வீட்டு வாசலுக்கு வந்ததும் வீட்டுக்குள் பைக்கை விடாமல் கேட் வாசலிலேயே நிறுத்திவிட்டுத் தங்கையைத் திரும்பிப் பார்த்தான் ஆனந்தன். இறங்கச் சொல்கிறான் போலும் என்று எண்ணி அவள் இறங்க, “நீ ஏன் அவரோட கதைக்கேல்ல?” என்றான் விசாரணைக் குரலில்.
உள்ளே ஒரு படபடப்புத் தொற்றிக்கொண்டாலும், புருவங்கள் இரண்டையும் சுருக்கி, “ஆரோட?” என்றாள் புரியாத பாவனையில்.
“சகாயன் அண்ணாவோட.”
“என்ன சொல்லுறாய்? கதைச்சனான்தானே.” என்றாள் அப்போதும் தன் நடிப்பைத் தொடர்ந்தபடி.
“இல்லையே. எங்களை விடவும் அவரை உனக்குத்தான் பழக்கம் கூட. ஆனாலும் ஒரே ஊர்க்காரன் எண்டுறமாதிரிக் கூட நீ காட்டிக்கொள்ளேல்ல. முகத்தத் திருப்பிக்கொண்டு இருந்தனி. அவர் விடமாட்டார் எண்டு தெரிஞ்ச பிறகுதான் பதில் சொன்னனி.”
அவளைச் சரியாகக் கணித்து அவன் வினவியதில் இவளுக்கு ஒருமுறை நெஞ்சுக்குள் திக்கென்றிருந்தது. “அது… நான் இஞ்ச இருக்கேக்கையே கதைக்காம விட்டுட்டனே.”
“இல்லையே. அக்கான்ர கலியாண நேரம் எல்லாம் நல்லமாதிரித்தானே இருந்தனீங்க.”
தமையனின் நினைவுக்கூர்மையில் நொந்துபோனாள் ஆரபி.
“டேய் அண்ணா! இன்னும் நான் வீட்டுக்க போய்க் களை ஆறேல்ல. ஒரு வாய்த் தேத்தண்ணி குடிக்கேல்ல. ம்மா அப்பாவைப் பாக்கேல்லை. ஆனா நீ ஒண்டுமே இல்லாத விசயத்த இப்பிடி வாசலில வச்சுக் கேட்டுக்கொண்டு இருக்கிறாய். பேச்சு வாங்காம ஓடிப்போயிடு!” என்றுவிட்டுத் தன் பயணப்பையையும் தூக்கிக்கொண்டு கேட்டை திறக்க முயன்றாள்.
அப்போதும் விடாமல் கரம் பற்றித் திரும்பவும் நிறுத்தினான் தமையன்.
“ஏதாவது பிரச்சினையா ஆரு? அதுதான் இந்தப் பக்கம் வராமயே இருந்தியா? அவரும் உன்னோட நேரடியா கதைக்கேல்ல. நீயும் என்னட்ட நேரடியாப் பதில் சொல்லாம மழுப்புற மாதிரித்தான் இருக்கு. என்ன எண்டாலும் அண்ணாட்டச் சொல்லு.”
முதலில் குறுக்கு விசாரணை செய்யும் தொனியில் விசாரித்தவன் இப்போது பாசமுள்ள தமையனாகச் சொன்னான்.
அப்படியே நின்றுவிட்டாள் ஆரபி. தமையனின் பாசத்தில் உள்ளம் கசிந்தது. இதயம் அதிகமாகத் துடித்தது. அவன் நம்பும் படியாகப் பொருத்தமாக என்ன பதில் சொல்லலாம் என்று அவசரமாகத் தேடினாள். அவள் இருந்த மனநிலைக்கு மூளை வேலை செய்யமாட்டேன் என்றது.
ஆனாலும் சமாளித்துக்கொண்டு திரும்பி, “எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறாய் அண்ணா? அவர் ஒரு ஆள் எண்டு அவருக்காக நான் ஊருக்கு வராம இருக்கிறன். போடா டேய்! அதவிட இனி அடிக்கடி வந்து போறன். அதுக்குப் பிறகாவது ஒண்டும் இல்லை எண்டு நம்பு.”என்றுவிட்டு நடந்தாள் அவள்.
அவள் திறந்துவிட்ட கேட் வாயிலாக பைக்கைக் கொண்டுவந்து வழமையாக நிறுத்துமிடத்தில் நிறுத்தி, ஹெல்மெட்டை கழற்றி என்று கைகள் வேலைகளைச் செய்தாலும் ஆனந்தன் இன்னுமே அவள் சொன்னதை முழுமையாக நம்பவில்லை.
ஒரே பாடசாலை. கூடவே சாரணியர் இயக்கத்தில் அவனோடு சேர்ந்து இவளும் இருந்ததில் அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல பழக்கம் இருந்தது. அப்படிப் பழகிய இருவர் போன்று அவர்கள் இருவரும் இப்போது பேசிக்கொள்ளவில்லை என்று அந்த நொடியில் பிடிபடாதபோதும் பயணித்து வந்த இந்த நேரத்தில் பிடிபட்டிருந்தது ஆனந்தனுக்கு.
அதைவிட, சகாயனின் தங்கை வினோதினி இவளின் உயிர்த்தோழி. அப்போதெல்லாம் அவர்கள் வீட்டிலேயேதான் இவள் இருப்பாள். சகாயனும் அவன் தகப்பனாரும் வீட்டில் நிற்கிற மனிதர்கள் இல்லை என்பதில் ஆரபி அடிக்கடி அங்குப் போவதைக் குறித்து இவர்கள் வீட்டில் பெரிய மறுப்புகள் வருவதில்லை.
அதைவிடச் சேர்ந்து படிப்பது, ஒன்றாக டியூஷன் செல்வது என்று நேரத்தை அவர்கள் இருவரும் பிரயோசனமாகவே கழிப்பதில் வீட்டினருக்குத் திருப்தியும் கூட.
அப்படியிருக்க இவ்வளவு நேரத்திற்கு வினோதினி பற்றி ஆரபி ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. கைப்பேசியில் பேசிக்கொள்கிறார்கள் என்றுகூட நினைக்க முடியாது.
இவனின் திருமணத்திற்கு அழைக்கப் போனபோது, ‘ஆரு எப்பிடி இருக்கிறாள் அண்ணா? உங்கட கலியாணத்துக்கு வராம இருக்கேலாதுதானே. வரட்டும், நல்லா முதுகிலயே நாலு போடுறன் அந்த மாட்டுக்கு. ஃபோன், மெசேஜ் ஒண்டுக்கும் பதில் போடுறேல்ல அண்ணா.’ என்று வினோதினி சொல்லியிருந்தாள்.
அது இவனுக்குகே குழப்பத்தை உண்டுபண்ணியிருந்தது. இப்போது தங்கையின் நடத்தையில் அந்தக் குழப்பம் சந்தேகமாக மாறிற்று. இங்கேதானே நிற்பாள், பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு வீட்டிற்குள் உள்ளிட்டான்.
அங்கே அம்மா, அப்பா, அக்கா, அத்தான் என்று எல்லோரும் அவளைச் சுற்றியிருந்து பேசிக்கொண்டிருக்க, கிருத்திகன் அவள் மடியில் இருந்தான்.
*****
அடுத்து வந்த நாள்களில் சகாயனைப் பற்றி அவள் யாரிடமும் விசாரிக்கும் அவசியமே இல்லாமல் ஊரே அவனைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தது. ஒரு பெண் ஸ்கூட்டியில் சென்றுகொண்டு இருக்கையில் அவள் தாலிக்கொடியைப் பறிக்கப்பார்த்த வெளியூர்க்காரர்கள் இருவரைத்தான் அன்று அவன் வீதியில் போட்டு அடித்திருக்கிறான்.
அவள் அன்னை மங்கையற்கரசி, திருமணத்திற்கான லட்டை உருண்டையாகப் பிடித்துக்கொண்டே, “சகாயன் செய்ததுதான் சரி. நாங்க வாயக் கட்டி வயித்தைக் கட்டி ஒரு நகை செய்து போட்டா, போற போக்கில வந்து பறிச்சுக்கொண்டு போவாங்களோ கேடுகெட்டவங்கள். தாலிக்கொடி எண்டேக்க எப்பிடியும் கனமானதாத்தான் இருக்கும். நகை விக்கிற விலைக்கு இவங்களிட்டப் பறி குடுத்துப்போட்டு நாங்க என்ன செய்றது?” என்று அபிசாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆரபியால் அப்படி அவன் செய்தது சரி என்று நிம்மதிக்கொள்ள முடியவில்லை. இதுதானே இவன் என்று நோகத்தான் முடிந்தது. இதே அவளின் அண்ணா ஆனந்தன் இப்படி நடந்தான் என்று அறிந்தால் இதையே சொல்லுவாரா அவளின் அன்னை? உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை என்று கேட்பார்.
ஒருவர் நமக்கு யார் என்கிற உறவின் நிலை கூட ஒரு விடயத்தைப் பார்க்கும் கோணத்தை மாற்றிவிடுகிறது போலும்.
ஆளுமை அவனுக்கு இயல்பிலேயே வந்தது. பாடசாலையில் மாணவத் தலைவன். பல்கலையில் மாணவர் ஒன்றியத் தலைவன். அங்கு நடக்கும் ஒவ்வொரு மாணவத் தேர்தலிலும் அவன் இருப்பான். அடிதடி எல்லாம் அங்குவைத்தே ஆரம்பித்துவிட்டது அவனுக்கு.


