“ஏய் சொறியடி!” என்றாள் உடைந்துவிட்ட குரலில்.
அப்போதுதான் தன் வார்த்தைகளை வினோதினியுமே உணர்ந்தாள். அதில், “ஏய் விடடி. நான் சும்மா சொன்னனான்.” என்று சமாளித்தாள்.
ஆனாலும் ஆரபியால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. அதில் குழந்தையைத் தானே வைத்துக்கொண்டாள்.
“நீ எந்தப் பக்கமடி படுப்பாய்.” என்று கேட்டு, அந்தப் பக்கம் சின்னவளைப் போட்டு, பக்கத்திலிருந்து தட்டிக் கொடுத்தாள். சின்னவளோ எழுந்தமர்ந்து இவளோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.
“இப்பிடிச் செய்தாய் எண்டு வை, அவள்தான் உன்னை நித்திரையாக்குவாளே தவிர, நீ அவளை நித்திரையாக்க மாட்டாய். பக்கத்தில படுத்துத் தட்டிக்குடு. ஆள் நல்லா அணஞ்சுகொண்டு நித்திரையாகிடுவா.” என்றாள் வினோ.
கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் கரையாகச் சரிந்து சின்னவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தபடி தட்டிக்கொடுத்தாள்.
வினோ சொன்னதுபோன்று நன்றாகவே அவளோடு ஒட்டிக்கொண்டு கிடந்தாள் குழந்தை. என்னவோ தாய்மை உணர்வு பெருக்கெடுக்க குழந்தையிலேயே கவனமானாள் ஆரபி.
அப்போதும் சத்தம் போடாமல் இரு என்று அவள் சொன்னதைக் கேளாமல், தம்மோடு படித்த தோழிகள் அனைவரைப் பற்றியும் இரகசியக் குரலில் பேசிக்கொண்டே இருந்தாள் வினோ.
அந்தக் கதை முடிந்ததும் அதுவரையில் தான் வாங்கிய உடைகள், நகைகள் என்று அனைத்தையும் எடுத்துக் காட்டினாள். ஆரபிக்கு நண்பியின் வெள்ளை மனத்தில் உள்ளம் கனிந்துபோயிற்று. இன்னுமின்னும் தான் அவளோடு கதைக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தாள்.
அப்போது, “அம்மா!” என்று பிருந்தகன் ஓடி வந்தான். பின்னால் சகாயன். அவனை எதிர்பாராத ஆரபி கொஞ்சம் திகைத்துத்தான் போனாள். அதுவும் அவன் முன்னே குழந்தையை அணைத்தபடி அவள் படுத்திருந்த காட்சி பதைப்பைத் தந்துவிட, சட்டென்று வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
சகாயனும் அவளை அப்படி ஒரு காட்சியில் பார்ப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அசைய முடியாமல் அப்படியே நின்றுவிட்டான். என்னவோ ஒரு பாதிப்பு மிக அதிகமாக அவளைத் தாக்கிற்று. எல்லாம் சரியாக நடந்திருந்தால் அவன் அறையில், அவன் குழந்தையோடு அவளை இப்படி ஒரு காட்சியில் பார்த்திருப்பானாக இருக்கும்.
தடுக்கவோ தவிர்க்கவோ இயலாமல் ஆரபியையே பார்த்தான்.
“தம்பி கத்துறேல்ல. தங்கச்சி நித்திரை!” என்று மகனை அதட்டுவதில் கவனமாக இருந்த வினோதினி இவர்களைக் கவனிக்கத் தவறினாள்.
“அம்மா, மாமா மார்க்கெட்டுக்கு போறாராம். நானும் போகப் போறன்.”
அது மீன் மார்க்கெட். கப்பல்கள் கரையொதுங்க, உடன் மீன்களை, அவற்றை அவர்கள் கொண்டு வந்து கொட்டுவதை எல்லாம் வேடிக்கை பார்ப்பது சின்னவனுக்கு மிகவுமே பிடிக்கும்.
“அவனுக்கு உடுப்பை மாத்திவிடு.” என்றுவிட்டு இறங்கி கீழே போனான் சகாயன்.
தமையன் சொன்னதுபோல் மகனுக்கு உடையை மாற்றிவிட்டாள் வினோதினி. சின்னவளும் நித்திரையாகிவிட்டதில் அவளுக்குச் சுற்றவர தலையணைகளை அடுக்கி வைத்துவிட்டு, “வாடி நாங்களும் போய்ச் சாப்பிடுவம்.” என்று ஆரபியையும் அழைத்துக்கொண்டு இறங்கினாள்.
அவன் தன்னை அப்படி ஒரு காட்சியில் பார்த்த பாதிப்பிலேயே இருந்த ஆரபி, அமைதியாகவே இறங்கி வந்தாள்.
அங்கே அவனும் சாப்பிட அமர்ந்திருந்தான். அவள் கால்கள் இலேசாகத் தயங்கின. அனால், கலையரசியும் இருக்கையில் எதையும் காட்டிக்கொள்ள முடியாது. அவனுக்கு எதிர்ப்பக்கம் கையைக் கழுவிக்கொண்டு சென்று அமர்ந்தாள்.
“நீங்க சாப்பிட்டீங்களா அன்ட்ரி.” அவர்களுக்குப் பற்றிமாரிய கலையரசியிடம் வினவினாள் ஆரபி.
“ஓமாச்சி. மருந்து மாத்திரை போடுறதால நேரா நேரத்துக்குச் சாப்பிட்டுடுவன்.”
அவனும் அங்கே இருக்கிறான் என்பதில் அவளுக்கு உணவு உள்ளே இறங்குவேனா என்றது. ஆனாலும் சமாளித்துச் சாப்பிட்டாள். வினோதினி எப்போதும்போல் சாப்பிடுவதற்கு வாயை அசைத்ததைக் காட்டிலும் பேசுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தினாள்.
“ஆனந்தனுக்கே கலியாணம் எண்டேக்க உங்களுக்குப் பாக்கேல்லையாமா?” பொதுவில் பெண் பிள்ளை, அதுவும் திருமண வயதில் வீட்டில் இருந்தால் அவளுக்கு முடித்துவிட்டு ஆண்பிள்ளைக்குப் பார்ப்பதுதான் பெருமளவில் நடப்பதில் விசாரித்தார் கலையரசி.
சட்டென்று நிமிர்ந்து சகாயனைப் பார்த்துவிடப் பார்த்தாள். வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “இந்த வருசம் எனக்குத்தான் முடிக்க இருந்தவே அன்ட்ரி. ஆனா அண்ணி வீட்டு ஆட்களுக்கு அவே லவ் எண்டு தெரிஞ்சபிறகு தள்ளிப்போட விருப்பம் இல்லை. அதால எனக்கு அடுத்த வருசம் செய்யலாம் எண்டு அப்பா சொன்னவர்.” என்றாள்.
“அதுவும் சரிதான். நாலு கதை நாலு விதமா வர முதல் செய்ய வேண்டியதைச் சரியா செய்திட்டா எல்லாருக்கும் நிம்மதி.” என்றவர், “உங்களுக்கு என்ன மாதிரி விருப்பம்? அப்பா எப்பிடியான பெடியன் தேடுறாராம்?” என்று தொடர்ந்து விசாரித்தார்.
“எப்பிடி எண்டெல்லாம் பெருசா எந்த ஐடியாவும் இல்லை அன்ட்ரி. ஆனா என்னை மதிக்கிற, நல்ல மாதிரி நடத்திற ஒருத்தரா இருந்தா போதும்.” என்றவளுக்கு அவனைப் பாராமலேயே சகாயனின் முகம் மாறுவது மிக நன்றாகவே தெரிந்தது.
அதற்குமேல் அவளால் சாப்பிட முடியவில்லை. தட்டோடு எழுந்து சென்று கலையரசியும் வினோதினியும் அப்படியே வை என்று சொன்னதைக் கேளாமல் தட்டைக் கழுவினாள். அவள் பின்னால் வந்து தன் தட்டையும் வைத்தான் சகாயன்.
ஒரு கணம் திக் என்று இருந்தாலும் அவனுடையதைக் கழுவாமல் வேகமாகக் கையைக் கழுவிக்கொண்டு அவள் விலக முயல, அதற்கு முதல் அவள் இடுப்பை ஒற்றைக் கையாலேயே வளைத்துத் தூக்கி, அந்தப் பக்கமாக அவளை வைத்துவிட்டு அவன் பேசாமல் கையைக் கழுவவும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் ஆரபி.


