வைத்த அலாரத்தை நிறுத்திவிட்டுத் தலையணையைக் கட்டிக்கொண்டு புரண்டுகொண்டிருந்தாள் ஆரபி. பல வருடக் காதலர்கள் அவர்கள். ஆனால், அவனோடு தனியாகச் செலவிட்ட பொழுதுகள் என்றால் ஒரு முறை இரயில் பயணம், அப்படியே குட்டியாக ஒரு கார் பயணம்.
அப்போது கூட அந்தத் தனிமையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் ஒருவர் மற்றவர் மீது சுமந்திருந்த அதிருப்தியும் ஆதங்கமும் தடையாக நின்றிருந்தன. அப்படிப் பார்க்கையில் மனம் ஒன்றிய தனிமைப் பொழுது என்பது நேற்றைய சில மணி நேரங்கள்தான்.
அந்தச் சில மணி நேரங்களில் அவள் கண்டது அவனின் இன்னொரு பரிமாணத்தை. அதட்டலும் உருட்டலுமாக மட்டுமே பார்த்த ஒருவனின் மிக மிக மென்மையான அந்தப் பக்கம் இப்போதும் அவளுக்கு ஆச்சரியமூட்டிற்று.
முதல் தனிமை, தடுமாறிப்போயிருந்த அவர்கள் நிலை, அதனால் உண்டான படபடப்பில் தவறுகள் ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்த அவளை அணைத்து, ஆறுதல் படுத்தி அவன் தந்த நம்பிக்கை, அவனை இன்னுமின்னும் பிடிக்க வைத்திருந்தது.
இந்தப் பாதுகாப்பைத்தானே ஒரு பெண் தான் நம்பும் ஆணிடம் எதிர்பார்ப்பது?
அதன் பிறகு அவன் கைகளுக்குள் இருக்கிறோமே என்கிற பயமே அவளுக்கு எழவில்லை. நிறையப் பேசினார்கள். அவன் தன் கோபதாபங்களை, அவளிடம் வைத்த எதிர்பார்ப்புகளை எல்லாம் மனம்விட்டுச் சொன்னான்.
கூடவே அவளையும் பேச வைத்தான். தன் தவறுகளைத் திரும்பவும் ஒப்புக்கொண்டான். புரிதலின் பற்றாக்குறையும், மனம் விட்டுப் பேசாததாலும் ஒருவர் மற்றவரைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தனர். அதனால் ஆதங்கம் கொண்டு, அதைத் தீர்க்க வழியில்லாமல், அது கோபமாக உருமாறி, வெடித்து, வேதனைப்பட்டு, பிரிந்து என்று நிறைய நடந்திருப்பது அப்போதுதான் இருவருக்குமே மிகத் தெளிவாகப் புரிந்தது.
கிரி பேசிய பேச்சுகளுக்கும், அன்று அவன் மோசமாக நடந்ததற்கும் சேர்த்து அவளிடம் நன்றாக அடியும் வாங்கிக்கொண்டான். அதற்குப் பதிலாக அவளிடமிருந்து எண்ணிக்கையில்லா முத்தங்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டது வேறு கதை.
அந்த நினைவில் உதடு கடித்தவளின் உள்ளத்தில் இப்போதும் பட்டாம் பூச்சி படபடக்கும் உணர்வு. மீசைக்கடியில் ஒளிந்திருக்கும் சின்ன சிரிப்புடன் அவன் பார்க்கும் ஒற்றைப் பார்வை போதுமாயிற்று அவளைப் பெண்ணாய் உணர வைக்க. காலையில் வருவதாகச் சொல்லியிருந்தான். அந்த நினைவு வந்ததும் எழுந்து காலைக்கடன்களை முடித்து, குளித்து, உடைமாற்றி முடிக்கையில் வந்து கதவைத் தட்டினான் அவன்.
பளீரென்று மலர்ந்த முகத்துடன் ஓடிப்போய்த் திறந்தாள். அவள் முகத்தில் இருந்த வெளிச்சம், அவன் வரவில் அவள் மகிழ்ந்து நிற்கும் அளவைச் சொல்லிற்று. விரிந்த முறுவலை உதட்டுக்குள் ஒளித்துக்கொண்டு ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளைச் சீண்டினான்.
இலேசாகக் கன்னங்கள் கதகதத்தாலும் அவளும் விடுவதாக இல்லை. “பாவாடை சட்டைல வருவீங்க எண்டு பாத்தன்.” என்றாள் கண்களில் குறும்பு மின்ன.
“இப்ப என்ன? போட்டிருக்கிறதக் கழட்டோணுமா உனக்கு?” ஒற்றைக் கையில் அவர்களுக்கான காலை உணவுப் பை இருந்ததில் மற்றக் கையால் அவள் இடை வளைத்து உச்சியில் இதழ் பதித்துவிட்டுக் கேட்டான் அவன்.
“நீங்க செய்தாலும் செய்வீங்க!” என்றவள் அவன் வாங்கி வந்த தோசை, சம்பலை இரண்டு தட்டுகளில் போட்டு எடுத்துவந்தாள்.
ஒரு நாற்காலி மட்டுமே இருப்பதில் இருவருமே அவள் நைட்டியை கட்டிலில் விரித்துவிட்டு அதில் ஏறி அமர்ந்து சாப்பிட்டார்கள். தோசையோடு சம்பலை அள்ளி ஒரு வாய் அவள் புறமாக நீட்டினான் அவன். ஒரு கணம் அதிர்ந்தாலும் விழிகள் மகிழ்ச்சியில் மின்ன வாயைத் திறந்து வாங்கிக்கொண்டாள்.
“எனக்கு?” என்று கேட்டு வாங்கியவன் தோசையை விடவும் அவள் விரல்களைத்தான் அதிகமாக உண்டு அவளைச் சிவக்க வைத்தான்.
நேரமானது. அவள் அலுவலகத்துக்கும் அவன் புதுக்குடியிருப்புக்கும் புறப்பட வேண்டும். இருவருக்கும் அந்தப் பிரிவு பிடிக்கவேயில்லை. பிரிந்தே வாழ்ந்துவிட்டார்கள். திரும்பவும் ஒருமுறை என்றால்?
ஒன்றுமே சொல்லாமல் இருவரும் தம் பைகளை எடுத்துக்கொண்டு கதவுவரை வந்தார்கள். கதவில் கையை வைத்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். என்ன நினைத்தானோ தவிப்புடன் நின்றிருந்தவளை இழுத்துக் கண்டபாட்டுக்கு அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.
ஆரபியால் அவனைப் பிரியவே முடியவில்லை. அழுதது எல்லாம் போதாதா? அதுவும் நேற்றிலிருந்து தன் சுவாசத்தாலும் நேசத்தாலும் அவன் நிறைத்து வைத்திருக்கும் இந்த அறையில் இனி அவள் தனியாக இருப்பதை நினைக்கவே விழிகளில் நீர் திரண்டது.
அவள் கண்களைத் துடைத்து விட்டுவிட்டு, “பிரிஞ்சிருந்தது போதும் ஆரு. கெதியில நீ இந்த வேலைய விடவேண்டி இருக்கும். அங்க வந்து வேலை செய். சிம்பிளா, எப்ப அடுத்ததா நல்ல நாள் வருதோ அப்ப கலியாணத்தை வைப்பம். ஓகேதானே உனக்கு?” என்று வினவினான்.
“எனக்கு இப்பவே உங்களோடயே வரோணும் மாதிரி இருக்கு.” கரகரத்த குரலில் சொன்னவளை ஒரு கணம் பார்த்துவிட்டு இழுத்துத் தன் மார்பில் சேர்த்துக்கொண்டான் சகாயன்.
வேறு வழியில்லை. கடைசியாக என்று எண்ணிக்கொண்டு இருவருமே அந்தப் பிரிவை ஏற்கத் தயாராகினர். அவளைக் கொண்டுவந்து அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டான் சகாயன்.
அவளுக்கு உள்ளே செல்லவே மனமில்லை. முதல் முதல் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் குழந்தை அன்னையின் கையைப் பற்றிக்கொண்டு சிணுங்குவது போலவே, அவன் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு அங்கேயே நின்றாள் ஆரபி. அவளால் அவன் விழிகளைச் சந்திக்கவும் இயலவில்லை. அழுது விடும் நிலையில் இருந்தாள்.
அவள் படுகிற பாட்டைப் பார்க்கையில் பேசாமல் அவளையும் கையோடு கூட்டிக்கொண்டே போய்விடலாமா என்று இருந்தது அவனுக்கு. கூடவே இந்த மூன்று வருடங்களும் மிகுந்த பிடிவாதத்தோடு அவன் பக்கமே வராமல் இருந்துவிட்டு இப்போது முகத்தைச் சுருக்கிக்கொண்டு நிற்கிறவளைப் பார்க்கச் சின்ன முறுவல் உண்டாயிற்று.
“உன்னத் தனியா கூட்டிக்கொண்டு போய் வெளு வெளு எண்டு வெளுக்கோணுமடி. போனமுறை நான் வந்த நேரம் சமாதானமாகியிருக்க இப்ப உன்ர கைல ஒண்டு என்ர கைல ஒண்டு எண்டு ரெண்டு பிள்ளைகள் இருந்திருக்கும். அதைச் செய்யாம விட்டுப்போட்டு இப்ப நிண்டு அழுறாய் என்ன?” என்று அதட்டினான்.
அவளுக்கு இருந்த சோகம் மறந்து முகத்தில் புன்னகை அரும்பிற்று. மூன்று வருடங்களுக்குள் இரண்டு பிள்ளைகள் கேட்கிறதாம் அவனுக்கு. விட்டால் வருடத்திற்கு ஒன்று இறக்குவான் போலும். சிரிப்பு முட்டிக்கொண்டு வரவும், “கவனமாக போகோணும் சகாயன். அப்பப்ப மெசேஜ் அனுப்புங்க. பாத்துக்கொண்டே இருப்பன்.” என்றவளை முறைத்தான் அவன்.
“அதுக்கு நீ முதல் என்னை ரிலீஸ் பண்ணோணும்!”
எழுந்த சிரிப்பை உதட்டைக் கடித்து அடக்கியபடி அவள் கைப்பேசியை எடுக்க, “அது நான் செய்ய வேண்டிய வேலை.” என்றான் அவன்.
அவன் மீதான தடையை அகற்றுவதில் கவனமாக இருந்தவள் விழிகளை மாத்திரம் உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தாள். குறும்புடன் இன்னுமே கடிபட்டபடியிருந்த அவள் கீழுதட்டைக் கண்ணால் காட்டினான் அவன்.
அவள் விழிகள் அகன்றே போயின. வெளியிடத்தில் நிற்கிறோம் என்பதையும் மறந்து என்ன பேச்சு இது? அவன் கையில் பிடித்துக் கிள்ளிவிட்டாள் ஆரபி. கண்ணைச் சிமிட்டிவிட்டுச் சத்தமில்லாமல் நகைத்தான் அவன்.
களையும் கம்பீரமுமாக சிரிப்பில் மலர்ந்திருந்த அவன் முகத்தில் அவள் விழிகள் ஒருமுறை படிந்து விலகிற்று.
“ஒய்!” என்றான் அவன்.
தன்னைக் கண்டுகொண்டான் என்று புரிந்துவிட்டதில் அவள் திரும்பவே இல்லை.
“பிடிச்சிருக்காடி?” இலேசாக அவள் புறமாய்ச் சரிந்து, தன் ஆழ்ந்த குரலில் சத்தத்தை உயர்த்தாமல் அவன் கேட்ட விதத்தில் அவள் முகம் சிவந்துபோயிற்று.
“வெளிக்கிடுங்கோ! எனக்கும் நேரமாகுது!” அவனைப் பாராமல் சொல்லிக்கொண்டு அவள் நகர அவன் தடுக்கவில்லை. சின்ன புன்னகையோடு, “கவனமா இரு. முடிஞ்சா இண்டைக்கே வேலைய விடுறதுக்கான அலுவலப் பார் ஆரு. எதுக்காகவும் நாளைக் கடத்த எனக்கு விருப்பம் இல்லை.” என்று சொன்னான் அவன்.
அவளுக்கும் அப்படித்தானே. சரி என்று சொன்னாள். சிறு தலையாட்டலுடன் புறப்பட்டவனின் பைக் கண்ணுக்கு மறையும் வரை நின்று பார்த்துவிட்டு, மனம் கனக்க அலுவலகம் நோக்கி நடந்தாள் ஆரபி.

