ஆரபி வீட்டில் திருமண வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. அன்று அயலட்டைப் பெண்களுடன் சேர்ந்து பருத்தித்துரை வடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை வேலை செய்யக் கிருத்திகன் விட வேண்டுமே.
ஆண்கள் எல்லோரும் ஆளுக்கொரு வேலையாகப் போயிருக்க, இவளை, அபிசாவை, மங்கையற்கரசியை என்று மாற்றி மாற்றித் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தான் அவன்.
“எங்களுக்குப் பலகாரச்சூட்டுல நேரம் போயிடும். அவருக்கு அலுப்பா இருக்குப் போல. இண்டைக்கு பள்ளிக்கூட கிரவுண்டில சிறுவர் சந்தை நடக்குது ஆரபி. சும்மா கூட்டிக்கொண்டு போயிற்று வாங்கோவன்.” என்றார் அவர்களின் பக்கத்துவீட்டுப் பெண்மணி.
சரி என்று எழுந்து, குளித்து உடைமாற்றி, சின்னவனையும் தயார் செய்து ஸ்கூட்டியில் புறப்பட்டாள் ஆரபி.
அது அவர்கள் படித்த பாடசாலை மைதானம்தான். ஸ்கூட்டியை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு இருவருமாகச் சிறுவர் சந்தைக்குள் நுழைந்தார்கள்.
மைதானத்தைச் சுற்றவர ஓலையால் வேய்ந்த தற்காலிகக் கடைகள் போடப்பட்டிருந்தன. கடை உரிமையாளர்கள் அனைவரும் ஐந்து வயதுடைய சிறுவர் சிறுமியர்களே!
சிறுமிகள் அனைவரும் சேலை கட்டி, கொண்டையிட்டு, அதற்குப் பூ வைத்திருந்தனர். சிறுவர்கள் வேட்டி சட்டை உடுத்தி, மீசை வைத்து, சிலர் நரைத்த தலை கூட வைத்திருந்தார்கள்.
அவர்களுக்கு ஏற்ற வகையிலான பள்ளிக்கூட மேசைகள் ஒன்றோ இரண்டோ சேர்த்துப் போடப்பட்டிருக்க, அதன் மேலே அவர்கள் விற்கும் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு கடையின் மேலும் அந்தக் கடைச் சிறுமி அல்லது சிறுவனின் பெயரும், வயது ஐந்து என்றும் எழுதப்பட்டிருந்தது. கூடவே பழக்கடை, பல்பொருள் அங்காடி, உள்ளூர் உற்பத்திகள், மரக்கறிக் கடை, புடவைக்கடை, சிற்றுண்டிக் கடை என்று, அவர்களின் கடை என்ன கடை என்றும் எழுதப்பட்டிருந்தது.
துணைக்குப் பெரியவர்கள் கூடவே நின்றாலும் கடை உரிமையாளர்தான் பொருள்களை விற்பனை செய்தார். ஊர் மக்களும் சந்தோசமாக வந்து, பேரம் பேசி, பொருட்கள் வாங்கினார்கள்.
சிறுவர்களைச் சந்தை சார்ந்த விடயத்தில் பழக்கப்படுத்தவும், அறிமுகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோராடான உரையாடல்களைப் பலப்படுத்தவும், சமூக மட்டத்தினருடனான உரையாடல்களை ஊக்குவிப்பதற்காகவும் நடாத்தப்படும் ஒருவகையான கல்வித்திட்டம்தான் இது.
இதனால் மனோவளர்ச்சி மேம்பாடு அடைந்து, சமூக ரீதியான உறவுகள் மேம்படும் என்று நம்பப்படுகிறது.
நடுவர்களின் மேசையில் சகாயனும் அமர்ந்திருப்பது அவள் கடைக்கண் பார்வையில் தெரிந்தது. கூடவே அந்தக் கரிவாயன் கிரியும். ஒரு பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது. அன்றைக்கு அடித்துப்பிடித்து அவன் வீட்டிலிருந்து ஓடி வந்தவள் அதன் பிறகு தேவையற்று வெளியில் வருவதையே தவிர்த்திருந்தாள்.
அவர்கள் காதலராக இருந்த காலத்தில் கூடத் தொட்டுப் பேசியதில்லை. சில வேளைகளில் எதேற்சையாக விரல்கள் பட்டிருக்கின்றன. அவ்வளவுதான். அப்படியிருக்க அவர்களுக்கிடையிலான உறவு முறிந்து சில வருடங்கள் கடந்த பிறகான அவன் நடத்தை கோபத்தையும் பதற்றத்தையும் சேர்த்து அவளுள் உருவாக்கியிருந்தது.
அதைவிட எவ்வளவு தைரியம் இருந்தால் அவன் வீட்டில் வைத்தே, எந்த நொடியில் வேண்டுமானாலும் அவன் அன்னை அல்லது தங்கை வந்துவிடும் ஆபத்து இருப்பது தெரிந்தும் அப்படி நடப்பான்?
அவள்தான் விதிர்விதிர்த்துப்போனாள். என்னவோ செய்யவே கூடாத ஏதோ ஒன்றைச் செய்துவிட்டவள் போன்று நெஞ்சு பதறிப்போயிற்று. இப்படியெல்லாம் அத்துமீறி நடக்காதே என்று அவனிடம் கோபப்படக்கூட முடியாதவளாய் அவள் அதிர்ந்து நிற்க, சாவகாசமாகக் கையைக் கழுவி, வாயையும் துடைத்து, தண்ணீரையும் எடுத்து அருந்திவிட்டு, “உன்னை மதிக்கிறவன்தான் வேணும் உனக்கு?” என்று கேட்டுவிட்டுப் போய்விட்டான் அவன்.
இன்று இங்கே அவனும் நிற்பான் என்று தெரிந்திருக்க வந்திருக்கவே மாட்டாள். இப்போது வந்தாயிற்று. இனித் திரும்பிப் போக முடியாது. கிருத்திகன் விடமாட்டான்.
அதைவிட இத்தனை பேருக்கு மத்தியில் அவனால் என்ன செய்ய முடியும்? எல்லோரும் மதிக்கும் நடுவராக வேறு இருக்கிறான். முக்கியமாக அவனின் உற்ற நண்பன் கிரி இருக்கிறானே. பிறகு எதற்கு அவள் புறம் திரும்பப்போகிறான்? ஒருவிதக் கசப்பு உள்ளே படரக் கிருத்திகனோடு கடைகளைக் சுற்றிவர ஆரம்பித்தாள்.
கிருத்திகனுக்குக் கிட்டத்தட்ட தன் வயதில் இருந்த பெரிய மனிதர்களைக் கண்டு குதூகலமாயிற்று. அடுத்த வருடம் இந்தச் சந்தைக்குத் தானும் வரப்போவதாக இப்போதே சொன்னான். முடிந்த வரையில் எல்லாக் கடைகளிலும் ஏதோ ஒன்று வாங்குவதுபோல் பார்த்துக்கொண்டாள் ஆரபி.
அறிந்த தெரிந்த மனிதர்கள் வேறு அவளை நிறைய நாள்களுக்குப் பிறகு கண்ட மகிழ்வில் மறித்து வைத்துக் கதைத்தது வேறு நன்றாக இருந்தது.
இப்படி இருக்கையில்தான், “ஆரபி!” என்று சகாயனின் குரல் அவளை உரத்து அழைத்தது.
இப்படி எல்லோர் முன்னும் அழைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதைவிட, காது கேளாததுபோல் நகரு என்று மூளை கட்டளையிட்டதைச் செயலாற்றும் முன், காலம் காலமாக அவனுக்குப் பணிந்தே பழகிப்போயிருந்த அவள் உடல் அவனை நோக்கித் திரும்பியிருந்தது.
“இஞ்ச ஒருக்கா வாரும்.” என்றான் அவன் உத்தரவிடும் தொனியில்.
இன்னுமே அவனைச் சாரணியர் இயக்கத் தலைவனாகவும் அவளை அவனுக்குப் பணியும் தொண்டனாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறானா இவன்? உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள் ஆரபி.
அதைவிட எல்லோர் முன்னும் என்னவோ அதி நல்லவன்போல் வாரும் போரும் போடுகிற இவன்தான் தனிமை கிடைத்தால் டீ வரை சர்வசாதாரணமாகப் போடுவான். அன்று இடுப்பைப் பிடித்துத் தூக்கவில்லை?
முகத்தைக் கல்லுப்போல் வைத்துக்கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள்.
“இந்தாரும், இதப் பிடியும்!” என்று அவள் கையில் ஒரு நோட் பேடையும் பேனையையும் திணித்தான்.
கடைகளுக்குப் புள்ளிகள் போடப்போகிறான். அதற்கு அவள் எதற்கு? “நான் போகோணும்.” அவனைப் பாராமல் முணுமுணுத்தாள்.
“நான் மட்டும் என்ன இஞ்சயே பாய் விரிச்சுப் படுக்கப் போறனா?” என்றான் அவன்.
குதர்க்கத்துக்குப் பிறந்தவனை எதையாவது வைத்துக் குத்திக் கிழிக்கலாமா என்றிருந்தது அவளுக்கு.
ஒவ்வொரு கடையாகப் போய் அவர்கள் என்ன விற்கிறார்கள், அதன் பயன் என்ன, அதை எங்கிருந்து பெற்றார்கள் என்று விசாரித்தான்.
அதுவும் புடலங்காய் விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் போய், “என்ன நீங்களும் புடலங்காயும் ஒரே உயரத்தில் இருக்கிறீங்க. நீங்க வளரேல்லையா இல்ல புடலங்கா வளரேல்லையா?” போன்ற அவன் கேள்விகளை எல்லாம் பக்கத்திலிருந்து அனுபவித்தவளுக்கு பற்றிக்கொண்டுதான் வந்தது.
ஆனாலும் கடையை எப்படி வைத்திருக்கிறார்கள், பொருள்கள் வாங்க வருகிறவர்களோடு எப்படி உரையாடுகிறார்கள் என்றெல்லாம் கவனித்து காரணத்தோடு அவன் புள்ளிகள் சொல்ல, கவனத்தோடு அனைத்தையும் குறித்துக்கொண்டவளால் அவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை. வேலையிலும் அவன் கணிப்பீடுகளிலும் அத்தனை நேர்த்தி.
அவர்கள் இருவரும் இணைந்து இப்படி வேலைகள் பார்ப்பது எப்போதும் நடப்பது என்பதில் அங்கிருந்தவர்கள் இவர்களை ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. அந்தத் தைரியத்தில்தானே அவன் சத்தமாக அவள் பெயரைச் சொல்லி அழைத்ததே. அவளுக்குத்தான் விரைவாக முடிக்கமாட்டானா என்றிருந்தது.
“கிருத்திக்குக் கால் நோகப்போகுது. நான் போகோணும்.” என்றாள் அவனைப் பாராது.
“ஆர் கிருத்தி?” என்றான் அவன்.
அபிசாவைக் கண்டால் அக்கா அக்கா என்று பேசுகிற இவனுக்குக் கிருத்திகனைத் தெரியாதாம். “அக்கான்ர மகன்.” என்றாள் சுருக்கமாக.
“உனக்கு ஆரு எண்டு கேட்டனான்?”
இது என்ன கேள்வி என்று உள்ளே ஓட, “மகன்.” என்றாள் அவள்.
“ஓ! மகன் எல்லாம் இருக்கா உனக்கு?” என்று வியந்தான் அவன்.
அவள் முறைக்க, கிருத்திகனுக்குக் கேட்கா வண்ணம் இன்னும் குரலைத் தணித்து, “நான் இல்லாம உனக்கு ஒரு மகன் எப்பிடி வந்தவன்?” என்றதும் அப்படியே நின்றுவிட்டாள் ஆரபி.
திரும்ப திரும்ப எதை முயற்சிக்கிறான் இவன்? பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் காதல் வசனம் பேசுவானா? கையில் இருந்த பேடையும் பேனையையும் அவர்கள் முன்னால் இருந்த கடையின் மேசையில் வைத்துவிட்டுத் திரும்பி, “நிச்சயமா எனக்கே எனக்கு எண்டு ஒரு குழந்தை பிறக்கும். ஆனா அந்தக் குழந்தைக்கும் உங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்காது.” என்று அவனைப்போலவே மிக மிகத் தணிந்த குரலில், முக்கியமாக அவன் கண்களையே பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் அவள்.
சகாயனின் முகமே மாறிப்போயிற்று. முதலில் கன்றிப்போனாலும் நேரமாக நேரமாகக் கோபத்தில் சிவந்து கொதிக்க ஆரம்பித்தது.
இவர்களையே கவனித்துக்கொண்டிருந்த கிரி வேகமாக இவனிடம் வந்தான். “என்னவாமடா? என்ன சொல்லிப்போட்டு போறாள்?” என்றான் கிருத்திகனைப் பற்றி இழுத்துக்கொண்டு விறுவிறுவென்று போகும் அவளின் முதுகை முறைத்தபடி.
ஒன்றுமில்லை என்று குறுக்காகத் தலையை அசைத்துவிட்டு வேலையைப் பார்த்தவனின் விழிகளில் ஏறியிருந்த சிவப்பே அவன் கோபத்தின் அளவைச் சொல்லிற்று.


