இணைபிரியா நிலை பெறவே 17 – 1

அன்று அகிரா வினோவோடு கதைத்ததிலிருந்து தான் அப்படிக் கேட்டது தவறோ, தனக்கும் அவனுக்குமிடையில் கிரியைக் கொண்டுவந்தது பிழையோ என்கிற கேள்விகள் எழுந்து ஆரபியைச் சிந்திக்க வைத்திருந்தன.

இதுதானே முதல்முறை. இனி நடக்காது என்று சொன்னானே. அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் அவள் கொடுத்திருக்க வேண்டும் என்று நாளாக நாளாகப் புரிய ஆரம்பித்தது.

அவனுக்கு அழைத்துப் பேசலாமா, அப்படியே அழைத்தாலும் என்ன சொல்வது? நான் அப்படிக் கேட்டது தவறு, மன்னித்துவிடு என்று சொல்வதா? இன்று இறங்கிப் போனால் இதையே பிடித்துக்கொள்ள மாட்டானா என்றும் ஒரு கேள்வி.

தன் பக்கத் தவறை உணர்ந்த அதே நேரத்தில் இந்தச் சமாதானத்தை எப்படி மேற்கொள்வது என்று தெரியவில்லை அவளுக்கு.

இப்படி இருக்கையில்தான் சகாயனின் பிறந்தநாள் வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட அவள் தயாராகவே இல்லை. அந்தளவில் யார் பக்கம் சரி, யார் பக்கம் பிழை என்பதையெல்லாம் தாண்டி அவனுக்காக மிகவுமே ஏங்கிப்போயிருந்தாள்.

சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தினை எழுதி, புலனத்தின் வாயிலாக அனுப்பிவிட்டாள். அடுத்த கணமே அவன் பார்த்துவிட்டான் என்று காட்டிற்று. நிச்சயமாக அழைப்பு வரும் என்று கைப்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு படபடக்கும் நெஞ்சுடன் காத்திருந்தாள்.

ஆனால் அவன் அழைக்கவேயில்லை. ஏன், நன்றி என்று கூட அனுப்பவில்லை. அப்படி அனுப்பினாலாவது அதைப் பிடித்துக்கொண்டு அவனுக்குத் தானே அழைக்கலாம் என்று காத்திருந்தவள் ஏமாந்துபோனாள். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இந்த ஏமாற்றத்தை, அவன் தரும் வலியைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.

ஆனாலும் அடுத்த நாள் காலையில் எழுந்து, அவர்களின் அம்மன் கோவிலுக்குச் சென்று, அவனுக்காக அர்ச்சனை செய்தாள். அவளால் முடிந்தது அவ்வளவுதான்.

தன் பிறந்த நாளினை மகிழ்ச்சியான மனநிலையோடு கடக்க முடியாத எரிச்சலில் இருந்தான் சகாயன். அவனும் இந்த நாளினை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஏதோ சண்டை சச்சரவில் பிரிந்து நிற்கிற உறவுகள் கூட, ஒரு வீட்டில் நல்லது ஒன்று நடக்கையில் சேர்ந்துவிடுவதுபோல் வருகிற இந்தப் பிறந்தநாளுக்கு அவள் அழைப்பாள், அதிலிருந்து தமக்குள் இருக்கிற இந்தப் பிணக்கு முடிந்துவிடும் என்று நினைத்திருந்தான்.

அவளானால் குறுந்தகவல் அனுப்புகிறாள். அதாவது அவள் தன் பிடியிலேயே நிற்பாளாம். அதே நேரத்தில் காதலியாகத் தன் கடமையையும் ஆற்றுவாளாம். இப்படியான வாழ்த்து அவனுக்குத் தேவையே இல்லை என்றுதான் பதில் போடாமல் விட்டுவிட்டான்.

*****

சில விடயங்கள் அறிவுக்குப் புரிந்தாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும். அந்த நிலையில் இருந்தான் கிரி. சகாயன், அவன் காதல், அவர்கள் இருவரும் என்று வருகையில் தான் நிற்கவேண்டிய தூரம் என்று அவனுக்கு எதுவும் புரியாமல் இல்லை.

ஆனால், நிரந்தரமாகப் படிந்துபோன ஆரபி மீதான வெறுப்பு, இழந்த காதல், சகாயனும் இனித் தன்னை விட்டு மெல்ல மெல்ல விலகிவிடுவான் என்கிற நினைப்பு எல்லாமாகச் சேர்ந்து அவனை அலைக்கழித்துக்கொண்டே இருந்தன.

சகாயனின் முகத்தைப் பார்த்தே அவர்கள் இன்னும் சமாதானமாகவில்லை என்று புரிந்தது. பிறந்தநாளின் போதும் அவன் சரியில்லாமல் இருந்ததில் அவள் எடுத்து வாழ்த்தவில்லை என்று புரிந்துபோயிற்று. அதுவும் ஒரு வகையான எரிச்சலை உண்டாக்கிற்று. அந்தளவுக்குப் பெரிய இவளா அவள் என்று ஒரு சினம்.

இப்படி இருக்கையில்தான் அவர்கள் ஊரின் லைப்ரரியில் வைத்து ஆரபியைக் கண்டான் கிரி.

ஆரபியின் அன்னைக்குப் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. அதுவும் வரலாற்று நாவல்களைத் திரும்ப திரும்ப வாசிப்பார்.

அன்றும் அப்படித்தான் அவர் ஆசைப்பட்ட பார்த்தீபன் கனவை இன்னொரு முறை எடுத்துக்கொண்டு திரும்புகையில் எதிர்ப்பட்டான் கிரி.

ஏற்கனவே பிறந்தநாளின்போது வாழ்த்தியும் பதில் சொல்லாதவனின் புறக்கணிப்புத் தந்த துன்பத்தில் இருந்தவளுக்கு அவன் முகம் பார்க்கவே வெறுப்பாயிற்று. எல்லாம் இவனால். நந்தி போன்று நடுவில் நின்று அவள் வாழ்க்கையோடு விளையாடுகிறான்.

முகத்தைச் சுளித்துக்கொண்டு அவள் அவனைக் கடக்க, “ஏய் நில்லு!” என்றான் அவன்.

எரிச்சல்தான் வந்தது அவளுக்கு. காதில் விழவில்லை போன்று ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.

“நிக்கச் சொன்னா நிக்க மாட்டியா?” என்று அதட்டிக்கொண்டு வந்து நின்றான் அவன்.

“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” அவளும் அதட்டினாள்.

“என்ன பிரச்சினையோ? நீதான் பிரச்சினையே. எப்பிடி இருந்தவன் தெரியுமா அவன். அவனைக் காதலிக்கிறன் எண்டு சொல்லி அவனை அவனா இருக்க விடாமச் செய்து வச்சிருக்கிறாய்.” என்றதும் சுர்ர் என்று வந்தது அவளுக்கு.

இங்கே அவள் சுயம் கெட்டுப் பைத்தியம்போல் திரிகிறாள். இதில் அவன் அவனாக இல்லையாம்.

“சந்தோசம்! தள்ளுங்க!” என்றுவிட்டுப் போக முயன்றாள். அவன் விட வேண்டுமே.

“என்னோட கதைக்கக் கூடாது, பழக்கக் கூடாது எண்டு சொல்லியிருக்கிறாய் என்ன! உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று உறுமியவனைத் திகைப்புடன் பார்த்தாள் அவள்.

அவன் பேச வந்தது இது கிடையாது. ஆனால், அவன் எத்தனையோ முறை கேட்டும் இல்லவே இல்லை என்று சாதித்த சகாயன் மீது அவனுக்கு நம்பிக்கை வரவேயில்லை. அவள் சொல்லியிருப்பாள் என்று அசைக்க முடியாத அளவுக்கு நம்பினான். இன்று அவள் தனியாக அகப்படவும் கேட்டுவிட்டான்.

அவளின் அதிர்ந்த முகமே உண்மையைச் சொன்னது. ஆக நண்பனும் பொய் உரைத்திருக்கிறான். சினம் உச்சிக்கு ஏறிற்று.

“நானும் அவனும் எப்பிடியான ஃபிரெண்ட்ஸ் எண்டு தெரியுமா உனக்கு? அவனுக்காக நான் உயிரையும் குடுப்பன். எனக்காக அவனும் உயிரக் குடுப்பான். அப்பிடியான எங்களைப் பிரிக்கப் பாத்த உன்ர குணத்துக்கு என்ன நடந்தது எண்டு பாத்தியா? அவன் உன்னோட கதைக்கிறதையே நிப்பாட்டிட்டான்.” என்றான் எள்ளலாக.

error: Alert: Content selection is disabled!!