அவர்களைத் தேடுவது போல் அல்லாமல் எதற்கோ அந்தப் பக்கத்தால் போவதுபோல் நடந்த ஆரபி, ஒரு இடத்தைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.
ஆங்கில எழுத்து சி வடிவில் மரங்களை வெகு நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வளர்த்து, சராசரியான ஒரு ஆளின் உயரத்தில் நேர்த்தியாக வெட்டியிருந்தார்கள். அந்த ஆங்கில எழுத்து சியின் வயிற்றினுள் இருக்கை போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்திருந்தார்கள் நண்பர்கள் இருவரும்.
நேர் முன்னே வந்து நின்று யாராவது பார்த்தால்தான் உண்டு. மற்றும்படி அந்த மரங்களே அவர்களை மறைத்துக்கொள்ளும். இவளின் கெட்ட காலமா, இல்லை சகாயனின் போதாத காலமா தெரியாது. அவர்களின் நேர் முன்னே வந்து நின்றிருந்தாள் ஆரபி.
அதுவல்ல அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருவர் கைகளிலும் இருந்த சிகரெட்டுகள். அதுவும் இவள் பார்த்த அந்த நொடியில் வாயில் வைத்துப் புகையை இழுத்த சகாயன், ஒரு பக்கமாக உதட்டை வளைத்து வெளியே விட்டுக்கொண்டிருந்தான்.
ஒரு நொடி ஆரபியின் நெஞ்சம் குலுங்கியே போயிற்று. அவனா? அவளின் சகாயனா? புகைப்பானா? கண்ணால் கண்டதை நம்பக்கூட முடியாமல் பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றாள்.
சகாயணுமே அவளை எதிர்பார்க்கவில்லை. அவன் அதிர்ந்தது ஒரு நொடிதான். அடுத்த நொடியே வேகமாக எழுந்து, கையில் இருந்த சிகரெட்டை காலுக்கடியில் போட்டு மிதித்திருந்தான்.
தன்னைக் கண்டதும் அப்படி அவன் நடந்தது கூடச் சுருக்கென்று அவள் இதயத்தைத் தாக்கிற்று. சில வினாடிகளுக்கு ஆரபிக்கு எப்படி வினையாற்றுவது என்றே தெரியவில்லை. அடுத்த கணம் சினமும் சீற்றமும் சீறிப்பாய, “இந்தப் பழக்கம் எல்லாம் இருக்கா உங்களுக்கு? ஊருக்கு நல்லது செய்றன் எண்டு சொல்லுற நீங்க இப்பிடி நடக்க வெக்கமா இல்லையோ?” என்றாள் ஆத்திரத்துடன்.
“ஆரு அது…” என்றவனை இடையிட்டுக்கொண்டு, “ஏய் என்ன? அவனையே அதட்டுறாய்? அவன் பத்தினா உனக்கு என்ன?” என்று பதிலுக்குச் சீறினான் கிரி.
“நான் உங்களோட கதைக்கேல்ல!”
“கதைச்சுப் பார் தெரியும்!”
நீ எல்லாம் ஒரு ஆள் என்பதுபோல் அவனைப் பார்த்துவிட்டு, “என்ன இதெல்லாம்? சொல்லுங்க! இன்னும் என்ன பழக்கமெல்லாம் பழகி வச்சிருக்கிறீங்க. உங்களைப் போய் நல்லவர் எண்டு நினைச்சனே?” என்றவளுக்குத்தான் தான் என்னவோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்துவிட்டது போன்று அழுகை வந்தது.
“அவன் அக்மார்க் நல்லவன் எண்டு உன்னட்ட வந்து சொன்னவனா? வந்திட்டா பெரிய இவள் மாதிரிக் கதைச்சுக்கொண்டு. இப்ப நான் சொல்லுறன். அவன் பத்துவான். குடிப்பான். ஏன்…” என்றவனை, “கிரி!” என்று பல்லைக் கடித்து அடக்கினான் சகாயன்.
“உன்னோட பிறகு கதைக்கிறன். இப்ப இஞ்ச இருந்து போ ஆரு!” என்றான் ஆரபியிடம். பொது இடமாயிற்றே. இப்போதே அந்தப் பக்கத்தால் போகிறவர்களும் வருகிறவர்களும் ஏதும் பிரச்சனையோ எனும் விதமாக இவர்களைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தாள் ஆரபி. நீயா இப்படி என்று கேட்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை. தான் நேசிக்கும் பெண்ணின் முன்னே தலை குனிந்து நிற்கும் நிலை உருவாகி விட்டதை மிகவுமே அவமானமாக உணர்ந்தான் சகாயன்.
“அவன்தான் போ எண்டு சொல்லிட்டான் எல்லா. பிறகும் என்னத்துக்கு நிக்கிறாய். போடி!” என்றான் கிரி ஆவேசமாக.
அவனுக்கு அவள் கோபப்படுவதுவதும் சகாயன் அடங்கி நிற்பதும் பிடிக்கவில்லை.
“டீ போட்டீங்க மரியாதை கெட்டுடும்!” விரல் நீட்டி எச்சரித்தாள் ஆரபி.
“எங்க கெடு பாப்பம்!” என்று முன்னால் வந்தான் கிரி.
“டேய் சும்மா இரடா!”
“நீ விடு மச்சான். இவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு. ஆளும் மூஞ்சயும்! வந்திட்டா விரல் நீட்டிக் கதைச்சுக்கொண்டு. சீ போ!” என்றான் கிரி அலட்சியமும் ஆவேசமுமாய்.
ஆத்திரமும் அழுகையும் வந்தது ஆரபிக்கு. அதற்குமேல் நொடியும் அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. சகாயனை ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறு என்று அங்கிருந்து அகன்றுவிட்டவளுக்கு நெஞ்சு பொறுக்கவே இல்லை.
ஆத்திரம், ஆவேசம், அழுகை, குமுறல் என்று அவள் நெஞ்சு வெடித்துவிடும் போலாயிற்று. அவளின் சகாயனா? அவன் புகைப்பானா? அதோடு அவன் நண்பன் பேசியவை?
அவள் கைப்பேசி சத்தமிட்டது. அவன்தான். ஆத்திரத்தில் துண்டித்தாள். திரும்ப திரும்ப அழைத்தான். சத்தத்தை நிறுத்திவிட்டு அவளும் திரும்ப திரும்பத் துண்டித்துக்கொண்டே இருந்தாள்.
அவனிடமிருந்து குறுந்தகவல்கள் வந்து விழ ஆரம்பித்தன. அவள் பார்க்கவே இல்லை. என்ன சொல்லப்போகிறான்? அப்படியே என்ன சொன்னாலும் அவள் பார்த்த காட்சி இல்லை என்றாகப்போவதில்லையே.
கூடப்பிறந்த தமக்கையின் திருமணம். அன்று போய் அழ வைத்துவிட்டானே. மனம் ஆறவே இல்லை. அவன் சிகரெட்டை வாயில் வைத்து இழுத்த காட்சியை நினைக்கிற பொழுதெல்லாம் கண்ணில் கண்ணீர் முட்டியது. யார் முகத்திலும் விழிக்க முடியாமல், ஓடிப்போய்க் கழிவறை ஒன்றுக்குள் புகுந்துகொண்டாள்.
அளவும் முடியவில்லை. அவன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே பார்த்து பார்த்து செய்துகொண்டு வந்த அலங்காரங்கள் களைந்தாள் கேள்விகள் வருமே.
ஆழ மூச்சை இழுத்து இழுத்து விட்டாள். அவளே அவள் முகத்துக்குக் கையால் காற்று விசுக்கி தன்னைத் தானே ஆசுவாசப்படுத்த முயன்றாள்.
எவ்வளவு நேரத்துக்கு இப்படி ஒளிந்துகொள்ள முடியும்? அவர்கள் வீட்டுத் திருமணமாயிற்றே. அவள் அன்னை வேறு நொடிக்கு ஒருமுறை எதற்காவது அவளைத் தேடுவார். ஆனந்தன் வேறு அழைத்தான்.
கைப்பேசியை முற்றிலுமாக அணைத்து வைத்துவிட்டு வந்து அன்னையின் அருகில் நின்றுகொண்டாள்.
“என்ன?” என்றான் ஆனந்தன் இவளைக் கண்டதுமே.
அதற்கே கண்ணைக் கரிக்கும் போலிருக்க, ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள் ஆரபி.
“பிறகேன் உன்ர பிரெண்ட்ஸ எல்லாம் விட்டுப்போட்டு இஞ்ச வந்து இருக்கிறாய்? முகமும் சரியில்ல.”
மகளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “இந்தக் கிழமை முழுக்க அலைச்சலும் ஆன நித்திரையும் இல்லை எல்லாப்பு. அதான் போல.” என்று, அவளிடம் வித்தியாசம் கண்டுபிடிக்காத மங்கையற்கரசி சொன்னார்.
ஆனந்தன் அதை நம்பவில்லை. அவளையே கூர்ந்து பார்த்தான்.
“இல்ல. இனி அக்கா கொழும்புக்குப் போயிடுவா எல்லா. அதான்.” என்றாள் கமறிய குரலில்.
“இதுக்குத்தான் இஞ்ச ஊருக்கையே பாப்பம் எண்டு சொன்னனான். நீதானே அவரை அக்காக்கு செலக்ட் பண்ணினனி. பிறகு என்ன?”
“அத்தான் வந்து எங்களோட இருப்பார் எண்டு நினைச்சன் அண்ணா.” சிறு பிள்ளையாக மாறி முகத்தைச் சுருக்கிக்கொண்டு சொன்னாள் ஆரபி.
அவள் அண்ணா என்று சொன்னதிலேயே அவள் கலக்கம் உணர்ந்து, “இப்பவும் எங்க போயினம்? கொழும்புதானே. நினைக்கிற நேரம் ஓடிப்போய்ப் பாத்துக்கொண்டு வரலாம்தானே.” என்று அவளைத் தேற்றினான் அவன்.
அவள் மனம் வேறு எதற்கோ அழுகிறது என்று சொல்லவா முடியும்? நண்பர்கள் இருவரும் ஒன்றாக மண்டபத்தினுள் வருவது இவள் பார்வை வட்டத்தில் விழுந்தது. அதுவும் சகாயன் பார்வை இவளிலேயே இருந்தது. முகம் கடுக்க வேகமாக முதுகு காட்டி திரும்பிக்கொண்டாள்.
அந்த நிமிடத்தில் அவன் முகம் பார்க்கவே பிடிக்காமல் போயிற்று. மனத்தில் வெறுப்பு மண்டியது. ஒரு முறை இந்தப் பழக்கம் எல்லாம் அவனுக்கு இருக்கிறதா என்று கேட்டபோது இல்லவே இல்லை என்று சாதித்திருந்தான். அவனைப் போய் நம்பி இருக்கிறாளே. மனம் கசந்து வழிந்தாலும் கண்ணீர் விட்டும் அழுதது.
அன்று மட்டுமில்லை அடுத்த நாளும் அவளோடு பேசிவிட முயன்றுகொண்டே இருந்தான் சகாயன். ஆனால், “நீங்க எல்லாம் என்ன மனுசன். உங்களைப் போய் நல்லவன் எண்டு நம்பின என்னைச் சொல்லோணும்! இனியும் உங்கள மாதிரி ஒரு பொய்காரனோட, ஏமாத்துக்காரனோட கதைக்க எனக்கு விருப்பமே இல்ல. இனிமேல் என்ர மூஞ்சிலயும் முழிக்காதீங்க!” என்று இருந்த ஆத்திரத்தை எல்லாம் கொட்டி வொயிஸ் நோட் ஒன்று போட்டுவிட்டு, அவனைத் தடை செய்துவிட்டாள் ஆரபி.

