கடைகளுக்குப் புள்ளிகள் போடப்போகிறான். அதற்கு அவள் எதற்கு? “நான் போகோணும்.” அவனைப் பாராமல் முணுமுணுத்தாள்.
“நான் மட்டும் என்ன இஞ்சயே பாய விரிச்சுப் படுக்கப் போறனா?” என்றான் அவன்.
குதர்க்கத்துக்குப் பிறந்தவனை எதையாவது வைத்துக் குத்திக் கிழிக்கலாமா என்றிருந்தது அவளுக்கு.
ஒவ்வொரு கடையாகப் போய் அவர்கள் என்ன விற்கிறார்கள், அதன் பயன் என்ன, அதை எங்கிருந்து பெற்றார்கள் என்று விசாரித்தான்.
அதுவும் புடலங்காய் விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் போய், “என்ன நீங்களும் புடலங்காயும் ஒரே உயரத்தில இருக்கிறீங்க. நீங்க வளரேல்லையா, இல்ல புடலங்கா வளரேல்லையா?” போன்ற அவன் கேள்விகளை எல்லாம் பக்கத்திலிருந்து அனுபவித்தவளுக்குப் பற்றிக்கொண்டுதான் வந்தது.
கடையை எப்படி வைத்திருக்கிறார்கள், பொருள்கள் வாங்க வருகிறவர்களோடு எப்படி உரையாடுகிறார்கள் என்றெல்லாம் கவனித்துப் புள்ளிகள் சொன்னான். கவனத்தோடு அனைத்தையும் குறித்துக்கொண்டவளால் அவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை. வேலையிலும் அவன் கணிப்பீடுகளிலும் அத்தனை நேர்த்தி.
அவர்கள் இருவரும் இணைந்து இப்படி வேலைகள் பார்ப்பது எப்போதும் நடப்பது என்பதில் அங்கிருந்தவர்கள் இவர்களை ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. அந்தத் தைரியத்தில்தானே சத்தமாக அவள் பெயரைச் சொல்லி அவன் அழைத்ததே. அவளுக்குத்தான் விரைவாக முடிக்கமாட்டானா என்றிருந்தது.
“கிருத்திக்குக் கால் நோகப்போகுது. நான் போகோணும்.” என்றாள் அவனைப் பாராது.
“ஆர் கிருத்தி?” என்றான் அவன்.
அபிசாவைக் கண்டால் அக்கா அக்கா என்று பேசுகிற இவனுக்குக் கிருத்திகனைத் தெரியாதாம். “அக்கான்ர மகன்.” என்றாள் சுருக்கமாக.
“உனக்கு ஆரு எண்டு கேட்டனான்?”
இது என்ன கேள்வி என்று உள்ளே ஓட, “மகன்.” என்றாள் அவள்.
“ஓ! மகன் எல்லாம் இருக்கா உனக்கு?” என்று வியந்தான் அவன்.
அவள் முறைக்க, கிருத்திகனுக்குக் கேட்கா வண்ணம் இன்னும் குரலைத் தணித்து, “நான் இல்லாம உனக்கு ஒரு மகன் எப்பிடி வந்தவன்?” என்றதும் அப்படியே நின்றுவிட்டாள் ஆரபி.
திரும்ப திரும்ப எதை முயற்சிக்கிறான் இவன்? பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் காதல் வசனம் பேசுவானா?
கையில் இருந்த பேடையும் பேனையையும் அவர்கள் முன்னால் இருந்த கடையின் மேசையில் வைத்துவிட்டுத் திரும்பி, “நிச்சயமா எனக்கே எனக்கு எண்டு ஒரு குழந்தை பிறக்கும். ஆனா அந்தக் குழந்தைக்கும் உங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்காது.” என்று அவனைப் போலவே மிக மிகத் தணிந்த குரலில், முக்கியமாக அவன் கண்களையே பார்த்துச் சொல்லிவிட்டு நடந்தாள் அவள்.
சகாயனின் முகமே மாறிப்போயிற்று. நொடிகள் கரைய கரைய கோபத்தில் சிவந்து கொதித்தது.
இவர்களையே கவனித்துக்கொண்டிருந்த கிரி வேகமாக இவனிடம் வந்தான். “என்னவாமடா? என்ன சொல்லிப்போட்டுப் போறாள்?” என்றான் கிருத்திகனைப் பற்றி இழுத்துக்கொண்டு போகும் அவளின் முதுகை முறைத்தபடி.
ஒன்றுமில்லை என்று குறுக்காகத் தலையை அசைத்துவிட்டு வேலையைக் கவனித்தான் கேசிகன். அவன் விழிகளில் ஏறியிருந்த சிவப்பே கோபத்தின் அளவைச் சொல்லிற்று.
“அதுதான் மொத்தமா முறிச்சு விட்டுட்டாயெல்லா. பிறகும் என்னத்துக்கு அவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு கதைக்கப் போனனி?”
“நீ தேடி தேடிப் போறதாலதான் அவ்வளவு திமிர் அவளுக்கு.”
“இன்னும் அதே குணம்!”
கிரி சொன்ன எதற்கும் வாயே திறக்கவில்லை சகாயன். என்னதான் வேலை தடைப்படாமல் நடந்தாலும் சகாயனால் முழு மனமாக அதைக் கவனிக்க முடியவில்லை.
அவள் சொன்ன விடயம் அந்தளவில் உச்சிக்கே முடித்திருந்தது. அன்று மட்டுமில்லை அடுத்து வந்த நாள்களும் அதுவே மண்டைக்குள் நின்று அவனை என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த கிரிக்கு அவள் மீது அப்படி ஒரு ஆத்திரம் உண்டாயிற்று.
*****
மழைக்காலம் ஆரம்பிக்க இருந்ததில் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியினை ஆரம்பித்திருந்தான் சகாயன். இல்லையா இடர் கால நேரத்தில் நிச்சயம் மக்கள் அவல நிலைக்கு ஆளாவார்கள். வருடா வருடம் செய்வதுதான். ஒவ்வொரு வருடமும் சீரமைத்த பிறகு கழிவுகளை வீசாதீர்கள், பிளாஸ்ட்டிக்குகளை போடாதீர்கள், உங்களுக்குச் சொந்தமான பகுதி வாய்க்கால் துண்டுகளை நீங்களே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும்போதெல்லாம் பெரிதாகத் தலையாட்டுகிறவர்கள் நாளடைவில் பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.
அதில் அந்த வருடமும் பிரதேச சபை செயலாளர், காவல்துறை அதிகாரி சகிதம் வாய்க்கால்களைத் தூர்வாரும் வேலையை ஆரம்பித்திருந்தான்.
அது தெரியாமல் கடைக்குப் புறப்பட்டு வந்திருந்தாள் ஆரபி. பிரதான வீதியின் இரு மருங்கிலும் இருக்கிற வாய்க்கால்களை தூர் வாருவதால் எக்ஸ்கவேட்டரை(Excavator) நடுவில் நிறுத்தி வேலை நடந்துகொண்டிருந்ததில் இவளால் அவர்களைக் கடந்து போக முடியவில்லை.
‘இவன் ஒருத்தன் எப்ப வந்தாலும் நடு ரோட்டில படுத்துக் கிடப்பான்!’ என்று திட்டிவிட்டு அன்று போலவே இன்றும் இரண்டு கிலோமீட்டர்கள் சுற்ற வேண்டிய நிலையை நொந்தபடி ஸ்கூட்டியைத் திருப்பினாள்.
அன்று அவனிடம் அப்படிச் சொல்லிவிட்டு வந்தவளுக்கு நன்றாகத் திருப்பிக்கொடுத்துவிட்டோம் என்கிற திருப்தி இல்லை. கொஞ்ச நாள்களாக அடங்கியிருந்த மனத்தின் புறுபுறுப்பு மீண்டும் ஆரம்பித்திருந்தது. அவர்களது முறிந்துபோன உறவு. வேண்டாம் என்றது அவன். அவள் எல்லாம் ஒரு ஆளே இல்லை என்றதும் அவன்தான். இப்போது எதற்குத் திரும்பவும் ஆரம்பிக்கிறான் என்று யோசித்து யோசித்தே களைத்துப்போனாள்.
சிந்தனையின் திசையைத் திருப்ப எண்ணித்தான் கடைக்குப் புறப்பட்டு வந்தாள். பார்த்தால் அவனே கண் முன்னே வந்து நிற்கிறான். பேசாமல் எதிரில் வந்த அம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினாள்.
இன்றைய நிலையில் தமையனின் திருமணத்தைக் கூட மகிழ்வோடு அனுபவிக்கும் நிலையில் அவள் இல்லை. எப்போதடா ஆனந்தனின் திருமணம் முடியும், எப்போதடா மட்டக்களப்புக்குச் சென்று சேர்வோம் என்று இருந்தது.

