இதில் என்ன கொடுமை என்றால் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிதலையும், நற்பண்புகளை வளர்த்தலையும் முதன்மையாகக் கொண்ட சாரணியர் இயக்கத்திற்கு இவன் தலைவன். பல நேரங்களில் அவளுக்குத் தலையைக் கொண்டுபோய்ச் சுவரில் நங்கு நங்கு என்று மோதலாமா என்று இருக்கும்.
ஆனால் என்ன, என்ன அடாவடியாக இருந்தாலும் ஒரு காரியத்தில் பதறாமல் இறங்குவதில் அவனைக் கேட்டுத்தான். அதைப் பார்த்துப் பலமுறை பிரமித்திருக்கிறாள்.
பாடசாலை, பல்கலை என்றில்லை எங்குப் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் யோசிக்கவே மாட்டான். போலீஸ் அதிகாரி ஒருவருக்கு அடிக்கப்போய் ஒரு நாள் சிறையில் கூட இருந்திருக்கிறான். அவன் தகப்பன்தான் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியில் எடுத்தார்.
ஒருமுறை கடலுக்குக் குளிக்கப்போன யாரோ ஒருவன் கடல் நீரில் அடிபட்டுப் போனதைக் கண்டுவிட்டு யோசிக்கவேயில்லை. கடலுக்குள் பாய்ந்திருந்தான். வேகா வேகமாக நீந்திப் போய் மயங்கிபோயிருந்தவனைத் தலை முடியில் பற்றி இழுத்து வந்தான்.
இன்னொரு முறை மாணவன் ஒருவனுக்கு இரத்தத்தில் ஏதோ ஒரு கிருமி, அதனால் உடனடியாக இரத்தம் மாற்றி ஏற்ற வேண்டும் என்றதும் பலபேர்களைக் கொண்டுபோய் வைத்தியசாலையில் குவித்தவன்.
இப்படி எத்தனையோ சம்பவங்கள். அதற்குச் சமமாக அடிதடி, சண்டை சச்சரவு என்று அதற்கும் எந்தக் குறையும் வைக்கமாட்டான்.
நல்ல வசதி வாய்ப்பும், அவன் தந்தை அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய உறுப்பினராக இருப்பதும், அவனுடைய இயல்பான இந்தக் குணங்களும் சேர்ந்து அவனையும் அரசியல் நோக்கித் திருப்பியிருந்தது.
இப்போது மன்னார் மாவட்டத்தின் இளைஞர் ஒன்றியத்திற்கு உபதலைவனாக இருக்கிறான் என்று கேள்வி.
ஒரு காலத்தில் அவளுக்கு இதெல்லாம் பெருமையாக இருந்திருக்கிறது. ஏன் இன்றும் அதெல்லாம் அவளுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை.
அவன்தான் அவளுக்குப் பிரச்சனை. அவனுடைய இந்த ஆளுமையும், நான் என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் குணமும், அவன் வாயும்தான் இவளுக்கு ஒத்துவருவதில்லை.
*****
ஆனந்தன் ராகினி காதல் திருமணம். ராகினி பக்கத்து ஊர்தான். படித்த பெண். மன்னார், மீனவ சங்கத்தில் பணிபுரிகிறாள். அரசாங்க உத்தியோகம், நல்ல குடும்பம் என்று குறைகள் எதுவுமில்லை.
இங்கே ஆனந்தனும் ஒரு குறை சொல்ல முடியாத ஆண். கிராஃபிக் டிசைனராக வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து வேலை பார்த்து லட்சங்களில் சம்பளம் பெறுகிறான். அதில் இரு வீட்டுக்கும் அவர்கள் காதலை மறுக்க எந்தக் காரணங்களும் இல்லாது போயிற்று.
இன்று ராகினி வீட்டினர் மகள் திருமணம் நல்லபடியாகப் பொருந்தி வந்தால் அவர்கள் தெருவோரத்துக் குட்டிப் பிள்ளையாருக்குப் பொங்கல் வைக்கிறார்களாம் என்று இவர்களையும் அழைத்திருந்தார்கள்.
தெருவோரமாகவே பிள்ளையாருக்கு முன்னால் பொங்கல் வைத்து, படைத்து, சுவாமி கும்பிட்டபிறகு அந்த வீதியில் போய் வருகிறவர்களுக்கும் பொங்கல் கொடுத்தார்கள்.
ஒரு ஐயாவுக்கு வாழை இலைத் துண்டு ஒன்றில் புக்கையைப் போட்டு, இரு கைகளாலும் நீட்டிய ஆரபியின் முதுகில் சுளீர் என்று ஒரு அடி விழுந்தது.
எதிர்பாராமல் நடந்த சம்பவத்தில் கையில் இருந்த புக்கையைக் கீழே போட்டுவிடப் பார்த்தவள், “அம்மா!” என்று அலறியபடி திரும்பினாள்.
அங்கே, பிள்ளையார் முன்னே பத்திரகாளியாக நின்றிருந்தாள் வினோதினி.
“எருமை! இப்பிடியாடி அடிப்பாய்? சுள் எண்டு இருக்கு.” என்று முதுகை வளைத்தவளுக்குப் பின் பக்கமாகக் கையைக் கொண்டுபோய் முதுகைத் தடவிக்கொடுக்கக் கூட முடியவில்லை.
“ரோட்டா போச்சு. அதால இதோட விடுறன். இல்லையோ முதுகுத் தோளை உரிச்சிருப்பன். திரும்பு!” என்று திட்டியபடியே அவளைப் பிடித்துத் திருப்பி, முதுகைத் தேய்த்துவிட்டாள் வினோதினி.
பார்த்திருந்த இரு வீட்டினர் முகத்திலும் முறுவல். “மகளின்ர பெஸ்ட் ஃபிரென்ட். அங்க எங்களுக்குப் பக்கத்துலதான் இருக்கினம். நவரத்தினம் ஐயாவ தெரியும் எல்லோ. அவரின்ர மகள்.” என்று மங்கையற்கரசி சம்மந்தி வீட்டினருக்கு அவளைக் குறித்துச் சொன்னார்.
ஒரு பக்கம் முதுகைத் தேய்த்துவிட்டாலும், “என்னத்துக்கடி இவ்வளவு நாளும் கதைக்காம இருந்தனி? எத்தின நாள் கோல் பண்ணியிருப்பன். அங்க அகிரா, ரமா எல்லாரோடையும் கதைக்கத் தெரிஞ்ச உனக்கு என்னோட கதைக்க நேரமில்லை என்ன?” என்று அவள் மூச்சுப் பிடித்துப் பொங்கிக்கொண்டிருந்தாள் வினோதினி.
“நேரம் இல்லையடி.” என்று இவள் சொல்லிமுடிக்க முதலே தடவிய கையாலேயே இன்னுமொன்று போட்டாள் வினோதினி.
“நீ தடவவே வேணாம் விடடி!” என்று நகர்ந்தவளை விடாமல் பற்றித் திரும்பவும் தேய்த்துவிட்டபடி, “இப்பவே வா வீட்டுக்கு.” என்று நின்றாள் அவள்.
“இப்ப எப்பிடியடி, அண்ணியாக்கள் நிக்கினம்.”
“அப்ப நாளைக்கு வாறியோ? உனக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு வைக்கிறன். அண்ணா நேற்றுத்தான் கருவாட்டுச் சந்தைல போய் வாங்கிக்கொண்டு வந்தவன்.”
அந்த அண்ணாதான் இத்தனைக்கும் காரணம். உள்ளே உள்ளம் இறுக, “நேரமில்ல வினு. கலியாண வேல ஓராயிரம் கிடக்கு.” என்றவள் வேகமாக அவளிடமிருந்து நகர்ந்து நின்றுகொண்டாள்.
இவளை முறைத்துவிட்டு,”அன்ட்ரி, ஒரு கொஞ்ச நேரம் எங்கட வீட்டுக்கு இவளை விடமாட்டீங்களா? இத்தின வருசமா ஊர்ப்பக்கம் வரவே இல்ல. என்னோட கதைக்கவும் இல்ல. சாப்பாட்டுக்கு வாடி எண்டு கூப்பிட்டா ஆகத்தான் லெவல் காட்டிக்கொண்டு நிக்கிறாள். விடுங்க அன்ட்ரி ப்ளீஸ். பிறகு ஹெல்ப்புக்கு நானும் வாறன்.” என்று கெஞ்சியவளிடம் மங்கையற்கரசியால் மறுக்க முடியவில்லை.
ஆனால் மகள் ஏன் இந்தளவில் மறுக்கிறாள் என்கிற யோசனை அவருக்கும். அதில், “கலியாண வேலை நிறைஞ்சு கிடைக்குத்தானம்மா…” என்று அவளிடம் இழுத்துவிட்டு, “கொஞ்ச நேரம் தானேம்மா. ஆசையா சமைக்கிறன் எண்டு சொல்லுற. போயிற்று வாங்கோவன்.” என்றார் ஆரபியிடம்.
“சரி நாளைக்கு வாறன், போ.” முதலில் அவளை இங்கிருந்து அகற்றுவோம் என்றெண்ணிச் சொன்னாள் ஆரபி.
ஆனால், வினோதினியும் இலேசுப்பட்டவள் இல்லையே. பிள்ளையார் முன்னேயே சூடம் ஏற்றி, நாளை வருகிறேன் என்று அவளைச் சத்தியம் செய்ய வைத்துவிட்டே விட்டாள்.
ஆரபிக்கு முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க பார்த்திருந்த எல்லோருக்கும் சிரிப்பு.
அப்போதும் ஸ்கூட்டியில் புறப்படுகையில், “கட்டாயம் வரோணும்!” என்று சொன்னாள்.
“வருவனடி போ!” ஆரபிக்குப் பொறுமையே போயிற்று. அதில் துரத்தினாள்.
“போ போ எண்டு துரத்திறியே எருமை, புக்கை தந்தியாடி?” என்று சீறினாள்.
நடந்த கலாட்டாவில் எல்லோரும் அதை மறந்துதான் இருந்தனர். மங்கையற்கரசியும் உதவ, அவளின் குடும்பத்தினர் எல்லோருக்கும் போதும் என்கிற வகையில் புக்கையைக் கட்டிக்கொடுத்தாள் ஆரபி.
அங்கிருந்த எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு, “கட்டாயம் வா! கருவாட்டுக் குழம்பு, மறந்திடாத.” என்றவளைக் கண்டு கடுப்பாகிப்போனாள் ஆரபி.
“கோயில்ல நிண்டு கருவாட்டுக் குழம்ப ஏலம் விடாம போடி!” என்று துரத்திவிட்டாள் ஆரபி.
நல்ல தோழி என்பதை விடவும் அருமையான தோழி அவள். இரண்டு குழந்தைகளுக்கு இன்று அன்னை. நாளைய நாளை நினைக்கையில் இப்போதே அடிவயிற்றைக் கலக்கியது ஆரபிக்கு.
அவன் நிற்காவிட்டால் நல்லது என்று நினைக்கையிலேயே அவன் நிற்க வேண்டும் என்று அவளின் வெட்கம் கெட்ட மனது எதிர்பார்த்தது.
ஆனால், அனைத்தையும் ஆட்டுவிக்கிறவன் அவனாக இருக்கையில் எப்படி நிற்காமல் போவான்?


