இப்படி ஒரு திருப்பத்தை சகாயனே எதிர்பார்க்கவில்லை. அதற்கென்று மகிழவும் முடியவில்லை. இவன் அன்னை இந்தப் பக்கம் வந்ததும் அங்கே அவள் தன் வீட்டினரிடம் மறுத்துச் சொல்லிக்கொண்டிருந்த காட்சியே பதிலைச் சொல்லிற்று.
“என்ன அண்ணா, உனக்கு ஆருவ பிடிச்சிருக்கா? நீயும் அவளும் எப்ப பாத்தாலும் முட்டிக்கொண்டு இருப்பீங்க. இது சரியா வருமா? உனக்கு ஓகேயா?” என்றாள் வினோ உண்மையான கேள்வியும் சிறு கிண்டலுமாக.
அதற்கு அவனைப் பதில் சொல்லக்கூட விடாமல், “ஆனா ஒண்டு, எதிரும் புதிருமா இருக்கிற ரெண்டு பேருக்குத்தான் நல்லா ஒத்துபோகுமாம்.” என்றவள் தலையில் பொய்யாகக் குட்டினானே தவிர்த்து எதையும் வாய் விட்டுச் சொன்னான் இல்லை.
“என்ன தம்பி, அவாவை கேட்டதில குறை ஒண்டும் இல்லையே?” அங்கே கேட்டுவிட்டு வந்து இங்கே வினவினார் கலைமகள்.
“முதல் அவள் என்ன சொல்லுறாள் எண்டு பாப்பம் அம்மா.” பிடி கொடாமல் பதில் சொன்னான்.
“அப்ப உனக்கு விருப்பம்?” இடையிட்டுச் சொன்னாள் அவன் தங்கை.
கலைமகளுக்கும் அதேதான் ஓடியது. ஆனாலும் ஆரபி வீட்டிலிருந்து எந்தப் பதிலும் வராமல் மகன் மனத்தில் எதையும் பதிக்க விரும்பாதவர், “பேசாம இருங்கோ வினோ. இதாலதான் மனதில இந்த ஆசை இருந்தாலும் இவ்வளவு நாளும் சொல்லாம இருந்தனான். ஆரபி வீட்டில முடிவு சொல்லட்டும். பிறகு பாப்பம்.” என்று முடித்தார்.
கூடவே, “ஃபிரெண்ட் எண்டு ஃபோனை போட்டு ஓம் எண்டு சொல்லு என்று அரியண்டப்படுத்தக் கூடாது. இது விளையாட்டு விசயம் இல்லை. வாழ்க்கை. விருப்பமில்லை எண்டு சொன்னா விட்டுடோணும்.” என்றும் சொன்னார் கலைமகள்.
அது சகாயனைச் சுட்டது. அவளிடம் மனத்தைச் சொல்வதற்கு முதல் எந்தளவில் அவளை நெருக்கினான் என்று இன்று நினைக்கையில் மனத்தில் பாரம் ஏறிற்று.
அதனாலேயே முதலில் கொழும்பு சென்று தமக்கையோடு தங்கியிருந்தவள் அப்படியே மட்டக்களப்பில் வேலை எடுத்துக்கொண்டு போன பிறகு, ஒரு நாள் அவளைப் பார்க்க அவள் அலுவலகத்திற்கு நேரிலேயே சென்றிருந்தான்.
ஆனால் ஆரபி இவனைச் சந்திக்க மறுத்திருந்தாள். அதுவும் அத்தனை காலமும் அவனைத் தடை செய்து வைத்திருந்ததை நீக்கி, “அண்டைக்கே எல்லாத்தையும் முடிச்சுப்போட்டுத்தான் ஊர்ல இருந்து வெளிக்கிட்டனான். இனியும் எனக்கு உங்களைப் பாக்கவோ, உங்களோட கதைக்கவோ விருப்பம் இல்லை. இதுக்கு மேலயும் என்னைத் தேடி வந்து தொந்தரவு செய்தா, எங்கட வீட்டுக்கும் எங்க இருக்கிறன் எண்டு சொல்லாம காணாமப் போயிடுவன். அதுதான் விருப்பம் எண்டா தாராளமா வந்து நில்லுங்க!” என்று கோபக்குரலில் அனுப்பியிருந்தாள் அவள்.
பதில் அனுப்பலாம் என்றால் அதற்குள் அவனை மீண்டும் தடை செய்திருந்தாள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு அங்கே அவள் அலுவலகத்திலேயே ஒரு பேப்பரை வாங்கி,
ஹாய் ஆரு,
உன்னத் தேடி வந்து வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த இந்த நிமிசம் வரைக்கும் உன்னட்ட என்ன சொல்லப்போறன், எந்த முகத்தை வச்சுக்கொண்டு மன்னிப்புக் கேக்கப்போறன், கொஞ்சம் கூட நியாயமே இல்லாத என்ர நடத்தைக்கு என்ன விளக்கம் சொல்லப்போறன் எண்டு எனக்குத் தெரியவே இல்ல. ஆனாலும் உன்னைப் பாக்கோணும், உன்னோட எப்பிடியாவது கதைக்கோணும், உன்னட்ட மன்னிப்புக் கேக்கோணும், உன்னோட சமாதானம் ஆகிடோணும் எண்டுதான் அங்க இருந்து மெனக்கெட்டு இஞ்ச வந்தனான்.
எல்லாத்தையும் முடிச்சுப்போட்டு வந்திருக்கிறதா சொல்லுறாய். என்னால அப்பிடி எதையும் முடிக்கேலாது ஆரு. காலத்துக்கும் எனக்கு நீதான். எனக்கு வாழ்க்கை எண்டு ஒண்டு அமைஞ்சா அது உன்னோட மட்டும்தான். உன்ர கோபம் ஆறி, நீ வாற வரைக்கும் வெய்ட் பண்ணிக்கொண்டு இருப்பன். முடிஞ்சா என்னை மன்னிச்சுடு. அண்டைக்கு அப்பிடி நான் நடந்திருக்கவே கூடாது. நான் வெக்கப்பட்டுத் தலை குனியிற நாள் அது.
உண்மையா சொறி. முதல் தரம் என்னை நீ சிகரெட்டோட பாத்த நேரம், இப்பிடி அவளுக்கு முன்னால நிண்டுட்டனே எண்டு வெக்கப்பட்டிருக்கிறன். அதே நான், வேணுமெண்டே உனக்கு முன்னால நிண்டு அதப் பத்தி இருக்கிறன். உன்னை நான் கேவலப்படுத்தேல்ல. என்ன நானே தரமிறக்கிக் காட்டி இருக்கிறன். அதுக்கான தண்டனையா இந்தப் பிரிவை எடுக்கிறன்.
கடவுள் சத்தியமா சொறியடி. தேவையில்லாம நிறையக் கதைச்சு, உன்னை உடம்பாலயும் மனதாலயும் நோகடிச்சு, நீ சொன்ன மாதிரியே கிரிக்கு முன்னால உன்னை விட்டுக்குடுத்து எண்டு அண்டைக்கு நான் செய்தது எதுவுமே மன்னிக்கிற மாதிரியான விசயங்கள் இல்லைதான்.
ஆனா, எப்பவுமே எங்கட காதலுக்காக, எங்கட அந்த உறவு நிலைக்கிறதுக்காக நான் மட்டுமே எல்லாத்தையும் செய்ற மாதிரியான ஒரு எண்ணம் எனக்கு எப்பவுமே இருந்திருக்கு. என்னவோ எல்லாத்துக்கும் என்னை நீ அலைய விடுறமாதிரி, உனக்கு நான் பொருட்டே இல்லையோ எண்டுற மாதிரி என்னை உணர வச்சிருக்கிறாய்.
அண்டைக்கும் என்னைப் பாக்கிற சந்தர்ப்பம் அமைஞ்சதால வந்து கதைச்சாய். இல்லாட்டி? பேசாமத்தானே இருந்திருப்பாய். அந்தளவுக்கு நான் என்ன அவளுக்கு பத்தோட பதினொண்டா எண்டுற எண்ணம் வரும்.
அதுக்காக நான் நடந்துகொண்ட முறை சரி எண்டு சொல்லேல்ல. அதுவும் கிரிக்கு முன்னால… இப்ப நான் அவனோடயும் கதைக்கிறேல்ல. ஆனா எனக்கு அவனில கோவம் இல்ல. என்னிலதான் கோவம். நான் சரியா இருந்திருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்.

