வினோதினியின் முகத்திருப்பல் பலமாக அவளைத் தாக்கினாலும் சகாயனையும் வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. சின்னவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.
“நீங்க நல்ல ஃபிரெண்ட் இல்லையாம். அதால அம்மா உங்களோட கோவமா இருக்கிறா ஆரு அன்ட்ரி.” என்று போட்டுடைத்தான் வினோவின் மகன்.
சட்டென்று கண்களில் கண்ணீர் சேர்ந்துபோயிற்று அவளுக்கு. தன்னை மீறி வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தவனைப் பார்த்தாள். அவன் முகத்திலும் மிகுந்த இறுக்கம். இவள் புறம் அவன் திரும்பவே இல்லை. எங்கே போகிறார்கள், ஏன் போகிறார்கள் ஒன்றுமே புரியமாட்டேன் என்றது.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “வினோ!” என்று எட்டி அவள் கரம் பற்ற முயன்றாள். அதற்கு விடாமல் தன் கரத்தை இழுத்துக்கொண்டு, “அண்ணாதான் உன்னோட கதைக்கோணும் எண்டவன்!” என்று அறிவித்தாள்.
“அப்ப நீ கதைக்க மாட்டியா?” கமறிய குரலில் வினவினாள்.
வினோதினிக்கு வார்த்தைகள் சூடாக முந்தியடித்துக்கொண்டு வந்தன. ஆனாலும் தமையனுக்காய் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அதன் பின் சின்னவனின் சத்தம் மட்டுமே அங்கிருந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலான பயணத்தின் பின், ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட மன்னார் கோட்டையின் முன்னே காரை கொண்டுபோய் நிறுத்தினான் சகாயன்.
நால்வரும் இறங்கினார்கள். மாலையாகிவிட்டதில் வெய்யில் இறங்கியிருந்தது. ஆங்காங்கே காற்று வாங்கவும் கோட்டையைப் பார்க்க வந்தவர்களும் என்று சிலர் தென்பட்டனர்.
நாலாவருமாக நடந்தனர். சின்னவனைத் தவிர்த்து பெரியவர்களால் இயல்பாக இருக்க முடியவில்லை. “வினோ, கதையடி!” என்று அவள் கரம் பற்றினாள் ஆரபி.
அவள் கரத்தை நாசுக்காக எடுத்து விட்டுவிட்டு, “நீ முதல் அண்ணாவோட கதை.” என்று சொல்லிவிட்டு மகனோடு விலகி நடந்தாள் வினோதினி.
ஆரபிக்கு அடுத்து என்ன என்று தெரியாத தடுமாற்றம்.
தமையனின் திருமண வீட்டில் வைத்துக் கலைமகள் அவளைப் பெண் கேட்பார் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கேட்ட கணத்தில் அதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
சம்மதம், சம்மதம் இல்லை என்று எந்த முடிவிலும் அவள் இல்லை. ஒரு பக்கம் அவனுக்காய் ஏங்கி அழுத அதே மனம், இத்தனைக்குப் பிறகும் உனக்கு அவன் வேண்டுமா என்று கேட்டுக்கொண்டிருந்தது. முழு மனதாக சம்மதிக்கவும் முடியவில்லை. முழு மனதாக மறுக்கவும் முடியவில்லை.
அந்த தடுமாற்றத்தில்தான் மண்டபத்தில் வைத்தே இதில் தனக்கு விருப்பமில்லை என்று சொன்னாள். காரணம் கேட்ட அன்னையிடம் அந்த நேரத்துப் பதற்றம் அவனைத் தான் அப்படிப் பார்க்கவில்லை என்று சொல்ல வைத்திருந்தது.
அது அவள் பெற்றவர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியே. அதில், அவசரப்படாமல் ஆறுதலாக யோசிக்கச் சொல்லியிருந்தார்கள். முக்கியமாக அவள் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கையைத் தந்திருந்தார்கள்.
அந்த நொடியில் மனம் ஆசுவாசமாகியிருந்தாலும் அவளுக்குள் ஒரு தவிப்பு நிரந்தரமாகத் தங்கியே போயிற்று.
அவன் நடத்தைகள் ஒவ்வொன்றும் நினைத்துப் பார்க்கிற ஒவ்வொரு பொழுதிலும் அவளைக் காயப்படுத்தாமல் இல்லை. அதே நேரத்தில் மறுத்துவிட்டோமே, கடைசியாகச் சேர்வதற்கு இருந்த ஒற்றை வழியையும் அடைத்துவிட்டோமோ என்று மருகிக்கொண்டிருந்தாள்
இப்படி இருக்கையில்தான் ஆனந்தனின் திருமணப் பரபரப்பு ஓரளவிற்கு ஓய்ந்த நிலையில் நேற்று இரவு அவளின் மொத்தக் குடும்பமும் ஒன்றாக இருந்து அவளை அழைத்து வினவினார்கள்.
அப்போதும் அவளிடம் தெளிவான ஒரு பதில் இல்லை. கூடவே அன்று அவனை அப்படிப் பார்க்கவில்லை என்றுவிட்டு எப்படி மாற்றிச் சொல்வாள்? முழு மனதாய் அவனை மணப்பதற்குச் சம்மதம் சொல்லவும் முடியவில்லை. அதில் முடிவில் மாற்றமில்லை என்றுவிட்டாள்.
இதோ இப்போது அவன் முன்னே நிக்கிறாள். ஏன் அழைத்தான், என்ன பேசப்போகிறான், திரும்பவும் ஒரு சண்டையா என்று என்னவெல்லாமோ மனத்தினுள் ஓடிற்று. இதில் வினோ பேசியவை, அவள் கோபம், அவளின் முகத்திருப்பல் என்று ஆரபி ஒரு நிலையில் இல்லை.
சகாயனுக்கும் எதுவுமே இலகுவாக இல்லை. அவன் வாழ்வில் வந்த முதல் காதல். அவன் ஆசைப்பட்ட முதல் பெண். நேற்று வரையில் அவள் தனக்குத்தான் என்பதைத் தானடி இன்னொரு யோசனைக்கு அவன் சென்றதே இல்லை. ஆனால் இன்று…
எத்தனையோ முறை பார்த்த கோட்டை மீது பார்வையைப் பதித்திருந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
பயம் பதற்றம் என்று எல்லாம் கலந்துகட்டியிருந்ததில் எப்போதும்போல் அவளின் மூக்கு நுனியிலும் மேலுதட்டிலும் வியர்வையின் அரும்புகள் முளைக்கட்டியிருந்தன. அவளும் புறம் கையால் அடிக்கடி துடைத்துவிட்டுக்கொண்டிருந்தாள்.
சட்டென்று அவளிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டவானுக்குத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள திரும்பவும் நேரம் தேவையாய் இருந்தது.
“கதைக்கோணும் எண்டு சொன்னீங்க.” என்றது அவளின் உள்ளே போன குரல்.
ஆம் என்பதுபோல் மேலும் கீழுமாய்ச் சிறிதாகத் தலையை அசைத்துவிட்டு, “அங்க உன்ர ஒபீஸ்ல ஒரு பிள்ளையிட்ட கடிதம் ஒண்டு குடுத்துவிட்டிருந்தனான். அது உனக்குக் கிடைச்சதா?” என்றான்.
முகம் இன்னுமே சிவந்து கலங்க கீழுதட்டைப் பற்றியபடி நின்றாள் ஆரபி.
“கிடைக்கேல்லையா?”
“இல்ல, கிடைச்சது.”
“ஓ!” என்றவனுக்கு அடுத்துப் பேச வரவேயில்லை. சுருக்கென்று ஆள் நெஞ்சில் எதுவோ பாய்ந்தது. அவளுக்குக் கிடைக்கவில்லை போலும், கிடைத்திருந்தால் எப்படியும் வந்திருப்பாள் என்று கடைசியாக இருந்த அவன் நம்பிக்கையும் முற்று முழுதாக நசுங்கிப் போயிற்று. நடுவில் இருப்பது ஒரு மாதம், இரண்டு மாத இடைவெளி இல்லை. மூன்று வருடங்கள். அதற்கு அவன் தகுதியானவன்தான். அவன் செய்தவற்றுக்கு இது தேவைதான். ஆனால், இந்த மூன்று வருடங்களின் பின்னுமா அவளுக்கு அவன் வேண்டாம்?
“வாசிச்சியா?” இந்த முறையாவது எந்தத் குளறுபடிகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த நிதானத்தைக் காட்டினான் அவன்.
அவனைப் பாராமல் மேலும் கீழுமாகத் தலையை அசைத்தாள் ஆரபி.

