“அப்ப இப்ப எனக்கு முன்னால அவளுக்கு ஃபோனை போடு.”
“டேய்!”
“போடடா!”
இடுப்பில் கைகளை ஊன்றி வாயைக் குவித்துக் காற்றை ஊத்தி வெளியேற்றிவிட்டு, “ரெண்டு பேருக்கையும் சின்ன சண்டைதான்.” என்றான் கிரியைப் பாராமல்.
“ஏன்?”
“…”
“என்னாலயா?”
“எங்களுக்க எதுக்கோ சண்டை. அது உனக்குத் தேவை இல்லாதது.”
அவனையே இமைக்காது பார்த்தான் கிரி. இதுவரையில் இவனுக்குத் தெரியாத ஒன்று அவன் வாழ்விலும், அவனுக்குத் தெரியாத ஒன்று இவன் வாழ்விலும் இருந்ததில்லை. ஆனால் இன்று?
“நான் அண்டைக்குக் கதைச்சதாலயா?” கிரி விடுவதாக இல்லை.
“இந்தக் கதையை விடு கிரி!”
“என்னோட பழகாத எண்டு சொன்னவளா?”
“அப்பிடி அவள் சொல்லேல்ல எண்டு உனக்கு இன்னும் எத்தனை தரம் சொல்லுறது?” என்று அதட்டினான்.
அதையும் சொன்னால் இவன் இன்னும் கோபம் கொள்வான் என்று மறைத்தான் சகாயன். கூடவே அதைச் சொல்லிக் கிரியின் பார்வையில் ஆரபி இன்னும் கீழிறங்குவது அவனுக்குப் பிடிக்கவுமில்லை.
“மச்சான் இஞ்ச பார். நீ சொல்லுற எல்லாத்தையும் நம்பிக்கொண்டு போக நான் ஒண்டும் பல்லு முளைக்காத பாப்பா இல்ல. தயவு செய்து உண்மைய இப்பவே சொல்லிப்போடு.”
“மச்சான் டேய்!”
“இல்ல. திரும்ப திரும்ப எல்லாத்தையும் மறைக்காத மச்சான். நீ எனக்கு உண்மையா இல்லை எண்டுறது எனக்கு வலிக்குது.” என்றதும் சுருக்கென்று இருந்தது சகாயனுக்கு.
ஆனாலும் உண்மையைச் சொல்ல முடியாமல், “எனக்கும் அவளுக்கும் சண்டை எண்டுறது உண்மைதான். ரெண்டு பேரும் கொஞ்ச நாளா கதைக்காம இருக்கிறதும் உண்மைதான். அதுக்காக உன்னோட கதைக்க வேண்டாம் எண்டு எல்லாம் அவள் சொல்லேல்லயடா.” என்று சொன்னான்.
“பின்ன?”
“அது அண்டைக்கு நீ அப்பிடிக் கதைக்கேக்க நானும் நிண்டிருக்கிறன். ஆனாலும் நான் உனக்கு ஒரு வார்த்தை சொல்லேல்லையாம். உன்னைத் தடுக்கேல்லையாம். தன்னை உனக்கு முன்னால விட்டுக் குடுத்திட்டேனாம் எண்டு சொல்லுறாள்.” என்று பொருத்தமாகச் சொல்லி அவனைச் சமாளிக்க முயன்றான்.
“நல்லாருக்கே கதை இது? எத்தினை நாள் என்னட்ட அவள் எப்பிடி எல்லாம் கதைச்சிருப்பாள். அப்ப எல்லாம் உன்னட்ட நான் சண்டைக்கு வந்தனானா?”
“அப்ப நாங்க லவ் பண்ணேல்ல மச்சான்.”
“ஓ! நேற்று வந்த லவ், ரூல்ஸ் போடுது. நீயும் அதக் கேட்டுக்கொண்டு என்னை அடிக்க வாறாய் என்ன?”
“கிரி, சும்மா சும்மா அவளைப் பற்றியே கதைக்காத. அவள் என்னத்தான் பிழை சொன்னவள். அது சரியும்தான். நான் உன்னை அப்பிடிக் கதைக்க விட்டிருக்கக் கூடாது. நடந்து முடிஞ்சதைக் கதைக்கிறதில அர்த்தம் இல்ல. ஆனா இனி நீ அவளைப் பிழையா கதைக்கக் கூடாது சொல்லிப்போட்டன். உனக்கு என்ன எண்டாலும் என்னோட மட்டும்தான் கதை.” என்று அந்தப் பேச்சை முடிக்க முயன்றான்.
கிரிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அந்தளவில் அவள் என்ன பெரிய திரவியம் என்று தோன்றிற்று. “போடா!” என்றுவிட்டு அங்கிருந்து அகன்று போய் ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைக்க ஆரம்பித்தான்.
வாயைக் குவித்துக் காற்றை ஊதினான் சகாயன். மெய்யாகவே அவனால் முடியவில்லை. இவர்கள் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவன் படுகிற பாட்டை நினைக்கையில் அவனுக்கே அவன் பாவமாகத் தெரிந்தான்.
“டேய்! இந்தப் பழக்கத்தை விடு எண்டு எத்தின தரம் சொல்லுறது உனக்கு?” என்று அதட்டியவன் புறம் அன்றுபோல் இன்றும் திறந்திருந்த சிகரெட் பெட்டியை நீட்டினான் கிரி.
சகாயனுக்குச் சட்டென்று ஆரபிக்குக் கொடுத்த வாக்கு நினைவில் வரவும் அந்தப் பெட்டியைப் பறித்துச் சுழற்றி எறிந்தான். கூடவே அவன் கையில் இருந்ததையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, “இனி இதத் தொட்டுப்பார். சத்தியமா என்னட்ட நல்லா வாங்கி கட்டுவாய்!” என்று எச்சரித்தான்.
“இதுவும் மேலிடத்து உத்தரவோ?” நக்கலாய் உதடு வளைத்து வினவினான் கிரி.
சகாயனால் உண்மையாகவே முடியவில்லை. “சும்மா சும்மா என்னத்துக்கடா அவளை இழுக்கிறாய்?” என்றான் சலிப்புடன்.
கிரிக்கு மனம் ஆறுவதாக இல்லை. காதல் என்கிற பெயரில் சகாயனை அவள் கட்டுக்குள் வைத்திருப்பதாகவே பட்டது.
“அப்ப இதைப் பற்றி அவள் ஒண்டும் சொல்லேல்ல?”
“இல்ல சொல்லேல்ல!”
“எனக்கு முன்னாலேயே உன்னட்ட வந்து அந்தளவுக்குச் சீறினவள் உன்னட்ட ஒண்டும் சொல்லேல்ல? இத நான் நம்போணும்?”
“சரி மச்சான். அவள் சொன்னதாவே இருக்கட்டும். நல்லதுக்குதானே சொல்லியிருக்கிறாள். நானும் உன்னைப் பத்தாத எண்டு முதலே சொல்லியிருக்கிறனா இல்லையா??
“நீ சொல்லுறது வேற. அவள் சொல்லுறது வேற.” பட்டென்று சொன்னான் அவன்.
“அவள் எனக்குத்தான் சொன்னவள். நான்தான் உனக்குச் சொல்லுறன்.” என்றவன் அப்போதும் கிரி என்னவோ சொல்ல வர, “கிரி விடு. இனி நீ அவளிட்ட தேவை இல்லாம எந்தக் கத பேச்சும் வைக்கக் கூடாது. அவ்வளவுதான்!” என்றதும் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புறப்பட்டுவிட்டான் கிரி.
அவன் மீதான கோபமும் சேர இந்த முறை ஆரபியை முற்றிலுமாக விட்டுப் பிடித்திருந்தான் சகாயன். அவனாக அவளிடம் சமாதானத்துக்குப் போவதில்லை என்கிற உறுதி அவனிடம் இன்னுமே வலுத்துப்போயிற்று.
ஊருக்குள் வந்துவிட்டால் அவளைப் பார்த்துப் பேச முடியாது என்று அன்று அவன் போட்ட முயற்சி எத்தனை பெரியது. அதற்குக் கூட அவளிடம் மதிப்பில்லாது போயிற்றே.
அதைவிட இன்று இதற்கு இறங்கிப்போனால் நாளைக்கு அம்மாவோடு கதைக்காதே, அப்பாவோடு கதைக்காதே என்று நிற்கமாட்டாளா என்று ஓடிற்று.
அதைவிட அவளாக அவனைச் சமாதானம் செய்ய வரவில்லையே. அதன் அர்த்தம் அவள் பிடியில் அவள் நிற்கிறாள் என்பதும், இப்போது வரை அவள் கேட்டதில் தவறில்லை என்று நினைக்கிறாள் என்பதும்தானே.
அவளே உணர்ந்து வரட்டும் என்பது அவனுக்கு. அப்படியானால்தான் இன்னொரு முறை இப்படிக் கேட்டுக்கொண்டு வரமாட்டாள்.
அந்தக் கோபத்தில்தான் அன்று தன் வீட்டில் வைத்து அவளைக் கண்டபோதும் காட்டிக்கொள்ளாமல் கடந்து வந்திருந்தான்.

