அது நவரத்தினத்தின் கட்சி அலுவலகம். உள்ளே மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டுச் சகாயனும் கிரியும் வெளியே வரவேற்புப் பகுதியில் அமர்ந்திருந்தார்கள்.
“என்னவாமடா அவள்?” என்று கிரிதான் பேச்சை ஆரம்பித்தான்.
“என்னவாம் எண்டா அவள் என்ன சொல்லக் கிடக்கு?” எதைக் குறித்து அவன் விசாரிக்கிறான் என்று தெரிந்தும் தெரியாததுபோல் திருப்பிக் கேட்டான் சகாயன்.
“நடிக்காத மச்சான். அவள் ஒண்டும் சொல்லாமத்தான் இஞ்சி திண்ட மங்கி மாதிரி மூஞ்சிய வச்சிருக்கிறியா?”
எரிச்சலுடன் முகத்தைத் திருப்பினான் சகாயன்.
“ஊருக்கு வேற பெட்டையளே இல்லை எண்டமாதிரிப் போயும் போயும் அவளை விரும்பி இருக்கிறியே!” என்றதும் சகாயனின் முகம் கோபத்தில் சிவந்து போயிற்று.
“கிரி, எரிச்சலக் கிளப்பாத! இப்பிடியே கதைச்சுக்கொண்டு இருந்தாய் எண்டு வை, சத்தியமா அறைஞ்சிடுவன்!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
“பார்றா! ‘உன்னக் கேவலப்படுத்தினதுக்குப் பாடம் படப்பிக்கிறதுக்காக அவளுக்குப் பின்னால சுத்தப் போறன்’ எண்டு என்னட்டச் சொல்லிப்போட்டு உண்மையாவே சுத்தி இருக்கிறாய் என்ன?”
சகாயனின் முகம் இறுகிற்று.
“அவளின்ர வடிவப் பாத்து விழுந்திருக்கிறாய். ஆனா வடிவத் தவிர அவளிட்ட ஒண்டும் இல்லை!” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “கிரி!” என்று அடிக்க எழுந்துவிட்டவனைக் கண்டு கிரி அதிர்ந்துபோனான்.
இந்தச் சகாயன் அவனுக்குப் புதிது. சகாயனுக்குமே அவனின் அதிர்ந்த பார்வை ஏதோ ஒரு வகையில் தாக்கிற்று. ஆனாலும் ஆத்திரம் அடங்குவதாக இல்லை.
“இவ்வளவு நாளும் நான் அவளை விரும்பினது உனக்குத் தெரியாது. அதில நீ எப்பிடிக் கதைச்சிருந்தாலும் அது வேற. ஆனா இனி நீ அவளைப் பற்றி அப்பிடிக் கதைக்கக் கூடாது மச்சான். நீ எண்டுற படியால் இத இதோட விடுறன். இதுவே எவனோ ஒருத்தன் சொல்லியிருந்தான் எண்டு வை, மூஞ்சைய உடைச்சிருப்பன்.” என்றான் இன்னும் சினம் தணியாமல்.
“அண்டைக்கும் டீ போட்டுக் கதைச்சிருக்கிறாய். ஆளும் மூஞ்சியும் எண்டும் என்னவோ சொல்லியிருக்கிறாய். என்னடா இதெல்லாம்?”
“அப்ப அவள் என்னைப் பற்றி உன்னட்டக் கதைச்சிருக்கிறாள்.”
“டேய்!”
“என்ன டேய். என்னை அடிக்க வாற அளவுக்கு மாறி நிக்கிறாய் நீ. இந்தளவுக்கு உன்னை மாத்தினவள் உன்னை என்னோட பழகு எண்டு விட்டவளா? அண்டைக்கு அவள் உன்ர லவ்வர் எண்டு எனக்குத் தெரியாது. ஏற்கனவே அவளில கோவத்துல இருந்தவன் நான். இதுல நீ அவளையே பாக்கிறாய். பிறகு பாத்தா அவள் உனக்குப் பின்னால வாறாள். வந்ததும் இல்லாம உன்னைப் பேசுகிறாள். நீயும் வளத்த நாய் வால ஆட்டுற மாதிரி அடங்கி நிக்கிறாய். அந்த எரிச்சலில என்ன சொன்னனான் எண்டு எனக்கே நினைவில்ல. ஆனா அவள் அதையெல்லாம் ஒரு விசயமா கொண்டுவந்து உன்னட்டச் சொல்லி இருக்கிறாள் எண்டா எப்பிடியானவளா இருப்பாள் எண்டு யோசி.” என்று தானும் சீறினான் கிரி.
“கிரி, எனக்கு நீயும் வேணும் அவளும் வேணும். தயவு செய்து அவளைப் பற்றி இப்பிடிக் கதைக்காத. அண்டைக்குக் கதைச்ச மாதிரி இனியும் கதைக்காத.”
கிரிக்கு அது ஏதோ ஒரு வகையில் வலித்தது. இத்தனை வருடங்களும் சகாயனுக்கு அவன் மட்டும்தான். ஆனால் இன்று? திருமணம் என்று வந்துவிட்டால் அவரவர் அவரவர் மனைவிக்கு, குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று புரியாமல் இல்லை. ஆனாலும் தன்னளவுக்கு அல்லது தன்னை விடவும் அதிகமாக அவள் அவனுக்கு முக்கியமானவளாக இருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்வது இலகுவாய் இல்லை.
அன்று அகிராவை அவனிடமிருந்து பிரித்தாள். இன்று சகாயன்.
“உனக்கும் அவளுக்கும் சண்டைதானே?”
“அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” சட்டென்று உசாராகி மறுத்தான் சகாயன்.

