“ஏய் என்ன, செய்றதையும் செய்துபோட்டுத் திமிர் உனக்கு?” என்றுகொண்டு வந்தான் கிரி.
ஒற்றைக் கையைக் குறுக்காக நீட்டி அவனை அவளை நோக்கி நகர விடாமல் செய்தபடி, “திரும்ப திரும்ப பிழை விடாம அவனிட்ட மன்னிப்புக் கேள் ஆரபி!” என்றான் சகாயன் சகாயம் எச்சரிக்கும் குரலில்.
அவளுக்கு நெஞ்சமெல்லாம் சில்லிட்டது. தன்னைச் சுற்றி யாரும் இல்லாததை அப்போதுதான் அவதானித்தாள். அது விதானையாளர் அலுவலகம். உள்ளே ஒரு அறையும் வெளியே ஒரு வரவேற்பு பகுதி மட்டும் கொண்டது. அரைச்ச சுவர் வைக்கப்பட்ட வரவேற்பு பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அன்று அவர்களுக்குச் சாரணியர் இயக்க மீட்டிங் என்று அங்கு ஒன்று கூடினார்கள். அவனோடு தனியாகப் பேச எண்ணி அவள்தான் எல்லோரும் போகும்வரை காத்திருந்து பேச வந்தது. அது எத்தனை பெரிய தவறு என்று இப்போது உணர்ந்தாள்.
“நான் போகோணும்.” என்று புறப்பட்டாள்.
வேகமாக வந்து அவளை மறித்து நின்றான் சகாயன். மிடறு விழுங்கினாள் ஆரபி. உள்ளங்கைகள் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தன.
அவன் திரும்பவும் மன்னிப்பு கேட்கச் சொன்னான்.
“நான் ஏன் கேக்கோணும்?” கண்களில் பயம் படர்ந்தாலும் அவளும் விடுவதாக இல்லை.
அதுவே அவனை இன்னுமின்னும் கோபமூட்டிற்று. செய்வதையும் செய்துவிட்டு இவ்வளவு பிடிவாதம் பிடிப்பாளா? “நீ செய்த வேலைக்குக் கேக்கத்தான் வேணும். மரியாதையா கேள்!”
“நீங்க முதல் என்னைப் போக விடுங்க. இல்லையா வினுட்ட சொல்லிக்குடுப்பன்.” என்று மிரட்டினாள்.
அவ்வளவுதான். அவனுக்கு உச்சிக்கே ஏறிற்று. கிரிக்கு பயன்படுத்திய உத்தியைத் தனக்கும் பயன்படுத்தப் பார்க்கிறாளா என்கிற கோபத்தில், “என்னடி வெருட்டுறியா? தைரியம் இருந்தா சொல்லடி! எடு ஃபோனை! எடு!” என்றுகொண்டு அவளை நெருங்கினான்.
அவளுக்கு நெஞ்சுத் தண்ணீரே வற்றிப்போயிற்று. பின்னால் நகர்ந்தாள்.
“சின்ன பிள்ளை, பாவம் எண்டு நினைச்சா என்னையே வெருட்டுறாய் என்ன?”
“அண்டைக்கே உன்ர மண்டைய உடைச்சிருக்கோணும். பாவம் எண்டு விட்டதுதான் பிழையா போச்சு.” என்றவனைப் பயமும் பதைப்புமாக அவள் பார்க்கையிலேயே அங்கே வந்தாள் அகிரா.
அவர்களுக்குத் தையல் வகுப்பு இருந்தது. அழைத்தும் எடுக்கவில்லையே என்று நேரே இவள் வீட்டுக்குப் போயிருந்தாள். அவர்கள் அவள் இங்கே வந்திருப்பதாகச் சொல்லவும் தேடிக்கொண்டு வந்தவள் கண்முன்னே கண்டா காட்சியில் அங்கே ஓடி வந்தாள்.
“அகி!” என்று ஓடிப்போய் அவள் பின்னே நின்று நடுங்கினாள் ஆரபி. உண்மையில் இந்தளவுக்கு எதிர்த்து நிற்கும் தைரியமெல்லாம் அவளுக்கு இல்லை. வினோதினியின் அண்ணா என்கிற ஒற்றை தைரியத்தில்தான் அவள் எதிர்த்துப் பேசியதே. ஆனால் அவன்…
அகிராயைக் கண்டு கிரியின் முகம் மலர்ந்துபோயிற்று. ஆனால், சகாயனுக்கு அவள் ஓடிப்போய் அகிரா பின்னால் நின்றது இன்னுமே சினமூட்டிற்று. “இந்தப் பிள்ளைக்காகத்தானே இவ்வளவு வேலையையும் பாத்தனி. இப்ப உனக்கு முன்னாலயே அவே ரெண்டு பேரையும் கதைக்க வைக்கிறன்.” என்றதும் அதிர்வது அகிராவின் முறையாயிற்று.
கூடவே இங்கே நடக்கும் பிரச்சனை எதனால் என்றும் ஓரளவு பிடிபட்டுவிட, “நான் ஒருத்தரோடயும் கதைக்கமாட்டன் அண்ணா!” என்றாள் வேகமாக.
“அவன் என்ன சொல்லுறான் எண்டு ஒருக்கா கேளும் அகிரா. பிறகு உம்மட முடிவச் சொல்லும்!”
“அதெல்லாம் ஏற்கனவே கேட்டாச்சு. முடிவும் சொல்லியாச்சு. இன்னும் எத்தின தரம் சொல்லச் சொல்லுறீங்க?”
அவள் நிலை புரிந்தாலும் ஆரபி முன்னே அவனால் பின்வாங்க முடியவில்லை. “இன்னும் ஒரேயொருக்கா கதையும். அவன் என்ன நினைக்கிறான் எண்டு சொல்ல விடோணும்தானே அகிரா?”
“அவருக்கு நடந்தது மட்டும்தானே உங்களுக்குத் தெரியும். எனக்கு அவரால வீட்டில அடி விழுந்தது தெரியுமா உங்களுக்கு?” என்றதும் அதிர்ந்து பார்த்தான் அவன்.
“எத்தின தரம் அண்ணா விருப்பம் இல்லை எண்டு சொல்லுறது? ஒரு நாள் வலுக்கட்டாயமா மறிச்சு வச்சுக் கதைச்சவர். வீட்டுக்குத் தெரிய வந்தா பிரச்சினை வரும் எண்டு சொன்னதைக் கேக்கவே இல்ல. கடைசில ஆரோ பாத்து வீட்டில சொல்லி என்னை விசாரிச்சவே. அவருக்குத்தான் விருப்பம், எனக்கு இல்லை எண்டு சொன்னதை நம்பவே இல்ல. நீ இடம் குடுக்காம அவன் சுத்துவானா எண்டு கேட்டு எனக்கு அடிச்சவே. அவர் மறிச்சாலும் நான் விலகி வந்திருக்கோணுமாம். நிண்டு கேக்காட்டி உன்னை என்னவும் செய்வன் எண்டு உங்கட நண்பர் கேவலமா வெருட்டுறார்.” என்றதும் திகைப்புடன் திரும்பி கிரியைப் பார்த்தவனால் இப்போது ஆரபி புறம் திரும்பவே முடியவில்லை.
“இனி மேல படிக்கத் தேவை இல்லை, கலியாணம் கட்டி வைக்கப் போறம் எண்டு சொன்னவே. இவரால் என்ர கனவு, மொத்த எதிர்காலமும் நாசமா போச்சு எண்டு நான் சொல்லி அழுததைக் கேட்டுட்டு வöஅந்த என்னில ஒரு பிழையும் இல்லை எண்டு எங்கட வீட்ட வந்து சொன்னதுதான் அவள். அவரின்ர வீட்டை போய் அப்பா சண்டை பிடிச்சது பிறகுதான் உங்களுக்குத் தெரியும். முதலே தெரிஞ்சிருந்தாலும் எங்களால என்ன செய்யேலும் சொல்லுங்க. தடுத்தா நீங்க சொன்னது எல்லாம் பொய்யா எண்டு கேப்பினம்? கொஞ்சம் கூட எங்கட நிலைமையை யோசிக்கவே மாட்டீங்களா அண்ணா?” என்றவள் கேள்வியில் அவனுக்கு முகம் கன்றிப்போயிற்று.
நண்பனைப் போட்டு மிதிக்கலாமா என்கிற அளவுக்குக் கோபம். காட்டிக்கொள்ளாமல், “அப்பிடி ஒண்டும் நடக்காது. நீங்க போங்க. நான் எங்கட அப்பாவக் கொண்டு உங்கட அப்பாவோட கதைக்க வைக்கிறன்.” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான்.
அவன் பார்வை முழுக்க அகிராவின் கைப்பிடியில் இழுபட்டுப் போகும் ஆரபியிலேயே இருந்தது. அங்கிருந்து போனால் போதும் என்கிற அளவில் ஓடிப்போனாள் அவள். சைக்கிள் அருகில் சென்று அவள் அழுவதும் அகிரா அவளைத் தேற்றுவதும் அப்படியே தெரிந்தன. தலையை அழுந்தக் கோதிக்கொண்டு திரும்பியவன் திரும்பிய வேகத்திலேயே கிரியின் கன்னத்தில் பளார் என்று ஒன்று போட்டான்.


