“என்ன விளங்குது உனக்கு? அவனை உனக்குப் பிடிக்கேல்ல எண்டா அவனோட நான் நிக்கேக்க நீ என்னத்துக்கு எங்களைத் தேடி வந்தனி? நீ வந்ததாலதான் இவ்வளவும்.” என்று அவனும் சீறினான்.
அவனுடைய நியாயத்தைக் கேட்டு அவளுக்கு வாயடைத்துப்போயிற்று. இதற்குமேல் அவனிடம் கதைக்க ஒன்றுமே இல்லை என்பது போலிருக்கவும், “நானா அவனா? இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. போதும் எனக்கு.” என்றாள் திரும்பவும்.
“என்னடி நீயா அவனா? என்னைச் சொல்லோணும். நீ என்னதான் மூஞ்சயக் காட்டிப்போட்டு போனாலும் பின்னால பின்னால வாறன் எல்லா. நீ இப்பிடித்தான் கதைப்பாய். எனக்கு அவன்தான் முக்கியம். வை ஃபோனை!” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருந்தான்.
பளார் என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது அவளுக்கு. முகம் கன்றிச் சிவந்து போயிற்று. அடுத்து வந்த நாள்களின் இரவுகளில் எல்லாம் ‘ஏனடா அவனிடம் மனத்தைப் பறிகொடுத்தோம்’ என்று எண்ணியெண்ணி அழுதாள்.
நாள்கள் வாரங்களாகி மாதங்களாகிற்று. இவர்கள் கடைசி வருடத்துக்கும் வந்திருந்தார்கள். அவன் திரும்பியே பார்க்கவில்லை. தன் பிடியிலேயே நின்றான்.
இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அன்று அவள் தன் மனத்தை வெளிப்படுத்தியபோது அந்த வானத்தையே வசப்படுத்திவிட்டவன் போன்று ஆர்ப்பரித்தவனா இன்று தன்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் இருக்கிறான் என்று நம்பவே முடியவில்லை?
மிகவுமே காயப்பட்டுப்போனாள். ஆனாலும் வெட்கம் கெட்டு ஒரு நாள் வினோதினி அழைத்தாள் என்று அவர்கள் வீட்டுக்குச் சென்றாள். அன்று போலவே இன்றும் அவள் அவர்களின் வீட்டிற்குள் உள்ளிடுகையில் அவன் சரியாக வெளியே வந்தான்.
எத்தனையோ நாள்களுக்குப் பிறகு நேரில் கண்டுவிட்ட படபடப்பில் அவள் அவனையே பார்க்க, சட்டென்று கைப்பேசியை எடுத்து, அதைப் பார்த்தபடியே அவளைக் கடந்துபோனான் அவன். அப்படியே நின்றுவிட்டாள் ஆரபி. நின்று திரும்பி போகிறவனையே பார்த்தாள்.
அங்கே அவன் அப்போதும் இவளைப் பாராமல் ஹெல்மெட்டை அணிந்துகொண்டு பைக்கை உதைத்து கிளப்பிக்கொண்டு பறந்தான்.
சும்மா இருந்தவள் மனத்தைக் கலைத்து, அவளுள் அவனை ஆழமாக விதைத்துவிட்டு, இன்று தள்ளி நின்று எனக்கு ஏற்றதுபோல் வளைந்துகொடு என்கிறான் அவன்.
அவன் செய்கை கோபப்படுத்தியது. இனி அவனைத் திரும்பியே பார்க்கக் கூடாது என்று நினைத்தாள். அதே நேரம் இத்தனை பிடிவாதமாக அவளைச் சமாதானம் செய்யாமல் இருக்கிறானே என்று அழுதாள். தம் காதல் என்னாகுமோ என்கிற பயமும் சேர்ந்துகொண்டது.
அப்போதெல்லாம் விடாப்பிடியாக அவளை வரவைத்து பேசியவனுக்கு இன்று எந்தக் காரணங்களும் அகப்படவில்லையா என்ன?
அதன் பிறகு அவளும் அவன் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டாள்.
இவள் என்னதான் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும், தாம் கூட இருந்தாலுமே அவ்வப்போது தனித் தீவாக மாறிவிடுகிறவளை வினோதினியும் அகிராவும் கவனிக்காமல் இல்லை.
பலமுறை கேட்டும் அவள் சொல்லவில்லை. ஒரு நாள் பல்கலை காண்டீனுக்கு அழைத்துச் சென்று விடாப்பிடியாக வினவினர்.
அப்போதும் உள்ளதை அவள் சொல்லவில்லை. அதற்கு மாறாக, “நான் ஒரு கத வாசிச்சனான். அதுல… ஹீரோன்ர ஃபிரெண்ட் கொஞ்சம் சரியில்ல. ஆனா ஹீரோவும் அந்த ஃபிரெண்டும் நல்ல ஒட்டு. ஹீரோயினிய அந்த ஃபிரெண்ட் கொஞ்சம் பொடி ஷேமிங் செய்ற மாதிரிக் கதச்சிடுவான். அதால நானா ஃபிரெண்டா உனக்கு முக்கியம் எண்டு ஹீரோயினி கேப்பாள். அது மட்டுமில்லை அவனோட சேராத எண்டும் சொல்லுவாள். ஹீரோ என்ன சொல்லுவான் எண்டு நினைக்கிறீங்க? இல்ல, ஹீரோ என்ன சொன்னா சரியா இருக்கும் எண்டு நினைக்கிறீங்க?” என்று தங்களுக்குள் நடந்தவற்றை எல்லாம் ஒரு கதையாக மாற்றிச் சொன்னாள்.
“நானா இருந்தா முதல் அந்தக் காதலியக் கழட்டிவிடு எண்டுதான் சொல்லுவன்.” வினோ பட்டென்று சொன்னதும், “என்னடி இப்பிடிச் சொல்லுறாய்?” என்று அதிர்ந்தாள் ஆரபி.
“வேற எப்பிடிச் சொல்லச் சொல்லுறாய்? இது ஒரு விதமான ப்ளாக்மெயில். அந்த நண்பனில பிழையே இருக்கட்டும். லவ்வர்ஸுக்க மூண்டாவது மனுசர் எப்பிடி வரக் கூடாதோ, அதே மாதிரி அந்த லவ்வுக்க லவ்வர்ஸ் வேற ஆரையும் கொண்டுவரக் கூடாது. நீ இதையெல்லாம் செய்தாத்தான் உன்னை நான் காதலிப்பன் எண்டு சொன்னா அது என்னடி காதல்?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“அவள் ஒண்டும் நல்ல ஃபிரெண்ட விடு எண்டு சொல்லேல்லையே. அந்த ஃபிரெண்டோட சேர்ந்து குடி சிகரெட் எண்டு இருந்தா?” அவர்களைப் பாராமல் இழுத்து வினவினாள்.
“அவன் என்ன பேபியா? இவனோட சேந்து அவன் கெட்டுப்போயிட்டான் எண்டு சொல்ல? உன்ர மனம் தடுமாறாம எதுவும் நடக்காது ஆரு.” என்றதும் ஆரபியின் முகம் இலேசாகக் கறுத்தது.
“அந்த ரைட்டர் அதுக்கான பதிலையும் சொல்லி இருப்பாவே.” இவ்வளவு நேரமாக அவர்கள் பேசுவதைக் கேட்டிருந்த அகிரா வினவினாள்.
“அது… அந்தக் கதை தொடரா போகுது. இன்னும் பதில் வரேல்ல.”
“நீ என்ன நினைக்கிறாய்?” என்று வினோ அகிராவை நோக்கி வினவினாள்.
“நான் என்னடி இதுல நினைக்க இருக்கு? நாளைக்கு இவர் உங்க ரெண்டு பேரோடயும் கதைக்க வேண்டாம் எண்டு சொன்னா நான் கேப்பேனா? இல்ல அவரா நீங்களா முக்கியம் எண்டு கேட்டா என்ன பதில் சொல்லுறது? அந்தக் கேள்விக்குப் பதிலே இல்ல. சண்டைல மட்டும்தான் அது முடியும்.”
“என்னடி கதைக்கிறாய்? நாங்க என்ன உனக்கு கெட்ட ஃபிரெண்ட்ஸா? இல்ல உன்னைப் பிழையான பாதைல நடத்திற ஃபிரெண்ட்ஸா?” என்று தன்னை மறந்து சீறினாள் ஆரபி.
“அப்பிடி கெட்ட பிரெண்டா இருந்திருந்தா அந்த ஹீரோவும் தறுதலையாத்தான் சுத்துவானா இருக்கும். அப்பிடியானவனக் காதலிச்சது ஹீரோயினி செய்த பிழை. அப்பிடி இல்லை, ஹீரோ நல்லவன், நண்பன் மட்டும்தான் சரியில்ல எண்டா ஹீரோயினி அப்பிடிச் சொல்லுறது பிழை.” என்ற அகிராவின் பேச்சை ஆரபியால் முழு மனதாக ஒப்ப முடியவில்லை.
அதே நேரத்தில் தன் மீதுதான் தவறா என்கிற கேள்வி எழ ஆரம்பித்தது.

