அபிசாவின் திருமணத்திற்கு கிரியும் வந்திருந்தான். தாலிக்கொடி அணிந்து, புதுப் பெண்ணின் பொலிவுடன், முகம் முழுக்க மலர்ந்த சிரிப்புடன் அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருந்த அகிராவைப் பார்க்க பார்க்க ஒரு கோபம் அவனுக்குள் கணகணத்தது. கூடவே ஒரு வலியும். அவளோடு ஆரபி எதையாவது சிரித்துப் பேசுவதைக் கண்டால் பற்றிக்கொண்டு வந்தது.
அது போதாது என்று அவன் உயிர் நண்பனின் பார்வை ஆரபி பக்கம் அடிக்கடி போய்க்கொண்டிருந்தது. என்னடா நடக்கிறது என்று எத்தனையோ முறை கேட்டுவிட்டான். மழுப்பிக்கொண்டே இருக்கிறான் சகாயன்.
இப்போதும் தடுக்க முடியாமல் அவன் பார்வை அவளிடம் பாய, “என்னத்துக்கடா அவளையே பாக்கிறாய்? எனக்குத் தெரியாம உனக்கும் அவளுக்கும் இடைல ஏதும் இருக்கா? மறைக்கிறியா நீ?” என்றான் பார்வையில் கூர்மையுடன்.
“லூசா மச்சான் நீ? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” என்று பதிலுக்கு அதட்ட முயன்றான் சகாயன். அவன் சொன்னதில் உண்மை இல்லை என்பதில் அது முழுப் பலத்துடன் வர மறுத்தது.
இல்லை என்பதுபோல் தலையைக் குறுக்காக அசைத்தான் கிரி. “இது நீ இல்ல. உன்ர மறுப்பில உண்மை இல்ல. என்னவோ மறைக்கிறாய். ஆனா எனக்குத் தெரியாம அவளைப் பாத்தியோ தெரியும் உனக்கு!” என்றான் முழு வெறுப்புடன்.
அடிக்கடி இதையேதான் சொல்லிக்கொண்டிருந்தான் கிரி. அதனாலேயே தன் காதலை அவனிடம் பகிராமல் இருந்தான் சகாயன். இப்போதும் என்ன சொல்லிக் கிரியைச் சமாளிப்பது என்று தெரியவில்லை.
“ஆளும் மூஞ்சயும்!” அங்கே பிந்தி வந்த ஒரு குடும்பத்துக்குக் குளிர்பானம் கொடுத்துக்கொண்டிருந்தவளை எரிச்சலுடன் பார்த்தபடி சொன்னான் கிரி.
“டேய்! என்ன கதைக்கிறாய்?” சட்டென்று மூண்டுவிட்ட சினத்தில் அதட்டினான் சகாயன். அவனுக்கு முகமே மாறிப்போயிற்று.
“என்ன கதைக்கிறன்? முதல் அவளைச் சொன்னா உனக்கேன் கோவம் வருது?”
“கோவப்படாம? அடுத்த வீட்டு பிள்ளையைப் பற்றி இப்பிடித்தான் கதைப்பியா நீ?”
“அப்பிடித்தான்டா கதைப்பன்! அவளாலதான் எல்லாம். இல்லாட்டி இண்டைக்கு என்ர வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா மாறியிருக்கும் சொல்லு. ஆனா இப்ப, என்ர கண்ணுக்கு முன்னாலயே இன்னொருத்தனக் கட்டி வாழுறாள். நான் பாத்துக்கொண்டு நிக்கிறன். ஆனா நீ, இத்தனைக்கும் காரணமானவளுக்காக என்னோட சண்டை பிடிக்கிறாய். வர வர உன்ர போக்குச் சரியே இல்ல மச்சான்!” என்றுவிட்டு விருட்டென்று எழுந்து வெளியே போனான் கிரி.
தலையைக் கோதிக்கொடுத்தான் சகாயன். ஒரே ஊர். சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். அகிரா விடயத்தில் மட்டும்தான் அவன் சறுக்கியது. அதனாலேயே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்கிறான்.
வெளியே காட்டிக்கொள்ளாமல் விறைப்பாகத் திரிந்தாலும் அகிராவை இழந்ததை இன்னுமே ஏற்க முடியாமல் அல்லாடுகிறான் என்று இவனுக்குத் தெரியும். அதுவும் ஓரளவுக்குத் தேறி வந்தவனை மீண்டும் எழுந்த திருமணப் பேச்சு ஆசையை வளர்க்க வைத்து முழுமையான வெறுப்பில் தள்ளியிருந்தது.
தனியே இருந்து சோகப் பாட்டுக்களைக் கேட்பது, இல்லையா பைக்கை எடுத்துக்கொண்டு தனியாகவே எங்கேயாவது போய்விட்டு வருவது என்று இருந்தான். சில நேரங்களில் அவன் கண்ணோரம் கண்ணீர் கசிவதை இவனே பார்த்திருக்கிறான்.
அவன் வீட்டில் திருமணத்திற்கு பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். அதற்கும் பிடிகொடாமல் மறுத்துக்கொண்டிருக்கிறான். இப்படித் தனக்குள் வலியோடு இருக்கிறவனிடம் போய், அவனுக்குப் பிடிக்காத ஆரபியை விரும்புகிறேன் என்று எப்படிச் சொல்லுவான்?
முதல் அவன் அது வேண்டவே வேண்டாம் என்று நின்று எதுவும் செய்துவிடுவானோ என்று மிகவுமே பயந்தான். முன்னரெல்லாம் திறந்த புத்தகமாக இருந்த இவன் கைப்பேசி இப்போது கிரிக்குத் தெரியாத இரகசிய இலக்கங்களால் பூட்டப்பட்டிருந்தது. அதுதான் அவனுக்குள் விழுந்த முதல் சந்தேக விதை. அன்றிலிருந்துதான் இப்படி ஆரபி குறித்து எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறான்.
காதல் தரும் சந்தோசங்களைக் கூட அவனிடம் காட்டிவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பான். அதே நேரத்தில் அவன் ஆரபியைக் குறித்து இப்படிப் பேசுவது மிகவுமே வலிக்கச் செய்தது. ஆனாலும் அவன் மனத்தின் காயத்தை எண்ணிப் பொறுத்துப்போகிறான்.
ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்தவனின் பார்வையில் பட்டாள் ஆரபி. இவன் எப்போது பார்ப்பான் என்று காத்திருந்தவள் போன்று, இலேசாகத் தலையை அசைத்து என்னவென்று வினவினாள்.
இதழ்களில் அரும்பிய மெல்லிய முறுவலோடு ஒன்றுமில்லை என்பதுபோல் சிறிதாகத் தலையை அசைத்துவிட்டு, ஒரு முறை இரு விழிகளையும் மூடித் திறந்து அவளையும் அமைதிப்படுத்தினான்.
“என்னடி நீயா சிரிச்சுக்கொண்டிருக்கிறாய்?” திடீரென்று பக்கத்தில் கேட்ட அகிராவின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆரபி.
“என்னடி?” தன்னைக் கண்டு விழித்தவளைக் கண்டு திரும்பவும் வினவினாள் அகிரா.
வேகமாகச் சமாளித்துக்கொண்டாள் ஆரபி. “என்ன என்ன? சிவனே எண்டு சும்மா நிண்டவளிட்ட வந்து பயம் காட்டினது நீ. இப்ப என்ன எண்டு என்னைக் கேட்டா?”
“நீ சிரிச்சனி எல்லா?”
“நான் எங்க சிரிச்சனான்? கலியாணம் நடந்ததில இருந்து நீதான் சரியில்ல. ஒரு மாதிரியே அலஞ்சுகொண்டிருக்கிறாய். வேணுமெண்டா போய் அண்ணாவோட கதைச்சுப்போட்டு வா.” என்றதும் அழகாய் முகம் சிவந்தாள் அவள்.
“இந்தா பார், அண்ணா எண்டு சொன்னதும் முகம் சிவந்துபோச்சு. அப்பிடி என்னடி கதைக்கிறவர்? எப்ப பாத்தாலும் பக்கத்தில நிக்கிற எங்களுக்கே கேக்காம கதைப்பியே, சொல்லு சொல்லு!” என்று கேட்டே அவளை ஓட வைத்திருந்தாள் ஆரபி.
அவள் போனதும்தான் அப்பாடி என்று மூச்சை இழுத்துவிட்டாள். ஆனால், கிரி இவளை முறைத்தபடி அவனிடம் என்னவோ கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்து போனதையும், இவன் பிறகு தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்ததையும் ஆரபி கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.
இன்று அவள் உயிராக நேசிக்கும் நாயகனாயிற்றே. கவனிக்காமல் இருப்பாளா? அதேபோல் இங்கே அகிராவோடு வாயடித்துக்கொண்டிருந்தாலும் அவன் எழுந்து வெளியே போவதையும் பார்த்தாள்.
நண்பர்களுக்குள் என்னவோ பிடுங்குப்பாடு என்று விட முடியவில்லை. அவளை வைத்துத்தான் ஏதோ பிரச்சனை என்று மனம் சொல்ல, மெல்ல மண்டபத்தை விட்டு நழுவி அவர்களைத் தேடிக்கொண்டு போனாள்.
மண்டபத்தின் பின் பக்கம் அது. விசாலமான இடம். அதே நேரத்தில் தரைக்குக் கற்கள் பதித்து, அழகழகான நடைபாதைகள் அமைத்து, செழிப்பான குரோட்டன்ஸ் சீராக வளர்த்து, கூடாரங்கள், அலங்கார வளைவுகள், குட்டிப் பாலம், கருங்கற் குவியல், செயற்கை நீரோடை என்று மிக அழகாய் அந்த இடத்தையே அமைத்திருந்தார்கள். மணமக்களாக இருந்தாலும் சரி, அங்கே வருகிறவர்களாக இருந்தாலும் சரி நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கு நிறைய இடங்கள் இருந்தன.

