“என்ன அதட்டுறீங்க? அவர் டீ போட்டுக் கதைக்கிறார், ஆளும் மூஞ்சயும் எண்டு அசிங்கப்படுத்துறார். என்ர மூஞ்ச எப்பிடி இருந்தா அவனுக்கு என்ன? அவன் ஆர் என்னைப் பற்றிக் கதைக்க? நீங்க பாத்துக்கொண்டு நிக்கிறீங்க. அவன்ர வாய்க்குத்தான் அகிராக்கு அவனைப் பிடிக்கேல்ல. அண்டைக்கு வந்து நான் கதைச்சது உங்களோட. அந்தக் கேடு கெட்டவன் என்னத்துக்கு நடுவுக்க வந்தவன்?” என்றதும் அவன் முகம் மாறிப்போயிற்று.
“பாத்துக் கதை ஆரு!” என்று அதட்டினான்.
“அவனைச் சொன்னதும் கொதிக்குது உங்களுக்கு. இதே கோபம் அவன் என்னச் சொல்லேக்க உங்களுக்கு வரேல்லையே. பிறகு என்னத்துக்குப் பின்னாலயும் முன்னாலயும் திரிஞ்சு என்ர மனதக் கெடுத்தனீங்க? அவனோடேயே சோடி போட்டுக்கொண்டு திரிய வேண்டியதுதானே!”
அதற்கு மேல் முடியாமல், “வாய மூடு ஆரபி!” என்று குரலை உயர்த்தியிருந்தான் அவன்.
“நான் ஏன் மூடோ…”
“மூடடி!” என்றவனின் சீற்றத்தில் அவள் வாய் படக்கென்று மூடிக்கொண்டது. அதிர்ந்து அவனையே பார்த்தாள். இந்த ஆக்ரோசமும் ஆத்திரமும் அன்று அவனிடம் வரவில்லையே. சட்டென்று கதவைத் திறந்துகொண்டு இறங்க முயன்றாள். எட்டி அவள் கையைப் பற்றித் தடுத்தான் அவன்.
“விடுங்க கைய! விடுங்க கைய எண்டு சொன்னனான்!” என்று உருவிக்கொள்ள எவ்வளவு முயன்றும் முடியவில்லை.
“ஆரு ப்ளீஸ்!”
“விடுங்க கைய. நான் போகோணும். எனக்கு உங்களோட கதைக்க விருப்பம் இல்ல. இன்னும் கொஞ்ச நேரத்தில, வந்து இறங்கிட்டானா எண்டு தெரியிறதுக்கு அம்மா எடுப்பா.”
“ட்ரெயின்ல மன்னார் போக ஒரு மணித்தியாலம் ஆகும். கார்ல அரை மணித்தியாலம். சரியான நேரத்துக்குக் கொண்டே விடுவன். நீ இரு.” என்று தணிந்து சொன்னான் அவன்.
அவளுக்கு மனம் ஆறவேயில்லை. நண்பனுக்காக அவளிடமே எப்படிக் குரலை உயர்த்துகிறான்? அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு பேசாமல் இருந்தாள்.
“ஆரு!”
“தயவு செய்து இனி ஆரபி எண்டே கூப்பிடுங்க.”
“ப்ச் ஆரு! இனி அவன் உன்னோட அப்பிடிக் கதைக்க மாட்டான். எந்தப் பிரச்சினைக்கும் வரமாட்டான். நான் சொல்லி வைக்கிறன். அதே மாதிரி நான் இனிப் பத்த மாட்டன். அண்டைக்கு நான் அவனை அப்பிடி எல்லாம் கதைக்க விட்டிருக்கக் கூடாதுதான். நீ பாத்திட்டாய் எண்டுற அதிர்ச்சில எனக்கு என்ன செய்றது எண்டு தெரியாம போச்சு. இப்பிடி ஒண்டு நடந்துபோச்சே, உன்னை எப்பிடிச் சமாளிக்கப்போறன் எண்டுற யோசினைல அவனைக் கவனிக்கேல்ல. இனி அப்பிடி நடக்காது.” என்று முற்றிலுமாக இறங்கிவந்து பேசினான் அவன்.
அவளுக்கு மனம் ஆறுவதாக இல்லை. ஆறும் போலும் இல்லை.
“பிளீஸ் ஆரு, நான் இந்தச் சண்டையை முடிக்க நினைக்கிறன். தயவு செய்து கொஞ்சம் விளங்கிக்கொள்ளு!”
“நீங்க முடிக்கத்தான் நிப்பீங்க. ஏமாந்ததோ அவமானப்பட்டு நிண்டதோ நீங்க இல்லையே. அதால நீங்க முடிக்கத்தான் நினைப்பீங்க. எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். தயவு செய்து காரை எடுங்க. எனக்கு வீட்டுக்குப் போகோணும்.”
“இப்பிடி என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டன் எண்டு நிண்டா நானும் என்ன செய்ய?”
“ஒண்டுமே செய்யாதீங்க எண்டுதான் நானும் சொல்லுறன்.”
“ஆரு!”
“ப்ளீஸ். எனக்கு எல்லாம் போதும். உங்களிட்ட இருந்து இதையெல்லாம் நான் எதிர்பாக்கவே இல்ல. என்னைக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிடுங்க ப்ளீஸ்!” எனும்போதே அவளுக்குக் குரல் உடைந்து போயிற்று.
சமாதானமாக அவள் கையைப் பற்ற அவன் வரவும் அவள் கட்டுப்பாடு உடைந்துபோனது. “என்னை விடுங்க எண்டு சொல்லுறது உங்களுக்கு விளங்குதா இல்லையா?” என்று இப்போது அவள் குரலை உயர்த்தினாள்.
ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன். நன்றாகப் பார் என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
“அதுதான் செய்தது எல்லாம் பிழை, இனி இப்பிடி நடக்காது எண்டு சொல்லுறேன் தானே ஆரு.” என்றான் கெஞ்சலாக.
“ஆரு!”
“ஏய், உன்னோட கதைக்காம இருந்த இந்தக் கொஞ்ச நாளும் பைத்தியம் பிடிக்காத குறையா அலஞ்சனான். ப்ளீஸ் சமாதானமாகு ஆரு!”
“நான் சமாதானம் ஆகோணும் எண்டா அந்த நரிவாயனக் காய் வெட்டுங்க!” என்றாள் அவள் பட்டென்று.
அவன் அதிர்ந்துபோனான். கிரி சொன்னது போலவே சொல்கிறாளே!
“நான் சீரியஸாத்தான் சொல்லுறன். முந்தியும் எனக்கு அவரைப் பிடிக்காது. அப்ப நீங்களும் எனக்கு வினோன்ர அண்ணா மட்டுமே எண்டுறதால அவரைப் பற்றி நான் பெருசா யோசிச்சதே இல்ல. ஆனா இப்ப அப்பிடி விடேலாது. அவரால எங்களுக்க பிரச்சினை இனியும் வந்துகொண்டுதான் இருக்கும். நான் வேணும் எண்டா அவரை விட்டு விலக்குங்க!” என்றாள் முடிவு போல்.
“இல்லாட்டி?” அவன் கேள்வி வெகு கூர்மையாக வந்தது.
அவள் பதில் சொல்ல வரவும், கை நீட்டித் தடுத்து, “இனி இப்பிடி நடக்காது எண்டு சொல்லிட்டன். அத மனதில வச்சுப் பதில் சொல்லு!” என்று சொன்னான் அவன்.
“இனி இப்பிடி நடக்குதா இல்லையா எண்டுறத எதிர்காலம் சொல்லட்டும். ஆனா நீங்க அவரோட பழக வேண்டாம். எண்டைக்குமே அவர் எங்களுக்க பிரச்சினையா மட்டும்தான் இருப்பார்!”
“இல்லையெண்டா?” தான் அந்தளவு தூரத்துக்கு உத்தரவாதம் கொடுத்த பிறகும் இப்படிச் சொல்கிறவளை நோக்கி மிக மிக நிதானமாக வினவினான் அவன்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாத திகைப்புடன் அவனைப் பார்த்தாள் அவள்.
அவள் தாடையைப் பற்றித் தன்னிடம் இழுத்து, “சொல்லு! இல்லையெண்டா என்ன செய்யப்போறாய்?” என்றவனை மிகுந்த இயலாமையுடன் நோக்கினாள் அவள்.
உன் கட்டுக்குள் நான் இல்லை என்று சொல்கிறானா அவன்? நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறானா?
அவள் விழிகளில் மெல்ல மெல்ல நீர் சேர்ந்தது. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் காரை எடுத்தான் அவன். அவளும் நேரே பார்த்து அமர்ந்துகொண்டாள். உள்ளம் மட்டும் பெரும் வலியில் துடித்துக்கொண்டிருந்தது.
மன்னார் புகையிரத நிலையம் வெகு வேகமாக வந்து சேர்ந்தது. சற்றுத் தள்ளி நிறுத்தினான். அவனைப் பாராமலேயே காரைவிட்டு இறங்கினாள் அவள். அவனும் இறங்கி வந்து காரின் டிக்கியில் இருந்து அவளின் பயணப் பையை எடுத்துக்கொடுத்தான். ஓட்டோக்கள் கிடைக்கும் பகுதியை நோக்கி அவள் நடக்க, இவன் கேசத்தைக் கோதிக் கொடுத்தபடி திரும்பி நின்றுகொண்டான்.

