இப்படி இருக்கையில்தான் அவளின் இன்னொரு நண்பி அகிராவின் பின்னால் சுற்ற ஆரம்பித்தான் கிரி. அந்த நேரம் இவர்கள் கடைசிப் பரீட்சைகளை முடித்திருந்தனர். வீட்டில் சும்மா இருக்காமல் தையல் வகுப்பு, ஆங்கில வகுப்பு, கணனி வகுப்பு என்று கிடைக்கிற வகுப்புகளுக்கு எல்லாம் போய்க்கொண்டிருந்த காலம்.
வினோதினிக்கு இவற்றில் எல்லாம் ஈடுபாடில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கூடம், படிப்புத் தவிர்த்து மிகுதி எல்லாவற்றுக்கும் அவள் ஒரு சோம்பேறி.
கிரி கொஞ்சம் முரட்டுத்தனமானவன். அகிராவுக்கு அவனைப் பிடிக்கவே பிடிக்காது. ஒதுங்கிப்போய், அவன் பேச வந்த சந்தர்ப்பங்களைத் தவிர்த்து, நேரடியாகப் பேசியபோதும் மறுத்து என்று தன் விருப்பமின்மையைப் பல வழிகளிலும் சொல்லியிருந்தாள்.
அவன் கேட்க வேண்டுமே. என்னை ஒருத்தி மறுப்பதா என்கிற இறுமாப்புடன் இன்னும் மோசமாக அவள் பின்னால் அலைய ஆரம்பித்திருந்தான்.
ஒரு நாள் தன்னோடு பேசியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினான். இவள் மறுத்தாள். கடைசியில் அவன் மிரட்ட ஆரம்பிக்கவும் பயந்துபோன அகிரா அழுதுகொண்டு ஓடி வந்திருந்தாள்.
கடைசியில் ஆரபி அகிரா வீட்டில் அனைத்தையும் சொல்லிவிட, அவர்கள் இவன் வீட்டுக்கே வந்து கேளாத கேள்வி எல்லாம் கேட்டுப் பெரிதாகச் சண்டை பிடித்திருந்தனர். கிரிக்கு மிகுந்த அவமானமாயிற்று. பெற்றவர்களின் முகம் பார்க்க முடியவில்லை. அவர்களும் இவனை அற்ப புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தனர். மிகவுமே குன்றிப்போனான்.
அன்றிலிருந்து கிரிக்கும் ஆரபிக்கும் ஆகாது. தன் காதலைக் கெடுத்தவள் அவள்தான் என்று கிரி முழுமையாக நம்பினான்.
இது நடந்தபோது சகாயன் ஊரில் இல்லை. தகப்பனோடு அரசியல் கட்சி மீட்டிங் ஒன்றுக்குக் கொழும்பு போயிருந்தான்.
வந்து பார்த்தால் பெற்றவர்களின் முகம் பார்க்கவும் வெட்கி தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான் கிரி. நடந்தவற்றை அறிந்த சகாயனுக்கு ஆரபி மீது மிகுந்த ஆத்திரம்.
அவளோடு பேசுவதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அன்று தன் தோழிகளோடு வந்து கடற்கரையோரத்து நெகிழிகளை அகற்றிக்கொண்டிருந்தாள் ஆரபி. அவளைத் தேடி வந்த சகாயன், ஒற்றைப் பார்வையாலேயே அவளோடு நின்றிருந்த தோழியரை அங்கிருந்து அகற்றி அவளைத் தனியாக்கினான்.
ஆரபிக்கு உள்ளூர நடுங்காமல் இல்லை. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் நின்றாள். அவன் பார்வை முதல் வேலையாக அவள் நெற்றியைத்தான் அளந்தது.
இன்று அதில் எந்த அடையாளமும் இல்லை. ஆனால், அடர்ந்த நீண்ட புருவங்களும், அதன் கீழிருந்த பெரிய கரிய விழிகளும், அவை தன்னைக் கண்டு மிரள்வதையும் கண்டு அவனுக்குள் என்னவோ புரண்டது. உள்ளத்தில் ஒரு உல்லாசம். சின்னதாகப் புதுவிதக் கிளர்ச்சி. புதிதாக அவளைப் பார்த்தான். கோபமாக வந்தவன் புஸ் என்று போன புஷ்வாணமாக நின்றான்.
அவன் பேசுவதாக இல்லை என்றதும், “நான் போகோணும்.” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
“எங்க? நடுக்கடலுக்கையா?” அவன் பேச்சு வராமல் திண்டாடுகிறான். அவளுக்குப் போக வேண்டுமாமே.
ஏன் போகமாட்டாளா? அவளுக்கு என்ன நீந்தத் தெரியாதா? உள்ளே குமுறினாலும் வெளியே பேசாமல் நின்றாள்.
“ஊமைக்கோட்டான் மாதிரி நிண்டாலும் பாக்கிறது எல்லாம் பெரிய வேல என்ன?”
அவளுக்கு முகம் சுருங்கிற்று. அப்படி என்ன வேலை பார்த்தாளாம்? முகத்தில் சின்னதாகச் சிணுக்கம்.
இவனுக்கு என்னவோ கரைந்தது. அந்த முகத்தின் சிணுக்கத்தை விழுங்குவதுபோல் பார்த்தான். ‘டேய் நடிக்கிறாள். நம்பாத. உன்னையே தெருப்பொறுக்கி எண்டு சொன்னவள்.’ அறிவு சரியான நேரம் பார்த்து எடுத்துக்கொடுத்தது.
குரலைச் செருமிக்கொண்டு, “முந்திரிக்கொட்டை மாதிரி எல்லாத்துக்கும் முந்திக்கொண்டு நிப்பியா நீ? அவனுக்கு அந்தப் பிள்ளையைப் பிடிச்சிருக்கு எண்டு தெரிஞ்சும் நடுவுக்க புகுந்து கெடுத்திருக்கிறாய் என்ன?” என்று அதட்டினான்.
“என்ன நடந்தது எண்டு தெரியாம நீங்களா ஒண்ட கதைக்காதீங்க!” அவளுக்கும் மூக்கு நுனியில் கோபம் வந்தது.
அந்த மூக்கைப் பிடித்துக் கிள்ளும் ஆவல் எழுந்தாலும், “உனக்கு மட்டும் எல்லாம் தெரியுமோ? வந்திட்டா எல்லாம் தெரிஞ்சவள் மாதிரிக் கதைச்சுக்கொண்டு” என்று ஆத்திரப்பட்டான்.
பயந்துபோனவள் இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள். அவனுக்குச் சுர் என்று ஏறியது.
“பயந்தவள் மாதிரி நடிச்சியோ கொன்றுவன் ராஸ்கல்! பாக்கிறது முழுக்கத் தேவை இல்லாத வேலை. இதுல என்னைப் பாத்துப் பயம் உனக்கு?”
“நல்லா கேளடா. இவளால் எனக்கு எவ்வளவு கேவலம் தெரியுமா?” கோபமாக அங்கு வந்த கிரியும் அவனை ஏற்றிவிட இவள் பொறுமை பறந்துபோயிற்று.
“என்ன கேவலம்? என்னவோ இல்லாததை நான் சொன்ன மாதிரி ரெண்டு பேரும் துள்ளுறீங்க. பிடிக்காத ஒருத்திய வற்புறுத்தினா அப்பிடித்தான் நடக்கும்.” என்றாள் கிரியை முறைத்துக்கொண்டு.
“ஓ!” என்று இழுத்து சகாயன் பார்த்த பார்வையே சரியில்லை. இவளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. வேகமாக அவ்விடம் விட்டு அகலப் போனவள், “உனக்கும் என்னைப் பிடிக்காது என்ன?” என்ற அவன் கேள்வியில் திடுக்குற்று நின்றுவிட்டாள்.
“இனி உனக்குப் பின்னால நான் சுத்துறன், சரியா?” என்றதும் பயந்துபோனாள்.
“விசர் கதை கதைக்காதீங்க!” என்றுவிட்டு ஓடி வந்துவிட்டாள்.
அன்றிலிருந்துதான் அவளுக்கு ஏழரை ஆரம்பித்தது. கிரிக்கு நண்பன் அப்படி அவள் பின்னால் சுற்றுவது பிடிக்கவில்லை. “நான் என்ன ஆசையாவா சுத்துறன். உன்னைக் கேவலப்படுத்தினவளுக்குப் பாடம் படிப்பிக்க வேணாமா?” என்றதும் கிரிக்குக் குதூகலமாயிற்று.
பாடசாலைக் காலம் முடிந்து பெறுபேற்றுக்காகக் காத்திருந்த காலம் அது என்பதில் வினோதினியை வைத்துத் தப்பித்துக்கொள்ளவும் இவளால் முடியவில்லை. பல்கலை முடிந்தால் இவளை வட்டமிடுவதையே முழு நேர வேலையாகப் பார்த்தான் அவன்.
வினோதினிக்கு ஓடியாடி வேலைகள் செய்வது, தன்னார்வம் கொண்டு பொதுச் சேவைகளில் ஈடுபடுவதில் ஈடுபாடே கிடையாது. அதில் சாரணியர் இயக்கத்தில் அவள் சேரவில்லை. அதில் இந்த ஆட்டுக்குட்டி சகாயனிடம் வசமாக மாட்டிக்கொண்டது.
இருக்கிற அத்தனை வேலைகளையும் அவளைக் கொண்டே வாங்கினான். ஊரில் இந்த முனையிலிருந்து அந்த முனை வரை சைக்கிள் மிதிக்க வைத்தான். ஒரு நாள் முடியாமல், “ஏன் இப்பிடி எல்லாம் நடக்கிறீங்க?” என்று நேராகவே வந்து கேட்டாள் ஆரபி.
“இவனிட்ட மன்னிப்புக் கேள். விடுறன்.” என்று தீர்வு சொன்னான் அவன்.
“நான் என்ன பிழை செய்தனான் எண்டு மன்னிப்புக் கேக்க?”
“அவன்ர காதலைப் பிரிச்சது மட்டுமில்லாம, பெத்த தாய் தகப்பனுக்கு முன்னால கேவலப்பட்டு நிக்க வச்சுப்போட்டு என்ன செய்தனான் எண்டு கேப்பியோ?”
“அது காதலா?” என்று கேட்டு, அவன் பக்கத்தில் நின்ற கிரியையும் சேர்த்து இகழ்ச்சியாக அவள் பார்த்த பார்வையில் இரு ஆண்களும் வெகுண்டுபோனார்கள்.


