“உங்கட நண்பி இதுக்கு முதல் என்னைப் பாக்க வந்ததே இல்லையோ? இல்ல, நான் ஆரோடயாவது பிழையா நடந்ததைக் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?”
“ஐயோ அண்ணா! அப்பிடியெல்லாம் இல்ல.”
“ஓகே! உங்கட நண்பிய கூட்டிக்கொண்டு போங்கோ.”
“அண்ணா”
அவளிடம் ஒன்றும் சொல்லாமல் உள்ளே வந்தவன், “ஏய் எழும்பிப் போ!” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
அவன் சொன்ன ‘ஏய்’யில் அவளுக்கு முகம் கன்றியது. வேகமாக எழுந்தவள் போவதா நிற்பதா என்று தடுமாறினாள்.
“இனியும் என்னைப் பாக்க வந்தியோ உன்ன கொன்றுவன் ராஸ்கல்!”
அரண்டுபோனவள் ஓடிவிடலாமா என்று வாசலையும் அவனையும் மாறி மாறிப் பார்க்க அவனுக்கு இன்னுமே பற்றிக்கொண்டு வந்தது. “உன்ன…” என்று பல்லைக் கடித்துக்கொண்டு நெருங்கியவன் சட்டென்று நின்று, “ஏய் போடி!” எரிச்சலும் சினமுமாக.
“டீ போடாதீங்க!” சட்டென்று அவள் வாய்ப்பூட்டு அவிழ்ந்தது.
அவனுக்கு அவன் கொதிப்பெல்லாம் அடங்கிப்போயிற்று. உள்ளே குளுகுளுவென்று இருந்தது. “டீ போட்டா பிடிக்காதோ?” என்றான் சன்ன சிரிப்போடு.
இவன் என்ன லூசா என்று பார்த்தாள் அவள். “ஏன் வரச் சொல்லி விட்டனீங்க?” வந்த வேலையை முடித்துக்கொண்டு போக நினைத்தாள்.
“ஏன் சாரணியர் இயக்கத்துக்கு வாறேல்ல?”
அவனுக்குத் தெரியாதா?
“தனிப்பட்ட பிரச்சனை வேற, பொதுச் சேவை வேற எண்டு தெரியாதா உனக்கு?”
“இல்ல. சாரணியர் இயக்கத்திலிருந்து விலகப்போறன்.”
அவனுக்குத் திக்கென்று இருந்தது. அவளைத் தன்னிடம் கொண்டுவர அவனுக்கு இருக்கும் ஒரே வழி அதுதான். அதையும் அடைக்கப்போகிறாளாமே.
“ஏன்?” திரும்பவும் சூடாக ஆரம்பித்தது அவன் குரல்.
“சொல்லு ஏன்?”
“அண்டைக்கு என்ன நடந்தது எண்டு தெரியாம லேசா கோபப்பட்டுட்டன்.”
லேசா கோபப்பட்டானா? அவளுக்கு விழிகள் விரிந்துபோயின.
“என்ன பார்வை லேசாத்தான் கோவப்பட்டனான்.” அவன் அடித்துச் சொன்னான்.
“ஆனா அதுக்கு முதல் உன்னோட அப்பிடி நடந்திருக்கிறனா? கிரி வீட்டில அவனுக்கு அவ்வளவு பேச்சு. அது கூடப் பரவாயில்லை. என்னவோ அவன் பொறுக்கி மாதிரியும், ஊர்ல இருக்கிற எல்லா பொம்பிளைகளிட்டயும் பிழையா நடந்தவன் மாதிரியும் சொந்த வீட்டிலேயே எல்லாரும் கேவலமா பாத்தா எப்பிடி இருக்கும்? அதப் பாத்த கோபத்தில…” என்று சொல்லிக்கொண்டு வந்தவன் சட்டென்று நிறுத்திவிட்டான்.
அவள் ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டு அவனை அவளுக்கு விளக்கம் சொல்ல வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று அப்போதுதான் புரிந்தது. அவளை நன்றாக முறைத்தான். ஆரபிக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன?” என்றாள் குழப்பத்துடன்.
“நீ ஒரு ஆள் எண்டு உனக்கு நான் விளக்கம் சொல்லவோ? போ மரியாதையா!”
அவள் மெய்யாகவே போய்விட்டாள். அதுவும் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு. ‘அடிப்பாவி!’ என்று நடந்ததை நம்பமுடியாமல் நின்றான் சகாயன்.
‘இவளுக்கு இடம் குடுக்காத்தாயடா. வாயை இறுக்கி மூடிக்கொண்டு நிண்டே உன்னை அவள் நினைச்ச மாதிரியெல்லாம் வளைக்கிறாள்!’
‘கடவுளே!’ என்று தலையை உதறிவிட்டுப் போய் அந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு, இனி இந்த வேலையை யாரைக் கொண்டு பார்ப்பது என்கிற அடுத்த தலைவலி.
அவர்களின் லைப்ரரிக்கு புதிய புத்தகங்கள் வந்திருந்தன. கூடவே வெளியே போன பல புத்தகங்கள் திரும்பி வரவில்லை. போனமுறை உண்டான வெள்ளத்தில் கொஞ்சப் புத்தகங்கள் அழிந்தும் இருந்தன. தற்போதைய இருப்பு என்ன, புதிதாக வந்தவை என்ன, யாரிடம் என்ன புத்தகங்கள் போயிருக்கின்றன என்று எல்லாவற்றையும் முறையாகப் பதிய வேண்டும்.
அதற்குப் பொறுப்பாக அவர்கள் நியமித்திருந்தது வயதான பெண்மணி ஒருவரை. அவர் கவனமில்லாமல் விட்டிருந்தார்.
இன்னுமே கணனி வசதி எல்லாம் அதற்கு இல்லை. இது அவனாக, அவன் ஊருக்காக உருவாககிய லைப்ரரி. எல்லாவற்றையும் கொப்பியில் எழுத்து வடிவில் பதிந்துதான் பாதுகாக்க வேண்டும்.
அவளின் எழுத்து முத்துப்போல இருக்குமென்றால் இப்படியான வேலைகளைச் சிறு பிழைகள் கூட விடாமல் செய்வதில் அவள் மிகுந்த கெட்டிக்காரி.
இனி என்ன செய்யப்போகிறான்?
அவன் கேட்ட கேள்வி அகிராவை யோசிக்க வைத்திருந்தது. அவள் ஆரபியோடு பேசினாள். “அண்ணா சொன்னது சரிதானேடி. அந்த நரியன் கிரியன்ர பிரச்சினை வாற வரைக்கும் அவர் உன்னோட பிழையா நடந்தவரா? ஆரோடயும் அவர் அப்பிடி இல்ல. அப்பிடி இருக்க நீ என்னவோ அவர் சரியில்லாதவர் மாதிரி அவரின்ர வீட்டை போகாம, சாரணியர் இயக்க விசயங்கள்லயும் கலந்துகொள்ளாம இருந்தா கோபம் வரும்தானே.” என்று சொன்னாள்.
அன்றைக்கு அவளுக்கு அடிக்கக் கையை விசுக்கினானே. அதைப் பற்றி ஆரபி யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. அந்த விடயம் உதைத்தாலும் அன்றும் அடிக்கிற மாதிரிக் கையை விசுக்கினானே தவிர அடிக்கவில்லை. கூடவே அகிரா சொன்னதுபோல் அதற்கு முன்னோ பின்னோ அவன் தவறாக நடந்ததில்லை. ஆனால் அன்று சொன்ன உன் பின்னால் நான் சுற்றுவேன் என்பது?
ஆங்காங்கே கண்ணில் படுவான்தான். அது சுற்றுவதில் வருமா என்று குழம்பினாள்.
கடைசியில், “அடியேய் அண்ணாக்குப் போய் ஹெல்ப் பண்ணி குடடி. நீ மாட்டன் எண்டு சொல்லிப்போட்டியாம் எண்டு அவன் என்ர உயிரை எடுக்கிறான். வேற ஆரைக் கேட்டாலும் ஒழுங்கா செய்யாயினமாம்.” என்று இவளிடம் சொன்னது மாத்திரமல்லாமல் இவள் வீட்டுக்கே வந்து மங்கையற்கரசியிடமும் பேசினாள் வினோதினி.
“ஏனம்மா? செய்து குடுத்தா என்ன? உங்களுக்கும் அந்த வேலை விருப்பம் எல்லா?” போனமுறை அந்த லைப்ரரியை உருவாககியபோது அங்கேயே விழுந்துகிடந்து அனைத்தையும் செய்துகொடுத்தவள் அவள் என்பதில் சொன்னார் மங்கையற்கரசி.
“நேரம் இல்லையம்மா.” அவர் பார்வையைச் சந்திக்காமல் சொன்னாள் ஆரபி.
“என்ன நேரமில்லை? பச்சைப் பொய்ய சொல்லாத. உனக்குச் செய்ய விருப்பம் இருந்தா நீ செய்வாய். நான், அகி ரெண்டு பெரும் வாறம். வாடி!” என்று கெஞ்சினாள் வினோ.
அதன் பிறகுதான், அப்போதும் கடைசி வரையிலும் அவர்கள் இருவரும் வர வேண்டும் என்கிற உடன்படிக்கையின் கீழ் சம்மதித்தாள் ஆரபி.
கொடுத்த வாக்கை மீறுவதுதான் நட்பின் இலக்கணமே. அதை மறந்து அந்த வேலைக்கு உடன்பட்டாள் ஆரபி.

