இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவள். விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அவன் பார்வையும் அவளை விட்டு அகலுவதாக இல்லை.
முக்கியமாக, தவறு செய்துவிட்டு மன்னிப்பைக் கேட்க வந்திருக்கிறவனின் தயவான பார்வை இல்லை அது. தவறை அவள் செய்துவிட்டு அவன் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டாள் என்று அவளை உணர வைக்கும் விதமான அழுத்தமான பார்வை.
வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள். ஒரு கோபம் உள்ளுக்குள் சுறுசுறு என்று கிளம்பிற்று. அதே நேரத்தில் இத்தனை நாள்களுக்குப் பிறகு பார்த்ததும், எதிர்பாராமல் அமைந்த சந்திப்பும் சேர்ந்து மனத்தில் ஒரு படபடப்பை உண்டாக்கிற்று.
கூடவே, எப்படி அவள் வரவை, அதுவும் இந்த நேரத்தில் இந்தப் புகையிரதத்தில் இந்தப் பெட்டியில் இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்தான் என்கிற கேள்வியும். ஆனாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிடிவாதமாகவே அமர்ந்திருந்தாள்.
அந்தப் பெட்டிக்குள் ஏறி வந்த ஒருவன், அவள் பக்கத்தில் அமரலாமா என்று யோசிக்கையிலேயே, வேகமாக எழுந்து வந்து தான் அமர்ந்துகொண்டான் சகாயன்.
ஆரபியின் கை, மடியில் கிடந்த கைப்பேசியை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. இந்தளவிலான நெருக்கம் இதுவரையில் அவர்களுக்குள் அமைந்ததில்லை. பயணிகள் ஏறுவதும், பொருத்தமான இடம் பார்த்து அமர்வதும், கொண்டுவந்த பைகளைப் பாதுகாப்பாக வைப்பதுமாக இருந்தனர்.
இருக்கைகள் நிரம்ப ஆரம்பித்தன. சகாயனின் அருகிலும் இன்னொருவர் வந்து அமர்ந்தார். இப்போது இருவர் தோள்களும் உரசிக்கொண்டன. ஆரபிக்குத் தன் இதயத்தின் துடிப்பு அவனுக்குக் கேட்டுவிடுமோ என்று பயமாயிற்று. நன்றாக மூலையாக ஒடுங்கி அமர்ந்துகொண்டாள்.
தான் பக்கத்தில் வந்ததிலிருந்து அவள் படுகிற பாட்டையெல்லாம் அவனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். மூக்கு நுனியிலும் மேல் உதட்டிலும் அரும்ப ஆரம்பித்துவிட்ட வியர்வைத் துளிகளே அவள் பதட்டத்தை அவனிடம் காட்டிக்கொடுத்தது.
அத்தனை நேரமாக அவனுக்குள் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல விலகுவதை அவனே உணர்ந்தான். அந்தச் சூழ்நிலை, தானும் அவளும் அப்படி அமர்ந்திருப்பது, அவள் தடுமாற்றம், தன்னைப் பார்த்துவிடவே கூடாது என்கிற பிடிவாதத்துடன் அவள் அமர்ந்திருப்பது என்று எல்லாவற்றையும் ரசித்தான்.
அவள் அப்படித் தன்னைக் குறுக்கிக்கொண்டிருப்பதை விரும்பாமல், “மன்னார் போய்ச் சேருற வரைக்கும் இப்பிடியே இருப்பியா? வசதியா இரு.” என்றான் குரலைத் தணித்து.
பெரிய அக்கறை. ஒன்றுமே நடவாதவன் போல் பேச்சு வேறு. முகம் இலேசாகக் கடுக்க அப்படியே அமர்ந்திருந்தாள் ஆரபி. இதற்குள் ஒருவன் இறால் வைத்த வடை விற்றுக்கொண்டு வந்தான். வாங்கி அவளிடம் நீட்டினான்.
அவள் வாங்குவதாக இல்லை என்றதும் அவள் மடியில் வைத்தான்.
“சாப்பிடு!”
ம்கூம்! அவளிடம் மாற்றமே இல்லை.
“பசிக்கு ஆரு.”
“…”
“நீ வாறாய் எண்டு விடியத்தான் தெரியும். எப்பிடியாவது உன்னைப் பிடிச்சிடோணும் எண்டு அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்ததில ஒண்டும் சாப்பிடேல்ல. எந்தப் பெட்டில இருக்கிறாய் எண்டு கண்டுபிடிக்கிறதுக்கே நாக்கு வறண்டு போச்சு.”
ஆக, வினோவிடமிருந்துதான் தகவல் பிடுங்கியிருக்கிறான். அவளும் ஓட்டை வாய் ஆயிற்றே. எப்போது வருகிறாய் என்று நேற்றிரவு அவள் கேட்டிருந்ததைக் காலையில்தான் பார்த்தாள். புறப்பட்டுவிட்டதாக அப்போதே பதிலும் அனுப்பியிருந்தாள்.
அந்தச் சரையை எடுத்து அவன் மடியில் வைத்தாள்.
“நான் மட்டும் எப்பிடிச் சாப்பிடுறது?”
“நான் சாப்பிட்டுத்தான் வந்தனான்.” இதற்கு மட்டும் இறுக்கமான குரலில் பதில் சொன்னாள்.
“சரி, எனக்காக ஒண்டு சாப்பிடன்.” என்றவனிடம் சினம் மிகவுற ஏதோ சொல்ல வந்தவள், சுற்றியிருந்தவர்களைப் பார்த்துவிட்டு வாயை இறுக்கி மூடிக்கொண்டாள்.
அவனும் பேசாமல் அந்தச் சரையை மடியில் வைத்துவிட்டு இருந்துகொண்டான். ஆத்திரம் வந்தது அவளுக்கு. சாப்பிடாவிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடக்கட்டும் என்று கொஞ்ச நேரத்துக்குத்தான் இருக்க முடிந்தது.
அப்பட்டமாகக் கோபம் வெளிப்படும் உடல் மொழியோடு அவன் மடியில் கிடந்ததைப் பிரித்து ஒரு வடையை மட்டும் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். சிறு முறுவலுடன் மிகுதியை அவன் சாப்பிட்டு முடித்தான்.
இதைத் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து அவர்களால் பேச முடியவில்லை. எதிரில் மூவரும் பக்கத்தில் ஒருவரும் அமர்ந்திருந்தார்கள்.
புகையிரதம் புறப்பட்டது. கோபம் ஆதங்கம் என்று பல உணர்வுகள் ஆரபியின் மனத்தில் முட்டி மோதின. எதையும் வெளிப்படுத்த வழியும் இல்லை. அவனுக்கும் அப்படித்தான் போலும். அடிக்கடி அவள் முகத்தையே பார்த்தான்.
இடையில் ஒருமுறை அபிசா அழைத்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணிக்கிறாளா என்று விசாரித்தாள். அவளிடம் பேசிவிட்டு இவள் கைப்பேசியை அணைத்து மடியில் வைத்துக்கொள்ளவும் அவன் அதை எடுத்தான்.
சிறு திகைப்பும் தடுமாற்றமுமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள் ஆரபி. கைப்பேசி அவனிடம் பாஸ்வேட் கேட்டது. அவன் இவளைப் பார்க்க அவள் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
முழங்கையினால் இலேசாகத் தட்டிச் சொல்லத் தூண்டினான். என்ன இது, இப்படி எல்லாம் நடக்கிறான் என்று அவளுக்கு மனம் படபடத்தது. அவன் விடவில்லை. திரும்பவும் இலேசாக முழங்கையால் தட்டி, “நம்பர் சொல்லு!” என்றான்.
அவனைப் பாராமல் அவனது பிறந்த நாளையும் பிறந்த ஆண்டின் பின்னிரு இலக்கங்களையும் அழுத்திவிட்டு வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆரபி.
சகாயனின் முகத்தில் முறுவல் நன்றாகவே விரிந்துபோயிற்று. உள்ளே சென்று முதல் வேலையாக அவனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினான்.
“ராஸ்கல்! இன்னொரு முறை என்னை ப்லொக் பண்ணிப் பார். வீட்டுக்கே வந்து நிக்கிறன்.” என்று அவனே அவனுக்கு அனுப்பிவிட்டு அவளிடம் கைப்பேசியை நீட்டினான்.

