அத்தியாயம் 6
அன்றைக்குப் பிறகு இவன் வீட்டுப்பக்கம் ஆரபி வருவதில்லை. அப்படி வராததற்கு ஏதோ பொருத்தமான காரணம் சொல்லியிருக்க வேண்டும். இல்லாமல் வினோதினி இப்படி அமைதியாக இருக்க மாட்டாள்.
அவர்களின் தகப்பன் அரசியலில் இருப்பதால் வினோதினியைத் தேவையற்று வெளியே செல்ல அவர்கள் வீட்டில் விடுவதில்லை. அதனால் நண்பியர்தான் இவர்கள் வீட்டுக்கு வருவார்கள்.
சரணியர் இயக்கக் கூட்டம், செயல்பாடுகள் எதிலும் ஆரபி இப்போது கலந்துகொள்வதில்லை. சொன்னதுபோல் அகிராவின் வீட்டில் தன் தந்தையைக் கொண்டு பேசி, அகிரா மீது எந்தத் தவறும் இல்லை என்று புரியவைத்து, பல்கலைப் படிப்புக்கு இவன் ஆவண செய்தும் அவள் அவனை ஏறெடுத்தும் பார்ப்பதாக இல்லை.
அன்றுபோல் அவனிடம் கோபப்பட்டுச் சண்டை பிடித்திருந்தால் கூடப் பரவாயில்லை. குறைந்த பட்சமாக வினோதினியிடம் சொல்லி, வீடு வரை நடந்ததைத் தெரியப்படுத்தியிருக்கலாம். இப்படி எதையும் செய்யாமல் முற்றிலுமாக ஒதுங்கிக்கொண்டிருந்தாள். அகிராவிடம் கூட வெளியில் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும். இல்லையானால் எப்படியும் வினோதினிக்குச் செய்தி வந்திருக்கும்.
இவன் நிற்கலாம் என்று இருக்கிற இடங்களைக் கூட அவள் கவனமெடுத்துத் தவிர்க்க ஆரம்பித்தாள். என்னவோ அவன் பழகவே ஆகாத ஒருவன் போன்ற அவளின் அந்தச் செய்கை இனம்புரியா எரிச்சலையும் சினத்தையும் உண்டாக்கிற்று.
நான் அப்படி இல்லையடி என்று கத்த வேண்டும் போலொரு ஆவேசம். எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்வாய் என்று அவன் அறிவே கேட்டதில் ஒருவிதமான இறுக்கத்துடனும் காரணமறியாக் கோபத்துடனும்தான் திரிந்துகொண்டிருந்தான்.
உறக்கம் முற்றிலுமாகத் தொலைந்திருந்தது. கண்களை மூடினாலே அன்று அகிராவின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு அவள் நடுங்கியதும், சைக்கிள் அருகில் நின்று முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுததும்தான் வந்து நின்றன.
அன்று அம்மன் கோவில் திருவிழா. அவளுடைய அன்னையோடு சேர்ந்து ஆரபியும் தீச்சட்டி எடுக்கிறாளாம் என்று அறிந்ததிலிருந்து ஒரு மாதிரியாக அலைந்துகொண்டிருந்தான் சகாயன். முன்னரெல்லாம் அவன் அன்னையும் எடுப்பார். அது எப்படிச் சுடும், எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியும். இந்தளவில் தன்னை வருத்தி வேண்டுதல் வைக்கிற அளவுக்கு என்ன வேண்டுதலாம் இவளுக்கு என்று ஒரு கோபம்.
பூ, வேப்பிலை சுற்றி, கற்பூரத்தில் கொழுந்துவிட்டெரியும் மண்சட்டியை மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை கொண்டு தலையில் சுமந்து வந்த பெண்களோடு தானும் ஒருத்தியாக வந்தாள் ஆரபி.
நிறைய நாள்களுக்குப் பிறகு கண்ட சகாயன் பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டான். அன்னையின் மறு உருவாகவே நடந்து வந்தவளிடம் அவனால் பார்வையை அகற்றவே முடியவில்லை.
கோயிலை மூன்று முறை வலம் வந்து, சட்டியை கோயிலில் செலுத்தி, அம்மனை வணங்கி அவள் வேண்டுதலை முடிக்கும் வரையில் தூர நின்று அவளைக் கவனித்துக்கொண்டேதான் இருந்தான்.
வினோதினியும் மங்கையற்கரசியும் அவளோடு இருந்ததில் இவனால் அவளை நெருங்க முடியவேயில்லை. பக்கத்தில் கீரியும் இருக்கிறானே. “இவளை என்னத்துக்கடா பாக்கிறாய், வா!” என்று கிரிதான் கடைசியில் இவனை இழுத்துக்கொண்டு போனான்.
ஆனால், அன்று அவளைக் கண்டது இனியும் இப்படித் தள்ளி இருக்க முடியாது என்கிற நிலைக்கு அவனைக் கொண்டுவந்திருந்தது.
அவளோடு கதைக்க வேண்டும், அவளைச் சமாதானம் செய்ய வேண்டும் என்கிற ஆர்ப்பரிப்பு அவனுக்குள் அதிகமாயிற்று. எங்குமே அவளைத் தனியாகச் சந்திக்க வழியேயில்லை. ஒன்று அவளோடு அவள் நண்பியர் இருந்தனர். இல்லையா இவனோடு கிரி இருந்தான். இருக்கும் ஒரே வழி சாரணியர் இயக்கம்.
அதில் இயக்கத்தில் இருக்கிறவர்களுக்கு ஒழுங்கும், அனைத்திலும் பங்கெடுக்கும் பாங்கும் முக்கியம் என்று சொல்லி, அவளை உடனேயே தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லி அனுப்பினான்.
அவர்கள் குழு பெரும்பான்மையாகச் சந்திப்பது அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில். இல்லையா அவர்கள் ஊரில் இருக்கிற லைப்ரரியில். லைப்ரரியை பொறுப்பேற்று நடத்துவதும் அவர்களின் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒரு வயதான பெண்மணி. வேறு வழியற்று அவனைச் சந்திக்க அங்கே சென்றாள் ஆரபி.
பொறுப்பாளர் அமர்ந்திருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தவன் இவளைக் கண்டதும் நன்றாக ஒருமுறை பார்த்தான். அவளை நேர்த்தியாகக் காட்டும் சுடிதார் ஒன்றில் தயக்கமாக அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
விருப்பமே இல்லாமல் வந்திருக்கிறாள். புரிந்தாலும் காட்டிக்கொள்ளாமல் தன் முன்னே இருந்த இருக்கையைக் காட்டினான்.
பதுமையாக வந்து அமர்ந்து அவனைக் கேள்வியாக ஏறிட்டாள்.
‘வாயத் திறந்து கேட்டா இவளுக்கு முத்துக் கொட்டிடுமாம்.’ உள்ளே சுறு சுறுவென்று என்னவோ உச்சிக்கு ஏறியது. பிறகு திரும்பவும் ஓடிவிடப் போகிறாள் என்கிற பயத்தில் தன்னை அடக்கிக்கொண்டான்.
ஆனாலும் ஒரு வீம்பு. நீயாகக் கதை என்று அவனும் விடாது அவளையே பார்த்திருந்தான். முதலில் அவன் பார்வை புரியாததுபோல் இருந்தவள் பின் இருந்த இருக்கையிலேயே அசூசையாக நெளிவது அப்பட்டமாகத் தெரிந்தது.
அவன் உதட்டோரத்தில் இலேசான முறுவல். கீழுதட்டைக் கடித்து மடக்கியபடி சாவகாசமாகக் கதிரையில் சாய்ந்து அமர்ந்துகொண்டு அவளை விடாமல் பார்த்தான்.
பார்க்க பார்க்க என்னவோ புரண்டுகொண்டிருந்தது அவனுக்குள்.
“ம்க்கும்… வரச் சொன்னனீங்களாம்.”
“பின்ன? சமூகம் பெரிய இடம். தானா வரமாட்டா. அதால முறையா அழைப்பு விடுக்கோணும்தானே.” என்றான் அவன்.
அவளுக்கு முகம் கன்றியது. இலேசாக உதட்டின் மீதும் மூக்கு நுனியிலும் வியர்வை அரும்பியது. அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவினால் முகத்தை ஒற்றி எடுத்தாள்
‘துடைக்காத!’ அவன் மனம் சிணுங்கிற்று.
“நான் போகோணும்.”
அவள் முகத்தில் பயமும் படபடப்பும். ஒரு மாதிரிப் பாவமாக இருந்தபோதும் அப்படி எத்தனை தடவைகள் அவளிடம் தவறாக நடந்தானாம் என்கிற கோபமும் உண்டாயிற்று.
இது போதாது என்று வெளியில் யாரோ நிற்கும் அரவம். அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்துபோய்ப் பார்த்தான். அங்கே நகத்தைக் கடித்துக்கொண்டு அகிரா நின்றிருந்தாள்.
“என்னம்மா?”
“இல்லை, ஒண்டும் இல்லை அண்ணா. ஆருவோட வந்தான்.”
“ஏன்?”
அவளுக்கு உங்களைத் தனியே சந்திக்கப் பயம். அதனால் துணைக்கு வந்தேன் என்று அவனிடமே சொல்லவா முடியும்? அவள் தயங்கி நின்றதிலேயே காரணத்தை ஊகித்தவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் உண்டாயிற்று.

