சமாதானம் செய்ய எண்ணித்தான் கிரியைத் தேடிக்கொண்டு மண்டபத்தின் வெளியே வந்தான் சகாயன். அவன் புகைத்துக்கொண்டு நிற்கக் கண்டு, “உனக்கு எத்தின தரமடா சொல்லுறது, இதச் செய்யாத எண்டு!” என்று அதட்டிக்கொண்டு அவனை நெருங்கினான்.
“இது மட்டும்தான் எனக்கு ஆறுதலா இருக்கு. அது பிடிக்கேல்லையா உனக்கு?” என்றபடி சிகரெட் பெட்டியின் வாயைத் திறந்து அவன் புறமாய் நீட்டினான் கிரி
“உன்னையே பத்தாத எண்டுறன். எனக்கு நீட்டுறாய்!”
“என்னவோ வாழ்க்கைல நீ பத்தினதே இல்ல மாதிரிச் சொல்லுறியே!” உதடு கோணலாக வளையச் சொன்னான் கிரி.
பல்கலைக் காலத்தில் ஒரு குறுகுறுப்பில் சிகரெட், பியர் என்று சுவை பார்த்திருக்கிறார்கள்தான். கடைசி நாள் கூட பியர் அருந்தினார்கள். அதுதான் கடைசி. கிரியையும் அதட்டி, அந்தப் பக்கம் போக விடாமல் அடக்கி வைத்திருந்தான். எப்போதாவது பழைய நண்பர்கள் கூடுகையில் இருக்கும்.
மற்றும்படி தினசரிக்கோ, எப்போதாவது ஒரு நாளோ அது வேண்டும் என்றெல்லாம் அதன் பக்கம் போனதேயில்லை.
அகிராவின் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து மறுபடியும் புகைக்க ஆரம்பித்திருந்தான் கிரி. சில நேரங்களில் இவனிடமும் நீட்டுவான்.
இப்போதும் இன்று மறுக்க மறுக்க அவன் கேட்கவேயில்லை. “வரவர நீ மாறிக்கொண்டே போறாய் சகாயா. நீயும் என்னை விட்டுட்டுப் போயிடுவியோ எண்டு பயமா இருக்கடா!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே அவன் நீட்டிக்கொண்டிருந்ததில் ஒன்றை எடுத்து வாயில் வைத்திருந்தான் சகாயன். லைட்டரை தட்டி அவனுக்கு மூட்டிவிட்டான் கிரி.
திருமண விழா. தெரிந்தவர்கள் பலர் இருக்கும் இடம் என்று இருவரும் அந்த மரங்களுக்குள் இருந்த இருக்கைக்குள் அடைக்கலமாகி இருந்தனர்.
என்ன, நேரெதிரில் ஆரபி வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்துபோனான். சமாளிக்க வரவேயில்லை. என்ன காரணம் சொல்வான்? இல்லை சொல்ல முடியும்?
அப்படி அவன் திகைத்து நின்ற நிமிடங்களுக்குள் நடந்தவை? தொப்பென்று இருக்கையில் விழுந்தான்.
“ஆக, நீயும் எனக்குத் துரோகிதான் என்ன!” என்ற கிரியின் வார்த்தைகளில் அவன் நிமிரவேயில்லை.
“அவ்வளவு உரிமையா வந்து நிண்டு அதட்டுறாள். நீயும் பம்மிக்கொண்டு நிக்கிறாய். பாக்க நல்லாருக்கு!” அவனுக்கு மனம் கொதித்தது.
“அவள் எல்லாம் ஒரு ஆள்…”
“கிரி தேவை இல்லாம அவளைப் பற்றிக் கதைக்காத!” என்றான் சகாயன் எச்சரிக்கும் விதமாக.
“கதைச்சா என்னடா செய்வாய்?”
“சத்தியமா பல்லை உடைப்பன்!” என்றதும் கிரியிடம் சத்தமே இல்லாது போயிற்று.
காற்றை ஊதி வெளியேற்றிவிட்டு அவன் நிமிர, வெடுக்கென்று அங்கிருந்து அகன்றான் கிரி
“டேய்!” ஓடிப்போய் அவனைப் பற்றி நிறுத்தினான் அவன்.
“விர்றா!”
“நில்றா!”
“எப்ப இருந்து இதெல்லாம் நடக்குது?”
“மச்சான்…”
“ஏன் என்னட்ட மறச்சனி?”
“…”
“இனி என்ன, நீயும் என்னை விட்டுட்டுப் போயிடுவியா?”
“லூசு மாதிரி உளறிக்கொண்டு இருக்காத கிரி!”
“லூசு மாதிரி உளர்றனா? அவளே சொல்லுவாள், என்னோட சேராத எண்டு. நீயும் அதைக் கேட்டு நைசா என்னைக் கழட்டி விட்டுடுவாய். அப்ப தெரியும் ஆர் உளறினது எண்டு.”
“அப்பிடி எல்லாம் அவள் சொல்லமாட்டாள்!” வேகமாகச் சொன்னவன் பேச்சைக் கேட்டு உதட்டைக் கோணலாக வளைத்துச் சிரித்தான் அவன்.
“சொல்ல மாட்டாளடா. எனக்கு அவளைத் தெரியும்.”

