இணைபிரியா நிலை பெறவே 17 – 2

தான் சொன்னதையெல்லாம் இவனிடம் சொல்லியிருக்கிறான் என்பதிலேயே அவளுக்குப் பேச்சற்றுப் போயிற்று. இதில் உன்னை விட அவனுக்கு நான்தான் முக்கியம் என்று கிரி சொல்லவும், உண்மை அதுதானே என்று அவள் உள்ளமும் சேர்ந்து உரைத்ததில் இவளால் பதில் பேச முடியாமல் போயிற்று.

“வினோன்ர பிறந்தநாளுக்கு வந்து நீ அவனை அவனைப் பாத்ததையும் பாத்தனான். அவன் உன்னத் திரும்பியும் பாக்காம இருந்ததையும் பாத்தனான்.” என்று சொல்லவும் அவளால் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் போயிற்று.

அவனைப் பார்க்காமல் இருக்கையில் கூடத் தெரிவதில்லை. பார்க்கையில் தமக்குள் இருக்கிற அந்தப் பிரிவு பெரிதாய் அவளைப் போட்டு வாட்டும். அதுவும் அன்று வினோவை வெறுப்பேற்றி, விளையாடி அவன் சிரிப்பதைப் பார்த்தபோது மிகவுமே ஏங்கிப்போனாள்தான்.

அதை இவன் கவனிப்பான் என்று நினைக்கவே இல்லை. இன்று சொல்லிக்காட்டுகையில் மிகுந்த அவமானமாக உணர்ந்தவள் ஒன்றுமே சொல்லாமல் போக முயன்றாள்.

அதற்கு விடாமல், “இதுக்குத்தான் சொல்லுறது அளவுக்கதிகமா ஆடக் கூடாது எண்டு. இனியாவது அடங்கி இருக்கப் பார்!” என்றதும் அவளுக்கு நன்றாகவே சுட்டுவிட்டது.

“உங்கட இந்த வாய்க்கும் கேடுகெட்ட குணத்துக்கும்தான் அகிரா திரும்பியே பாக்காம விட்டவள். ஆனாலும் அடங்காம ஆடுற நீங்க எனக்குச் சொல்லுறீங்களா, ஆடக் கூடாது எண்டு. உங்களோட இருக்கிற வரைக்கும் வாழ்க்கைல அவர் உருப்பட மாட்டார். ரெண்டு பேரும் நாசமா போங்க! எனக்கு என்ன?” வெறுப்புடன் மொழிந்துவிட்டு வந்தவளுக்கு மனம் ஆறவே இல்லை.

அவனா நானா என்று அவள் கேட்டது தவறாக இருக்கலாம். ஆனால், அவள் சொன்னதற்குப் பின்னால் இருந்தது அவன் மீதான அக்கறையும் பாசமும். அவனானால் அதைப் போய் இவனிடம் சொல்லியிருக்கிறான்.

இனி அவள் இவன் இப்படியெல்லாம் பேசினான் என்று அவனிடம் சொல்ல முடியுமா என்ன? சொன்னாலும் நம்பவா போகிறான். வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிற்று. யாருக்கும் தெரியாமல் கண்ணீரிலேயே கரைந்தாள். என்னவோ மனமெல்லாம் புண்ணாகிப்போன நிலை. ஏனடா காதலித்தோம் என்று நினைத்து நினைத்து நொந்தாள். இப்போதெல்லாம் அடிக்கடி அவளுள் தோன்றும் எண்ணம் இதுதான்.

அவனை விட்டு வெளியே வரவும் முடியாமல், அவனோடு சுமூகமான ஒரு உறவைப் பேணவும் முடியாமல் நரகத்தை அனுபவித்தாள்.

அதன் பிறகு அவனுடன் சமாதானமாகும் முயற்சியையே கைவிட்டிருந்தாள். இன்னும் சொல்லப்போனால் அவளுக்கு அதற்குத் தைரியம் வரவேயில்லை.

*****

மூன்று நண்பிகளும் பல்கலைப் படிப்பின் கடைசி வருடத்தின் கடைசிக் காலத்தை எட்டியிருந்தார்கள். இன்னும் மூன்று மாதங்களில் படிப்பு முடிந்துவிடும். அகிராவுக்கு பிரான்ஸ் பயணம் சரிவரும் நிலைக்கு வந்திருந்தது. பரீட்சசைகளை எழுதிவிட்டுப் பறந்துவிடுவாள்.

வினோதினிக்குத் திருமணம் பேசியிருந்தனர். நவரத்தினத்தின் உற்ற நண்பர் மூலம் வந்த வரன்தான் குணால். பொருத்தம் பார்த்து, வினோ வீட்டினர் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்று சம்மந்தம் கலந்து, அவர்கள் இவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்து என்று அனைத்தும் முடிந்திருந்தன.

அத்தனையிலும் அகிராவும் ஆரபியும் வினோதினியுடன் கூடவே இருந்தனர். படிப்பு முடிந்த கையோடு திருமணம் என்கிற நிலை.

அப்போதெல்லாம் பலமுறை சகாயனைப் பார்த்திருக்கிறாள் ஆரபி. வீதிகளில், கோயில் திருவிழாக்களில் என்று பற்பல முறைகள் எதிர்ப்பட்டிருக்கிறான். பேசுவது என்ன பார்வையைக் கூட அவள் புறம் அவன் திருப்பியதில்லை.

அப்போதெல்லாம் கிரி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து சுருக்கென்று தைக்கும் அவளுக்கு. ஒரு காலம் முற்றிலுமாக ஒதுங்கிப்போனவள் அவள். விடாது துரத்தி வந்தவன் அவன். இன்று என்னதான் அவன் மீதான ஆதங்கத்தை சுமந்திருந்தாலும் மனத்தளவில் மிகவுமே தேடுகிறாள். அவன் திரும்பியும் பார்க்க மறுக்கிறான். கண்ணோரம் கசியும் விழிகளோடும், இந்த வலியோடும் வாழப் பழகியிருந்தாள் ஆரபி.

நண்பியர் இருவரும் திருமணம், குடும்பம் என்று வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்குத் தயாராகியிருந்தனர். அடிக்கடி கொழும்புப் பயணம், கணவனின் பெற்றவர்கள் வீட்டில் சென்று தங்குவது, பயணத்திற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்வது, படிப்பு என்று அகிரா இருந்தாள்.

இந்தப் பக்கம் புது நேசம், அது தரும் கிறக்கம், குணாலுடன் நேரம் செலவழிப்பது, அவர்கள் திருமணத்திற்கு திட்டமிடுவது, படிப்பு என்று இருந்த வினோதினியும் இவளைக் கவனிக்கும் நிலையில் இல்லை.

இன்னுமின்னும் தான் தனியாகிவிட்டதுபோல் உணர ஆரம்பித்தாள் ஆரபி. மனம் அளவுக்கு அதிகமாகச் சகாயனைத் தேட ஆரம்பித்தது. ஆனாலும் கடைசி நேரத்துப் பரீட்சசைகளில் கவனம் செலுத்தி நல்லபடியாகவே பல்கலைக்கழகப் படிப்பை முடித்தாள்.

அடுத்து என்ன செய்யப் போகிறாய், திருமணத்திற்குப் பார்க்கவா என்று கேட்ட பெற்றவர்களுக்கு ஒழுங்கான பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டிருந்தாள்.

*****

அன்று வினோதினியின் திருமணம். அதற்கு முதலே அகிராவுக்கு விசா கிடைத்திருந்தது. தள்ளிப்போட வழியில்லாமல் அவள் பிரான்ஸ் புறப்பட்டிருந்தாள். அபிசா கூட வினோதினியின் திருமணத்திற்கு குடும்பமாக வந்திருந்தாள்.

அவர்களின் நெருங்கிய உறவுகளில் நடந்த ஒவ்வொரு திருமணத்தின்போதும் சகாயன் ஆரபி உறவில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இன்று என்ன நடக்கும்? சமாதானமாகிவிடுவார்கள், எப்படியாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்து அவனோடு பேசிவிட வேண்டும் என்கிற ஆவலோடு என்றும்போல் அன்றும் தன்னைப் பிரத்தியேகக் கவனமெடுத்து அலங்கரித்துக்கொண்டாள் ஆரபி.

திருமணம் கோலாகலமாக நடந்தது. வசதிக்குக் குறைவில்லை. அரசியலில் முக்கிய புள்ளியின் வீட்டுத் திருமணம். கொண்டாட்டத்துக்கும் குதூகலத்துக்கும் கேட்கவா வேண்டும்?

அதுவும் அடர்ந்த கேசம், நறுக்கி விடப்பட்ட மீசை, முற்றிலுமாகத் தாடியை எடுத்ததில் பளபளக்கும் கன்னங்கள், பட்டு வேட்டி சட்டை என்று, மாப்பிள்ளைக்கே போட்டி போடும் தோற்றத்துடன் நின்ற சகாயனைக் கண்டு ஆரபிக்கு ஆழமான பாதிப்பு உண்டாயிற்று.

இவன் என்னவன் என்று நெஞ்சம் விம்மிற்று. அதே நேரம் என்னோடு கோபமாக இருக்கிறானே என்று உள்ளம் அழுதது. ஒற்றைப் பார்வை பார்க்கமாட்டானா என்று ஏங்கினாள். வந்திருந்த அனைவரையும் சிரித்த முகமாய் அவன் வரவேற்றுக் கவனிப்பதைப் பார்க்கையில் ஊவா முள்ளொன்று அவள் நெஞ்சில் குத்திக்கொண்டே இருந்தது.

அதுவும் அத்தனைக்கும் ஆட்களை நியமித்திருந்த போதிலும் இன்னும் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு அவனும் கிரியுமாக அனைத்தையும் ஓடியாடிக் கவனிப்பதைக் கண்டவளுக்குக் கிரி சொன்ன அத்தனையும் உண்மை என்றே தோன்றிற்று. அவளா அவனா என்று வந்தால் அவளுடையவன் நண்பனுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பான். கசப்பான உண்மை அவள் உள்ளத்தைச் சுட்டுக்கொண்டு இறங்கிற்று.

ஒரு முறை கூட அவள் புறம் அவன் திரும்பவே இல்லை. மறைந்து நின்றாவது அவனைப் பார்க்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை. கிரியின் வார்த்தைகள் அந்தளவில் அவள் நெஞ்சைத் தாக்கியிருந்தன.

கொழும்பிலிருந்து குடும்பமாக வந்து கலந்துகொண்டிருக்கிறாள் என்கிற மகிழ்ச்சியோடு அபிசாவோடும், அவள் வீட்டினரோடும் தேடி வந்து சிரித்த முகமாகப் பேசியவன் அவள் ஒருத்தியும் அங்கே இருக்கிறாள் என்று காட்டிக்கொள்ளக் கூட இல்ல. கரிக்கும் விழிகளைக் கட்டுப்படுத்துவதிலேயே அன்றைய பொழுது ஓடிற்று.

error: Alert: Content selection is disabled!!