இணைபிரியா நிலை பெறவே 23 – 1

ஒரேயொரு நாள். அவன் வாழ்வில் வந்தே இருக்கக் கூடாத அந்த நாள். அன்று ஒரு கணம் கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததற்கான தண்டனையை மூன்று வருடங்கள் கடந்தும் அனுபவிக்கிறான்.

அவளின் இதயத்தை எரித்தானாமே. அவனுக்கு இப்போது அவனையே எரிக்க வேண்டும் போலிருந்தது. அன்பு மென்மையானது என்று யாரோ ஒரு மடையான்தான் சொல்லியிருக்க வேண்டும். அதைப் போன்று வன்மையானது எதுவுமே இல்லை என்பான் சகாயன்.

அவனுக்கும் அவளுக்குமிடையில் இருந்தது கவர்ச்சியும் ஈர்ப்புமாம். அன்பு இல்லையாம். இருந்திருந்தால் அவன் இப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டானாம். அவன் உதட்டோரம் கசப்பான ஒரு முறுவல்.

அவள் மேல் அவனுக்கிருந்த அளவுக்கதிகமான அன்புதான் அவளிடத்தில் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளை வைத்து, அது நிறைவேறாமல் போன கோபத்தில் வெடித்திருக்கிறது என்று அவளிடம் யார் சொல்வது?

அத்தனையும் முடிந்துவிட்டது. காலத்துக்கும் நீதான் என்று சொன்ன அவனே அவன் வாயால் சொல்லிவிட்டு வந்துவிட்டான். ஆனால் உள்ளம் கிடந்து அழுதுகொண்டே இருக்கிறதே என்ன செய்வான்?

“நான் போய் மன்னிப்புக் கேக்கவா? என்னாலதானே எல்லாம்.” இப்போதெல்லாம் அவனையும் தவிர்த்துவிட்டுத் தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் நண்பனைத் தேடி வந்து வினவினான் கிரி.

நிறுத்திவைத்திருந்த அவன் பைக்கின் மீதே, தலைக்குக் கீழே கைகளைக் கொடுத்து மல்லாந்து படுத்திருந்தவன் விழிகளைத் திறக்காமலேயே, “எல்லாமே முடிஞ்சுது கிரி. திரும்பவும் எதையாவது ஆரம்பிச்சு வைக்காத!” என்றான் வெறுமையான குரலில்.

கிரியைச் சுருக்கென்று தைத்தது அவன் வார்த்தைகள்.

“அப்பிடி எப்பிடி மச்சான் விடுறது?”

அவள் விட்டுவிட்டாளே. தவறான இடத்தில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டாளாம். சட்டென்று தலையை உலுக்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தவன், அவனையே பார்த்திருந்த கிரியைக் கவனத்தில் கொள்ளாமல் பைக்கில் புறப்பட்டிருந்தான்.

ஆரபி மட்டக்களப்புக்குப் புறப்பட்டுச் சென்று ஒரு வாரம் முடிந்திருந்தது. அன்று வீடு வந்தவனைக் கலைமகள் கேள்வியோடு ஏறிட்டார். எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான் அவன். சற்று நேரத்தில் வீடு வந்த வினோதினிதான் அனைத்தையும் சொன்னாள். கலைமகளுக்குக் கவலையாயிற்று.

ஆரபியோடு தான் பேசிப் பார்க்கட்டுமா என்று கேட்டுப்பார்த்தார். சகாயன் மறுத்துவிட்டான். நவரத்தினத்துக்கும் மகனை எண்ணிக் கவலைதான். அப்படி என்ன பிடிவாதம் என்று ஆரபி மீது மெல்லிய அதிருப்தியும்.

அவரும் பெண்ணைப் பெற்றவர். அவர் காதுக்கு வந்த வரையில் மகன் செய்தது அவளுக்குப் பெரும் தவறு என்று புரியாமல் இல்லை. ஆனால், மூன்று வருடங்கள் கடந்தும் அதையே பிடித்துக்கொண்டு நிற்பதை ஏற்க முடியவில்லை.

தவறுகள் விட்டு, அதிலிருந்து பாடம் கற்று வாழ்வதுதானே வாழ்க்கை. அவருக்கு இதை இப்படியே விடும் எண்ணமில்லை. அதே நேரத்தில் அவசரப்படவும் விருப்பமில்லை. கொஞ்ச நாள்கள் போன பிறகு அவனோடு பேசுவதாகக் கலைமகளிடம் சொன்னார்.

*****
அவள் பணிபுரியும் அலுவலகத்தின் சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்திருந்தாள் ஆரபி. அவள் முன்னே ஆடை படர்ந்துவிட்ட தேநீர்க் கோப்பை. பார்வை எங்கோ வெறித்திருந்தது. ஊரிலிருந்து வந்த தினம்தொட்டு இப்படித்தான் இருக்கிறாள்.

அத்தனை காலமும் சுமந்து திரிந்த அவன் மீதான கோபங்கள் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை. என்னை வேண்டாம் என்றுவிட்டானா என்பதிலேயே நின்றாள்.

இல்லை நீதான் அவனை உதறினாய். உனக்கு அவன் பொறுத்தமில்லை என்றாய். அதை ஈர்ப்பு என்றாய். அதெல்லாம் உண்மையானால் வினோ சொன்னது போன்று அவள் உள்ளம் ஆசுவாசமாகியிருக்க வேண்டாமா?

பெரும் தளை ஒன்றிலிருந்து விடுபட்ட உணர்வோடு உற்சாகமாய் அவள் சுற்றித் திரிந்திருக்க வேண்டாமா? இங்கே அப்படி எதையும் காணோமே.

சதா உள்ளம் அழுதுகொண்டே இருந்தது. பார்க்கும் வேலையில் ஈடுபாடில்லை. சுற்றுப்புறத்தில் கவனமில்லை. உணவில்லை, உறக்கமில்லை. மனம் விட்டு யாரிடமும் பேச முடியவில்லை. பழக முடியவில்லை. பைத்தியமாகிவிடுவோமோ என்கிற அளவில் பயந்தாள்.

error: Alert: Content selection is disabled!!