“அதையும் பாப்பம்.”
இவனை ஓரளவுக்குச் சமாதானம் செய்தாயிற்று என்று அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவேயில்லை. அனுப்பிய குறுந்தகவல்களும் பார்க்கப்படாமலேயே கிடந்தது. கிரி வேறு இவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். அவமானமும் ஆத்திரமும் சேர்ந்து வந்தன சகாயனுக்கு.
*****
திருமணம் முடிந்து நான்காவது நாள் கணவனோடு கொழும்பு புறப்பட்டாள் அபிசா. ஏற்கனவே அவர்களுக்கென்று அங்கே தனியாக வீடு எடுத்து, தளபடங்கள், பண்ட பாத்திரங்கள் எல்லாம் வாங்கிப் போட்டிருந்தார்கள். இப்போது மகளோடு குடும்பமாக அனைவரும் புறப்பட்டுச் சென்று, அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துவிட்டு, மருமகன் வீட்டிலும் விருந்தாடி வருவதாக ஏற்பாடு.
முதல் ஆளாகப் புறப்பட்டுவிட்டாள் ஆரபி. அந்தளவில் அவள் உள்ளம் காயப்பட்டிருந்தது. சகாயனின் கூடாத பழக்கம், கிரியின் பேச்சு, அவனை அடக்க முயலாத சகாயன் என்று அவள் வேதனை தீருவதாக இல்லை.
கொழும்பிலேயே அடுத்த மூன்று நாள்கள் தங்கி, அபிசாவுக்கு அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டுப் புறப்பட ஆயத்தமாகினர்.
அவ்வளவு நேரமாகத் தயங்கிக்கொண்டிருந்த ஆரபி, “இன்னும் மூண்டு நாள் அக்காவோட நிண்டுட்டு வரட்டா அம்மா?” என்று எல்லோர் முன்னும் கேட்டிருந்தாள்.
செந்தில்குமரனுக்கும் மங்கையற்கரசிக்கும் சங்கடமாகிப் போயிற்று. புதிதாக மணமான மகள். இவள் வேறு வயதிற்கு வந்த பெண். எப்படி அப்படி அவர்களோடு இவளை விட்டுவிட்டுப் போக முடியும்?
இது புரியாத அளவில் அவள் சின்ன பிள்ளையும் இல்லையே. அவள் மீது மிகுந்த கோபம் உண்டாயிற்று. மருமகனின் வீட்டினரும் அங்கே இருந்ததில், “கம்பஸ் இருக்கெல்லா பிள்ளை. அடுத்த லீவுக்கு வரலாம். இப்ப வெளிக்கிடுங்கோ!” என்று முடிவுபோல் சொன்னார் செந்தில்குமரன்.
எப்போதும் அவரின் அந்தக் குரலுக்குப் பணிந்துவிடுகிறவள் இன்று, “ப்ளீஸ் அப்பா. இண்டைக்குப் புதன். இன்னும் மூண்டு நாள்தான். நான் ஞாயிற்றுக் கிழமை வந்திடுவன். எனக்கு அக்காவோட இருக்கோணும்.” என்று சொல்கையிலேயே கண்கள் கலங்கிப்போயிற்று அவளுக்கு.
“என்னம்மா கதைக்கிறாய்? ஞாயிற்றுக்கிழமை அப்பாவக் கூட்டிக்கொண்டு அண்ணா யாழ்ப்பாணம் போயிடுவான். உன்னை ஆர் வந்து கூட்டிக்கொண்டு வாறது?”
பைக்கிலிருந்து விழுந்த நவரத்தினத்துக்குக் காலில் கம்பி வைத்திருந்தார்கள். அதைக் காட்டுவதற்கு மாதம் மாதம் யாழ்ப்பாண அரச வைத்தியசாலைக்குச் சென்று வருவார்கள்.
அங்கே அவரின் உறவுக்காரர்களும் இருப்பதால் ஞாயிறு அங்கே போயிற்று, திங்கள் வைத்தியசாலையில் காட்டிக்கொண்டு திரும்பி வருவதாக முதலே திட்டமிட்டிருந்தனர். ஆனந்தனின் வேலை காரணமாக அதை மாற்றவும் முடியாது என்பதில் சொன்னார் மங்கையற்கரசி.
அதைவிடப் பார்வையாலேயே அவளை அதட்டிப் புறப்படச் சொன்னார் அவர். அவள் அசைய வேண்டுமே.
“நான் என்ன சின்ன பிள்ளையாம்மா? நானே தனிய வருவன்தானே.”
புதிதான மகளின் இந்தப் பிடிவாதம் கோபத்தைக் கிளப்ப, “அதெல்லாம் சரி வராது! வெளிக்கிடு!” என்று சொன்னார் செந்தில்குமரன்.
அதுவரை இதையெல்லாம் கவனித்திருந்த அபிசாவின் கணவன் மனோகரன்தான் இந்தச் சிக்கலைத் தீர்த்துவைத்தான்.
“மாமா மாமி விடுங்கோ. நீங்க ஏன் யோசிக்கிறீங்க எண்டு விளங்குது. அதெல்லாம் ஒண்டும் இல்லை. நாலு நாள்தானே. நிண்டுபோட்டு வரட்டும். நானே ரெயில் ஏத்தி விடுறன்.” என்று சமாளித்தான்.
புது மருமகனிடம் மகளிடம் போல் மறுக்க முடியவில்லை. இதில் அவன் பெற்றோர் வேறு அவள் இருக்கட்டும் என்றுவிட அதை ஏற்றுக்கொள்ளும் நிலை அவர்களுக்கு.
அப்போதும் ஆனந்தன் முதற்கொண்டு மங்கையற்கரசி, செந்தில்குமரன் எல்லோரும் அவளைத் தனியாகப் பிடித்துப் புறப்படச் சொன்னார்கள். அவள் அசையவில்லை. வேறு வழியற்று அவர்கள் மட்டும் புறப்பட்டுச் சென்றார்கள்.
“சொறி அத்தான்.” அவர்கள் புறப்பட்டதும் சொன்னாள் ஆரபி. அவளுக்கும் புதுத் தம்பதியர் மத்தியில் பானகத் துரும்பாக இருக்கப்போகிறோம் என்று உறுத்தாமல் இல்லை.
“அதெல்லாம் ஒண்டும் இல்லை. நீர் தாராளமா எத்தின நாளைக்கும் இஞ்ச நிக்கலாம் சரியா?”
“அக்கா கோவமா அக்கா?”
“லூசாடி நீ?” என்று கேட்டுவிட்டுப் போனாள் அபிசா.
மனோகரனின் பெற்றோர் முகத்தைப் பார்த்தாள். “இப்ப என்ன நாங்களாம்மா? நீங்க ஆசைப்பட்டா எங்கட வீட்டையும் வந்து நிக்கலாம். சரியா?” என்று கேட்டுவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள்.
முடிந்தவரை தனக்கென்று அவர்கள் தந்த அறைக்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டு அவர்களுக்குத் தனிமை கொடுக்க விரும்பினாள் ஆரபி. ஆனால், மனோகரன் அதற்கு விடவில்லை. அபிசாவையும் அவளையும் அழைத்துக்கொண்டு கொழும்பைச் சுற்றிக்காட்டினான்.
அவள் நினைத்ததற்கு மாறாக அந்த மூன்று நாள்களும் மிகுந்த மகிழ்ச்சியாகவே கழிந்தன. ஒரு நாள் இவர்கள் மூவருமாகப் போய் மனோகரனின் அன்னை வீட்டில் தங்கினார்கள். ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்துப் புகையிரதத்துக்கே புறப்பட்டாள். ஆயிரம் கவனம் சொல்லி அபிசாவும் மனோகரனும் இரயில் ஏற்றிவிட்டார்கள்.
அதுவரை தெரியவில்லை. இரயில் புறப்பட்டதும் அவன் நினைவுகள் வந்து வேகமாகத் தொற்றிக்கொண்டன. கைப்பேசியில் அவனைத் தடை செய்ததை இன்னும் நீக்கவில்லை. அதேபோல் அவன் அனுப்பிய குறுந்தகவல்களை வாசிக்கவும் இல்லை.
இன்றைய நிலையில் கோபம் எல்லாம் அடங்கி ஒரு வேதனை. அவளின் சகாயன் புகைக்கிறான். மது அருந்தும் பழக்கமும் உண்டாம். அவளிடம் பொய் சொல்ல அவனால் முடிந்திருக்கிறதே என்பது ஒரு பக்கம் என்றால் எதிர்காலத்தை நினைக்கவே பயந்தாள்.
இனி என்ன செய்யப்போகிறாள்? இந்தப் பழக்கத்தை எல்லாம் விடுவானா? விட்டுவிட்டு அவளின் சகாயனாக இருப்பானா? இந்தக் கேள்விகள் உண்டாக்கிய நிம்மதியற்ற நிலையுடன்தான் அனுராதபுரம் வந்து இறங்கினாள். அங்கிருந்து மன்னார்.
புகையிரதம் மாறி ஏற வேண்டும். இரு தரப்பு வீட்டினரும் அதிகளவில் பயந்த இடம் அதுதான். ஆனால், எந்தப் பிரச்சனைகளும் இல்லாது அனுராதபுரத்திலிருந்து மன்னாருக்குச் செல்லும் புகையிரதத்தில் ஏறி அமர்ந்துகொண்டு, கொழும்புக்கும் புதுக்குடியிருப்புக்கும் அழைத்துத் தகவல் கொடுத்துவிட்டு அவள் நிமிர, அவள் எதிரில் வந்து அமர்ந்தான் சகாயன்.

