ஆனா செய்த இந்தப் பிழைகளுக்காக உன்னை விட்டுட்டுப் போயிடுவன் எண்டு மட்டும் நினைக்காத. எனக்கு நீதான். என்னோட கதை ஆரு. என்னோட சண்டை பிடி, ஏனடா இப்பிடிச் செய்தனி எண்டு சட்டையப் பிடிச்சுக் கேளு. ஆனா விலகி நிக்காத. நாங்க காதலிச்ச காலத்தை விட கதைக்காம இருந்த காலம்தான் நிறையவா இருக்கு. அந்த இடைவெளியைக் கூட நானா வந்து சரியாக்கினாத்தான் உண்டு. இல்லாட்டி நீ அப்பிடியே விட்டுடுவியா எண்டுற கேள்விதான் என்னைப் போட்டு எப்பவும் தின்னும்.
என்னால அதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியிறேல்ல. ரெண்டுபேர் சம்மந்தப்பட்ட உறவுல, அந்த உறவு நிலைக்கிறதுக்கான முயற்சில ரெண்டு பேரும்தானே இறங்கோணும். எனக்கு வாழ்க்கை முழுக்க நீ வேணும் எண்டு நினைச்சு நான் காதலை சொன்ன மாதிரி, உனக்கு காலம் முழுக்க நான் வேணும் எண்டு நினைச்சுஹ்தானே நீயும் ஓம் எண்டு சொன்னனீ. அந்தக் காதலுக்காக, நான் உனக்கு வேணும் எண்டுறதுக்காக நீ என்ன செய்திருக்கிறாய் எண்டு யோசிச்சா எதுவுமே இல்ல. என்ன நடந்தாலும், அது என்ர பக்கம் பிழையாவே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நானாத்தான் எங்கட உறவுக்காக போராடவேண்டி இருக்கு.
அந்தளவுக்கு உனக்கு நான் பொருட்டில்லையோ எண்டுற கோவம்தான் இது எல்லாத்துக்கும் அடித்தளம்.
இந்த முறையாவது நீயா என்னட்ட வா ஆரு. வந்து சண்டை பிடி. எப்பிடியடா அப்பிடி என்னட்ட நடப்பாய் எண்டு கேளு. பிடிக்கிற சண்டை கூட உனக்கு நான் வேணும் எண்டுறதை எனக்குச் சொல்ல வேணாமா?
வேற என்ன சொல்லுறது எண்டு தெரியேல்ல. நடந்த எல்லாத்துக்கும் சொறி. நீயா என்னட்ட வருவாய் எண்டுற நம்பிக்கையோட போறன். இனி நான் வர மாட்டன்.
சகாயன்
என்று எழுதி, ஒரு அன்வெலப் கவர் வாங்கி, அதில் போட்டு ஒட்டி அங்கிருந்த பெண்ணிடம் கொடுத்து அனுப்பிவிட்டு வந்துவிட்டான்.
சொன்னதுபோல் அதன் பிறகு அவன் அவளைத் தேடிக்கொண்டு போகவில்லை. இது அவள் ஊரை விட்டுப் போன முதல் ஆறு மாதங்களுக்குள் நடந்தது. அதன் பிறகான அந்த இரண்டரை வருடங்களும் அவளுக்காக காத்திருந்து காத்திருந்தே கரைந்துபோனதே தவிர அவள் வரவேயில்லை.
உண்மையிலேயே பெரும் ஏமாற்றம் அது அவனுக்கு. ஒரு விதமான வலி அவனுள் நிரந்தரமாயிற்று. புறக்கணிப்பு ஒரு எளிய மனிதனைக் கூட பலமாய்த் தாக்கும். சகாயனைப் போன்ற ஒருவனை? வெளியில் காட்டிக்கொண்டது இல்லையே தவிர்த்து தனக்குள் மொத்தமாக இறுகிப்போனான்.
அப்படியானால் நீ சொல்வதை எல்லாம் கேட்டு, உனக்கு ஏற்றாற்போல் வளைந்துகொடுத்து நான் போனால் மட்டுமேதான் நம் உறவு நிலைக்குமா? தவறு ஒன்று நடந்தால் பேசித் தீர்க்கவோ, சண்டை பிடித்துச் சமாதானம் ஆகவோ வரமாட்டாய். மொத்தமாக வெட்டிக்கொண்டு நின்றுவிடுவாள் என்றால் என்ன இது?
நாளடைவில் தான் நடந்துகொண்ட செயலின் வீரியம் குறைந்துபோய், எப்போதுமே நான் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற விடயம் அவனுள் பெரிதாக வளர ஆரம்பித்திருந்தது.
எப்போதுமே அவனைத் தூக்கி எறிவது அவளுக்கு சிரமமாகவே இருந்ததில்லையே. இந்தமுறையும் அதையேதான் செய்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவள் அவன் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை.
அவள் மறுபடியும் மட்டக்களப்புக்குப் புறப்படுவதாகச் சொன்ன நாளுக்கு முதல் நாள், நவரத்தினத்தை நேரிலேயே வந்து பார்த்தார் செந்தில்குமரன். அவள் அவனை அந்த நோக்கில் பார்த்தது இல்லையாம் என்று அவர் சொன்னபோது, கலைகள் நவரத்தினத்துக்கு என்ன சொல்வது என்று தெரியாது போயிற்று.
நண்பியின் தமையனைச் சகோதரனாகப் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதில் அப்படி நினைத்துவிட்டாள் போலும் என்று எண்ணிக்கொண்டனர். வேறு என்ன சொல்லியிருந்தாலும் பேசிப் பார்த்திருப்பார்கள். சகோதரனுக்கு ஒப்பாகப் பார்த்திருக்கிறாள் என்கிற பொருளில் அவர்களுக்கு அது வந்து சேர்ந்துவிட்டதில் சரி என்று கேட்டுக்கொள்வதைத் தவிர்த்து வேறு வழியில்லாது போயிற்று.
வினோதினிக்கு கவலைதான். ஆனால், சகோதரனாகப் பார்த்தேன் என்கிறவளிடம் அவளால் எதையும் பேச முடியாதே.
ஆனால் இதைக் கேட்ட சகாயன் உள்ளத்தில் அக்கினிதான் கொழுந்துவிட்டு எரிந்தது. வேறு எதை சொல்லியிருந்தாலும் துத்தாது என்ன என்று யோசித்திருப்பான் போலும். இது என்ன விதமான பேச்சு. தன்னை முற்றிலுமாக மறுப்பதாக அப்படி சொல்லியிருக்கிறாள் என்று புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கிரியுமே இதை எதிர்பார்க்கவில்லை. “எல்லாம் என்னால என்னடா?” என்றான் ஒரு மாதிரியான குரலில். இந்த முறையாவது நான் வாய வச்சுக்கொண்டு இருந்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் என்ர கோவத்தால நான்தான் உனக்கு பிரச்சினையா வந்து நிக்கிறன் என்ன?”
“நீயும் ஒரு காரணமே தவிர நீ மட்டுமே காரணம் இல்ல கிரி. முக்கிய காரணம் நான்தான். ஆனா…” என்றவனுக்கு இப்போதெல்லாம் தன் மனத்தின் அழுத்தங்களை நண்பனிடம் கூட பகிர முடிவதில்லை.
இந்தப் பேச்சு கிரியின் வீட்டில் வைத்துத்தான் நடந்தது. சகாயன் புறப்பட்ட பிறகும் நிறைய நேரம் இருந்த இடத்தை விட்டு கிரி அசையவேயில்லை.
சகாயன் அப்படி இல்லை என்று சொன்னாலும் இன்று அவன் அனுபவிக்கிற அத்தனை துன்பங்களுக்கும் பெரும் காரணம் தான் என்றே நம்பினான். அப்படி இருக்க அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைப்பதற்காக தானும் ஏதாவது ஒரு வகையில் முயன்று பார்க்க வேண்டும் என்று எண்ணியவன் கலைமகளைத் தனியாகப் பார்த்தது, சகாயன் ஆரபி உறவைப் பற்றி சொல்லி, இத்தனை வருடங்களும் அவள் ஊர்ப் பக்கமே வராமல் இருந்தது ஏன் என்றும் சொல்லி, தன செய்தவற்றையும் மறைக்காது அவன் சொன்னபோது கலைமகள் அதிர்வின் உச்சத்திற்கே போய்விட்டார்.

