கிரியின் தந்தை ஒரு குடும்பத்தை மேடை வரை அழைத்துவந்து புகைப்படத்திற்கு நிற்க விட்டார். அவர்களின் உறவுக்காரர் போலும் என்று நினைத்தாலும் ஆரபிக்கு அந்தப் பெண்ணை எங்கோ பார்த்த நினைவு. இருந்த பூரிப்பான மனநிலையில் ஆழ்ந்து யோசித்து, யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களின் திருமண வாழ்த்தை அவள் இன்முகமாகப் பெற்றுக்கொண்ட பிறகு, “அக்கா, நான் சிவன்யா. என்னைத் தெரியாதா உங்களுக்கு?” என்று கேட்டாள் அந்தப் பெண்.
துறுதுறு என்று மிக நன்றாக இருந்தாள். நல்ல அழகியும். “எங்கயோ பாத்த முகமா இருக்கு. எங்க எண்டுதான் தெரியேல்ல.” சின்ன சங்கடத்துடன் ஆரபி சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, சின்னவளை இடுப்பில் வைத்துக்கொண்டு குடுகுடு என்று மேடையேறி வந்தாள் வினோதினி.
“ஆரு, இவா எங்கட கம்பஸ் ஜூனியர். உனக்கு நினைவு இல்லையா? நாங்க ராக் பண்ணி இருக்கிறம். மாங்காத் தோட்டம் வச்சிருக்கினம் எண்டு பத்துக் கிலோ மாங்காய்ச் சம்பல் போட்டுக்கொண்டு வரச் சொன்னமே. இவாதான் அவா.” என்றதும் சட்டென்று பிடித்தாள் ஆரபி.
“அண்டைக்கு வந்திருந்து ஒரே அழுகையம்மா. கம்பஸுக்கே போகமாட்டன் எண்டு சொல்லிப்போட்டா. கடைசில அயலட்டைச் சனம் எல்லாருமா சேந்து, சம்பல் செய்து குடுத்துவிட்டனாங்க.” என்று சிவன்யாவின் அன்னை சொல்லவும் இவர்களுக்கு அவர் முகம் பார்க்கவே முடியவில்லை.
பின்னே அந்த மங்காய்ச் சம்பலை சிவன்யா வகுப்பினருக்கே விற்றுக் காசாக்கி, அந்த வார்த்தையே ஜெகஜோதியாகக் கொண்டாடியிருந்தார்களே.
“சொறி அன்ட்ரி. அந்த நேரம் சும்மா ஃபன் எண்டு செய்தது.” என்று சங்கடத்துடன் மன்னிப்பை வேண்டினாள் ஆரபி.
“அதுல என்னம்மா இருக்கு? இனித்தான் நாங்க எல்லாரும் ஒண்டுக்க ஒண்டாகப் போறமே.” என்று நல்லபடியாகப் பேசிவிட்டு இறங்கிச் சென்றார்கள் அவர்கள்.
“சொந்தமா?” பக்கத்தில் நின்ற அண்ணன் தங்கை இருவரையும் பார்த்து வினவினாள் ஆரபி.
“சொந்தம் இல்லையடி. ஆனா அங்க பார்.” என்று வினோ காட்டிய திசையில் பார்த்தாள் ஆரபி.
அங்கே இறங்கிப்போகும் அந்தப் பெண்ணையே கிரி பார்ப்பதும், பார்த்தும் பாராததும்போல் அவள் அவனைக் கடப்பதையும் கண்டு, வாயில் கையை வைக்காத குறையாகப் பார்த்தாள் ஆரபி.
“மிஸ்ட்டர் நரியாருக்கு அவாவத்தான் பேசி இருக்கு. உன்ர கலியாண வீட்டில வச்சு மாப்பிள்ளையைப் பொம்பிளையும் பொம்பிளைய மாப்பிள்ளையும் பாத்திருக்கினம்.” என்று செய்தி சொன்னாள் ஆரபி.
“உண்மையாவா?” நம்ப முடியாமல் கணவனிடம் வினவினாள் ஆரபி.
“ம் முற்றாகி இருக்கு. எப்பிடியும் அடுத்த ஆறு மாதத்துக்க கலியாணம் நடந்திடும்.” என்றதும், ஓ என்று இழுத்த ஆரபியின் விழிகள் பளபளப்புடன் கிரியைத் தொட்டு விலகின.
ஆரபிக்குச் சீதனமாகக் கொடுத்த வீட்டில்தான் அவர்கள் வாழ்க்கை ஆரம்பமாக இருந்தது. அவள் பெரிய பிள்ளையாகிய நேரம் அவளுக்கென்று செந்தில்குமரன் வாங்கிப்போட்ட காணி அது. பின்நாள்களில் ஆனந்தனும் கைகொடுக்க போன வருடம்தான் அந்த வீட்டைக் கட்டி முடித்திருந்தார்கள்.
இப்போது அவசரம் அவசரமாக மிச்சம் சொச்சமாக இருந்த வேலைகளையும் முடித்து, தேவையான அத்தனை தளபாடங்களையும் வாங்கிப்போட்டிருந்தார் செந்தில்குமரன்.
இரு வீட்டுக்குமான இரவுணவும் அங்கேதான் நடந்தது. நேரமானது. புதுமணத் தம்பதியருக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டு எல்லோரும் புறப்பட்டார்கள்.
வினோ கண்ணால் சிரித்தே ஆரபியைச் சீண்டினாள்.
“எரும, மானத்த வாங்காமப் போடி!” என்று அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் ஆரபி. அப்போதும் விடாமல், “என்ர அண்ணா பாவமடி. பாத்துப் பதமா கவனி!” என்று இவள் காதுக்குள் கிசுகிசுத்துவிட்டுத்தான் போனாள்.
எல்லோர் முகத்திலும் முறுவல். அதனோடே புறப்பட்டிருந்தனர். சகாயனும் அவர்களைக் கவனிக்காமல் இல்லை. இன்றைய நாளில் நெருங்கிய நட்புகள் எப்படி எல்லாம் சீண்டும் என்று அவனுக்கும் தெரியுமே. கிரியும் அவனை ஒருவழியாக்கி இருந்தான்.
இந்த வினோ சும்மா இருந்திருந்தால் கூட ஓரளவிற்குச் சமாளித்திருப்பாள் ஆரபி. அவள் சீண்டிவிட்டுவிட்டுப் போனதில் சகாயனை எதிர்கொள்வதை நினைக்கவே அவளுக்குப் படபடத்தது.
அவன் கதவடைத்துவிட்டு உள்ளே வந்தபோது அவள் அறைக்குள் ஒளிந்திருந்தாள். அவன் முகத்தில் விரிந்த சிரிப்பு. ஆர்வமும் ஆசையும் எந்தளவில் இருந்ததோ அந்தளவில் அவனுக்குள்ளும் மெல்லிய கூச்சமும் வெட்கமும் வியாப்பிக்காமல் இல்லை.
அறைக்குள் வந்தும் கதவடைத்தான். இதயம் படபடக்கத் திரும்பி அவனைப் பார்த்தாள் ஆரபி.
சில்மிஷத்தோடு அவளிடம் சிரிக்கும் அவன் கண்களை எதிர்கொள்ள இயலவில்லை. அதுவும் அன்றைய நாளுக்கென்று அணிந்திருந்த தடிமனான செயின் கழுத்தை ஒட்டிக் கிடக்க, சாதாரணமாக ஒரு ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் இருந்தான். அவள் ஒரு பாவாடை சட்டை.
இவள் முகச் சிவப்பைக் கண்டுவிட்டு,
‘இன்று முதல் இரவு
நீ என் இளமைக்கு உணவு’
என்கிற பாடலை அவன் சீட்டி அடிக்க ஆரம்பித்தான்.
உதட்டில் மலரத் துடித்த முறுவலை அடக்கியபடி பார்வையைத் தழைத்தாள். பயமா, படபடப்பா, வெட்கமா, இல்லை ஆர்வமா சொல்லத் தெரியவில்லை. அவன் பின்னிருந்து அணைத்தபோது அவள் தேகம் நடுங்கிற்று.
இப்போது அவன் பயந்துபோனான். அவளைத் திருப்பித் தன்னைப் பார்க்க வைத்து, “அடிப்பாவி! அண்டைக்குப் பயந்ததில ஒரு அர்த்தம் இருக்கு. இண்டைக்கும் பயந்து என்னை ஏமாத்திப்போடாத!” என்று பதறிக்கொண்டு சொல்லவும் பக்கென்று சிரித்திருந்தாள் ஆரபி.
மனம் காதலில் கனிந்துபோயிற்று. அவனுக்குள் இருக்கும் துடிப்பு அவளுக்குள்ளும் உண்டே. என்ன, காணப்போகும் புது உலகம் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் கலந்த படபடப்பு அவளுள்.
அவன் முகத்தையே பார்த்தவள் கைகள் தானாகவே அவன் கழுத்தில் மாலையாகின. அவன் புருவங்களை உயர்த்தினான். அவனுக்குள் அவள் செயலில் உற்சாகம் பொங்கிற்று. “ஆரும்மா!” வியப்பும் ஆவலுமாக அவன் கரங்கள் அவள் இடையை வளைத்தன.
அவள் விழிகளில் இலேசான கலங்கள். “மொத்தமா உடைஞ்சுபோயிருந்தனான் சகாயன். இனி நீங்க எனக்கு இல்லையோ எண்டு நினைச்ச நேரம்தான் நீங்க எனக்கு எவ்வளவு முக்கியமானவர் எண்டு விளங்கினது. அவ்வளவு காலமும் பெருசா தெரிஞ்ச கோபதாபம் எல்லாம் ஒண்டுமே இல்லை எண்டுறமாதிரி ஆயிற்றுது. விட்டுட்டியே அவரை விட்டுட்டியே எண்டு மனம் அழுதது சகாயன்.” என்று கலங்கிவிட்ட விழிகளோடு அவள் சொல்லவும் அவனும் நெகிழ்ந்துபோனான்.
அவளைத் தன் மார்புடன் சேர்த்தணைத்து, “ஆரும்மா. அப்பிடி எப்பிடியடி விடுவன்? பிறகு நான் வாழுறேல்லையா?” என்று அவள் முகம் பார்த்துக் கேட்டான் அவன்.

