ஆரபியிடம் சொன்னதுபோல் அபிசாவின் திருமண வீட்டில் வைத்து நடந்ததற்குப் பிறகு அவளைப் பாராமல், அவளோடு பேசாமல், விளக்கம் சொல்லாமல் தவித்துப்போனான் சகாயன்.
என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் அன்று காலையில் அவள் புறப்படுவதைப் பற்றி வினோதினி அகிராவிடம் சொல்லிக்கொண்டிருந்தது இவன் காதில் விழுந்தது. அதன் பிறகு எந்தப் புகையிரதத்தில் வருகிறாள் என்று அவள் வாயிலிருந்து பிடுங்குவது அவனுக்குச் சிரமமாக இருக்கவில்லை.
அங்கிருந்து காரில் முருங்கன் புறப்பட்டு வரும்போதே நேரம் மட்டுமட்டாகத்தான் இருந்தது. அப்படி இருந்தும் முருங்கனில் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பஸ் பிடித்து அனுராதபுரம் வந்து, புகையிரத நிலையத்துக்கு அரக்கப்பறக்க ஓடிவந்தது காணாதது என்று, அவள் இருக்கும் பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் போதும் போதும் என்றாயிற்று.
இப்போதோ அத்தனையும் வீண் எனும் நிலை. சமாதானம் செய்யப்போய்ச் சண்டையைப் பெரிதாக்கிவிட்டு வந்திருக்கிறான்.
அவள் சொன்னதும் தவறாயிற்றே.
ஒரே ஊர். பாலர் வகுப்பிலிருந்து ஒன்றாகப் பயின்றவர்கள். உற்ற நண்பன். அவனை விட்டு எப்படி விலகுவான்? அவளுக்கு அவனைப் பிடிக்காமல் இருக்கலாம். அன்று அவன் பேசிய பேச்சும் தவறுதான். இனி அது நடக்காமல் பார்க்க வேண்டுமே தவிர, கிரியையே வெட்டிவிடு என்றால் எப்படி?
அவனை வெட்டிவிட்டு இவனால் இவளோடு நிம்மதியாக வாழ முடியுமா? அதன் பிறகு கிரியையோ அவன் குடும்பத்தினரையோ இவன் எதிர்கொள்ள வேண்டாமா?
அவள் மீது மனத்தாங்கலும் கோபமும் இருந்தாலும் விலகி நிற்க முடியவில்லை. இரயிலில் ஒன்றாகப் பயணித்தது, சில பல பொழுதுகளில் அவள் விரல்களைப் பற்றிக்கொண்டது, அவள் கண்ணீர், கன்னச் சிவப்பு எல்லாம் சேர்ந்து அவளோடு பேசிவிடு, எப்படியாவது சமாதானம் செய்துவிடு என்று அவனைத் துரத்திக்கொண்டே இருந்தன.
இரண்டு நாள்கள் கடந்த நிலையில் அவளுக்கு அழைத்தான்.
இங்கே ஆரபியும் நிம்மதியாக இல்லை. ஆரம்ப நாள்களில் கனவுகளையும் கற்பனைகளையும் தந்து இனித்த காதல், இன்று காயத்தை மட்டுமே தந்துகொண்டிருந்தது. தன்னை விட நண்பனை மேலாக நினைக்கிறான் என்பதை இன்னுமே அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அதைவிட அவ்வளவு தூரம் அவளோடு பேசுவதற்கு என்றே வந்தவன், கடைசியில் அவள் கோபத்தோடு புறப்பட்டபோது சமாதானம் செய்யவே இல்லையே. போ என்று விட்டுவிட்டானே. அந்தளவுதானா அவள் அவனுக்கு?
அன்று, ‘வீட்டுக்குப் போயிற்றியா?’என்று கேட்டு அவன் அனுப்பிய குறுந்தகவலுக்குப் பதில் போடவில்லை அவள்.
வீட்டில் இருந்தால் ஆனந்தனும் அன்னையும் விடாமல் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்றே கேட்டுக் கேட்டே நச்சரித்தார்கள். அவளுக்கும் யார் முகமும் பார்க்க முடியவில்லை. வினோதினி, அகிரா யாரிடமும் சொல்லாமல் யாழ்ப்பாண லைப்ரரிக்கு படிக்க என்று வந்திருந்தாள்.
அப்போதுதான் அவன் அழைத்தான். கைப்பேசியின் சத்தத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருந்ததால் அவன் பெயர் மட்டும் ஒளிர்ந்தது.
அத்தனை நாள்களும் உள்ளத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டங்களையும் தாண்டி மனத்தில் ஒரு பரபரப்பு. எடுப்பதா தவிர்ப்பதா என்கிற குழப்பம்.
அவன் திரும்பவும் அழைத்தான். கூடவே, ‘உன்னோட கதைக்கோணும். எடு ஆரு!’ என்று குறுந்தகவலும் அனுப்பிவிட்டான்.
எழுந்து லைபராரியை விட்டு வெளியே வந்து அழைப்பை ஏற்றாள்.
“ஆரு!”
அழுகையும் பொருளற்ற ஆத்திரமும் சேர்ந்து வந்ததில் அமைதியாகவே இருந்தாள் ஆரபி.
“எப்பிடி இருக்கிறாய்?”
“…”
“ஆரு, கதை பிளீஸ்!”
“ஏன் எடுத்தனீங்க?”
ஒட்டுதல் இல்லாத அவளின் அந்நியக் குரல் அவன் பேச்சையும் ஒரு கணம் நிறுத்திற்று. கூடவே மெல்லிய சினத்தையும் உண்டாக்கிற்று.
ஆனாலும் போன முறை போன்று மறுபடியும் ஒரு சண்டையில் முடிய வேண்டாம் என்று எண்ணி, “இன்னும் கோபம் போகேல்லையா உனக்கு?” என்று சமாதானமாகவே வினவினான்.
“போறதுக்கு நடந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிடச்சதா?”
“அதுதான் இனி அப்பிடி நடக்காது எண்டு சொன்னேனே.”
“நடந்தா?”
“நடக்காது.”
“நடந்தா?” அவள் விடுவதாக இல்லை.
“நடக்காது எண்டுசொல்லுறன். பிறகும் நடந்தா நடந்தா எண்டு கேட்டா என்ன சொல்லுறது?” இப்போது அவன் பேச்சிலும் மெல்லிய சூடு.
அது அவள் சினத்தையும் தூண்டிவிட்டது. “நானா அவனா?” என்றாள் வேறு பேச விரும்பாமல்.
“என்ன?” அவன் திகைத்தான்.
“சொல்லுங்க. நானா அவனா?”
“முதல் நீ அவனை மரியாதையா கதை!”
சுருக்கென்று இருந்தது அவளுக்கு. “இந்தக் கோவம் உங்களுக்கு அவன் என்னை மரியாதை இல்லாம கதைக்கேக்க வரேல்ல என்ன?” என்றாள் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.
“உனக்கு என்ன விசரா? அவனுக்கும் உன்னச் சின்ன வயசில இருந்தே பழக்கம். நாங்க எல்லாரும் ஒரே ஊர். எப்பவும் வா போ எண்டுதான் கதைக்கிறவன். நீங்க ரெண்டுபேரும் அடிக்கடி பிடுங்குப்படுறதும் நடக்கிறதுதான். அந்தப் பழக்கத்தில, கோபத்தில் டீ போட்டுட்டான். பிழைதான். அதுக்காக என்ர வயசில இருக்கிறவனை நீ இப்பிடித்தான் கதைப்பியா?” என்று அதட்டினான்.
“வயசுக்கு எல்லாம் மரியாதை குடுக்கேலாது. மரியாதை நடத்தைக்குத்தான்.”
“அப்பிடி என்ன பிழையா நடந்திட்டான் உன்னட்ட?”
“ஓ!” என்றவளுக்கு அவன் தன் தோற்றம் குறித்துப் பேசியதும், டீ போட்டதும் இவனுக்குத் தவறாய்ப் படவில்லை என்பது வலித்தது. கூடவே, அதைத் திரும்பவும் சொல்லி அவனுக்கு விளங்க வைக்க முயல விருப்பமும் இல்லை.
அவனுக்காகப் புரிந்திருக்க வேண்டும். இல்லையா அன்று அவள் சொன்னபோது புரிந்துகொண்டிருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் இப்போது அப்படி அவன் என்ன செய்தான் என்று கேட்கிறவனிடம் இனியும் விளக்க என்ன இருக்கிறது?
அதைக் குறித்தெல்லாம் பேசாமல், “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க?” என்றாள் தன் உணர்வுகளை அடக்கி.
“அவன் ஏதேதோ கோவத்துல வார்த்தையை விட்டுட்டான் ஆரபி.” இப்போது அவனுக்கும் ஒரு அளவுக்கு மேல் இறங்கிப்போக முடியவில்லை.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல.”
“ஆரு ப்ளீஸ். நீ என்ர பொறுமைய சோதிக்கிறாய்.”
அவள் உதட்டில் விரக்தியான ஒரு முறுவல். “உங்களுக்குத் தெரியாது. இது வரைக்கும் நான் சொல்லேல்ல. உங்களை எனக்கு எப்பவோ பிடிக்க ஆரம்பிச்சிட்டுது. ஆனாலும் சொல்லாம இருந்ததுக்கு அவரும் ஒரு காரணம். எனக்கும் உங்களுக்கும் நடுவில வந்து நிப்பார் எண்டு யோசிச்சிருக்கிறன். அண்டைக்கு நான் பயந்தது எவ்வளவு சரி எண்டு இப்ப விளங்குது.” என்றவள் பேச்சில் சுள் என்று ஏறிப்போயிற்று அவனுக்கு.

