இணைபிரியா நிலை பெறவே 17 – 3

அதுவும் இவர்கள் குடும்பமாகப் புகைப்படத்திற்கு நின்றுவிட்டு இறங்கி வந்தபோது, “மற்ற ரெண்டு பேருக்கும் கலியாணம் முடிஞ்சுது. இனி ஆரபிக்குத்தான் என்ன.” என்ற கலைமகளின் பேச்சில் அவன் புறம் பாயப்பார்த்த விழிகளைக் கட்டுப்படுத்துவதற்குள் படாத பாடு பட்டுப்போனாள் ஆரபி.

“ஆரபிக்குக் கலியாணத்துக்குப் பாக்கேக்க எங்களிட்டயும் ஒரு வார்த்த சொல்லுங்கோ அண்ணா.” என்று மங்கயற்கரசியின் கையைப் பற்றிக்கொண்டு செந்தில்குமரனிடம் அர்த்தமான பார்வையை வீசியபடி சொன்னார் கலைமகள்.

புரிந்தும் புரியாத இனிய குழப்பத்தில் ஆழ்ந்தனர் செந்தில்குமரன் குடும்பத்தினர். அங்கே ஆரபியும் இருந்ததில் எதையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ளவில்லை அவர்கள்.

“ஓமோம் படிப்பு முடிஞ்சுதுதானே. இனி மெல்ல மெல்லப் பாக்க ஆரம்பிக்கோணும்.” என்று சமாளித்தனர்.

அவள் வீட்டினர் புறப்பட்டனர். அன்று இரவே அபிசா திரும்பவும் குடும்பத்தோடு கொழும்பு புறப்படுகிறாள் என்பதில் மாலைக்கு மேல் அவர்களால் அங்கே இருக்க முடியவில்லை.

ஆனால், ஆரபியைத் தன்னுடன் நிற்கச் சொன்னாள் வினோதினி. தன்னுடன் தானே போராடிக் களைத்துப்போன ஆரபிக்கு அங்கு நிற்க மனமேயில்லை. அதே நேரம் அகிராவும் இல்லாத நேரத்தில் மறுக்கவும் முடியவில்லை.

அன்னை தந்தையைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“எங்களை ஏனம்மா பாக்கிறீங்க. நிண்டுபோட்டே வாங்கோ!” என்றுவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள்.

புகைப்படக்காரர் மணமக்களைப் புகைப்படம் எடுப்பதற்காக அழைத்துச் சென்றார். அவர்களுக்கு உதவியாக நின்றாள் ஆரபி. ஒரு கட்டத்துக்கு மேல் நெருக்கமான புகைப்படங்களை அவர்கள் எடுக்க ஆரம்பிக்கவும் ஆரபிக்குக் கூச்சமாயிற்று.

தான் நிற்பதால் வினோவும் கூச்சப்படுவதை அறிந்து, “நான் போறனடி. ஏதும் எண்டா கோல் பண்ணு சரியா? அங்க அன்ட்ரிக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா எண்டு கேட்டுக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு மண்டபம் நோக்கி நடந்தாள்.

அது இரண்டு மாடியில் அமைந்த மிகப்பெரிய மண்டபம். கிட்டத்தட்ட வந்தவர்கள் எல்லோரும் புறப்பட்டிருந்தார்கள். நெருங்கிய உறவுகள், நன்றாகச் சாப்பிட்டுவிட்டு ஆசுவாசமாக நாற்காலிகளைக் காற்றாடியின் கீழ் இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து கதை பேசிக்கொண்டிருப்பவர்கள் என்று ஓரளவுக்குத்தான் ஆட்கள் இருந்தார்கள்.

கலைமகளைக் கண்ணாலேயே தேடினாள். அவரை எங்கும் காணவில்லை. மேலே நிற்கிறாரோ என்று எண்ணியபடி மாடியேறி மேலே வந்தாள்.

கீழிருக்கும் மண்டபத்தின் அளவுக்கு மேலே நீண்ட பெரிய ஹோல். நாற்காலிகள், மேசைகள், சோடனைப் பொருள்கள், பாத்திரங்கள் என்று இன்னதென்றில்லாது அந்த இடம் முழுக்க பொருள்கள் நிறைந்து கிடந்தன.

அதைத் தாண்டிச் சத்தம் எதையுமே காணோம். அங்கு நிற்கவே ஒரு விதப் பயம் நெஞ்சில் ஊடுருவியது. வாசலில் நின்றே திரும்பிவிட முயன்றவள் ஒரு மூலையில் இருந்த கதவு ஒன்றைத் திறந்துகொண்டு வந்த சகாயனைக் கண்டுவிட்டு அப்படியே நின்றாள்.

தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவனையே பார்த்தபடி நின்றாள். கண்கள் எதற்கு என்றே இல்லாமல் கரித்துக்கொண்டு வந்தன. அவளைக் கொண்டதற்கான மாற்றங்கள் எதுவும் அவனிடத்தில் தென்படுகிறதா என்று பார்த்தாள்.

சிறு மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவளைக் கண்டதும் முகம் இறுகிப்போனதோ என்று ஒரு எண்ணம் அவளுக்கு. அவனும் நிற்பான் என்று எதிர்பார்த்தாள். இல்லாமல் அவளைக் கடக்கப் போகிறான் என்று தெரிந்ததும், “உங்களோட கதைக்கோணும்.” என்று தடுத்து நிறுத்தினாள்.

புருவங்களைச் சுருக்கிக் கேள்வியாகப் பார்த்தான் அவன். அந்தப் பார்வையே அவள் தொண்டையை வறளச் செய்தது. ஆனாலும், “இவ்வளவு நாளும் என்னோட கதைக்காம இருக்க உங்களால முடிஞ்சிருக்கு என்ன?” என்றாள் கமறிய குரலில்.

“நீ மட்டும் என்னோட கதைச்சுக்கொண்டா இருந்தனி?” ஒட்டாத குரலில் உடனேயே வந்தது பதில் கேள்வி.

“அது உங்கட பிறந்தநாளுக்கு…”

“எது? நாய்க்கு எலும்புத் துண்டைப் போடுற மாதிரிப் போட்டியே ஒரு வாழ்த்து. அதா?” என்றான் எள்ளலும் ஏளனமுமாக.

அவளுக்கு முகம் கன்றியது. “ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க?” என்றாள் தவிப்புடன்.

“வேற எப்பிடிக் கதைக்க?”

“உங்களோட கதைச்சுச் சமாதானம் ஆகுவம் எண்டு வந்தனான். ஆனா நீங்க?” என்றதும் அவன் முகம் சட்டென்று கோபத்தில் சிவந்து போயிற்று.

“சமாதானம்? ஒண்டரை வருசம் கழிச்சு. வாவ்! காதலச் சொல்ல ரெண்டு வருசம். சமாதானமாக ஒரு வருசம் எண்டு நல்லாத்தான் இருக்கு. இப்பிடி ஒரு காதல் தேவையா எண்டு இருக்கு எனக்கு?” என்றதும் அடிபட்ட மானாய்த் துடித்துப்போய் அவனைப் பார்த்தாள் ஆரபி.

“என்னைப் பாக்க உனக்கு எப்பிடி இருக்கு? நீ எப்ப மனமிரங்கி வந்து அருள் புரிவாய் எண்டு தட்டு ஏந்திக்கொண்டு நிக்கிற பிச்சைக்காரன் மாதிரியா?” என்றவனின் சீற்றத்தில் என்னவோ தவறு முழுக்க அவள் பக்கம்தான் என்கிற தோற்றம் அவளுக்கே வர ஆரம்பித்தது.

“சமாதானம் ஆகவே கூடாது எண்டுற முடிவில இருக்கிறீங்களா? இல்லை என்னை வெறுத்திட்டீங்களா?” அடைத்த குரலில் வினவினாள்.

“உன்ன விரும்பிக்கொண்டே இருக்கிற அளவுக்கு நீ அப்பிடி என்ன செய்தனி எண்டு சொல்லன் பாப்பம்!” என்றான் அவன்.

இதற்குள் கிரியும் இவன் வந்த அறைக்குள் இருந்து எதையோ காவிக்கொண்டு வந்தான். இவளைக் கண்டதும் முகம் கடுக்க, “என்னடா?” என்றான் சகாயனிடம்.

“ஒண்டுமில்ல. நீ கீழ போ. நான் வாறன்.” என்று அவனை அனுப்ப முயன்றான் சகாயன்.

“நான் போறது இருக்கட்டும். இஞ்ச என்ன நடக்குது?” இருவரையும் ஆராய்ச்சியாகப் பார்த்தபடி விசாரித்தான்.

அதற்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் சகாயன். அவன் மனம் கொதித்துக்கொண்டிருந்தது. சமாதானத்திற்கு வருகிறாளாம். அதுவும் எதேற்சையாக ஒரு சந்தர்ப்பம் அமைந்ததில். இல்லாவிட்டால் இன்றும் இல்லை தானே. அவளாக அவர்களின் உறவுக்காக என்ன முயற்சி போட்டாள் என்று யோசித்தால் ஒன்றுமில்லை. இதில் அவளோடு கதைக்காமல் இருந்திருக்கிறான் என்று அவனையே குற்றம் சாட்டுகிறாளாம்.

ஆரபிக்கு அங்கே கிரியும் வந்தபோதே இனிப் பேச முடியாது என்று புரிந்துபோயிற்று. ஆனால், ஆரம்பித்துவிட்ட ஒன்றை அந்தரத்தில் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. கிரியை அனுப்பேன் என்று தவிப்புடன் சகாயனைப் பார்த்தாள். அவன் அவளைப் பார்க்க வேண்டுமே.

அவள் எண்ணம் சரி என்பதுபோல், “டேய் வா, எங்களுக்கு நிறைய வேலை இருக்கு” என்று அவனை இழுத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தான் கிரி.

ஆரபி தவித்துப்போனாள். “எனக்கு அவரோட கதைக்கோணும். அவரை விட்டுட்டு நீங்க போங்க.” என்றாள் அவசரமாக.

“அத இண்டைக்குத்தான் உனக்குக் கதைக்கோணுமோ. நடந்துகொண்டிருக்கிறது அவன்ர தங்கச்சின்ர கலியாணம். அவன்ர பெர்த்டேக்கு ஒரு விஷ் இல்ல. இப்ப கதைக்கப் போறாவாம். ஏன் உன்னட்ட ஃபோன் இல்லையா? எடுத்து அவனோட கதைச்சிருக்க வேண்டியதுதானே. வந்திட்டா கதைக்கப்போறன், பாடப்போறன் எண்டுகொண்டு.” என்று சீறினான் கிரி.

அவளுக்கும் கோபம் வந்தது. எதுவாக இருந்தாலும் அதைப்பற்றிக் கதைக்க அவன் யார் என்கிற சினத்தில், “எல்லாம் உங்களால. நீங்க முதல் எனக்கும் அவருக்கும் நடுவில வராம தள்ளி நில்லுங்க!” என்று சீறினாள் ஆரபி.

“ஏய் என்ன குரலை உயத்துறாய்?” என்றுகொண்டு வந்தான் சகாயன். “இப்ப என்ன அவன் பிழையா சொல்லிட்டான் எண்டு உனக்குக் கோவம் வருது? அவன் கேட்ட மாதிரி உன்னட்ட ஃபோன் இல்லையா? இல்லை உன்னை மாதிரி நான் என்ன உன்னை ப்லொக் பண்ணி வச்சிருந்தனானா? இல்ல நீ கோல் பண்ணி நான் எடுக்காம இருந்தனானா?” என்று அவள் முகத்துக்கு நேராகவே வந்து சீறினான்.

இப்போதும் நண்பனுக்காக அவன் முன்னாலேயே தன்னிடம் கோபப்படுகிறவனை மிகுந்த வேதனையுடன் நோக்கினாள் ஆரபி. கண் முகமெல்லாம் கலங்கிச் சிவந்து போயிற்று அவளுக்கு. இப்படி நடக்காதே என்று பார்வையாலேயே இறைஞ்சினாள்.

அதை அவனாலும் பார்க்க முடியவில்லை. “இவள முதல் போகச் சொல்லு மச்சான். பாக்கவே எரிச்சல் வருது!” என்றான் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

error: Alert: Content selection is disabled!!