இணைபிரியா நிலை பெறவே 21 – 2

இந்தமுறை அந்த ஓ கூட அவனுக்கு வரவில்லை. இமைகளைச் சிமிட்டவும் மறந்து அவளையே பார்த்தான். அவள் முடிவில் அவள் தெளிவாகத்தான் இருந்திருக்கிறாள். அவன்தான்… சட்டென்று திரும்பி சில அடிகள் தூரத்திற்கு நடந்துபோய் அவளுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றான். மனத்தில் கடற்கரையில் வீசும் அலைகளுக்கு ஒப்பான போராட்டம். இதயத்தை யாரோ சுவாசிக்க விடாமல் இறுக்கிப் பிடித்தனர். பலமுறை காற்றை வாயால் ஊதி ஊதி வெளியேற்றித் தன் மனத்தின் அழுத்தத்தைக் குறைத்துவிட்டுத் திரும்பி வந்தான்.

எந்த உணர்வுகளுக்கும் இந்தமுறை ஆட்பட்டுவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன், “எங்கட வீட்டில இருந்து கலியாணத்துக்குக் கேட்டதுக்கு என்னை அப்பிடிக் பாக்கேல்லை எண்டு சொன்னியாம்.” என்றான் அவளையே பார்த்தபடி.

அவள் முகம் சட்டென்று கன்றிப்போயிற்று. அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. “அது அண்டைக்கு மண்டபத்தில வச்சு அம்மா கேட்டதும்…”

“சோ நீ சொன்னது உண்மை!” என்றதும் வேகமாக நிமிர்ந்தாள் ஆரபி.

“வேற என்ன சொல்லியிருக்கோணும் எண்டு நினைக்கிறீங்க?” என்றாள் வேகமாக.

“இப்ப வரைக்கும் என்ர உணர்வுகளுக்கு உங்களிட்ட ஒரு மதிப்பு இல்ல. நான் என்ன சொல்ல வாறன், அதை ஏன் சொல்லுறன் எண்டு யோசிக்கிற அளவுக்கெல்லாம் உங்களுக்குப் பொறுமையும் இல்ல. அவர் உங்களுக்கு உயிர் நண்பரா இருக்கலாம். எனக்குப் பிறத்தி ஆம்பிளை. அவருக்கு முன்னால என்னை கதைக்க விடாம செய்து, சிகரெட்டை பத்தி, கையை முறுக்கி, மன்னிப்பைக் கேக்க வச்சீங்களே, அந்த நிமிசம் என்ர மனம் என்ன பாடு பட்டிருக்கும் எண்டு தெரியுமா உங்களுக்கு? நீங்க சிகரெட்டை பத்தேல்ல சகாயன். என்ர இதயத்தை எரிச்சீங்க. உங்களில எனக்கு இருந்த நம்பிக்கையச் சுட்டீங்க. நான் என்ன பிழை செய்தனான் எண்டு அண்டைக்கு மன்னிப்புக் கேட்டனான்? உங்கட கைய உதறிப்போட்டுப் போறதுக்கு வலு இல்லாம, இன்னுமின்னும் அங்க நிண்டு அவமானப்படத் தைரியம் இல்லாம மன்னிப்பு கேட்டனான். அது எந்தளவுக்கு என்னைப் பாதிச்சிருக்கும் எண்டு உங்களுக்கு விளங்குமா எண்டு கூட எனக்குத் தெரியேல்ல.” என்றவள் பேச்சில் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு தன்னைச் சமாளிக்க முயன்றான் சகாயன்.

அவன் வாழ்வில் வந்தே இருக்கக் கூடாத ஒரு நாள் அது. நியாயமாகச் சொல்ல அவனிடம் சின்னதாகக் கூட எதுவும் இல்லை. “அதுக்குத்தான் மன்னிப்புக் கேட்டேனே ஆரபி. இப்பவும் சொல்லுறன், அப்பிடி நான் நடந்தே இருக்கக் கூடாது. அந்த நேரம் உன்னில நிறைய மனத்தாங்கல் இருந்தது. அது தந்த கோபத்தில அப்பிடி நடந்தாலும் அது சரியே இல்ல. இப்பவும் கேக்கிறன், உண்மையா சொறி.” என்றான் அவள் கண்களையே பார்த்து.

விரக்தியாய் உதட்டோரம் வளைய, “இந்த மன்னிப்புக்கு எந்த அர்த்தமும் இல்ல. நீங்க மாறவும் இல்ல. மாறியிருந்தா அண்டைக்குக் கோயில்ல வச்சு என்ர விரலை தட்டி விட்டிருக்க மாட்டீங்க.” என்றவளிடம் இல்லை என்று மறுத்துத் தலையசைத்தான்.

“இல்ல. அது அப்பிடி இல்ல. உனக்கும் அவனுக்கும் எப்பவும் ஒத்துப்போனதே இல்ல. நான் பாக்கேக்க நீ விரல் நீட்டி அவனை பேசிக்கொண்டு இருந்தனி. அப்பிடி நீ விரல் நீட்டிக் கதைச்சு, அந்தக் கோவத்துல அவன் உன்னைப் பிழையா கதைச்சு, திரும்ப உங்களுக்க சண்டை வரவேண்டாம் எண்டுதான் உன்ர கையத் தட்டிவிட்டனான். ஏற்கனவே நான் செய்த பெரிய பிழையால் உன்னை அது ஆழமா பாதிச்சிட்டுது. நடந்தது இதுதான்.” என்று விளக்கினான்.

அவன் சொன்ன விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதுபோல் முகம் திருப்பி நின்றாள் அவள்.

“அந்தக் கடிதம் உன்னட்ட ஒன்றுமே சொல்லேல்லையா ஆரபி?” அவள் முகத்தையே பார்த்து வினவினான் சகாயன்.

“ஏன் சொல்லாம? சொன்னதுதான். அதை ஏற்றுக்கொள்ள எனக்குத்தான் விருப்பம் இல்லை.” என்றாள் அவள் கோபமாக.

“ஓ!” என்றான் அவன் வேறு பேசாமல்.

அதுவே அவளுள் ஒரு சினத்தைக் கிளறிவிட்டது.

“என்ன ஓ? நீங்க எறிஞ்ச கல்லுல விழுந்த மாங்காய் நான். வேற மாங்காயில உங்கட கல்லு பட்டிருந்தா அந்த மாங்காய் விழுந்திருக்கும் என்ன? எனக்கும் உங்களுக்கும் இடையில கவர்ச்சியும் ஈர்ப்பும் இருந்ததே தவிர அன்பு இருந்த மாதிரி எந்த அடையாளமும் இல்ல சகாயன். அன்பு இப்பிடி எல்லாம் செய்யாது. இன்னொருத்தருக்கு முன்னால கேவலப்படுத்தாது. விட்டுக் கொடுக்காது. தன்ர துணையா நினைக்கிற ஒருத்திய நோகடிச்சுப் பாக்காது.” என்றபோது கோபத்தையும் மீறிக்கொண்டு கண்ணீர் வழிந்தது அவள் கன்னத்தில்.

அந்தக் கோபத்தோடே வேக வேகமாய் முகத்தைத் துடைத்தாள். அப்போதும் கண்ணீர் பெருகிற்று.

“இந்தக் கண்ணீர் வேற சொல்லுதே ஆரபி.” என்றான் அவன்.

“அது என்ர நம்பிக்கை தோத்துப்போன வலி!” என்றாள் மனத்தை மறைக்காமல். “நான் உங்களிட்ட மனதை இழந்தவள். உங்களப் பிடிச்சு ஆசையா நேசிச்சவள். என்ர முதல் காதல் நீங்க. அது அநியாயமா உடைஞ்சுபோன கவலை இன்னும் என்ர மனதில இருக்கு. அந்த வலின்ர வெளிப்பாடுதான் இந்தக் கண்ணீர்.” என்றாள் இன்னும் கண்ணீர் வடித்தபடி.

இமைக்காமல் அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டுப் பார்வையை அகற்றிக்கொண்டான். அவன் தொண்டையும் ஏறி இறங்கிற்று. தான் உண்டாக்கிய காயம் இன்னும் ஆறாமலேயே அவளுள் இருப்பது மிக நன்றாகவே புரிந்தது.

“தவறான இடத்தில மனதைப் பறிகொடுத்த பாவத்துக்கு இதையெல்லாம் நான் அனுபவிக்கோணும் போல.” என்றதும் வேகமாகத் திரும்பி அவளை பார்த்தான் சகாயன். அவன் விழிகள் அவளை வெறித்தன.

“சில நேரங்களில மனதுக்கு வலிச்சாலும் எதிர்காலத்துக்கு இதுதான் நல்லது எண்டு சில முடிவுகளை வாழ்க்கைல எடுப்போம். அப்பிடியான ஒரு முடிவுதான் நீங்க வேணாம் எண்டு நான் நினைக்கிறது. உங்களுக்கு நானோ எனக்கு நீங்களோ பொருத்தமே இல்ல. அதனாலதான் அம்மா அப்பாட்ட அப்பிடிச் சொன்னனான்.” என்று முடித்தவளையே இமைக்காது பார்த்திருந்தான் சகாயன்.

அவள் கண்ணீரும் ஒரு நிலைக்கு வந்திருந்தது. மூன்று வருடங்களாக மனத்திலே சுமந்திருந்த கோபம், ஆற்றாமை, அழுகை, ஆத்திரம் எல்லாவற்றையும் எந்த வடிக்கட்டலும் இல்லாமல் உரியவனிடமே கொட்டிவிட்டதில் மிகுந்த ஆசுவாசமாக உணர்ந்தாள்.

கண் முகமெல்லாம் துடைத்துக்கொண்டு அவள் நிமிர்ந்தபோது, “நான் செய்தது மகா பிழை எண்டு அண்டைக்கு நீ போன கொஞ்ச நேரத்திலேயே எனக்குத் தெரியும் ஆரபி. இண்டு வரைக்கும் ஏன்டா அப்பிடி எல்லாம் நடந்தாய் எண்டு என்னை நானே திட்டுற ஒரு நாள் அது. அந்த நாளை மறந்து நான் நித்திரை கொண்ட நாள்கள் சரியான குறைவு. பிள்ளையையும் செய்துபோட்டு, நீ வேணாம் எண்டு சொல்லிப்போட்டு போய்ட்டாய் எண்டு பேசாம இருக்கிறதா எண்டுதான் உன்னைத் தேடி மட்டக்களப்பு வரைக்கும் வந்தனான். நீ வந்து பாக்கிறதுக்கு கூட ரெடியா இல்லை. ஆனாலும் உன்ர கோபத்தில இருந்த நியாயம் விளங்கினது. அதாலதான் நீயா கோபம் ஆறி வரும் வரைக்கும் உன்னை தொந்தரவு செய்யக்கூடாது எண்டு இந்த மூண்டு வருசமும் பாத்துக்கொண்டு இருந்தனான். ஆனா, இனியும் இந்த உறவை இழுத்துப்பிடிக்க நினைக்கிறதில, அல்லது எப்பிடியாவது ஓட்ட வச்சிடோணும் எண்டு நினைக்கிறதில அர்த்தம் இல்லை எண்டு இப்ப விளங்குது. அதுவும் இப்ப நீ என்னை அப்பிடிப் பாக்கேல்லை எண்டு சொன்ன பிறகும் அந்த உறவுக்காகப் போராடுறது எண்டுறது…” என்றவன் கூடவே கூடாது என்பதுபோல் எங்கோ பார்த்துக்கொண்டு மறுப்பாய்த் தலையை அசைத்தான்.

சொல்லாதே சொல்லாதே என்று இதயம் கிடந்து கதறியது. ஆனாலும் ஒரு பிடிவாதத்துடன் திரும்பி, “அண்டைக்கு இந்த உறவு எங்களுக்க வேண்டாம் எண்டு நீ சொன்னாய். இண்டைக்கு நானும் சொல்லுறன். நீ சொன்னதுதான் சரி. இத இதோட விடுவம். நான் உனக்குப் பொருத்தமே இல்லைதான்.” என்றான்.

அவள் விழிகளில் இருந்து பொங்கி வழிந்த கண்ணீரையே பார்த்தபடி, “உன்னை நெருக்கி, காதலிக்க வச்சு, அதுக்குப் பிறகும் தந்த காயங்களுக்கு எல்லாத்துக்கும் சொறி ஆரபி. உன்ர இந்தக் கண்ணீர், இத்தின காலத்து மன உளைச்சல் எல்லாத்துக்குமே நான் மட்டும்தான் காரணம். முடிஞ்சா என்னை மன்னிச்சிடு.” என்று சொன்னவனையே ஒருவித அதிர்வுடன் பார்த்திருந்தாள் ஆரபி.

error: Alert: Content selection is disabled!!