ஆனாலும் அவள் அழுத்திருக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது குணாலுக்கு. அவளைப் பார்த்துவிட்டு மனைவியைக் கேள்வியாக ஏறிட்டான்.
அவனிடம் ஒன்றும் சொல்லாமல், “தம்பியையும் கூட்டிக்கொண்டு போய் எல்லாருக்கும் குடிக்க ஏதாவது வாங்கிக்கொண்டு வாங்கோ குணா.” என்று அவனை அனுப்பிவிட்டாள் ஆரபி.
அவர்கள் மறைந்ததும், “இவ்வளவு பெரிய முடிவுக்குப் போகத்தான் வேணுமா ஆரு?” என்று மென்மையாய் வினவினாள் வினோ.
ஆரபிக்கு கண்ணீர் பெருகி வழிந்தது.
“அண்ணாவும் இந்த முடிவில சந்தோசமா இருக்கிற மாதிரித் தெரியேல்ல.”
“அவருக்கு என்னை விட அவரின்ர நண்பன்தான் முக்கியம்.” சினத்துடன் சொன்னாள் ஆரபி.
“இப்பிடிக் கதைக்கிறது பிழை இல்லையா ஆரு?”
“அப்ப அப்பிடி நடக்கிற அவர் சரியாடி?”
“நீ போன பிறகு கிரி அண்ணாவோட அண்ணா கதைக்கிறதையே விட்டுட்டான். ஏன் எண்டு எவ்வளவு கேட்டும் ரெண்டுபேரும் வாயத் திறக்கவே இல்ல.”
“போதும் போதும் எண்டுற அளவுக்கு என்னை நோகடிச்சுப்போட்டு அவே ரெண்டுபேரும் கதைச்சா என்ன, கதைக்காம விட்டா என்ன?”
“அண்ணா உன்னட்ட மன்னிப்பு கேக்கேல்லையா?தன்னிலதான் பிழை எண்டு என்னட்ட சொன்னாரே.”
“மன்னிப்பு கேட்டா சரியாடி? இப்பவும் ரெண்டுபேரும் அப்பிடியேதான் இருக்கினம்.”
“அப்ப என்ன செய்தா நீ மன்னிப்பாய் எண்டு சொல்லு?”
அவளுக்குத் தெரியவில்லை. அதே நேரத்தில் மனம் ஆறவும் மாட்டேன் என்றது.
“நாளைக்கு உனக்கும் அண்ணாக்கும் கலியாணம் நடக்குது எண்டு வை. அப்ப நான் வந்து உனக்கு ஆரபி முக்கியமா, நான் முக்கியமா எண்டு அண்ணாட்ட கேக்கலாமா ஆரு?” நிதானமாக வினவினாள் வினோ.
திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள் ஆரபி.
“இல்ல உன்னட்ட வந்து என்ர அண்ணா முக்கியமா, நான் முக்கியமா எண்டு கேட்டா என்ன சொல்லுவாய்? இல்ல அண்ணா வந்து உன்னட்ட என்னோட கதைக்காத எண்டு சொன்னா கதைக்காம விட்டுடுவியா?”
“அந்தளவுக்கு நீ ஒண்டும் மோசமானவள் இல்லையே.”
“அதே மாதிரி அண்ணாக்கு கிரி அண்ணா மோசமானவர் இல்ல.”
“எங்களுக்க சண்டை போடுறவர் உனக்கு நல்லவரா?” ஆத்திரத்துடன் வினவினாள்.
“இன்னொருத்தரால உங்களுக்க சண்டை வாற அளவுக்கு நடக்கிறது நீயும் அண்ணாவும்!” அவளும் பட்டென்று சொன்னாள்.
அவள் முகம் கறுத்துப்போனது. “உனக்கு சொன்னா விளங்காது வினோ. அந்தந்த வலி அனுபவிக்கிறவேக்கு மட்டும்தான் அது எப்பிடியான வலி எண்டு தெரியும். உன்ர அண்ணா எனக்கு என்னவெல்லாம் செய்தவர் எண்டு என்னால உன்னட்ட சொல்லவும் முடியேல்ல. ஆனா நிறையச் செய்திட்டார்.” என்று அழுதாள்.
இதே வார்த்தைகளை அவள் தமையனும் சொன்னானே. “உங்களுக்குத்தான் பிரேக்கப் ஆயிட்டுதே. இன்னும் ஏன் என்ர அண்ணாக்காக நீ பாக்கிறாய்? சொல்லு, அப்பிடி என்ன எல்லாம் செய்தவன்? கிரி அண்ணாக்கு முன்னால கைய மடக்கி மன்னிப்புக் கேக்க சொன்ன வரைக்கும் கிரி அண்ணா சொன்னவர். வேற என்ன நடந்தது?”
அப்போதும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருப்பதிலேயே தமையன் செய்த தவறுகளை கடந்து வரவும் இயலாமல், அவனை மறந்து முற்றிலுமாக வெளியே போகவும் முடியாமல் அல்லாடுகிறாள் என்று புரிந்தது. மெல்லிய பரிதாபம் அவள் மீது உண்டாயிற்று.
இதற்குள் குணால் எல்லோருக்கும் தேநீரும் வடையும் வாங்கி வந்தான். பெண்களிடம் அவர்களுக்கானதைக் கொடுத்துவிட்டு, சூழ்நிலை புரிந்தவனாகத் தன்னுடையதோடு மகனையும் அழைத்துக்கொண்டு விலகி நடந்தான்.
இருவருக்குமே அந்தத் தேநீர் தேவையாக இருந்ததில் மௌனமாகவே அருந்தி முடித்தனர்.
இதற்குள் ‘குணால் வந்திட்டாரா’ என்று கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தான் சகாயன். தோழிகள் இருவரும் எதிரெதிரில் தரையில் அமர்ந்திருக்க, வினோவின் மடியில் கிடந்த கைப்பேசியில் ‘அண்ணா’ என்று விழுந்ததைக் கண்டே ஆரபிக்கு விழிகள் மீண்டும் கரிக்கும் உணர்வு.
அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, “ஓம் அண்ணா. இவர் வந்திட்டார். நாங்க இன்னும் கோட்டைலதான் நிக்கிறம். வெளிக்கிட்டுடுவம்.” என்று வாயால் சொல்லி அனுப்பிவிட்டாள் வினோ.
முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்கும் தோழியைப் பார்த்தாள். தற்போதைய அவளின் மனநிலைக்கு புரிய வைக்க முயல்வதைக் காட்டிலும் அவளாகப் புரிந்துகொள்ளட்டும் என்று விடுவதுதான் சரி என்று தோன்றிற்று.
“அப்ப பிரேக்கப் உறுதியான முடிவுதானா?” என்று வினவினாள்.
பதில் சொல்லாமல் கண்ணீர் உகுத்தாள் ஆரபி.
அந்தக் கண்ணீர் வேறு சொன்னது வினவிற்கு.
ஒரு நெடிய மூச்சை வெளியேற்றிவிட்டு, “உண்மையா எனக்கு என்ன சொல்ல எண்டு தெரியேல்ல ஆரு. அப்பிடியே நான் என்ன சொன்னாலும் உனக்கு நான் என்ர அண்ணாக்காகக் கதைக்கிற மாதிரி இருக்கும். இல்ல நானும் எனக்கே தெரியாம என்ர அண்ணாக்காக உன்னட்ட வாதாடுறேனோ தெரியா. ரெத்த பாசம் எண்டுறது வேற. பிழையே செய்திருந்தாலும் ஈஸியா விட்டுக் குடுக்காது. ஆனா… என்று நிறுத்திவிட்டு ஆரபியைப் பார்த்தாள்.
இன்னுமே கண்ணீரை அடக்கியபடி அமர்ந்திருந்தாள் அவள்.
அவள் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்தபடி, “டாக்சிக்கான உறவு ஒண்டுக்க இருந்து நாங்க வெளில வந்தா அப்பாடி எண்டு பெருமூச்சு விட்டு ஆசுவாசமா இருக்கிற மாதிரி இருக்கோணும். என்னவோ இவ்வளவு காலமும் உன்னைக் கட்டி வச்சிருந்த எல்லாத்தில இருந்தும் விடுபட்டுச் சுதந்திரமா வானத்தில பறக்கிற அந்த ஃபீல் உனக்குக் கிடைக்கோணும். இண்டைக்கு இரவுக்கு நிம்மதியா நித்திரை கொள்ளலாம் எண்டமாதிரி இருக்கோணும். அது இல்லாம உன்ர மனம் கிடந்து அழுதாலோ, என்னவோ உடம்பில இருந்து ஒரு பாகத்தையே வெட்டிக் குடுத்துப்போட்டு வந்த மாதிரி வலிச்சாலோ மிச்சம் சொச்சமா உன்ர சந்தோசம் அங்க இருக்கு எண்டு அர்த்தம்.” என்றவள் பேச்சில் கரகரவென்று மீண்டும் கண்ணீர் கொட்டிற்று அவளுக்கு.
“நிதானமா யோசி. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உனக்காக நிப்பன். எனக்கு உன்னில இருந்த கோவம், நான் அவருக்கு தங்கச்சியா இருந்தாலும் உன்ர ஃபிரெண்ட். உனக்கு துணையா இருந்திருக்க மாட்டனா, கிரி அண்ணாவோட கதைச்சிருக்க மாட்டனா, வெளில சொல்லாத எண்டா சொல்லாம இருந்திருக்க மாட்டனா? என்ன செய்திருக்க மாட்டன் எண்டு நீ எனக்குச் சொல்லேல்ல எண்டுறதுதான். அந்தளவுக்கு ஒரு நம்பிக்கையை உனக்கு நான் தரேல்லையா?” என்றவள் கேள்விகளுக்கு ஆரபியிடம் பதில் இல்லாது போயிற்று.
என்னதான் உயிர்த்தோழியாக இருந்தாலும் உன் அண்ணாவை நேசிக்கிறேன் என்று சொல்வது அத்தனை இலக்கு இல்லையே.
“சாதாரணமா காதலை மறைக்கிறது கூட வேற ஆரு. அதே பிரச்சினைக்கு மேல பிரச்சினையா போய்க்கொண்டு இருக்கு எண்டு சொன்னா நீ ஆராவது ஒரு ஆளின்ர துணைய நாடி இருக்கோணும். என்னட்ட சொல்லாட்டியும் அகிராட்டயாவது சொல்லியிருக்கலாம். என்ன செய்யலாம் எண்டு கேட்டிருக்கலாம். நம்பிக்கையான ஒருத்தரிட்ட ஆலோசனை கேக்கிறது பிழையே இல்ல. எல்லாத்தையும் மூடி மறச்சு மூடி மறச்சு எங்க வந்து நிக்கிறாய் எண்டு விளங்குதா உனக்கு? ஒருத்தரிட்டயும் ஒண்டையும் சொல்லாம உனக்குள்ளேயே வச்சிருந்ததாலதான் உனக்கு இவ்வளவு அழுத்தம். மூண்டு வருஷமாகியும் அதுல இருந்து வெளில வரேலாம நீ நிக்கிறதுக்கும் இதுதான் காரணம். மனம் விட்டுக் கதைச்சிருந்தா மனதில பாரம் குறைஞ்சிருக்கும். தெளிஞ்சிருப்பாய். நீயே சரியான முடிவை எடுத்தும் இருப்பாய்.” என்று அவள் சொன்னபோது அகிராவோடாவது இதைப்பற்றிக் கதைத்திருக்கலாமோ என்று இப்போது நினைத்தாள் ஆரபி.
“இப்பிடி சின்னதும் பெருசுமா கோபங்களக் காவிக்கொண்டு திரிஞ்சா வாழ்க்கையை வாழவே ஏலாம போயிடும் ஆரு. பட்ட காயங்களை நினைச்சு நினைச்சே வாழ வேண்டிய காலத்தை விட்டுடுவோம். நாளைக்கு மட்டக்களப்புக்குப் போன பிறகு நிதானமா யோசி. உனக்கு என்ன வேணும் எண்டு யோசி. எது இருந்தா, இல்ல ஆரோட இருந்தா நீ சந்தோசமா இருப்பாய் எண்டு பார். அண்ணா செய்த பிழைகளை மன்னிச்சோ மறந்தோ வெளில வரவே ஏலாதா எண்டு யோசி. வரலாம் எண்டா வந்து சொல்லு. அண்ணாவோட நான் கதைக்கிறன். இல்ல, இந்த உறவு இனியும் காயத்தையும் வலியையும் மட்டும்தான் தரும் எண்டு நினைச்சா முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். ஆரம்ப காலத்துக்கு வலிச்சாலும் பிறகு நீ ஓகே ஆகிடுவாய். சரியா?” என்றவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் உயிரையே உலுக்குவதுபோல் என்னவோ செய்தன ஆரபியை.
“இன்னும் மாற்றவே முடியாத அளவுக்கு எதுவும் மாறேல்ல ஆரு. அதால அழாத. ஆனா இனியும் எதுவும் மாறாம இருக்கும் எண்டு மட்டும் நினைக்காத. இவ்வளவு காலமும் அண்ணா கலியாணம் வேண்டாம் எண்டு மட்டும்தான் சொல்லிக்கொண்டு இருந்தவன். இப்ப எங்கட வீட்டில எல்லாருக்கும் எல்லாம் தெரியும். அண்ணாவக் கடைசி முடிவச் சொல்லச் சொல்லி அப்பா சொல்லியிருக்கிறார். அண்ணா என்ன சொல்லுறானோ அத வச்சு அடுத்தது என்ன எண்டு அப்பா கட்டாயம் பாப்பார். வேணுமெண்டா மூண்டு மாதமோ ஆறு மாதமோ அண்ணாக்கு டைம் குடுப்பாரே தவிர அண்ணாவை தனியா இருக்க விடமாட்டார். சோ காலம் கடக்கிறதுக்கு முதல் உன்ர முடிவை சொல்லிடு.” என்றவள் அதற்குமேல் அவளிடம் அதை பற்றிப் பேசவில்லை.
ஆறுதலாகவும் அமைதியாகவும் அவள் யோசிக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.

