இணைபிரியா நிலை பெறவே 14 – 2

வாங்கிப் பார்த்தவளுக்கு திக் என்றுதான் இருந்தது. ஆனாலும் அசைந்துகொடுக்கவில்லை. ஆனால், முருங்கனில் வந்து புகையிரதம் நின்றதும் அவள் கை பற்றி எழுப்பிக்கொண்டு இறங்கிவிட்டான் சகாயன்.

“என்ன செய்றீங்க?” அவனோடு கதைக்கவே கூடாது என்று எடுத்திருந்த முடிவு மறந்து, பதற்றத்துடன் கேட்டாள்.

“நீ வா, சொல்லுறன்!” என்று அழைத்துக்கொண்டு புகையிரத நிலையத்தை விட்டு வெளியே வந்தான். தூரத்தில் நின்றிருந்த காரைக் கண்டதுமே அவளுக்கு எல்லாம் புரிந்துபோயிற்று.

“என்ன, விளையாடுறீங்களா? ஆரும் பாத்தா கத சரி! விடுங்க, நான் ட்ரெயின்லயே போறன்.” என்று திரும்பிப் போகப் போனவளை அவன் விடவில்லை.

பிடித்த பிடியை விடாமல் வந்து அவள் பக்கக் கதவைத் திறந்துவிட்டான்.

அவளுக்குக் கட்டுக்கடங்காமல் கோபம்தான் வந்தது. “விடுங்க எண்டு ஒருக்கா சொன்னா விளங்காதா உங்களுக்கு? உங்கட பாட்டுக்கு இழுத்துக்கொண்டு வாறீங்க.” என்று சீறினாள்.

“அதுக்கு ஃபோன்ல நீ என்னை ப்லொக் பண்ணாம இருந்திருக்கோணும். என்னைக் கதைக்க விட்டிருக்கோணும்.” என்றவன் அவளை உள்ளே தள்ளிக் கதவைச் சாற்றிவிட்டு வந்து மறுபக்கத்தில் ஏறி அமர்ந்தான்.

“என்ன இது?” சினத்துடன் சீறினாள் ஆரபி.

“சொறி!” என்றான் அவளையே பார்த்து.

அவளிடம் மெல்லிய திகைப்பு. அந்தத் திகைப்பு மாறாமலேயே அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவள் மடியில் இருந்த கரத்தைப் பற்றினான் அவன். புகையிரதத்திலிருந்து கைப்பிடியாக அழைத்து வருகையில் கூடத் தெரியவில்லை. இப்போது அவன் பற்றவும் பதற்றம் வந்தது. “என்ன செய்றீங்க?” என்றபடி கையை இழுத்துக்கொண்டாள்.

“கதைக்கோணும் ஆரு. நான் சொல்லுறதை நீ கொஞ்சம் கோவப்படாம கேக்கோணும்.” என்று தணிந்தே வந்தான் அவன்.

“அண்டைக்கு அவன் சொன்ன மாதிரி எனக்கு எந்தப் பழக்கமும் இல்ல ஆரு. கம்பஸ் காலத்தில ரெண்டு இல்ல மூண்டு தரம் பியர் குடிச்சிருக்கிறன். ஒரு போத்தில் கூட இல்ல. அப்பிடித்தான் சிகரெட்டும்.”

“ஓ! அதான் அண்டைக்கு அப்பிடி இழுத்துவிட்டீங்க போல! பாக்க நல்லா இருந்தது.”

அவள் நக்கலாகச் சொல்ல அவன் முகம் கறுத்தது.

“எத்தின தரம் கேட்டிருப்பன்? அப்ப எல்லாம் இல்லவே இல்லை எண்டுபோட்டு இப்ப வந்து கதை சொல்லுறீங்க. இனியும் உங்களை நம்புவன் எண்டு நினைக்கிறீங்க?” என்றதும் அவனுக்கு முகம் கடுத்தது.

ஆனாலும் பொறுமையாகப் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, “நான் ஆசைப்பட்டு விரும்பின பெட்டை நீ. ரெண்டு வருசம் தவிக்க வச்சு ஓம் எண்டு சொல்லியிருக்கிறாய். உன்னட்ட வந்து அதையெல்லாம் சொல்லுறது ஈஸி இல்ல ஆரபி. அதே நேரம், ஒருக்காவோ ரெண்டு தரமோ அதில என்ன இருக்கு எண்டு ட்ரை பண்ணிப் பாக்கிறது வேற, அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறது வேற. நான் முதல் ரகம்.”

“ஓ! அதான் அண்டைக்கு மறைஞ்சு நிண்டு ஊதினீங்க போல. நீங்க ஊதின விதம் பாக்கவே தெரிஞ்சது, உங்களுக்கு அது பழக்கமே இல்லாத ஒண்டு எண்டு!”

அவனே எண்ணி எண்ணித் தனக்குள் அவமானமுறும் விடயம் அது. அதையே அவள் திரும்ப திரும்பச் சொல்லிக் காட்டவும் அவன் முகம் கறுத்துப்போனது.

“இதுல உங்கட நண்பர் வேற உங்களுக்கு என்ன பழக்கமெல்லாம் இருக்கு எண்டு லிஸ்ட் போட்டாரே. குடிக்கிறது பத்திறது மட்டும்தான் டேஸ்ட் பாத்தீங்களா? இல்ல…” என்றதும் சட்டென்று காரை திறந்துகொண்டு வெளியே இறங்கியிருந்தான் சகாயன்.

என்ன கேள்வி கேட்டுவிட்டாள் என்று நெஞ்சு கொதித்தது. அங்கிருந்த கல்லைக் காலால் விசிறி அடித்தான். புகைத்தது தவறுதான். அதை அவளிடம் மறைத்ததும் தவறுதான். அதற்காக அவன் ஒழுக்கத்தையே சந்தேகப்பட்டுவிட்டாளே!

கோபம் மட்டுப்பட மறுக்கவும் திரும்பவும் காரில் ஏறி அமர்ந்து கதவை அறைந்து சாற்றினான். பயமும் திகைப்புமாக அவள் பார்த்திருக்கையிலேயே காரை சீறிக்கொண்டு பாய விட்டான். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “கவனமா போங்க. எனக்கு என்ர உயிர் முக்கியம்!” என்றாள் அவனைப் பாராமல்.

“அப்ப நான் போய்ச் சேந்தா பரவாயில்ல உனக்கு?” என்றதும் அதிர்ந்துபோய் வாயில் கையை வைத்தவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

வேகமாகப் போகிறானே என்கிற பயணத்தில் சொன்னால் என்னவெல்லாம் கதைக்கிறான்? அப்படி அவனைப் பறிகொடுத்துவிட்டு அவள் எப்படி வாழ்வாள்? சட்டென்று கண்ணீர் திரண்டுவிட முகத்தைத் திருப்பி மறைக்க முயன்றாள்.

அவனும் காரை திரும்பவும் கரையாக நிறுத்திவிட்டு ஒரு நொடி அமைதியாக இருந்தான். “ஆரு என்னைப் பார்!” என்று அவள் தோள் தொட்டுத் தன்புறம் திருப்பி, அவள் கண்களைத் துடைத்துவிட்டான்.

கலங்கிச் சிவந்திருந்த விழிகளால் அவனையே பார்க்க இரு கன்னங்களிலும் தன் உள்ளங்கைகளை வைத்து அவள் முகத்தை ஒருமுறை அப்படியும் இப்படியுமாக ஆட்டிவிட்டு விட்டான்.

அவளுக்குத் திகைப்பு. என்ன செய்கிறான் இவன் என்று பார்த்தாள். அவன் உதட்டில் மெல்லிய முறுவல்.

அவளின் ஒற்றை கரத்தை எடுத்துத் தன் கைகளுக்குள் அடக்கி,
“ஆரு ப்ளீஸ்! எனக்கு எந்த… எந்தப் பழக்கம் இல்ல. அது…” என்று கிரியைப் பற்றிச் சொல்ல வந்தவன் சட்டென்று நிறுத்தினான்.

தன்னோடான பழக்கத்தை நிறுத்து என்று அவள் சொல்வாள் என்று கிரி சொன்னது நினைவில் வந்தது. சொல்ல வந்ததை விழுங்கிக்கொண்டு, “அகிரான்ர விசயத்தில இருந்து அவன் இன்னும் வெளில வரேல்ல ஆரு. குழம்பின மனநிலையோட இருக்கிறான். அதான்…” என்றவனை முடிக்க விடாமல், “அதால அவரோட சேந்து நீங்களும் புண்பட்ட நெஞ்சப் புகை விட்டு ஆத்தினீங்க போல.” என்றாள் அவள் வெடுக்கென்று.

என்ன சொன்னாலும் அவள் புரிந்துகொள்ளப் போவதில்லை என்று விளங்கிவிட, “இனிப் பத்த மாட்டன்!” என்று வாக்குக் கொடுத்தான் அவன்.

“நானும் இனி உங்களை நம்ப மாட்டன் எண்டு சொல்லிட்டனே!” என்றதும், “ஆரு!” என்று அதட்டினான்.

error: Alert: Content selection is disabled!!