அவளைப் பார்க்க எரிச்சல் வருகிறதாமா? சட்டென்று கண்ணீர் கன்னத்தில் வழிந்திருந்தது. அப்படிக் கிரி முன்னால் அழுவதும் பிடிக்கவில்லை. வேகமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு விரக்தியோடு புன்னகைக்க முயன்றாள். இதழ்கள் அழுகையில் நடுங்கின.
“எரிச்சல் வருதா? என்னைப் பாக்கவா? நான் சண்டை பிடிச்சதே உங்களுக்காகத்தான் எண்டு விளங்காத உங்களுக்கு எரிச்சல் வரும்தான். இந்த முகத்தைப் பாக்கிறதுக்குத்தான் எரிக்கிற வெயிலில எத்தினையோ நாள் நிண்டனீங்க. ஆனா இண்டைக்கு…” என்றவளுக்குப் பேச வரவேயில்லை.
“இவா பெரிய இவா. இவவைப் பாக்க நிண்டியாம். தேவையாடா உனக்கு இதெல்லாம்? என்னோட இருக்கிற வரைக்கும் நீ உருப்பட மாட்டியாம் எண்டு சொன்ன இவளை விடக் குணத்திலையும் வடிவிலயும் நல்ல பெட்டையா உனக்குக் கிடைப்பாள். நீ வாடா! ” போட்டுக்கொடுக்க நினைக்கவில்லை என்றாலும் அவள் மீதிருந்த கோபத்தில் வந்துவிட்டிருந்தது கிரிக்கு.
“ஓ!” என்று இழுத்த சகாயன், கிரி இழுத்த இழுப்புக்குப் போகாமல் நின்று அவளைப் பார்த்த பார்வையில் அவளுக்கு நெஞ்சமெல்லாம் கலங்கிப்போயிற்று.
“எப்ப சொன்னவள்?” என்றான் இவளையே பார்த்தபடி.
“அண்டைக்கு ஒரு நாள் லைப்ரரில கண்டுட்டு கதைக்கப் போன நேரம்.”
“அந்தளவுக்கு எனக்குச் சுய அறிவு இல்ல. சொந்தப் புத்தியும் இல்ல. அப்பிடித்தானே? சரி உருப்படாமயே போறன். அந்த சிகரெட்டை எடு மச்சான்!” என்று இப்போதும் இவளைப் பார்த்தபடியே கிரியிடம் கையை நீட்டினான்.
ஆரபி அதிர்ந்துபோனாள். நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.
“மச்சான், ஆராவது பாத்தாலும். வேண்டாம்.” என்று கிரியே மறுத்தான்.
“நான்தான் உன்னோட சேர்ந்து உருப்படாமப் போகப்போறனே. ஆர் பாத்தா என்ன? நீ எடு.”
“மச்சான்.”
“எர்றா!” என்றவனின் அதட்டலில் சிகரெட்டை நீட்டியிருந்தான் கிரி.
இல்லை, இதை நீ செய்யக் கூடாது என்பதுபோல் கண்ணீருடன் மறுத்துத் தலையசைத்தாள் ஆரபி. ஆனால், அதற்குள் அந்தச் சிகரெட்டை மூட்டி வாயில் வைத்திருந்தான் சகாயன். உண்மையில் அவன் அந்த சிகரெட்டில் நெருப்பை மூட்டவில்லை. அவள் நெஞ்சில் மூட்டியிருந்தான். அவனைச் சுமந்துகொண்டிருந்த இதயம் கருக ஆரம்பித்தது.
“சொல்லு, என்ன கதைக்கோணும்?” அன்று போலவே இன்றும் நிதானமாகப் புகையை இழுத்து, கீழுதட்டை ஒரு பக்கமாகச் சுளித்து அதை வெளியேற்றியபடி அவன் கேட்டபோது, அவள் உள்ளத்தின் அத்தனை கனவுகளும் ஆசைகளும் அந்த நெருப்பிலே கருகிச் சாம்பலாக்குவதைக் கண்முன்னே கண்டாள் ஆரபி.
இனிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. உள்ளம் கத்தி அழுதது. அதன் பிரதிபலிப்பாய் கிரி நிற்கிறான் என்பதையும் மறந்து கண்ணீர் உகுத்தவள் கீழே இறங்க முயன்றாள்.
சகாயன் விடவில்லை. அவள் முன்னே வந்து நின்று தடுத்தபடி, “கதைக்கோணும் எண்டு சொல்லிப்போட்டு இப்பிடிக் கதைக்காம போனா எப்பிடி ஆரபி? இந்த உருப்படாதவனோட கதைக்கிறது எல்லாம் வீண் எண்டு நினைக்கிறீங்களோ?” என்றான் திரும்பவும் புகையை இழுத்துவிட்டபடி.
அந்தப் பக்கத்து சுவரில் இருந்த ஜன்னல் திறந்திருந்தாலும் அவள் நாசியையும் நெருடியது அந்தப் புகை.
“இல்ல. எனக்குக் கதைக்கிறதுக்கு ஒண்டும் இல்ல. ஒண்டுமே இல்ல. விடுங்க என்னை. நான் போகோணும்.” கண்ணீருடன் கெஞ்சினாள்.
“இனி இப்பிடித்தான் நான். உருப்படாமத்தான் போவன். ஓகேயா?” என்று கேட்டுவிட்டு அந்த ஜன்னலாலேயே சிகரெட்டை தூக்கி எறிந்தான்.
“நான் அப்பிடிச் சொன்னது உண்மை. ஏன் சொன்னனான் எண்டு கேக்கிற நிலைல நீங்க இல்ல. கோவம் கண்ணை மறைக்குது உங்களுக்கு. நான் ஒண்டும் தேடிப்போய் அவரிட்ட அப்பிடிச் சொல்லேல்ல. அவராத்தான் வந்தவர் கதைக்க.” என்றவளை வேகமாக இடையிட்டான் கிரி.
“நானா வந்தா என்னவும் கதைப்பியா நீ? அவனுக்காக உன்னட்ட சமாதானம் கதைக்கத்தான் வந்தனான். ஆனா நீ, என்ர சரியில்லாத வாய்க்குத்தான் அகிரா என்னைத் திரும்பியும் பாக்கேல்லை எண்டு சொல்லேல்ல?” என்று அதட்டினான் கிரி.
பயத்துடன் சகாயனைப் பார்த்தாள் ஆரபி. பார்வையாலேயே அவளைப் பொசுக்கிக்கொண்டிருந்தான் அவன். அவளுக்கு உதடுகள் எல்லாம் உலர்ந்துபோனது.
“அதுக்கு முதல் அவர் என்னவெல்லாம் சொன்னவர் எண்டு கேளுங்க ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.
“நான் என்ன சொன்னனான்? என்னையும் அவனையும் பிரிக்கப் பாத்தாய். அதல அவன் உன்னோடயே கதைக்காம விட்டுட்டான் எண்டு சொன்னனான். நான் என்ன பொய்யா சொன்னனான். உன்னை எல்லாம் ஒரு ஆள் எண்டு நினைச்சு அவன் விரும்பினதும் உனக்கு நினைப்பு வந்திட்டுது போல. அவன் எறிஞ்ச கல்லுல விழுந்த மாங்காய் நீ. இஞ்ச மாங்காய்க்கும் பஞ்சமில்லை, கல்லுக்கும் பஞ்சமில்ல. நட இஞ்ச இருந்து!” என்றான் ஆவேசமாக.
“சீ! நீயெல்லாம் மனுசனா? மிருகம். எல்லாம் உன்னாலதான். அவர் நிண்டா எனக்கு என்ன பயமா? இப்பவும் சொல்லுறன், உன்ர மனதுக்கும் குணத்துக்கும்தான் உனக்கு இந்த நிலைமை. இனிமேல் என்னட்ட நீ கதைச்சுக்கொண்டு வரக் கூடாது. வந்தியோ மரியாதை கெட்டுடும்!” என்று விரல் நீட்டி எச்சரிக்கவும் நிதானத்தை முற்றிலுமாக இழந்திருந்தான் சகாயன்.
“மரியாதை மரியாதை வேணும்! அண்டைக்கே உனக்குச் சொன்னனான் எல்லா! இதுல விரல் நீட்டிக் கதைக்கிறாய் என்ன? மன்னிப்புக் கேளு. கேள் மன்னிப்பு!” என்றபடி அவள் கையைப் பற்றிப் பின்னால் வளைத்தான்.
பதறிப்போனாள் ஆரபி. இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. “ஐயோ விடுங்க! என்ன செய்றீங்க!” என்று பதறித் துடித்தவளுக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. வேதனையில் விழிகள் அகல அவனையே பார்த்தாள்.
அவன் நிதானத்தை முற்றிலும் இழந்திருந்தான். அவளைக் கவனிக்கும் நிலையில் இல்லை. விடாமல் மன்னிப்பு கேட்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் அவனிடம் வாதாட முடியவில்லை. உடலிலும் தெம்பில்லை, மனத்திலும் தெம்பில்லை.
“சொறி! நான் கதைச்சது பிழைதான். இனி இப்பிடிக் கதைக்கவே மாட்டன்!” கண்ணீருடன் கிரியைப் பார்த்துச் சொன்னபிறகே விட்டான்.
கை வலிக்கிற மாதிரி அவன் பிடிக்கவில்லைதான். ஆனால், உள்ளம் முற்றிலுமாக நொறுங்கிப்போயிற்று. இனி என்னால் முடியாது என்கிற நிலைக்கு வந்திருந்தாள் ஆரபி.
“போதும்! இந்தக் காதல், இது தாற வலி, இந்த அவமானங்கள் எல்லாமே போதும். என்னால இத ஹாண்டில் பண்ணேலாம இருக்கு. நான் நினைக்கிறன், உங்களுக்கு நான் பொறுத்தம் இல்லை எண்டு. உங்கட நண்பர் சொன்ன மாதிரி என்னை விட நல்ல பெட்டை உங்களுக்குக் கிடைப்பாள். சந்தோசமா இருங்க. இந்தக் காதல இண்டையோட முடிப்பம். இனி எனக்கும் உங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல. பாய்!” கண்ணீர் கன்னத்தை நனைக்க நனைக்கச் சொல்லிவிட்டுப் படிகளில் இறங்கி ஓடி, அப்படியே மண்டபத்தை விட்டு வெளியே சென்று, ஓட்டோ ஒன்றைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டவள்தான்.
அதன் பிறகு சகாயனின் கண்ணில் படவேயில்லை.

