்புக் குரலில் சொன்னான்.

அவளுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்து வந்தன. “உங்கள!” என்று பல்லைக் கடித்தாள்.

“சரி சொல்லு, ஏன் இந்த ரெண்டு வருசமும் ஒண்டுமே சொல்லேல்ல?” என்றவனின் கேள்வியில் திரும்பவும் அமைதியாகிப்போனாள் அவள்.

“ஆரு?”

“ம்.”

“ஏன் என்னைப் பிடிச்சது? என்ர அழகில மயங்கிட்டியா?” என்றதும் அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“நான் வைக்கப் போறன்.” என்றாள் அவள்.

“நான் போகப்போறன் முடிஞ்சு இப்ப நான் வைக்கப்போறனா?”

“உண்மையா நான் போகோணும். உங்கட வீட்டையே நிறைய நேரம் இருந்திட்டன்.”

“எப்பிடியாவது என்னைப் பாத்திடோணும் எண்டுதானே?”

ஆம்தான். அதை எப்படி அவனிடம் சொல்வாள்?

“உன்ர கண் என்னைத் தேடினத நானும் பாத்தனான். நல்லா இருந்தது. நீ என்னைத் தேடுறது பிடிச்சிருந்தது.” இன்னுமே அவன் மீதான அவள் தேடலை ரசிக்கும் குரலில் சொன்னான் அவன்.

அவள் தவிப்பை ரசித்திருக்கிறான். இவனை என்ன செய்தால் தகும்?

அதைவிட எப்போது பார்த்தாலும் அதட்டல், உருட்டல், அடிதடி என்று இருப்பவனின் இன்னொரு பரிமாணம் கண்டு, இவன் இப்படி எல்லாம் நடப்பானா என்று அதிசயித்தாள்.

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லேல்ல. என்னை உண்மையாவே பிடிச்சிருக்கா?”

“ஏன் இப்பிடித் திரும்ப திரும்ப கேக்கிறீங்க?” இன்றைய நிலையில் அவனுக்கு என்ன குறை என்று இப்படிக் கேட்கிறான் என்கிற ஆதங்கம் அவளுக்கு.

அவனோ அதற்கும் அவளைத்தான் குற்றம் சாட்டினான்.

“வேற என்ன செய்யச் சொல்லுறாய்? ரெண்டு வருசம். பதில் சொல்லவே இல்லையே நீ. இந்தளவு தூரம் யோசிக்கிற இடத்திலையா நான் இருக்கிறன் எண்டு, அது ஒரு மாதிரி இருக்கும்.” என்றதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிற்று.

“என்ன நீங்க? அப்பிடி எல்லாம் இல்ல.” என்றாள் அவசரமாக.

“வேற எப்பிடி?”

“அது உங்களுக்கு எப்ப பாத்தாலும் கோவம் வரும். அதான் எனக்கும் உங்களுக்கும் ஒத்து வருமா எண்டு…”

“ஓ…!” அவன் சுருதி மாறுவது இங்கே இவளுக்கே புரிந்தது.

“இந்தா, ஒரு வார்த்த சொல்ல முதலே குரல் மாறுது. இதான் எனக்குப் பயமா இருக்கு.”

“சரி, இப்ப என்ன செய்றதா பிளான்?” அப்போதும் கோபம் மாறாமல் அவன் கேட்க இவளுக்கும் கோபம் வந்தது.

“பேய்க்குத்தான் வாழ்க்கைப்படோணும் எண்டு என்ர தலைல எழுதியிருந்தா பேயோடதானே வாழோணும்.” கடுப்புடன் சொன்னாள் அவள்.

“அடிப்பாவி! நான் உனக்குப் பேயா?”

“பே கூடக் கொஞ்சம் பரவாயில்லை. நீங்க அதைவிட மோசம். வைங்க ஃபோன!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்குக் கோபம் கொஞ்சமும் இல்லை.

அவனும் சிரித்துக்கொண்டிருந்தான். அவள் அப்படிச் சொன்னபோது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது உண்மைதான். ஆனால், அதிலிருக்கும் உண்மை புரிந்ததில் இப்போது கோபமில்லை.

நாள்கள் நகர்ந்தன. உற்ற நண்பிகள் அகிரா வினோதினிக்குக் கூடத் தெரியாமல் இவர்கள் காதல் வளர்ந்தது. அவ்வப்போது கைப்பேசியில் பேசிக்கொண்டனரே தவிர்த்து அடிக்கடி பேசிக்கொள்வதோ, எங்கும் சந்திப்பதோ கிடையாது. ஒரே ஊர். அடிக்கடி பார்க்கக் கிடைக்கும். பேசும் தேவை என்றால் கைப்பேசி. அதுவே அவர்களுக்குப் போதுமாயிற்று. வெளியே எங்கேயும் சந்தித்துத் தம் பெயரைக் கெடுத்துக்கொள்வதில் இருவருக்குமே உடன்பாடு இல்லை.

இப்படி இருக்கையில்தான் அபிசாவின் திருமணம் நடந்தது. அக்காவின் திருமணத்தில் தங்கையைக் கேட்கவா வேண்டும்? புதுக் காதலும் அது தந்த பூரிப்பும் தன் நாயகன் தன்னைப் பார்க்க வருவான் என்பதும் சேர அந்த வானத்து நட்சத்திரமாகவே ஜொலித்தாள் ஆரபி.

“இவள் என்னடி வர வர வடிவா வாறாள்?” என்று வினோதினி கவனித்துக் கேட்கும் அளவில் இருந்தது அவள் அழகு. உன் அண்ணன்தான் காரணம் என்றா சொல்ல முடியும்? இதில் அவன் வேறு அவளைப் பார்த்துவிட்டு, “அநியாயத்துக்கு வடிவா இருக்கிறாய் ஆரு!” என்று அனுப்பிவிட்டான்.

இந்த ஒற்றை வார்த்தைக்காகத்தானே அத்தனை மெனக்கெடல்களும். முகம் பூரித்து மலர்ந்துபோயிற்று அவளுக்கு.

“வடிவா இருந்தா ஃபோட்டோ எல்லாம் எடுத்து அனுப்ப மாட்டீங்களா?”

வியப்புடன் நிமிர்ந்து அவளை நோக்கினான்.

“சொறி. அண்டைக்கு உங்களச் சந்தேகப்பட்டு அழிக்கச் சொல்லேல்ல. திடீரெண்டு என்ர ஃபோட்டோ உங்களிட்ட இருக்கு எண்டதும் என்னை மீறின ஒரு பயம் வந்திட்டுது. இந்த விசயங்களில கவனமா இருக்கோணும் எண்டு மனதில பதிஞ்சு இருந்ததாலயோ என்னவோ அழிக்கச் சொல்லிட்டேன்.”

அவனுக்கும் புரிந்தது. அதைவிட தன்னுடையவள் தந்த அந்த விளக்கம் அவன் உள்ளத்தைக் கனிய வைக்க, “விளங்குது விடு!” என்று சில பல முத்தமிடும் ஸ்மைலிகளோடு அனுப்பிவிட்டான்.

அதுதானே! இவனுக்குச் சாதாரணமாகவே பேச வராதே என்று இவள் நினைக்கையிலேயே கொஞ்சப் புகைப்படங்கள் டொங் டொங் என்று வந்து விழுந்தன.

பார்த்தால் அன்றைக்கு இன்றைக்கு என்று பல புகைப்படங்கள். அத்தனையிலும் இவள் தனியாகவே இருந்தாள். அடப்பாவி என்று வாயில் கை வைக்காத குறையாக அவனைப் பார்த்தாள் அவள்.

வெடித்த சிரிப்பைக் கீழுதட்டைப் பற்றி அடக்கியபடி, “இவா சொல்லுவாவாம். உடனே நாங்க டிலீட் பண்ணிடுவமாம். போடி!” என்று அனுப்பியிருந்தான் அவன்.

“அப்ப அண்டைக்கு கோவம் மாதிரி போனது?”

“அதெல்லாம் சும்மா நடிப்பு!”

“உங்களை! தனியா அம்பிட்டிங்க எண்டு வைங்க, தலையைப் பிடிச்சு ஒரு ஆட்டு ஆட்டாம விடமாட்டன்!” என்று அனுப்பிவிட்டவளுக்கு உண்மையிலேயே அவன் தலையைப் பிடித்து ஆட்டும் வேகம் உண்டாயிற்று

அன்றைய நாளுக்குப் பிறகு எவ்வளவு கவலைப்பட்டாள்? அவனானால் நடித்தானாம்!

ஆனால் ஒன்று, அத்தனை புகைப்படங்களிலும் அழகாய் இருந்தாள் அவள். எப்போதெல்லாம் அவற்றை எடுத்திருப்பான் என்று அவளால் யோசித்துக் கண்டு பிடிக்கவே முடியவில்லை

“ஒரு செல்ஃபி?” என்று கேட்டு அனுப்பினான் அவன்.

“சத்தியமா அடி வாங்குவீங்க.”

“சரி விடு!” என்றவன் அவள் தனியாக அகப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றில் அவள் தோளைச் சுற்றி உரிமையாய்க் கையைப் போட்டு ஒரு சுயமியைக் கிளிக்கியிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!